Published:Updated:

``உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை!” - கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள்

``உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை!” - கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள்
News
``உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை!” - கார்ல் மார்க்ஸ் சில குறிப்புகள்

கார்ல் மார்க்‌ஸின் பிறந்த தினம் குறித்த சிறப்புக் கட்டுரை

``நான் அவலட்சணமானவன். ஆனால், என்னால் பெண்களில் மிக அழகானவளை விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். எனவே, நான் அவலட்சணமானவல்லன். ஏனெனில், அவலட்சணம் விளைவிக்கும் அருவருப்பைப் பணம் நீக்கிவிடுகிறது. நான்... கால்கள் அற்றவன். ஆனால், பணம் எனக்கு 24 பாதங்களை வழங்குகிறது. எனவே, நான் பாதங்கள் அற்றவனல்லன்; நான் மோசமானவன்; நேர்மையற்றவன்; பழிபாவங்களுக்கு அஞ்சாதவன்; மடையன். ஆனால், பணம் மரியாதைக்குரிய ஒன்று. எனவே, அதை உடையவனும் மரியாதைக்கு உரியவனாகிறான்” என்றவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய பிறந்த தினம் இன்று.

கார்ல் மார்க்ஸின் தோற்றமே, அவரை உலகுக்கு அவலட்சணமாகக் காட்டியிருந்தாலும் உண்மையில், அவருடைய தோற்றம் அவலட்சணமானது அல்ல... அதனால்தான் அவர், ஜென்னி என்ற அழகு நங்கையின் இதயத்துக்குள் அமர்ந்தார்; ஜென்னியும் அவருடைய அன்புக்குள் புகுந்தார்; அவர்கள் இருவரும் ஆயுள்வரை அன்புகலந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். 

துணையாய் இருந்த ஜென்னி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோல்வியும், ஏளனமும், பஞ்சமும் கார்ல் மார்க்ஸை ஒவ்வொரு முறையும் துரத்திக்கொண்டிருந்தபோதும் அதில் துவண்டுவிடாமல் தன் லட்சியத்தில் ஜெயித்தவர். அதற்குத் துணை நின்றவர் ஜென்னி. கார்ல் மார்க்ஸுக்குப் பக்கபலமாய் இருந்த ஜென்னி ஒருமுறை, ``அன்பே... உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமன்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடைய மாட்டா (elle meure, mais elle ne se rende pas)”என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

``கொஞ்சமாவது மூலதனத்தைச் சேர்த்தால் சிறப்பு” என்று தன் தாயார் சொன்னபோதும்... கொஞ்சமும் மூலதனமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தார் மார்க்ஸ். ஆனாலும், அவ்வப்போது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தார் அவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கெல்ஸ். பணமே அனைத்தும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்குவதால் அந்தப் பணம் குறித்து, மார்க்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். “பொருள்களைப் பெறுவதற்கான மானுட முறை, நான் எதைப் பெறுகிறேனோ, அதற்குப் பொருத்தமான பண்பு வகை முயற்சியைச் செய்வதாகும். உணவும் உடையும் பெறுவதற்கான அடிப்படை, நான் உயிருள்ளவனாக இருக்கிறேன் என்பதும், புத்தகங்களையும் ஓவியங்களையும் பெறுவதற்கான அடிப்படை, நான் அவற்றைப் புரிந்துகொள்கிறேன், அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவனாக இருக்கிறேன் என்பதுமாகும்” என்கிறார். 

``உலகத்தை மாற்றியமைப்பதே எமது வேலை!” 

``ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ், உலக மனிதகுலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, இந்த மாற்றங்களுக்கு எப்படி மனித உழைப்பு காரணமாக இருக்கிறது என்ற ஆழமான ஆய்வுகளை முன்வைத்தார். உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற தொழிலாளர் வர்க்கம் குறித்து அதிகம் சிந்தித்த கார்ல் மார்க்ஸ், ``எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன; நமது வேலை, உலகம் எப்படித் தோன்றியது என்று சிந்திப்பதில்லை. மாறாக, உலகத்தை மாற்றியமைப்பதே” என்றார். அதற்கான களத்தை அமைத்ததோடு, “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்... நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது” என்று குரல்கொடுத்தார். அந்த வாக்கியம் வரலாற்றில் பல திருப்பங்களுக்குக் காரணமானது. 

மாற்றத்தை விதைத்த மார்க்ஸ்!

முதலாளியச் சமுதாயத்தில் நிகழும் உற்பத்தியையும், நுகர்வையும் பற்றிச் சொல்லும் கார்ல் மார்க்ஸ், ``மற்றவனின் கீழ்த்தரமான ஆசைகளைப் பூர்த்திசெய்யும் சேவை புரிகிறான். மற்றவனுக்கும் அவனது தேவைகளுக்கும் இடையே வேசித் தரகன்போல் நிற்கிறான். மற்றவனிடத்தில் உள்ள நசிவு இச்சைகளைத் தூண்டிவிடுகிறான். மற்றவனது பலவீனங்கள் ஒவ்வொன்றுக்காகவும் காத்திருக்கிறான். ஒவ்வொரு (முதலாளிய) உற்பத்திப் பொருளும் மற்றவனது வாழ்க்கையையே தந்திரமாகக் கைப்பற்றிவிடுவதற்கான தூண்டிலாகும். (மனிதர்களின்) உண்மையான, உள்ளுறைந்த தேவை ஒவ்வொன்றும் பூச்சியைக் கோந்துப் புட்டியில் சிக்கவைப்பது போன்ற பலவீனமாகிவிடுகிறது” என்கிறார்.

இப்படித் தொடர்ந்து மாற்றத்துக்கான விதைகளை விதைத்த அவர், ``மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர, மாறாதது உலகில் இல்லை” என்றார். இறுதியில், தன்னுடைய ‘மூலதனம்’ மூலம் உலக விடியலுக்கான மாற்றத்தையே படைத்தார். 

‘மூலதன’த்தைப் படைத்த கார்ல் மார்க்ஸ், இப்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் படைத்த `மூலதனம்’தான் நம் எல்லோருக்கும் ‘மூலதன’மாக இருக்கிறது.