Published:Updated:

ஒரு கலை ஏன் உணவோடு சேரக் கூடாது? ஓவியமும் உணவும் சந்தித்தால்...! #ArtMeetsFood

ஒரு கலை ஏன் உணவோடு சேரக் கூடாது? ஓவியமும் உணவும் சந்தித்தால்...! #ArtMeetsFood
ஒரு கலை ஏன் உணவோடு சேரக் கூடாது? ஓவியமும் உணவும் சந்தித்தால்...! #ArtMeetsFood

`Art Meets Food' - `ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கே! கலைக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எந்தக் கலையா இருக்கும்?' இப்படி மனதில் எழுந்த பல கேள்விகளுடன் தேனாம்பேட்டையில் உள்ள `Courtyard by Marriott' ஹோட்டலைச் சென்றடைந்தேன். உள்ளே செல்லும்போதே வண்ணமயமான ஓவியங்களால் வரவேற்றது நுழைவாயில். வண்ணங்களால் நிறைந்தது ஓவியம் மட்டுமல்ல, உணவுகளும்தான். செவிகளுக்கு விருந்தளிக்கும்விதமாக இசை நிகழ்வும் அரங்கேறியது. ஓவியம், உணவு மற்றும் இசையின் சங்கமம் அரங்கையே கோலாகலமாக்கியது.

நான்கு ஓவியக்கலைஞர்களின் கைவண்ணங்களில் உருவான அழகிய ஓவியங்கள் ஒருபுறம், கான்டினென்டல், சைனீஸ், இந்தியன் என எண்ணில் அடங்காத உணவு வகைகள் மறுபுறம். இவற்றையெல்லாம் பார்த்து சிறிது நேரம் சிலைபோல் நின்றுகொண்டிருந்தேன். ``ஆர்டர் பண்றீங்களா?'' என்று அங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவரின் குரல் என்னை எழுப்பியது.

``நான் முதலில் ஓவியங்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று பதிலளித்துவிட்டு அந்தப் பெரிய அறையில், என்னவெல்லாம் இருக்கின்றன என மேலோட்டமாகச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களுக்கு முன்னாள், சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகளைக்கொண்டு சீஸ், பன்னீர் போன்ற பொருள்களோடு அலங்கரிக்கப்பட்ட `சாலட்' வகைகள், `Very (வெறி) Colourful'. அசைவ விரும்பிகளுக்கு காரசாரமான கோழி, ஆடு போன்ற உணவு வகைகளோடு நண்டு வகைகளும் சுடச்சுட இருந்தன. மேல்நாட்டுப் பழவகைகளைக்கொண்டு தயாரித்த `Desserts' அயிட்டம்களும் ஏராளம். நம் நாட்டு மாம்பழ ஸ்பெஷலும் இருந்தது. மேலும் பெப்சி, காக்டைல் போன்ற மது இல்லாத பானங்களோடு மதுபானங்களும் உண்டு.

இப்படி ஒரு நிகழ்வை நடத்துவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற கேள்வியுடன், இந்த நிகழ்வின் பொறுப்பாளர், ஜித்தா கார்த்திகேயனைச் சந்தித்தேன். அதற்கு, ``Art Meets Food-னு ஒரு கான்செப்ட் பண்ற ப்ளான் இருக்கு. எங்களோட உணவு வகைகளை நாங்க ஷோ பண்றோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க ஓவியங்களையும் ஷோ பண்ணுங்கன்னு இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டாங்க. ஆர்ட்டுக்கும் சாப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்னு முதல்ல நானும் யோசிச்சேன்.

ஆனா, `ஒரு ஆர்ட் ஏன் உணவோடு சேரக் கூடாது? நாம ஏன் சின்ன வட்டத்துக்குள்ளேயே இருக்கணும்?'னு நிறையா கேள்விகள் மனசுக்குள்ளேயே ஓடுச்சு. இது எல்லாம் பிரேக் பண்ணணும்னு நினைச்சேன். அதுக்கு ஏற்ற மாதிரி நாலு ஓவியக் கலைஞர்கள்கூட பேசி, இந்த ஈவன்ட் பற்றிய முழு விவரத்தையும் சொன்னேன். அவங்களும் ரொம்ப உற்சாகமாகிட்டாங்க. இந்த நாலு கலைஞர்களும் வெவ்வேறு டாபிக்ல கில்லி. ஒரே விஷயம், அவங்கவங்க பார்வையில வித்தியாசக் கதைகள் பல சொல்லும். நிச்சயமா எல்லாருக்கும் பிடிக்கும்" என்றார்.

``உங்கள் பார்வையில் `கலை' என்பது எவ்வளவு முக்கியம்?''

``ஒரு சட்டத்தை இயக்கிறதைபோலதான் `கலை'யும். எங்களுக்குத் தெரிஞ்ச வழியில மக்களைச் சிந்திக்கவைக்கிறது `கலை'. இது ஒரு வகையான சிகிச்சைமுறைனுகூட சொல்லுவேன். சிலருக்கு நடனம்னா ரொம்பப் பிடிக்கும். சில பேருக்கு பாட்டு கேட்கலைன்னா தூக்கமே வராது. இப்போ நிறையா மக்கள் வித்தியாசமான உணவுகளை ரொம்ப இன்ட்ரெஸ்டா செஞ்சு பார்க்கிறாங்க. நானும் ஓவியக் கலைஞர்தான். என்கிட்டயும் நிறைய பேர் வந்து `உங்க ஓவியங்களைப் பார்த்தா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு'னு சொல்லுவாங்க. இப்படி ஏதோ ஒருவிதத்துல `கலை' எல்லார் மனசுலயும் வாழ்ந்துட்டிருக்கு."

``டிஜிட்டல் ஓவியங்கள் வந்ததுக்கு அப்புறம், கை ஓவியங்களை எந்த அளவுக்கு மக்கள் விரும்புறாங்க?''

``ராஜா காலத்துலலாம் ஒரு சிற்பம் செதுக்குறாங்கன்னா அதுக்கு அவ்வளவு ஆதரவு இருக்கும், நிறையா சலுகைகள் இருக்கும். இப்போகூட அஜந்தா, எல்லோரா, மகாபலிபுரம் இப்படி சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆச்சர்யமா பார்க்கிறோம். ஆனா, டிஜிட்டல் ஓவியங்கள் வந்ததுக்கு அப்புறம் நிச்சயமா எங்களோட உழைப்புக்கான அங்கீகாரம் இல்லாமப்போயிடுச்சு. நாளோட முழு நேரமும் ஓவியத்துக்குனு செலவிட்டா, நிச்சயமா அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஈட்டவே முடியாது. அதனால, வேற ஏதாவது வேலை செஞ்சுட்டேதான் இதைப் பார்க்கணும். அரசாங்க உதவி கிடைச்சா, இன்னும் நல்லாவே பண்ணலாம். பல திறமையானவர்கள் கொட்டிக்கிடக்கும் நம்ம நாட்டுல, மியூசியம்கூட கம்மிதான்" என்று தன் வேதனையைச் சொல்லி, அங்கு வந்த பார்வையாளர்களைச் சந்திக்க விரைந்தார்.

வானுயரத்துக்கு ஓர் அழகிய ரோஜா, தாய் யானையின் தும்பிக்கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தமாய் வீரநடையிட்டுச் செல்லும் குட்டி யானை. ஆஹா! பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. `இது கையால் வரையப்பட்ட ஓவியமா!' எனத் திகைக்கவைக்கும் அளவுக்கு கைவண்ணத்தைத் தீட்டிய ஓவியர் பிரதீப் மிஷ்ராவைச் சந்தித்தேன்.

``இரண்டு நிமிட டிஜிட்டல் ஓவியத்தைவிட இரண்டு மணி நேரம் செலவிடும் கை ஓவியங்களில் அப்படி என்ன இருக்கிறது?"

``கை ஓவியத்தின் சிறப்புக்கு எதுவுமே நிகரில்லை. இதோட முழு செயல்முறையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்ம கையாள பெயின்ட்டை தொடுறப்போ கிடைக்கிற சந்தோஷமே வேற. ஒவ்வொரு பெயின்டிங்க்கு ஏற்ற மெட்டீரியல் செலெக்ட் பண்றதுல பெரிய சவாலே இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா, உங்க கையாள வளர்க்கப்படுற ஒரு குழந்தை இது. ஒரே இடத்துல உட்கார்ந்து வரையுறதைவிட, அங்கேயும் இங்கேயும் ஓடி என் குழந்தையை வளர்க்கிறதுல சந்தோஷப்படுறேன்" என்று கூறி சிலிர்க்கவைத்துவிட்டார்.

வியக் கலைஞரைத் தொடர்ந்து சமையல் கலைஞர் சஞ்சீவைச் சந்தித்தேன். அங்கே வைக்கப்பட்டிருந்த அத்தனை உணவுகளுக்கும்

மாஸ்டர் செஃப் இவர்தான். அவரிடம், இந்தத் திருவிழாவின் சிறப்பு என்னவென்று கேட்டேன்.

``நிறையா ரிசர்ச் வேலைகளெல்லாம் செஞ்சு, விதவிதமான `தீம்' உருவாக்கியிருக்கோம். உதாரணத்துக்கு, `ஜஸ்ட் ப்ளாக்'னு ஒரு தீம் இருக்கு. அதுல ப்ளாக் அரிசி வெச்சுதான் எல்லா உணவுவகைகளும் பண்ணியிருக்கோம். இப்படி தீம் மாத்திட்டே இருப்போம். சீஸ் வெச்சு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு. `Hanging Cake'கூட செஞ்சிருக்கோம். வியட்நாம், சைனாவுல ரொம்ப ஃபேமஸான டிஷ் `சும்பாங்' செஞ்சிருக்கோம். இது இந்தியாவுல எங்கேயும் கிடைக்காது. ட்ரை பண்ணிபாருங்க.

அப்புறம், இந்தியன் அயிட்டம்ல மூங்கில் பிரியாணி செஞ்சிருக்கோம். லோக்கல், பாரம்பர்யம், ஒரியன்டல் போன்ற உணவு வகைகளை நிறையா இங்கே பார்க்கலாம். ஓவியங்களை ரசிச்சுட்டே, மியூசிக் கேட்டுட்டே சந்தோஷமா சாப்பிடுங்க" என்றவரிடமிருந்து அவர் குறிப்பிட்ட அத்தனை உணவு வகைகளையும் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பினேன்.

சென்னை கோடையில்  வித்தியாசமான ஓர் அனுபவமாய் அமைந்தது இந்த நிகழ்வு.