Published:Updated:

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை -  அத்தியாயம் - 1
மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1

காவிரி கடந்துவந்த பாதை குறித்த விரிவான தொடர்!

ண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை  அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..!

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. 

‘காவிரிக்கரை விநியோகம்!’ 

கி.பி. 1146 - 1163 காலகட்டத்தில், சோழ நாட்டில் இரண்டாம் ராஜராஜன் எனும் பேரரசன் ஆட்சி செலுத்தினான். இவன், கி.பி. 1133 - 1150-ல் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கனின் மகன். இந்த ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலத்தின்போது... கர்நாடகத்தைப் போசளன் முதலாம் நரசிம்மன் என்பவன் ஆட்சி செய்துவந்தான். இவன், காவிரி வரும்வழியில் குறுக்கே செயற்கை மலைகளை ஏற்படுத்தித் தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்தான் என்கிறது காவிரி குறித்த வரலாறு. இதனால், காவிரியில் நீர்வரத்துக் குறைந்துபோனது. தமிழகத்தில் அடங்கிய சோழ நாட்டில் உள்ள பாசனக் கால்வாய்கள் எல்லாம் தூர்ந்துபோனதையடுத்து நாட்டில் வறுமையும், பஞ்சமும் ஏற்பட்டது. இதற்காக நாடுதோறும், ‘பஞ்சந்தாங்கி’ ஏரிகள் வெட்டப்பட்டன. ஆனாலும் எந்தப் பயனில்லை. அதற்காக, இரண்டாம் ராஜராஜன் சும்மா இருக்கவில்லை. கடும்கோபம் கொண்டான்; கர்நாடகத்தின்மீது படையெடுக்க நினைத்தான்.

''தமிழகத்துக்குக் காவிரி நீர் உரிமையானது; அதைத் தடுக்க மைசூரு அரசுக்கு உரிமையில்லை. போசள வீரநரசிம்ம அரசுக்கு இந்திரனே துணையிருப்பினும் கவலையில்லை” என்று போர்ப் பரணி பாடிப் போர் தொடுத்தான். இந்தப் போரில் வெற்றிவாகை சூடிய இரண்டாம் ராஜராஜன், போசளன் முதலாம் நரசிம்மன் அமைத்திருந்த அணைகளைத் தகர்த்தெறிந்தான். மீண்டும் தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்தோடி சோழ நாடு வளம் கொழித்தது. இதன்மூலம் இரண்டாம் ராஜராஜன், ‘காவிரி கண்ட சோழன்’, ‘பொன்னிக்கு வழிகண்ட கண்டன்’ என்றெல்லாம் புகழப்பட்டான். இந்தப் போருக்கான செலவை ஈடுகட்ட, ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தக்கயாகப்பரணி, ராஜராஜ சோழன் உலா, பெரிய புராணம், எரிபத்த நாயனார் புராணம், நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மேற்கோள் பாடல் உள்ளிட்டவற்றில் சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

ராணி மங்கம்மாள்!

அதேபோல், கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் காவிரி நீருக்காகத் தமிழகமும், மைசூரும் மோதிக்கொண்டன. அந்தக் காலகட்டத்தில் மதுரையை ராணி மங்கம்மாளும், தஞ்சையை மராட்டிய மன்னன் சகசியும் ஆட்சி செய்தனர். அப்போது மைசூரைச் சித்ததேன் மகாராயன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன், காவிரியின் போக்கை அணைகட்டித் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ராணி மங்கம்மாளும், சகசியும் பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதிலும், காவிரி நீரை அணைகட்டித் தடுக்கும் மைசூரு மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிராகக் களம் இறங்கினர். இதையடுத்து, இருவருடைய படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இந்தப் படைகள், மைசூரை அடைவதற்கு முன்னால் காவிரியின் குறுக்கே மைசூரு மன்னன் கட்டிய அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால், தானாகவே உடைந்துவிட்டது. அதன் பின்னர், காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.

வரலாற்றுச் சான்றுகள்! 

இந்தச் சம்பவங்களை எல்லாம் அறியும்போது, மன்னர்கள் காலத்திலேயே காவிரி நீருக்கானப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. அந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது... அவருடைய சீடரான அனுமந்தையா, கர்நாடக முதல்வராகயிருந்தார். அந்தச் சமயத்தில், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியிருந்தும் காவிரிக்கு நீரைவிட மறுத்தார் அனுமந்தையா. இதனால் சீற்றம்கொண்ட ராஜாஜி, ''நீரை நீங்களாக விடுகிறீர்களா அல்லது நான் ராணுவத்தை அனுப்பி கிருஷ்ணராஜ சாகர் அணையை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டுமா” எனக் கேட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அனுமந்தையா, அதன் பின்னர் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

‘நடந்தாய் வாழி காவிரி...’ என்ற சிலப்பதிகார வரிகளை நினைவூட்டும் வகையில்... ஒருகாலத்தில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, தமிழக டெல்டா மாவட்டங்களைக் கடந்து, கடைமடை பகுதிவரை கரைபுரண்டு ஓடிய வரலாறும் இங்கு உண்டு. ‘சோழநாடு சோறுடைத்து...’ என்ற வழக்குக்கேற்ப, அப்போதெல்லாம் வயல்வெளிகள் ‘பச்சைப் பசேல்’ எனப் பசுமை போர்த்தியிருந்தன; முப்போக விளைச்சலால் விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்லாது, எல்லா மக்களும் குதூகலமாய் வாழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 

''காவிரியில் ஏற்கெனவே கரைபுரண்டோடி வந்த நீர்... தற்போது வரும் குறைந்தளவு நீர்... எதிர்காலத்தில் அந்தளவு தண்ணீராவது வருமா...?” என்று கேட்குமளவுக்குப் போய்விட்டது இப்போதைய நிலைமை. இந்தளவு பிரச்னை முற்றியதற்கு என்ன காரணம், காவிரி கடந்துவந்த பாதை போன்றவை குறித்து அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காண்போம்...

நூல் ஆதாரங்கள்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், காவிரி அங்கும் இங்கும்!

காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு