Published:Updated:

உடல்நல, மனநல ஆலோசனை 24 மணி நேரமும் இலவசம்! - தமிழக அரசின் 104 மருத்துவ சேவை

விகடன் விமர்சனக்குழு

காதல், குடிப்பழக்கம், மன அழுத்தம்... எதுவாக இருந்தாலும் அதைச் சரிசெய்வதற்கு உதவ 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கிறது 104.

உடல்நல, மனநல ஆலோசனை 24 மணி நேரமும் இலவசம்! - தமிழக அரசின் 104 மருத்துவ சேவை
உடல்நல, மனநல ஆலோசனை 24 மணி நேரமும் இலவசம்! - தமிழக அரசின் 104 மருத்துவ சேவை

திக்காலத்திலிருந்து இன்றைய 4ஜி காலம்வரை விடாமல் மனிதர்களைத் துரத்திக்கொண்டிருப்பது ஒருதலைக் காதல்! இதில் கவலைப்படவேண்டிய விஷயம்... காதலின் பொருட்டு நிகழும் கொலைகளும் தற்கொலைகளும்தாம். இதற்கு என்ன காரணம்?  விரிவாக விளக்குகிறார்,  `104 மருத்துவ உதவி சேவை’-யின் உளவியல் ஆலோசகராகப் பணியாற்றும் ஹேமா கோதண்டராமன்,

அந்தக் கால காதலில் உண்மையும் நம்பிக்கையும் ஆழமாக இருந்தன. இந்தக் கால காதலில் இவை இரண்டும் இல்லை. அப்போதெல்லாம் காதலி கிடைக்கவில்லையென்றால், தாடிவைத்துக்கொண்டு, காதல் பாட்டுப் பாடி, பிறகு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, பிறக்கும் குழந்தைக்குக் காதலியின் பெயரைவைத்து ரசித்தார்கள். ஆனால், இந்தக் காலத்தில் காதலி கிடைக்கவில்லையென்றால், அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்; அவள் உயிருடன் இருக்கக் கூடாது என்று அவள் மீது பெட்ரோலையும் ஆசிட்டையும் ஊற்றுவது, கொலை செய்ய முற்படுவது அல்லது தன் உயிரை மாய்த்துக்கொள்வது எனத் துணிந்துவிட்டார்கள். 

காரணம் என்ன?

* அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்தனர். கஷ்டங்களைப் புரிந்து வளர்ந்தார்கள். எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களுக்குக் கிடைத்தது. விருப்பப்பட்டது  கிடைக்கவில்லையென்றால் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை இருந்தது.

* அந்தக் காலத்தில் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற கூட்டுக் குடும்பச் சூழல் நிலவியது. இதனால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மனம்விட்டுப் பேசி பிரச்னைகளை எதிர்கொண்டார்கள்.

* அப்போதெல்லாம் சாப்பிடும்போது அழகான வீட்டின் நடு முற்றத்தில், சுற்றத்துடன் நிலா வெளிச்சத்தில் வட்டமாக அமர்ந்து, அனைவரும் பேசி சந்தோஷமாகச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். 

* அந்தக் காலத்தில் பள்ளிகளில், வகுப்பறையில் நீதி போதனை (Moral Science) வகுப்புகள் நடத்தப்பட்டன. அறநெறிக் கதைகளும் போதிக்கப்பட்டன.

* அப்போது, பெண் பிள்ளைகள் மட்டும்தான் பெரியவர்களுக்கு ஒரே கவலையாக இருந்தார்கள். இந்தக் காலத்தில் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களும் அதிகமாக கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

* அப்போதெல்லாம் குழந்தைகளை தனிமைப்படுத்திப் பார்த்ததே இல்லை. படிக்கவேண்டிய வயதில் படிக்கவில்லையென்றால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்துப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.


இன்றையச் சூழலில்...

* இன்றையச் சூழலில் வீட்டில் ஒரே குழந்தை. அந்தக் குழந்தையும் எப்போதும் டி.வி அல்லது செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இவற்றிலிருந்து வெளிவருவதே இல்லை. சாப்பிடும்போதுகூட என்ன சாப்பிட்டோம் என்பது தெரியாமல் வளர்ந்துகொண்டிருக்கிறது. குழந்தைக்குப் பிடித்ததெல்லாம் கிடைத்து விடுகிறது. அதனால் அந்தக் குழந்தையால் வளர்ந்த பிறகு காதலில் ஏமாற்றத்தை எதிர்கொள்ள முடிவதில்லை.

* இன்றையக் காதல் நிலையற்றதாக, உடனுக்குடன் முடிவுகளை எடுப்பதாக இருக்கிறது.

* இப்போதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று அருகிப்போய்விட்டது. இப்போதிருக்கும் வீடுகளில் முற்றமும் இல்லை; சுற்றமும் இல்லை.

* பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இல்லை. அதனால் மாணவர்களுக்கு நீதி, அறநெறிகள் குறித்துத் தெரிவதில்லை.

* இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு செயலின் பின்விளைவுகள் குறித்தெல்லாம் நாம் தெரியப்படுத்துவதில்லை. சினிமாவைப் பார்த்து அதேபோல் வாழவேண்டும் என்கிற கற்பனையில் வாழ்கிறார்கள். பெற்றோர்கள் அது உண்மையல்ல, கதை என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும்.

* இப்போதுள்ள குழந்தைகளுக்கு அதிகமாகச் சிந்திக்கும் திறனும், அதே சமயத்தில் அதிகம் கோபப்படும் தன்மையையும் கொண்டிருக்கிறார்கள்.


பெற்றோர்களும், ஆசிரியர்களும், உளவியல் ஆலோசகர்களும் செய்யவேண்டியவை...

* மாணவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், எதையும் எதிர்கொள்ளும் திறமையையும், நம்பிக்கையையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

* பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.

* பிள்ளைகளுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும், எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் மனதைரியம் உண்டாக உதவ வேண்டும்.

* மாணவர்களுக்கு எதுவும் முடிவல்ல... அனைத்துக்கும் மாற்று என்ற ஒன்று உண்டு என்ற தைரியத்தையும் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும்.

* தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருந்தாலும், குழந்தைகளுக்கு என்று ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்க வேண்டும்; குழந்தைகளுடன் பேச வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் தங்கள் கருத்தைப் பெற்றோர்கள் கேட்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசவும் செய்வார்கள்.

* கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் எனில், உடனிருக்கும் நண்பர்கள் குறித்துப் பெற்றோர் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

* படிக்கவேண்டிய வயதில் படிக்கவில்லையென்றால், ஏற்படும் பின்விளைவுகளை கதைபோலப் பொறுமையாகச் சொல்லி பிள்ளைகளுக்குப் பெற்றோர் விளக்க வேண்டும்.

* நேரம் (Time) எவ்வளவு முக்கியம் என்பதன் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நேரம் போனால் திரும்ப வராது; சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கையை, லட்சியத்தை விட்டுவிடக் கூடாது; எதையும் எளிதாக, விளையாட்டாக, சந்தோஷமாகச்  செய்வது எப்படி என்பதையெல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

* இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் செல்போன், வாட்ஸ்அப்பில் பேசிக்கொள்வதுதான் அதிகம். இவற்றைக் குறைத்துக்கொண்டு, நேரில் உரையாடுவதை அதிகப்படுத்த வேண்டும்.
*****
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் உதவுவதற்காகவே இருக்கிறது `104 மருத்துவ உதவி சேவை. `படிப்பு, உடல்ரீதியான, மனரீதியான, தொழில்ரீதியான பிரச்னைகள், காதல், குடிப்பழக்கம், மன அழுத்தம்...  எதுவாக இருந்தாலும் அதைச் சரிசெய்வதற்கு உதவ 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கிறது 104. இந்தப் பிரச்னைகளெல்லாம் உளவியல் ஆலோசகரின் மூலமாகத் தீர்த்துவைக்கப்படுகின்றன. இரவு, பகல் பாராமல் இயங்கிக்கொண்டிருக்கிறது 104. `அழையுங்கள்...  பிரச்னையைத் தீருங்கள்!’.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைத் திட்டி சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் தட்டிக்கொடுத்து, அன்பாக அவர்களது பொறுப்புகளைப் புரியவைக்க வேண்டும். கல்வியின் மதிப்பை குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

குழந்தைகளை அன்பாக, அரவணைத்து நடத்த வேண்டும். எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதைத் தெளிவாகப் புரியவைக்க வேண்டும்.

ஓர் ஆண், தனக்குப் பிடித்த பெண்ணை விரும்புகிறான். ஆனால், தன்னை அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருக்கிறதா என்று அவன் அறிய விரும்புவதில்லை. எனவேதான் ஒருதலைக் காதல் ஏற்பட்டு, அது வெளிப்படும்போது, பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது.
இளைஞர்களுக்கு நல்ல நெறி முறைகள், கல்லூரிப் பருவத்தில் கற்கவேண்டிய பாடங்கள்... அவை எப்படி வாழ்க்கைக்கு உதவும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், உளவியல் ஆலோசகர்களும் எல்லாவிதத்திலும் தெளிவுப்படுத்த வேண்டும்.

மாணவர்களுக்குப் பள்ளி பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும். திருமணத்துக்கு முன்னரும், திருமணத்துக்குப் பின்னரும் அவசியம் உளவியல் ஆலோசனை (Counseling) வழங்கப்பட வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் சிரமமில்லாத கல்வி, சுலபமான வேலை, கைநிறையச் சம்பளம், ஜாலியான வாழ்க்கை இவற்றைத்தான் எதிர்பார்க்கிறார்கள். உழைப்பு அவசியம் என்பதையும், அன்பும் பண்பும் பாசமும் நிறைந்திருந்தால் அனைத்தும் வந்து சேரும் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். 

இவையெல்லாம் இளம் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு உணர்த்தப்பட்டால், காதலுக்காக நிகழும் கொலைகளும், தற்கொலைகளும் நிச்சயம் தவிர்க்கப்படும்.

முக்கியமான ஒன்று... உளவியல் நிபுணர்களால் ஆலோசனை மட்டுமே தர முடியும், அதைத் திறம்படச் செயல்படுத்த உங்களால்தான் முடியும்! 
 


104 மருத்துவ உதவி சேவை... சில தகவல்கள்!

சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 1,300 முதல் 1,500 வரை அழைப்புகள் பெறப்படுகின்றன .  

104 மருத்துவ உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. வயது வரம்பின்றி எல்லாத் தரப்பினருக்கும் முழுமையான உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 300  தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கப்பட்டு, தன்னம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறது. தாழ்வுமனப்பான்மை, உறவுகளிடையே விரிசல், எண்ணச் சிதறல்கள், நினைவாற்றல் பெருக்குதல், அச்சம் களைதல், வளரினம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், தேர்வை நம்பிக்கையோடு எதிர் கொள்ளுதல், தனிமை, சோர்வு,போதைக்கு அடிமையானதிலிருந்து விடுபடுதல், பாலியல் தொடர்பான ஐயங்கள், மூத்த குடிமக்களுக்கான மனநல ஆலோசனை, மகப்பேறுக்குப் பின்னர் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் களைதல்... என மாநிலம் தழுவிய 24 மணி நேர மனநல ஆலோசனைக்கான சிறப்பு மையமாகவும் 104 செயல்பட்டுவருகிறது .

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் 104 மருத்துவ உதவி சேவையை 24 மணி நேரமும் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் தொடர்புகொள்ளலாம். இந்தச் சேவையை உடல்நலம், மருத்துவம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் மனநல ஆலோசனை பெறுவதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.