Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

காணாமல்போன டிரைவர்கள்!கா.பாலமுருகன் படங்கள்: க.தனசேகரன், கா.முரளி

பிரீமியம் ஸ்டோரி
நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

‘நீங்கள் எழுதியது எல்லாம் எந்த அளவுக்கு முகத்தில் அறையும் நிஜம் என்பது, கர்நாடகாவில் தமிழக லாரி டிரைவர்கள் படும் அவஸ்தைகளை டி.வி-யில் பார்த்தபோதுதான் தெரிந்தது’ என்று பலரும் என்னிடம் பதைபதைப்போடு சொன்னார்கள். இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த அவலம், இப்போதாவது நமக்குத் தெரிந்ததே என்ற அளவில் இது ஓர்ஆறுதல்தான்.

இப்போது நெடுஞ்சாலைப் பயணத்துக்கு வருவோம். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சென்னகேசவனிடம் பேசினேன். “லாரித் தொழிலைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னை. எங்கள் கவனத்துக்கு வரும் பிரச்னைகளை, தேசிய லாரி சம்மேளனத்துக்குக் கொண்டுசென்று, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி தீர்வுகாண முயற்சிக்கிறோம். ஆனால், திடீரென அறிவிக்கப்படும் பந்த் போன்ற சமயங்களில் சிக்கிக்கொண்டால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை. பிறகு எங்கே லாரியையும் சரக்குகளையும் பாதுகாப்பது? கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களும் எங்களுக்குப் பெரிய அச்சுறுத்தல்.

2014-ம் ஆண்டில் மட்டும் வட மாநிலங்களில் 60 தமிழக லாரிகள் குற்றச் சம்பவங்களால் பாதிப்படைந்தன. 2015-ம் ஆண்டில் 150 தமிழக லாரிகள் கடத்தப்பட்டுள்ளன. இதில் 50 சதவிகித லாரிகளை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. மேலும், லாரியைக் கடத்தி டிரைவர்களைக் கொலை செய்வது அதிகரித்திருப்பது எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. ஏற்கெனவே, டிரைவர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்தத் தொழிலை, மேலும் சிக்கலாக்கும் விதமாக டிரைவர்களைக் கொல்வது, கடத்துவது போன்றவை நடக்கின்றன.

 கடத்தல், கொள்ளை, விபத்து ஆகியவற்றைத் தடுக்க வேண்டும் என்றால், நெடுஞ்சாலையில் 50 கி.மீ தூர இடைவெளிகளில் ட்ரக் டெர்மினல்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றுக்கு, காவல்துறையினரால் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால், டிரைவர்கள் பாதுகாப்பான இடங்களில் ஓய்வெடுக்க முடிவதுடன் விபத்துகளையும் தவிர்க்க முடியும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

இன்னொரு முக்கியப் பிரச்னை, சுங்கச் சாவடிகள். எந்த வரைமுறையும் இல்லாமல் வசூல் செய்யப்படும் கட்டணம், எங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அளிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 45 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. இதில், 4.5 லட்சம் லாரிகள் தமிழகத்தில் ஓடுகின்றன. அதில், 87,000 லாரிகள் நேஷனல் பெர்மிட் பெற்றவை.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

இந்தியாவில் தற்போது 373 சுங்கச் சாலைகள் உள்ளன. 373 சுங்கச் சாலைகள் அமைக்க மொத்தம் செலவான தொகை, 1,73,000 கோடி ரூபாய். இந்த 373 சுங்கக் கட்டணச் சாவடிகள் மூலம் 2014-ம் ஆண்டு வரை வசூலான தொகை 72,300 கோடி ரூபாய். 373 சுங்கச் சாலைகளில், 62 சுங்கச் சாலைகளில் திட்டச் செலவைத் தாண்டி வசூல் செய்யப்படுகின்றன. அதாவது, இந்த 62 சுங்கச் சாலைகள் அமைக்க செய்த மொத்தச் செலவு 13,415 கோடி ரூபாய். இதில், 2014-ம் ஆண்டுவரை வசூலான தொகை மட்டும் 21,897 கோடி ரூபாய். மத்திய அரசு - டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 11 ரூபாய் 37 பைசா வரை படிப்படியாக உயர்த்தியதால் மட்டும், ஆண்டுக்கு 55,600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதாவது, வருமானம் இல்லாமல் செலவு மட்டுமே சாலைகளுக்குச் செய்கிறோம் என்றால், வரி போடலாம்; கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், செலவுக்கு மீறி வரவு வந்துகொண்டே இருக்கிறது. இதில், எங்கள் தொழிலின், பொருள் போக்குவரத்தின் முக்கியத்துவத்தைக் கணக்கில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சங்கச் சாலைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூல் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

“லாரியுடன் கடத்தப்பட்ட டிரைவர்கள் இருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தக் குடும்பத்தினர் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அவர்களைச் சந்தித்துப் பேசமுடியுமா” எனக் கேட்டார், சென்னகேசவன். சேலம் வாழப்பாடி அருகே உள்ள கூட்டாத்துப்பட்டி காந்திநகரில், கடத்தப்பட்ட இரண்டு லாரி டிரைவர்களில் ஒருவரான காண்டீபனின் மனைவி சுரேகாவைச் சந்தித்தேன். காண்டீபன் - சுரேகா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் லாரிக்குச் சென்ற கணவர் இன்னும் திரும்பவில்லை; எங்கே இருக்கிறார்; எப்படி இருக்கிறார் என எந்த விவரமும் தெரியாமல், பள்ளிக்குச் செல்லும் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு தனி நபராக கணவரைக் கண்டுபிடிக்க அலைந்துகொண்டிருக்கிறார் சுரேகா.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

அது ஒரு வழக்கமான நாளாகத்தான் சுரேகாவுக்கு இருந்தது. அன்று மாலை லாரிக்குச் சென்றிருந்த கணவர் போன் செய்து, “மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாகர் என்ற இடத்தில் இருக்கிறேன். ஹைதராபாத் லோடு கிடைத்திருக்கிறது. நாளைக்குப் பேசுகிறேன்” என்றிருக்கிறார். அடுத்தநாள் காலை இன்னொரு டிரைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவக்குமார், தன்னுடைய மனைவி சந்தியாவுக்கு போன் செய்துள்ளார். ‘ஹைதராபாத் வந்துகொண்டிருக்கிறேன். அங்கிருந்து லோடு எடுத்துக்கொண்டு தமிழ்நாடு வந்துவிடுவேன். வந்ததும் வீட்டுக்கு வந்துவிடுவேன். கவலைப்படாதே...

குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார். சந்தியாவுக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. வடக்கே சென்று சேலம் திரும்பியவரை சந்தியா வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால், ‘இந்த ஒரு ட்ரிப் மட்டும் போய் வந்துவிடுகிறேன்’ என்று மனைவியைச் சமாதானம் செய்துவிட்டு, காண்டீபனோடு லாரியில் சென்றவர் சிவக்குமார்.
கடந்த ஆண்டு 09.01.2015 அன்று சேலத்தில் இருந்து மைசூருக்குச் சென்று, அங்கிருந்து லோடு ஏற்றிக்கொண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பொராக்பூரில் லோடு இறக்கியுள்ளார்கள். அங்கே லோடு கிடைக்காததால், அங்கிருந்து 14.01.2015 அன்று உத்ராஞ்சல் சென்று, அங்கே இரண்டு நாட்கள் லோடுக்காகக் காத்திருக்கிறார்கள். 16.01.2015 அன்று உத்ராஞ்சல், ருத்ரபூரில் அலுமினியக் கட்டிகள் லோடு கிடைக்க... அதை ஏற்றிக்கொண்டு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டவர்கள், தங்கள் வீடுகளுக்கு வழக்கமான முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

சுரேகாவின் கணவர் காண்டீபன் பேசியது 17.01.2015 அன்று மாலை. சந்தியாவின் கணவர் சிவக்குமார் அவரது மனைவியுடன் பேசியது 18.01.2015 அன்று அதிகாலை. அதன் பிறகு, அடுத்த நாள் வழக்கமாக வரவேண்டிய அழைப்பு வரவில்லையே என காண்டீபன் மனைவி சுரேகா போன் செய்துள்ளார். சுவிட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக சொல்லவும் சார்ஜ் இருந்திருக்காது என அடுத்த நாளும் முயற்சித்திருக்கிறார். அதேபோல், சிவக்குமாரின் மனைவி சந்தியாவும் முயற்சிக்க... இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் என்ற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. சுரேகா, பதறிக்கொண்டு லாரி ஓனரிடம் தகவல் சொல்லி இருக்கிறார்.

அந்த லாரி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. காரணம், லாரியில் இருந்த அலுமினியக் கட்டிகளின் மதிப்பு 36 லட்சம் இருக்கும். இதுபோன்ற விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதில் ஏராளமான சிக்கல் இருப்பது லாரி தொழிலில் இருப்பவர்களுக்குத் தெரியும். இதை ரிஸ்க் லோடு என்பார்கள். ஆனாலும், வேறு லோடு கிடைக்காமல் காத்திருப்பதைவிட கிடைப்பதை ஏற்றிக்கொண்டு புறப்பட்டால்தான் காசு சம்பாதிக்க முடியும். எனவே, இரண்டு நாட்கள் காத்திருந்து வேறு லோடு கிடைக்காததால், ருத்ரபூரில் இருந்து ஹைதராபாத்துக்கு அலுமினியக் கட்டி லோட்டு ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள்.

எங்கே, என்னவென்று தெரியாமல் தவிக்க ஆரம்பித்தனர் மொத்த பேரும். லாரி உரிமையாளரான சுப்ரமணியிடம் பேசியபோது, “சுரேகா வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கு போன் வரவில்லையே என்ற விஷயம் உறைத்தது. உடனே அந்த வழித்தடத்தில் செல்லும் லாரி டிரைவர்களிடம் போன் மூலம் விசாரித்தோம். யாருமே பார்க்கவில்லை என்று கூறியதால், சந்தேகம் வந்து உடனே நாங்கள் ஐந்து பேர் கார் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். கடைசியாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகரில் இருந்து பேசியதாகச் சொன்னதால், மஹாராஷ்ட்ராவுக்குள் லாரி நுழைந்திருக்கிறதா என்பதைப் பார்க்கலாம் என, நாக்பூர் சென்று மாநில எல்லையில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்டில் விசாரித்தோம். செக்போஸ்ட்டை லாரி கடந்த விவரம் தெரிந்தது. அதற்கு அடுத்த ஊரான நாக்பூரில் உள்ள டோல்கேட்டில் லாரி உள்ளே சென்றது தெரிந்தது. ஆனால், நாக்பூர் நகரைவிட்டு லாரி வெளியேறவில்லை. நாக்பூரில் இருந்துதான் லாரி கடத்தப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. அதனால், நாக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அந்தப் பகுதியில் லாரியைத் தேடிக்கொண்டிருந்தோம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் அருகே, லாரி பார்க்கிங் ஏரியாவின் செக்யூரிட்டி, லாரியின் பக்கவாட்டில் எழுதியிருந்த என் அண்ணனின் எண்ணுக்கு போன் செய்தார். ‘இந்த லாரி கடந்த நான்கு நாட்களுக்கு மேல் இங்கே நிற்கிறது. ஏன் எடுக்கவில்லை’ என்று கேட்டிருக்கிறார். அவர் எங்களுக்குத் தகவல் சொல்லவும் அந்த செக்யூரிட்டியிடம் பேசி, ‘அந்த லாரி கடத்தப்பட்டது; காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். லாரியை யார் வந்தாலும் எடுக்கவிடவேண்டாம்; நாங்கள் வந்துவிடுகிறோம்’ என தகவல் சொல்லிவிட்டு, சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் லாரியுடன் டிரைவர்கள் காணாமல் போனதை புகார் செய்யச் சொல்லிவிட்டு, ஆக்ராவுக்கு விரைந்தோம். எனது புத்தம் புது லாரியின் முகப்பு பெயின்ட் மூலம் அழிக்கப்பட்டு அடையாளம் மாற்றப்பட்டிருந்தது. உள்ளே எந்தப் பொருளும் இல்லை. செக்யூரிட்டியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு அங்கேயே பதுங்கியிருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவில் நால்வர் லாரியை எடுக்க வர... அவர்களைச் சுற்றிவளைத்தோம். மூவர் தப்பிவிட்டனர். ஒருவன் மட்டுமே கிடைத்தான். அவனை அங்கே இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவனிடம் இருந்து போலீஸால் உண்மையைப் பெற முடியவில்லை. அதனால், அவனை திருட்டு வழக்கில் ரிமாண்ட் செய்துவிட்டனர். சேலம் காவல்துறை உதவியுடன் எங்கள் லாரியை மீட்டு, நாக்பூர் போலீஸுக்குத் தகவல் சொல்லி, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடுமாறு கேட்டுக்கொண்டோம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 41

சேலம் கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ஒரு குழு அங்கே சென்று விசாரணை நடத்தினர். நாக்பூர் காவல்துறை உதவியுடன் மகாராஷ்ட்ரா மாநிலம் முழுக்கத் தேடினோம். தப்பித்த மூவரில் மேலும் இருவர் சிக்கினர். அவர்களிடம் விசாரித் தபோது, லாரியில் இருந்த சரக்குகளை புனேவில் விற்றிருப்பது தெரிந்தது. அங்கே காவல்துறை உதவியுடன் சரக்குகளை மீட்டோம். ஆனால், இரண்டு டிரைவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்பது மட்டும் யாருக்கும் தெரியவில்லை. பிடிபட்ட மூவரும் கடத்தி கொண்டுவரப்பட்ட லாரியின் சரக்கோடு மட்டும் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், கடத்திக் கொண்டுவந்தது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆள். அவனுக்குத்தான் டிரைவர்கள் பற்றிய விவரம் தெரியும் என்று சொல்லிவிட்டனர். இப்போது அந்த குற்றவாளிதான் கிடைக்க வேண்டும். இந்த வழக்குத் தொடர்பாக தமிழக காவல்துறை உதவியுடன் உத்ராஞ்சல், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம் என வடமாநிலங்கள் முழுக்க அலைந்து விட்டோம். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை மத்திய அரசின் உதவியோடு அணுகினால்தான் காணாமல் போன டிரைவர்கள் பற்றிய உண்மை தெரியும்” என்றார்.
      
சுரேகா இதற்கிடையே- கலெக்டர், எஸ்பி, முதலமைச்சர் என எல்லோருக்கும் மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டு, வழக்கு விசாரணையில் இருப்பதால், எந்த உத்தரவும் போட முடியாது என்று சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். கணவர்கள் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றன இந்த இரண்டு குடும்பங்களும். சி.பி.ஐ தலையிட்டால்தான் இந்த வழக்கில் வெளிச்சம் கிடைக்கும்; உண்மைக்காகக் காத்திருக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் வழி பிறக்கும்!

பயணங்கள் நீளும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு