Published:Updated:

சுட்ட படம்!

சுட்ட படம்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்ட படம்!

ஞானப்பழம்

சுட்ட படம்!

ஞானப்பழம்

Published:Updated:
சுட்ட படம்!
பிரீமியம் ஸ்டோரி
சுட்ட படம்!

ரே ஆங்கிலப் படத்தின் கதையை உருவி இரண்டு டைரக்டர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு படங்களாக எடுத்துத் தள்ளிய காமெடி எல்லாம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. அந்த வகையில் இந்தவாரம் நாம் பார்க்க இருக்கும் படம் `வேகம்' மற்றும் 'நாயகன்'. `வேகம்' படத்தில் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் ஹீரோ. `நாயகன்' படத்தில் நம்ம ஜே.கே.ரித்தீஷ் ஹீரோ. இரண்டுமே `செல்லுலார்' என்ற ஒரே ஆங்கிலப்படத்தில் இருந்து உருவப்பட்டவை!

முதலில் `செல்லுலார்' படத்தின் கதையைப் பார்ப்போம். ஸ்கூல் டீச்சரான ஜெஸ்ஸிகா தன் குட்டிப்பையன் ரிக்கியை பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வருகிறாள். அவள் வீட்டிற்குள் நுழையும் சிலர் அவளைக் கடத்திச்சென்று ஒரு பாழடைந்த வீட்டின் அறையில் அடைக்கிறார்கள். கும்பலின் தலைவன் ஈதன் அங்கிருக்கும் டெலிபோனை அடித்து நொறுக்கி, அவளை மிரட்டிவிட்டு வெளியே செல்கிறான்.

சுட்ட படம்!

உடைந்த போனின் ஒயர்களை ஒட்டி குத்துமதிப்பாய் ஒரு நம்பருக்கு போன் செய்கிறாள் ஜெஸ்ஸிக்கா. அது வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ரேயானின் நம்பர். அவனிடம் தன்னைப் பற்றியும் தான் கடத்தப்பட்டுள்ளதையும் கூறி போலீஸில் தகவல் சொல்லச் சொல்கிறாள். உடனே போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரேயான், அங்குள்ள ஆபீஸர் மூனியிடம் விவரங்களைச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறான்.

அந்நேரம் பார்த்து அறைக்கு வரும் ஈதன், ஜெஸ்ஸிக்காவிடம் அவளின் கணவன் ஏதாவது சொன்னானா எனக் கேட்கிறான். இல்லை என்கிறாள் ஜெஸ்ஸிக்கா. தன்னிடம் அவள் உண்மையை மறைக்கிறாள் எனக் கருதும் ஈதன், அவளின் மகன் ரிக்கியைக் கடத்த பள்ளிக்குச் செல்கிறான். இதை போன் வழியே கேட்கும் ரேயான் உடனே அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறான். அதற்குள் கடத்தல் கும்பல் முந்திவிடுகிறது. ரிக்கியைக் கடத்திச் செல்லும் காரைப் பின்தொடர்ந்து செல்ல முயன்று தோற்கிறான். இதற்கிடையே அவன் செல்போனில் சார்ஜும் குறைய ஒரு கடைக்குச் சென்று கலாட்டா செய்து சார்ஜ் ஏற்றிக்கொள்கிறான்.

ரேயான் சொன்ன புகாரை விசாரிக்க ஜெஸ்ஸிக்காவின் வீட்டிற்குச் செல்கிறார் ஆபீஸர் மூனி. அங்கு, `நான்தான் ஜெஸ்ஸிக்கா' என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் ஈதனின் ஆள் ஒருத்தி. ரேயான் சொன்னது பொய் என நினைத்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறார் மூனி. ரிக்கியைக் கடத்திவரும் ஈதன் அவனை வைத்துக்கொண்டு மறுபடியும் மிரட்ட, தன் கணவன் கிரேய்க் ஏர்போர்ட்டில் இருப்பதாகச் சொல்கிறாள் ஜெஸ்ஸிக்கா. அவனையும் கடத்துவதற்குக் கிளம்புகிறார்கள்.

இதையும் போன்வழியே அறிந்துகொள்ளும் ரேயான் ஏர்போர்ட்டிற்குச் செல்கிறான். அங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட். கடத்தல்காரர்கள் அனைவருமே போலீஸ் என்பது தெரிய வருகிறது ரேயானுக்கு. அவர்கள் கிரேய்க்கைக் கடத்திச் செல்வதைத் தடுக்க முடியாமல் பார்க்கிறான். ஏறக்குறைய அதே நேரத்தில் சார்ஜருக்காக ஓர் இளைஞன் கடையில் தகராறு செய்த தகவல் மூனிக்கு வருகிறது. அது ரேயான்தான் எனத் தெரிந்துகொள்ளும் மூனி ஜெஸ்ஸிக்காவின் வீட்டிற்கு போன் செய்கிறார். போனில் வரும் ரெக்கார்டட் வாய்ஸும் தன்னிடம் பேசிய பெண்ணின் குரலும் வேறுவேறு என மூனிக்கு உறைக்க, விசாரணைக்குக் கிளம்புகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்ட படம்!

மறுபக்கம், கிரேய்க்கை மிரட்டி, அவர் வைத்திருக்கும் ஒரு வீடியோ டேப்பை மீட்க வங்கிக்குச் செல்கிறார்கள் ஈதன் கோஷ்டியினர். ஆனால் இந்தத் தடவை ரேயான் முந்திக்கொள்கிறான். முதல்ஆளாய் அந்த டேப்பைக் கைப்பற்றுகிறான். அந்த டேப்பில், ஈதனும் அவனின் சக போலீஸ் நண்பர்களும் ஒரு போதை மருந்து கும்பலைக் கொன்று அவர்களின் பணத்தைக் கொள்ளையடிப்பது பதிவாகி இருக்கிறது. இதுதான் அத்தனை களேபரத்திற்கும் காரணம் என்பது ரேயானுக்குப் புரிகிறது.

ஜெஸ்ஸிக்காவின் வீட்டிற்குச் செல்லும் மூனிக்கும் அங்கு இருக்கும் பெண்ணுக்கும் சண்டை நடக்கிறது. அவளைக் கொல்லும் மூனி அவளும் ஒரு போலீஸ்தான் என்பதை அறிந்துகொள்கிறார். அதே சமயம் பாழடைந்த வீட்டில் காவலுக்கு இருந்தவனைக் கொன்றுவிட்டுத் தப்பிக்க முயன்று பிடிபடுகிறார்கள் ஜெஸ்ஸிக்காவும் அவளின் மகனும். வீடியோ டேப்பை வைத்திருக்கும் ரேயான், ஜெஸ்ஸிக்கா குடும்பத்தை விட்டுவிட்டால் டேப்பைத் தருவதாக ஈதனிடம் டீல் பேசுகிறான்.

ஈதனின் ஆட்களுக்கும் ரேயானுக்கும் மோதல் நடக்க, இந்த கேப்பில் டேப் சிதைந்துவிடுகிறது.

மூனியும் ரேயானோடு இணைந்துகொள்ள, எதிரிகளை சுட்டுத் தள்ளுகிறார்கள். பின் என்ன? ஜெஸ்ஸிக்கா குடும்பத்தை இருவரும் மீட்க, நன்றி சொல்கிறது அந்தக் குடும்பம். `நன்றி எல்லாம் வேணாம். இன்னொரு தடவை போன் பண்ணிடாதீங்க' என ரேயான் சொல்வதோடு படம் முடிகிறது. 2004-ல் வந்த இந்தப் படம் பரபர ஆக்‌ஷன் காட்சிகளுக்காகப் பேசப்பட்டது.

இப்போது தமிழுக்கு வருவோம். பாடாவதிப் பாடல்கள், மொக்கை ஆக்‌ஷன் காட்சிகள், பொறுமையைச் சோதிக்கும் பஞ்ச்கள் மட்டுமே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங். மற்றபடி இரண்டு படங்களும் அப்படியே `செல்லுலார்' காப்பிதான். `வேகம்' 2007-ம் ஆண்டும், 'நாயகன்' 2008-ம் ஆண்டும் வெளியாகி ரசிகர்களை சோதித்தன. எஸ்.வி சேகரின் மகன் என அஸ்வினுக்கும், பெரிய இடத்துப் புள்ள என ஜே.கே ரித்தீஷுக்கும் புரோமோஷன்கள் பறந்ததே தவிர படம் டேக் ஆஃப் ஆகவில்லை.

காப்பி அடிச்சதைக்கூட மன்னிச்சிடலாம்ய்யா. ஆனால் 'நாயகன்' படத்துக்கெல்லாம் அறுபதடிக்கு ஜே.கே.ரித்தீஷ் கட்அவுட் வெச்சதை நினைக்கிறப்போதான்...

- இன்னும் சுடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism