Election bannerElection banner
Published:Updated:

"படம் முழுக்கப் பரவியிருக்கும் திமிரே, 'நத்தோலி ஒரு செறிய மீனல்லா'வை முக்கியம் ஆக்குகிறது!" - 'மலையாள கிளாசிக்' பகுதி - 8

"படம் முழுக்கப் பரவியிருக்கும் திமிரே, 'நத்தோலி ஒரு செறிய மீனல்லா'வை முக்கியம் ஆக்குகிறது!" - 'மலையாள கிளாசிக்' பகுதி - 8
"படம் முழுக்கப் பரவியிருக்கும் திமிரே, 'நத்தோலி ஒரு செறிய மீனல்லா'வை முக்கியம் ஆக்குகிறது!" - 'மலையாள கிளாசிக்' பகுதி - 8

`மலையாள கிளாசிக்' தொடர் பகுதி - 8

வி.கே.பிரகாஷ் நம்பக் கூடியவரே அல்ல. அவ்வளவு விநோதம். எங்கே பாய்வார், எங்கே சரிவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அவ்வளவு விநோதமான ஆள் என்று கணிக்கிறேன். அப்படி இல்லையென்றாலும் நான் பார்த்தவரையில் அவரது படங்கள் ஒரு தினுசானவை. மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி எல்லாவற்றிலும் நுழைந்து வந்திருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். செக்கு மாடு கணக்காய் உழலுவது என்கிற பேச்சே கிடையாது. கவனித்துப் பார்த்தால், இந்தமாதிரிக் கதையை இந்தமாதிரிதான் சொல்ல வேண்டும் என்ற இலக்கணங்களை அவர் ஊதித் தள்ளிவிட்டுச் செல்வதை அறிய முடியும். `நத்தோலி ஒரு செறிய மீனல்லா (நெத்திலி ஒரு சிறிய மீன் இல்லை)' - நிச்சயமாகப் புதியது. இதற்கு முன்பு வந்த `திருவனந்தபுரம் லாட்ஜ்' படத்தைவிட வேறொரு கோணத்தில் முக்கியமானது.

`பிரேமன்' பிறந்தபோதே அதில் ஒரு அபத்தம் இருந்தது. `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' ஓடும் தியேட்டரில் லால் வில்லத்தனம் பண்ணிக் கொண்டிருக்கிற காட்சியில் பிரசவ வலி வந்து தூக்கிச் செல்லப்படுகிற ஒரு பெண்மணிக்கு மகனாய்ப் பிறந்தவன், முறையே படிக்காமல் கற்பனைகளிலிருந்து வளர்ந்துகொண்டிருந்து இறுதியாய் எர்ணாகுளத்தில் ஒரு அப்பார்ட்மென்டுக்கு கார் டேக்கராக வந்து சேர்கிறான் என்பதில் கதை தொடங்குகிறது.

சந்தேகமில்லை, செய்யவேண்டியதெல்லாம் முழுக்க, முழுக்க எடுப்பு வேலைகள்தாம். யாராவது பிரேமா என்று கூப்பிட வேண்டுமில்லையா. ஸ்கூல் பையன்கள்கூட நத்தோலி என்றுதான் அழைக்கிறார்கள். தன்னைத் தானே கூட மதித்துக்கொள்ள முடியாத அந்த இழிவான சூழலில்தான் மேலும் ஒருத்தி வந்து சேர்கிறாள். அதேதான், யாருக்கும் அடங்காத ஒருத்தி. பிரபா தாமஸ் என்பது அவளுடைய பெயர். இவனை எடுத்தவுடன் நாய் போல விரட்டியடிக்க ஆரம்பித்துவிட்டாள். சமாளிக்க முடியவில்லை. பிரேமன் தன்னை வதை செய்கிறவர் அவதிப்படுவதாகக் கற்பனையில் கண்டு சிரித்துக்கொள்வதுண்டு. இன்னும் சொல்லப்போனால், அவன் சினிமாவுக்கு  ஒரு நல்ல கதை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறான். சினிமா தியேட்டரில் பிறந்தவன் அல்லவா? அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணை வேறு ஒருவருக்காக உளவு பார்க்கப் போக, பிரபா அவனது கழுத்தைப் பிடிக்கிறாள். நான்கு பேர் கூடி தர்ம அடி அடிக்கிறார்கள். ஆகவே, அவமானத்திலிருந்து எழுந்து வீறு கொள்கிற பிரேமன் பிரபாவைப் பழி வாங்க முடிவு செய்துவிட்டான். கதை வேறு ஒரு திருப்பத்தில் நின்று நிமிர்கிறது.

இந்த உலகம் லேசுப்பட்டதல்ல. நான்கு பேர் எந்தக் கவலையும் இல்லாமல் சவுகரியமாய் வாழ்கிறார்கள் என்றால், நானூறு பேர் பூச்சிகளாக வாயைப் பொத்திக்கொண்டிருக்கும் இடம் தெரியாமல் வாழவேண்டும். ரோட்டுக்கடையில் நான்கு இட்லிக்குப் பட்ஜெட் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருத்தனுக்கு முன்னால் யாராவது பீட்சா, பர்கர் சாப்பிடுவார்கள், ஐஸ்க்ரீம் சூப்புவார்கள். ஸ்டேட்டஸ் பார்த்துப் பார்த்து இவனது இடுப்பெலும்பு ரப்பராகவே மாறியிருக்கும். ஆனால், கொள்ளைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. உலகத்தை கண்ணியமாயிருக்கச் சொல்லி எவ்வளவு தீவிரமாக உபதேசித்தாலும், மறைவில் ஒரு பகை கொந்தளிப்பதை யாவருமே ஓரளவாவது அறிவோம். பிரேமன் அவளை முற்றுகையிட ஒரே வழிதான் இருந்தது. அது, கதை எழுதி அவளை அதில் ஒரு கதாபாத்திரமாக்கி நாஸ்தி பண்ணுவது. 

அவனது யுத்தம் தொடங்குகிறது.

இதுதான் படத்தின் முக்கியக் கதை.

அவன் இருக்கிற அப்பார்ட்மென்ட்தான் களம். அங்கே இருக்கிறவர்கள்தாம் ஏனைய கதாபாத்திரங்கள். பிரபா திமிருள்ள ஒரு ஹீரோயின். போதுமல்லவா? இப்போது என்ன நடக்க வேண்டும், ஆண்டாண்டு காலமாய் அப்படித் திமிருள்ள பெண்களை அடக்குவதற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. அது நடக்கிறது. வீர சூர பராக்கிரமனாக வந்து சேர்ந்துவிடுகிறான் ஒரு ஹீரோ. நரேந்திரன் என்பது அவனுடைய பெயர். அவன் யாருமில்லை, பிரேமன்தான்.

புயலாகவோ, சூறாவளியாகவோ புகுந்து வருகிறான் அவன். அல்லது சிங்கமாகவோ புலியாகவோ நமது விருப்பத்துக்கு உவப்பாக எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அவள் இருக்கும் வீடு அவனுடையது, பாருங்கள். அங்கே இருக்கிற சௌந்தர்யா அண்ட் பார்ட்டி டகால்ட்டி பண்ணி இருக்கிறது. அந்தக் கதை எல்லாம் வேண்டாம், கெட் அவுட், வெளியே போ என்கிறான் நரேந்திரன். அவள் திடுக்கிடுகிறாள். முதல் அடி.

இதை எழுதும்போது பிரேமன் அடைகிற சந்தோஷத்தைப் பார்க்க வேண்டும். பழிக்குப் பழி. தொடர்ந்து அவளுக்கு அடிகள். ஒருமுறை அவளைக் கட்டிப்போட்டுகூட வதை செய்கிறான். இறுதியில் அவளது நைட்டியைப் போட்டுக்கொண்டு டிஸ்கோ ஆடும்போது, அவனை அடித்து அவள் கட்டிப்போடுகிறாள். பிறகு அவிழ்த்துவிட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டு இலக்கிய வரிகளில் தனக்கு கேன்சர் இருப்பதையும், தான் தினமும் இறந்து கொண்டிருப்பதையும் சொல்கிறாள்.

நரேந்திரன் அப்படியே அவள் மீது பரிதாபம் கொண்டு தன்னை மாற்றிக் கொள்வது ஒரு பெரிய ட்விஸ்ட். அதாவது, அதை எழுதின பிரேமனே எதிர்பார்த்திராத மிகப்பெரிய ட்விஸ்ட். என்ன கன்ட்ரோல் பண்ணினாலும் நரேந்திரன் பிரேமனின் கைப்பிடிக்குள் நிற்பதில்லை. வேறு வழியில்லாமல் பிரேமன் நரேந்திரனையே பழிவாங்க ஆரம்பிக்கிறான். அப்பார்ட்மென்டில் ஒரு சிறுவன் செத்துப் போவதற்கு நரேந்திரன்தான் காரணம் என்று கதை செல்கிறது. இப்போது உண்மையில் பிரேமனால் அவன் துரத்தப்படுகிறான் என்று சொல்ல வேண்டும். கதைக்கு அப்பால் ஓர் அல்ப காரியத்துக்காகப் பிரபாவின் அறையிலிருந்து துரத்தப்பட்ட ஆனி கதைக்குள் கொண்டு வரப்படுகிறாள். நானும் நரேந்திரனும் உனக்குக் காதல் என்றால் என்னவென்று தெரிய நாடகம் போட்டோம் என்று சீறுகிறாள். பிரபா நம்பாமல் விரட்ட, நரேந்திரன் இப்போது எல்லாவற்றையும் படைத்த பிரேமனிடமே நியாயம் கேட்கிறான்.

வெளியே வெறுத்துக்கொண்டு உள்ளுக்குள் நீ அவளைக் காதலித்திருக்கிறாய். அதற்குத்தானே இது எல்லாமும் என்று கேட்கிறான்.

நிலைக் கண்ணாடியில் நானேதான் நரேந்திரன் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

கலை என்பது தனது வக்கிரத்தைக் கொட்டித் தீர்ப்பது அல்ல. வக்கிரங்களை கொட்டித் தீர்ப்பது என்பதை நாம் பல்வேறு முனைகளில் பல்வேறு டிசைன்களில் செய்துகொண்டிருப்பதுதான், ஆனாலும் அந்த வேலையைச் செய்கிறவன் எப்படிக் கலைஞனாக முடியும். கண்கள் திறக்க, பிரேமன் வேறு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறான்.

கதையில் பிரேமனின் திரைக்கதையை வாங்க வி.கே.பிரகாஷே வர இருக்கிறார். அதற்கான சம்பவங்கள் படத்தில் நடந்திருக்கின்றன. 

படத்தில் உள்ள யாவரும் அவரவர் இடத்தில்தான் இருக்கிறார்கள்.

பிரேமனின் வாழ்க்கையும் வேறு ஒன்றாகத் தோற்றம் கொடுக்கத் தொடங்குகிறது.

பஹத் பாசில்தான் பிரேமன். அவரேதான் நரேந்திரன். படம் தொடங்கும்போது அம்பில் வில்லைப் பூட்டி பட்ஷியை அடிக்கத் தயாராயிருக்கும் அர்ச்சுனனாகக்கூட நடித்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அலட்டிக் கொள்வதேயில்லை. நாம் என்ன செய்கிறோம், என்ன செய்யவேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரிகிறது. நத்தோலி சிறிய மீன் தானா என்று அவர் கேட்கிற கேள்வி எல்லா எளிய மனிதர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளக்கூடிய ஒரு கேள்வி தானாய் இருக்கும். அப்படியே பகத் நம்மை பிரதிபலிக்கிறார் இல்லையா, அந்த வியப்பைப் பகிர்ந்து கொள்ளாமல் முடியாது.

கமலினி முகர்ஜி அசாத்தியமான ஒரு ஆர்டிஸ்ட். நமது கொட்டங்கச்சி சினிமாக்களில் அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது. எல்லாவற்றிற்குமே அவரது ஒரு பார்வை போதுமானதாக இருக்கிறது. அவை பேசுகின்றன என்றால் க்ளிஷேவாகி விடுமோ? சரி, காதலும் வெறுப்புமான ஒரு பெண்ணை மறக்க முடியவில்லை. மற்றபடி, கொஞ்சமே வந்துவிட்டுச் செல்கிற அழகுப் பதுமையாய் ரீமா. அதாவது, அவ்வளவு சரியாய் அந்தப் பதுமை பாத்திரத்தை செய்து மறைகிறார் என்கிறேன்.

இம்மாதிரிப் படத்தில் அடிப்படையாய் இருந்து தாங்குவது திரைக்கதையாய்தான் இருக்க முடியும். சங்கர் ராமகிருஷ்ணன் அதைச் செய்திருக்கிறார். வெறுமனே வரிசையில் ஒரு கதை சொல்வது நிகழ்ந்திருந்தால், அது மிகச் சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால், வாழ்வை எள்ளலாகச் சொல்லும் ஒரு குரல் படம் முழுக்க இருக்கிறது. அதற்கு யாரும் வாய் விட்டுச் சிரித்துவிட முடியாது என்பது விசேஷம். அத்தனை கதாபாத்திரங்களிலும் தப்பித் தவறி எங்கேனும் ஏதாவது புனிதப் பூந்தொட்டியை வைக்காமல், நடுநிலைத் தன்மையைப் பேணியிருக்கிறார்கள். அதன் பாடுபொருளைச் சிந்தித்து நிற்கையில் பல எழுத்தாளர்களும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய திரைக்கதைதான் இது.

ஒளிப்பதிவு, இசை போன்ற எல்லாமுமே கதையின் போக்குக்கு உதவியாய் இருக்கிறது என்பதைத் தாண்டி, சிறப்பாய்ச் சொல்ல ஏதுமில்லை. அதுவே ஒருவேளை படத்திற்குப் பலம் என்று புரிந்துகொள்ள முயல்கிறேன். அப்படித்தான் இருக்க முடியும்.

இயக்குநர் பற்றிச் சொன்னதுதான்.

எடுத்துக் கொள்கிற விஷயங்களை வைத்துக்கொண்டே அவரது வலிமையை அறிய முடியும். அவ்வளவு முதிர்ச்சியோடு கூடிய ஒரு திரைமொழி. கொஞ்சம் அலட்சியமும் இருக்கிறது என்றும் ஒரு குறையாய்க் குறிப்பிடலாம். எது இருந்தாலும், இல்லாமல் போனாலும் படத்தில் ஒருவிதமான திமிர் கண்டிப்பாக இருக்கிறது.

மார்க்கெட்டிலிருந்து கமலி ஆட்டோவில் வந்து சேர்ந்து பொருள்களை இறக்கிக்கொண்டு எவ்வளவு என்று கேட்க, ஆட்டோக்காரர் நாற்பது ரூபாய் என்பார். இருபத்தைந்து ரூபாய் என்று கமலி சொல்லிப் பார்க்க, ஆட்டோக்காரர் மறுக்க, அப்புறம் பேச்சே இல்லை. பொருள்களுடன் ஏறி உட்காரும் கமலி வண்டியை எடுக்கச் சொல்கிறார்.

நீ மறுபடியும் மார்கெட்டிலேயே விட்டுவிடு. நான் அங்கிருந்து வேறொரு ஆட்டோ பிடித்து வந்துகொள்கிறேன்.

இது எவ்விதத்திலும் ஒரு நகைச்சுவைக் காட்சியே அல்ல,

திமிர்.

படம் பூராவும் விரவியிருக்கிற இந்தத் திமிருக்காகவே இந்தப் படத்தை ஓரிரு முறைக்கு அதிகம் பார்க்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு