சின்னதாக ஒரு பரு முகத்தில் வந்துவிட்டாலே `ட்ரீட்மெண்ட்' எடுத்துக் கொண்டு துப்பட்டாவுக்குள் ஒளிந்துகொள்ளும் பெண்கள் பலருக்கு மத்தியில், ரேஷ்மா குரேஷி தனி ரகம்!

கடந்தவாரம் நியூயார்க்கில் ரேஷ்மாவின் `ரேம்ப்வாக்' வைரல் ஆனது! மும்பை டாக்சி டிரைவரின் கடைக்குட்டிப் பெண்தான் இந்த ரேஷ்மா! 2014-ம் ஆண்டு அவரின் சகோதரியின் கணவனாலேயே ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார்.
முகம்சிதைந்து ஒரு கண்ணையே இழந்து, உயிருக்குப் போராடிய ரேஷ்மா மீண்டு வந்தது தனிக்கதை. ஆரம்பத்தில் தாழ்வுமனப்பான்மையில் உழன்றவர் ஒருநாள் `Make Love Not Scars' (அன்பை ஏற்படுத்துங்கள் வடுக்களை அல்ல) என்ற அமைப்பின் நிறுவனர் ரியா சர்மாவைப் பார்த்ததும் மனதை மாற்றிக்கொண்டார். ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கான அமைப்பு அது. சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்ததோடு தன் ஃபேவரைட் காத்ரினா கைஃப் போல மாடலிங்கில் களம் இறங்க உத்தேசித்தார் ரேஷ்மா. #EndAcidSale என்ற டேக்லைனில் ஆன்லைனில் தன் சுய அடையாளத்தோடு மாடலிங் வீடியோக்களை ரேஷ்மா வெளியிட பலத்த வரவேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகின் முன்னணி ஃபேஷன் ஷோக்களில் ஒன்றான எல்.டி.எல் மோடா நிறுவனத்தின் நியூயார்க் ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டு கலக்கினார்.
பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிவமைத்த வெள்ளை நிற ஆடையை அணிந்து நம்பிக்கையுடன் நடந்து வந்த ரேஷ்மா, ``அழகு என்பது தோலில் கிடையாது. தைரியம்தான் பெண்ணுக்கு அழகு!'’ என்று சொன்னபோது அரங்கம் எழுந்து கைதட்டியது.
- பொன்.விமலா