Published:Updated:

உள்ளுணர்வு என்றால் என்ன, எப்படி வருகிறது, அதை நம்பலாமா?

உள்ளுணர்வு
உள்ளுணர்வு ( விகடன் )

நீங்கள் உள்ளுணர்வு என்பதைப் பகுத்தறியும் எண்ணமின்றி நம்முள் கடத்தப்படும் எண்ண ஓட்டங்கள் எனக் கொள்ளலாம். இது எப்படிச் செயல்படுகிறது? இதை நம்பலாமா? கூடாதா?

"உள்ளுணர்வுகளைப் புறந்தள்ளக் கூடாது. நம் மனம் கிரகித்துக் கொள்ள முடியாத, அதே சமயம் நமக்குத் தெரியாமல் நம் மனம் சேமித்து வைத்துக் கொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன."

- BBC-யின் ஷெர்லாக் ஹோம்ஸ் தொடரிலிருந்து...

`சந்திரமுகி' படத்தில் பேய் ஓட்ட வரும் சாமியார், வீட்டு வாசலில் கால்களை வைத்தவுடன், ``இருக்கு. இந்த வீட்ல ஒரு பிரச்னை இருக்கு" என்பார். பேய் இருக்கிறதா, இல்லையா என்று ஆராயாமல், இதைப் பார்த்தால், இதை அந்தச் சாமியாரின் உள்ளுணர்வு என்று கூறலாம். நமக்கும் அப்படி நிறைய முறை, தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை திடீரென யாரோ தட்டி எழுப்பியதைப் போல ஒரு சில எண்ணங்கள் எட்டிபார்க்கும். 

உதாரணத்துக்கு, அன்று அலுவலகத்துக்குக் கிளம்பும் போதே ``இன்னைக்கு ஏதோ ஏழரை இருக்கு" என்று மனம் எச்சரிக்கும். ஆனால், இதனால்தான், இதுதான் பிரச்னை என்று சரியாக எந்த விளக்கமும் நமக்குப் புலப்படாது. நீங்கள் துணிந்து அலுவலகம் சென்றுவிடுவீர்கள். பின்புதான் ஏதோவொரு முக்கியமான ஃபைலை மறந்து வீட்டில் வைத்து விட்டோம் என்பது புரியும். அலுவலகத்தில் மேனேஜர் அறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சாமி ஆடுவார். அதன் பிறகு அன்று என்ன வேலையைச் செய்ய... சரி, அந்தக் கதை எதற்கு? இப்போது நீங்கள் வீட்டுக்குக் கிளம்பும்முன் உங்களுக்கு ஓர் உள்ளுணர்வு வந்ததே? அது எப்படி வந்தது? யதேச்சையாக நடந்ததா? இதற்கான விடையைச் சுலபமாக இப்படிப் புரிந்து கொள்ளலாம். 

உள்ளுணர்வு
உள்ளுணர்வு
Vikatan

உங்கள் மனதின் ஒரு பகுதி, நீங்கள் அந்த ஃபைலை மறந்து விட்டீர்கள் என நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னே புரிந்து கொண்டு உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால், அலுவலகம் கிளம்பும் அவசரத்தில், அதன் குரல் உங்களுக்குக் கேட்கவே இல்லை. சொல்லப்போனால் அதை நீங்கள் ஓர் உள்ளறையில் வைத்துப் பூட்டி விட்டீர்கள். அது கதவை தட்டிக் கத்துகிறது. உங்கள் மனம் முழுக்க முழுக்க கிளம்புவதில் லயித்து இருப்பதால், அந்தக் கத்தும் சத்தம் உங்களை எட்டவே இல்லை. இருந்தும் அந்தக் கதவை தட்டும் ஓசை மட்டும் ஏதோ கேட்க வேண்டுமே என்பது போல கேட்கிறது. அதுதான் உங்களுக்கு அந்த ``இன்னைக்கு ஏதோ ஏழரை இருக்கு" என்று உதித்த உள்ளுணர்வு. பதற்றமின்றி நின்று யோசித்திருந்தால் அந்தக் குரல் உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். அதாவது சுருக்கமாக, உங்கள் மனதுக்கு நீங்கள் செய்த/செய்யப் போகும் தவறு புரிகிறது. ஆனால், அதைக் கவனித்துப் புரிந்து கொள்ள உங்களுடைய மனதுக்கே நேரமில்லை, அவ்வளவுதான்!

Vikatan

இதே உள்ளுணர்வு இப்படி மாயவலை வீசி இலை மறைவுக் காய் மறைவாகப் பேசாமல், இதைச் செய்யாதே என்றுகூடத் தெளிவாகச் சொல்லும். உதாரணமாக, பிராவோ உங்களுக்குப் பந்து வீசப்போகிறார். ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை. இப்போது உங்கள் உள்ளுணர்வு பிராவோ ஸ்லோ பால் போடுவார் என்று சொல்லும். மெதுவாகப் பொறுத்திருந்து பேட்டை வீசச் சொல்லும். இதை நீங்கள் `hunch' அல்லது `gut feeling' என்றும் குறிப்பிடலாம். இதுவும் உள்ளுணர்வின் ஒரு வகைதான்.

அப்போ இந்த உள்ளுணர்வு உண்மையை மட்டும்தான் பேசுமா?

அதைத் தெரிந்துகொள்ளும் முன், எது உள்ளுணர்வு (Intuition) என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே போல Intuition, Instinct இரண்டுக்குமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். 

முதலில் இந்த Instinct பஞ்சாயத்து. பலர் இதை  Intuition என்னும் உள்ளுணர்வோடு குழப்பிக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் Instinct என்பதன் அர்த்தம் `சுபாவம்'. இந்தச் சுபாவம் என்பது யாரும் கற்றுக் கொடுப்பது இல்லை. பன்றி சுத்தமாக இருக்காது. சேற்றில் புரண்டு கிடக்கும். அது அதன் சுபாவம். குழந்தை பசித்தால் அழும். அது அதன் சுபாவம். இதைக் கற்றுக்கொள்ள அந்தந்த உயிரினங்களுக்கு அனுபவம் தேவை இல்லை. இது இயல்பிலேயே அந்தந்த உயிரினங்களில் பதிந்துபோன விஷயம். தீயைத் தொட்டு விட்டால் சுடும் என்பதைத் தெரிந்துகொள்ள முன்னரே, தீயினால் புண்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? 

ஆனால், `உள்ளுணர்வு' இதிலிருந்து வேறுபடுகிறது. நீங்கள் இந்த உள்ளுணர்வைப் பகுத்தறியும் எண்ணமின்றி நம்முள் கடத்தப்படும் எண்ண ஓட்டங்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக, காசைச் சுண்டி வீசும்போது, `தலை' அல்லது `பூ' விழும் என்று நீங்கள் கூறுவது வெறும் உள்ளுணர்வின் அடிப்படையில் மட்டுமே. தலைதான் விழும் என்பதற்கான ஆதாரமோ, தரவுகளோ உங்களிடம் கிடையாது. ஆனால், `சுபாவம்' என்பது எண்ண ஓட்டங்கள் அல்ல, அது செயல்! 

உள்ளுணர்வு என்பது இப்படி நடக்கப் போகிறது, ஏதோ தவறாக இருக்கிறது, ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடக்கப் போகிறது என்றெல்லாம் நமக்குத் தகவல்கள் தரும். ஆனால், அதற்குத் தர்க்க ரீதியாக ஆதாரங்களையோ, காரணங்களையோ முன் வைக்காது. பல உளவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த `உள்ளுணர்வு' என்னும் விஷயத்தை ஆழ்மனதில் (Subconscious mind) பதிந்திருக்கும் அறிவு, ஆழ்மனதின் அறிவாற்றல், உள் நுண்ணறிவு, ஆழ்மனதில் பதிந்துவிட்ட தகவல்களைத் திரட்டி ஒரு செய்தியை முன் வைப்பது எனப் பல்வேறு விளக்கங்களை முன் வைக்கிறார்கள். அப்படியென்றால் உள்ளுணர்வு என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு தரவின் அடிப்படையில்தான் தோன்றுகிறது. எனவே அது எப்போதும் சரியாக இருக்கும் எனக் கொள்ளலாமா?

இங்கேதான் பிரச்னையே! இந்தத் தரவுகள், புள்ளி விவரங்கள் சில சமயம் ஏமாற்றும் என்பது நாம் அறிந்த விஷயம்தானே? உதாரணமாக, புள்ளிவிவரங்கள்படி, இந்தியா பாகிஸ்தானிடம், ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை தோற்றதே கிடையாது. அடுத்த வருடம், இரண்டு அணிகளும் உலகக் கோப்பையில் மோதப் போகின்றன. யார் ஜெயிப்பார்கள் என நீங்கள் ஓர் ஆஸ்திரேலியனை கேட்டால், நிச்சயம் இந்தியாதான் என்று பதில் வரும். ஆனால், அதுதான்  நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே! இந்தியா தோற்றும் போகலாம் அல்லவா? இவ்வளவு தெரிந்த புள்ளிவிவரக் கணக்கு மூலம் யோசித்த விஷயமே நடக்கவில்லை என்றால், என்ன தரவு, எப்படிப்பட்ட தரவு என்று தெரியாது ஏற்படும் உள்ளுணர்வுகள் சொதப்புவதும் நிகழும் அல்லவா?

சிக்மண்ட் ஃப்ராய்டு  போன்ற உளவியல் ஆராய்ச்சியாளர்கள், உள்ளுணர்வு (Intuition) போன்ற விஷயங்களை ஒதுக்கவே செய்கிறார்கள். முழுமையான ஆதாரத்தின் அடிப்படையில் ஓர் உணர்வு தோன்றினால் மட்டுமே அதைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் ஃப்ராய்ட். காரணம், உள்ளுணர்வு என்பது பல நேரங்களில் தவறாகப் போக வாய்ப்புண்டு. உள்ளுணர்வு, குற்றவாளியாக நிறுத்தும் ஒருவர், உண்மையில் ஆதாரப்படி நிரபராதியாக இருக்கலாம். இந்த வகை எண்ணங்கள் எந்தத் தரவுகள் அல்லது எதன் அடிப்படையில் தோன்றுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஒருவேளை, அந்த உணர்வு தோன்ற காரணமான தரவுகள் கிடைத்து விட்டால் அதுதான் உள்ளுணர்வே கிடையாதே? ஒன்றிரண்டு முறை, நம் உள்ளுணர்வின்படி ஏதேனும் நடந்துவிட்டால், உடனே நமக்கு சூப்பர் பவர் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், அது வெறும் தற்செயல் மட்டுமே.

அதற்காக உள்ளுணர்வை முழுவதும் ஒதுக்க வேண்டும் என்றில்லை. அடுத்த முறை ஏதேனும் தோன்றும்போது, ஒரு நிமிடம் நின்று யோசனை செய்யுங்கள். அது சரிதானா என்று அலசி ஆராயுங்கள். நல்ல முடிவை நிச்சயம் எடுக்கலாம்.

மேலும் சுவையான அறிவியல் கட்டுரைகள்:

அடுத்த கட்டுரைக்கு