Published:Updated:

'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories

'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா!  #ShobaMemories
'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories

'பொன்னூஞ்சல் எரிநட்சத்திரம்’ ஷோபா! #ShobaMemories

'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்....' 

இந்தப் பாடலின் வரிகளைப் படித்ததும் அநேகரின் நினைவில் நிழலாடுவது, நடிகை ஷோபாவின் முகம்தான். நெற்றியில் பெரிய பொட்டு, துருதுரு பார்வை, குழந்தைமை வழியும் சிரிப்புமே ஷோபாவை நினைவூட்டும் அடையாளங்கள். ஒரு கதாநாயகிக்கான இலக்கணங்களை மீறி, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் தோற்றத்தோடு, வெகு இயல்பான நடிப்பால் சினிமாவில் வலம்வந்தவர் ஷோபா.

1966-ம் ஆண்டு, சந்திரபாபு மற்றும் சாவித்திரி நடித்த, 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாகத் திரைத்துறையில் நுழைந்தவர் ஷோபா. நாயகியாக, 'அச்சாணி', 'நிழல் நிஜமாகிறது', 'ஒரு வீடு ஒரு உலகம்' படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' படம், ஷோபாவுக்கு ஆகச் சிறந்த அடையாளமாக மாறியது. வெளியுலகம் தெரியாத கிராமத்துப் பெண். அன்பும் முரட்டுத்தனமும் கலந்த அண்ணன். புதிதாக இணையும் ஓர் உறவு. 'தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா?' என சரத்பாபு கேட்டதும், அதை எவ்வாறு எதிர்கொள்வது எனக் குழப்பத்துடன் நிற்கும் ஷோபாவின் அந்தத் தருணம், பேரழகும் யதார்த்தமும் நிறைந்தது. 

அதன்பின் தொடங்கும், 'அடி பெண்ணே...' பாடல், அந்தக் காட்சியின் சூழலுக்கு நம்மை இழுக்கும் இளையராஜாவின் இசை, மென்மையும் தனித்துவமும் மிக்க பாடகி ஜென்ஸியின் குரல்... இவற்றையும் மீறி, அந்தப் பாடல் மாய உலகில் நிகழும் உணர்வைத் தருவது, ஷோபாவின் முகப் பாவனைகளாலே. அந்தப் பாடலில் அழகான இயற்கை காட்சிகள் பிரதான இடங்களைப் பிடித்திருக்கும். ஆனாலும், பேரழகான தருணங்களைத் தருவது, திரையில் ஷோபா வரும்போதே. மலைப் பகுதியில், குறுகிய சாலையின் ஓரத்தில் உள்ள வரப்பில், சற்றே வேகமான நடையில், இடையிடையே வானத்தை நிமிர்ந்தபார்த்துகொண்டே ஷோபா வருவார். இவற்றிற்குப் பின் அழகான வானவில்...

'வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம் 
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே'
- என்ற வரிகள் ஒலிக்கும். 

இசையும், பாடல் வரிகளும், நடிப்பும் ஒரே இழையில் பின்னப்பட்டிருப்பதான தோற்றம். இதுபோலவே, 'செந்தாழம்பூவில்...' பாடலில் ஷோபாவின் முகப்பாவனைகள் பாடலுக்குக் கூடுதல் அழகைத் தந்திருக்கும். 

'பசி' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது (1979) ஷோபாவுக்குக் கிடைத்தது. பாலு மகேந்திராவின், 'அழியாத கோலங்கள்', 'மூடுபனி' ஆகிய படங்களில் தனித்து மிளிர்ந்தார் ஷோபா. அதற்கான காரணமாக, ''கேமிரா, லைட்ஸ் மற்றும் ஃபிலிம் ஆகியவற்றோடு மற்றவர்கள் ஒளிப்பதிவு செய்வார்கள். அங்கிள் (பாலு மகேந்திரா) இவற்றோடு நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார்" எனச் சொன்னவர், ஷோபா.

''ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பிரகாசமாகச் செல்லும் ஒரு எரிநட்சத்திரம்'' என ஷோபாவைக் குறிப்பிடுகிறார், தமிழின் மிகச்சிறந்த இயக்குநரான, பாலு மகேந்திரா. ஷோபாவின் ஒவ்வோர் அசைவையும் அதன் உயிர்ப்பும் குழந்தைமையும் தவறிவிடாமல், திரையில் பதிவுசெய்தார். இவர்களின் உறவு, திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு நீண்டது. தமிழ்த் திரையுலகமே வியந்து பார்த்த நடிகை, இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளையும் பெறுவார் எனக் கணித்துக்கொண்டிருந்த சூழலில், 1980 மே 1-ம் நாள், திடீரென்று தற்கொலை செய்துகொண்டார் ஷோபா. அப்போது, அவருக்கு வயது 17. ரசிகர்களுக்குத் தாளவே இயலாத பேரிழப்பாக அது அமைந்துவிட்டது. குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த சிறந்த கலைஞர்களின் பட்டியலில் ஷோபாவும் இணைந்துவிட்டார்.  ஷோபாவின் நேசத்தையும் தாளமுடியாத பிரிவையும்தான், தனது 'மூன்றாம் பிறை' படத்தில் பதிந்ததாக பாலு மகேந்திரா குறிப்பிடுவார். 

நடிகை ஷோபா மரணத்தின்போது, ஆனந்த விகடனில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதை:

முற்றுப்புள்ளி

சாவை 
மன்னிக்க முடியாது 
சகோதரி. 

இன்று இரவு
எனது டயரி
எழுதப்படாமலே இருக்கிறது.

வீட்டுக்கு வந்த
சுரதா சொன்னார்;
“ஷோபா இறந்துவிட்டாளாம்.”

என் காதுகளில்
அடிக்கப்பட்ட ஆணி
இருதயம் வரைக்கும்
இறங்கியது.

கந்தல் விழுந்த
‘திரை’ச் சீலையில்

நீ ஒரு

சரிகையாய் இருந்தாயே 
சகோதரி.

நீ சிரித்தாய்
இல்லை...
பூக்களுக்கு வகுப்பெடுத்தாய்,
அழுதது நீதானே?
எங்கள் கைக்குட்டை
ஏன் நனைந்தது? 

நீ அசைவதைப் 
பார்த்துத்தானே 
கண்ணீர்ப் பிசின் 
இதய அறைகளை இறுக்குகிறது. 
ஒரு மயில்தோகை 
ஈசல் இறகைப்போல் 
உதிர்ந்து விட்டதே! 

சாவை
மன்னிக்க முடியாது
சகோதரி.
இந்த எழுத்துக்கள்
உன் சடலத்தின் மீது
தூவும்
பூக்களாய் இருக்கட்டும்.
இந்தக்
கறுப்புக் கவிதைக்கு
முற்றுப்புள்ளி எனது
கடைசி கண்ணீர்த் துளி.

மின்னல்
உடனே ஓடி ஒளிந்துகொண்டது.
உன்
சிணுங்கலைக் கூட
வார்த்தையாய்ச்
சேர்த்துக் கொள்ள
அகராதி ஆசைப்பட்டதே!

புல்தரையில் வீழும்
பூவைப்போல்
என்னை நீ
மௌனமாகப் பாதித்திருக்கிறாய்!
இரவிலும் கூட
வெளிச்சமாய் இருந்த நீ
ஒரு
பகலில் இருளாகி விட்டாயே!

அடுத்த கட்டுரைக்கு