Published:Updated:

`கார்ல், என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக..!' மார்க்ஸின் அன்புத் துணை ஜென்னி #KarlMarx200

`கார்ல், என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக..!' மார்க்ஸின் அன்புத் துணை ஜென்னி #KarlMarx200
News
`கார்ல், என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக..!' மார்க்ஸின் அன்புத் துணை ஜென்னி #KarlMarx200

`கார்ல், என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக..!' மார்க்ஸின் அன்புத் துணை ஜென்னி #KarlMarx200

`உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஓர் இயக்கம்' - என்று சொல்லும் கார்ல் மார்க்ஸ், தன் சிந்தனையை முழுமையாக உழைப்பாளிகளின் உயர்வுக்காகப் பயன்படுத்தியவர். மிகச் சிறந்த தத்துவ ஆளுமை என்பது அதுவரை நிலவிய கோட்பாடுகளைத் தகர்த்து, புதிய ஒன்றைப் படைப்பது மட்டுமே அல்ல. அப்படி உருவாக்கும் கோட்பாடு உலகம் தழுவிய எளிய மனிதர்களுக்குப் பயன் தரும் விதத்திலும் அறிவியல் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதே அவரைத் தன்னிகரற்ற தத்துவ ஆசான் என இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளும். அதனால்தான் கார்ல் மார்க்ஸை உழைக்கும் மக்கள் நூற்றாண்டைக் கடந்தும் கொண்டாடி வருகிறார்கள். இன்று அவரது 200-வது பிறந்த நாள். 

`மூலதனம்' எனும் சமூக விஞ்ஞான நூலை இவ்வுலகிற்குக் கொடையாக அளித்திருக்கும் கார்ல் மார்க்ஸின் பெரும் பலமாகத் துணையிருந்தது அவரின் அன்புத் துணை ஜென்னி மார்க்ஸ். ஜென்னி, மார்க்ஸ் இவர்களின் குடும்பங்கள் நெருங்கிய நட்புகொண்டவை. அதனால் சிறு வயது முதலே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். தன்னை விட நான்கு வயது மூத்தவரான ஜென்னி மீது அளவற்ற காதல் கொண்டார் மார்க்ஸ். அந்தக் காதல் ஜென்னிக்கும் தொற்றிக்கொண்டது.

தனக்கு மிக விருப்பமான சட்டப் படிப்பைக் கற்க டிரியர் நகருக்குக் கார்ல் மார்க்ஸ் அரை மனத்தோடு சென்றார் காரணம் ஜென்னியை விட்டு பிரிந்துசெல்ல வேண்டும் என்பதே. ஏராளமான கடிதங்களைப் பகிர்ந்துகொள்கிறார். ஜென்னி, தன் வீட்டுக்குத் தெரியாமல் கடிதப் போக்குவரத்தில் ஈடுபடுகிறார். அதற்காகப் பல சிரமங்களைச் சந்திக்கிறார். இது கார்ல் மார்க்ஸின் தந்தைக்கும் தெரிய வருகிறது. இது குறித்து, தன் மகனுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், ``அவள் உனக்காக விலை மதிக்க முடியாத தியாகத்தைச் செய்து வருகிறாள்" என்று குறிப்பிடுகிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜென்னியின் கடிதங்கள் வரும் நாளே மார்க்ஸூக்கு மகிழ்ச்சியான நாள். அப்படி வராத நாள்களில் அவர் தன்னிலை இழந்துவிடுகிறார். சோகமுறுகிறார்; கோபமுறுகிறார். இவற்றுக்கு ஒரே மருந்து ஜென்னியின் காதலும் அதைச் சுமந்து வரும் கடித வரிகளும்தாம். அந்தச் சூழலில், `என் அன்பிற்குரிய ஒரே ஒருவனே...' எனத் தொடங்கி அவர் எழுதிய கடிதமொன்றில் சில வரிகள்...

"அன்பே! நீ எவ்வாறு என்னைக் காண்கிறாய் என்பது உனக்குத் தெரியாது! எத்தகைய விநோதமான உணர்வை நான் பெற்றேன் என்பதை நான் உண்மையில் உனக்கு விவரிக்க இயலாது. உன்னுடன் இறுதியாக நான் சேர்ந்து, உன்னுடைய சின்னஞ்சிறு மனைவி என்று நீ என்னை அழைக்கும்பொழுது அது எவ்வளவு நேர்த்தியாக இருக்க முடியுமென்பதை எனக்கு நான் சிந்தித்துக்கொள்கிறேன்... அன்பான கார்ல்! என் பொருட்டு நீ நலமாக இருப்பாயாக... இந்த விநோதமான சின்னஞ்சிறிய அன்பிற்குரியவள் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறாள்." என்று நேசம் ததும்பும் உணர்வினைப் பகிர்ந்துகொள்கிறார். 

1843, ம் ஆண்டு கார்ல் மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் திருமணம் நடைபெறுகிறது. போதுமான வருமானம் இல்லாததால் இருவரும் எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம். பத்திரிகைகளில் எழுதுவதும் பத்திரிகை தொடங்குவதுமே மார்க்ஸின் பணிகளாக இருந்ததால், வறுமை நிரந்தரமாக அவர்களின் வீட்டில் குடிகொண்டது. ஆயினும், ஜென்னி சோர்ந்துவிடாமல் எதிர்கொண்டார். இருவருக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு `ஜென்னி' என்றே பெயர் வைத்தார் மார்க்ஸ். அந்தளவு ஜென்னி மீது காதல் கொண்டிருந்தார்.

பல சமயங்களில் எதிர்பாராத விஷயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1845 ம் ஆண்டு, கார்ல் மார்க்ஸின் எழுத்துகளால், அதிருப்தியான அரசு குடும்பத்துடன் இவர்களை வெளியேறச் சொன்னது. அதுகுறித்து ஜென்னி,  ``கார்ல் மார்க்ஸ் பாரீசை விட்டு 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார்கள். எனக்குச் சற்று அவகாசம் கொடுத்தார்கள். அதைப் பயன்படுத்தி, மேஜை, நாற்காலி முதலியவற்றை விற்று பயணத்துக்கான பணத்தைத் தேடினேன்' எனக் குறிப்பிடுகிறார். இந்தளவுக்கு மார்க்ஸ் பணிகளுக்கு உதவிகரமாக இருந்தார் ஜென்னி. இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தாலும் நீண்ட காலம் வாழ்ந்தது மூவர்தான். மீதம் வறுமை பலி கொண்டது. 

வாழ்நாள் முழுவதும் வறுமையின் பிடியில் இருக்க நேர்ந்தாலும் மார்க்ஸை இயங்க வைப்பதில் தனது பெரும் பங்கைச் செலுத்தியவர் ஜென்னி. 1881 ம் ஆண்டின் டிசம்பரில் புற்றுநோயின் கொடூரப் பிடியால் ஜென்னி இறந்துவிடுகிறார். அவரின் இழப்பு தாங்கவே முடியாத சோகத்தை மார்க்ஸுக்கு அளிக்கிறது. பதினைந்து மாதங்கள் கழித்து கார்ல் மார்க்ஸூம் இறந்துவிடுகிறார். காலம் கடந்து நிற்பது மார்க்ஸின் சிந்தனை மட்டுமல்ல, ஜென்னியின் காதலும்தான். 

நன்றி: ஜென்னி மார்க்ஸ் (பாரதி புத்தகாலயம் வெளியீடு)