Published:Updated:

ஆட்டிசத்துக்கு மியூசிக் தெரபி சிகிச்சை...! இசைக்கலைஞர் லஷ்மி மோகனின் முயற்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டிசத்துக்கு மியூசிக் தெரபி சிகிச்சை...!  இசைக்கலைஞர் லஷ்மி மோகனின் முயற்சி
ஆட்டிசத்துக்கு மியூசிக் தெரபி சிகிச்சை...! இசைக்கலைஞர் லஷ்மி மோகனின் முயற்சி

`ஆட்டிசக் குறைபாட்டை இந்தச் சமூகம் மனநோயாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் இசை சிகிச்சையைக் கட்டாயமாக்குவதுடன், ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்குமான கவுன்சலிங் நிச்சயமாக அளிக்கப்பட வேண்டும்

``அன்பு, ஏற்றுக்கொள்ளல், தனிக்கவனம் - ஆட்டிசக் குழந்தைகளுக்குத் தேவையானவை இவ்வளவுதான்” என்று பேசத் தொடங்கினார், கர்னாடக இசைக்கலைஞர், இசை சிகிச்சையாளர் லஷ்மி மோகன்.

15 வருடமாக ஆட்டிசக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியூசிக் தெரபி சிகிச்சை அளித்துவருகிறார் செளமனஸ்யா அறக்கட்டளையின் நிறுவனர் லஷ்மி மோகன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு Speech and occupational Therapy போன்ற பயிற்சிமுறைகள் அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இந்நேரத்தில், இசையையே சிகிச்சை முறையாகத் தேர்ந்தெடுத்தக் காரணத்தைக் கேட்டோம்...

``ஆட்டிசக் குழந்தைகளைப் பொறுத்தவரை, சமூகப் பழக்கவழக்கங்களும் மற்றவங்களோடு தொடர்புகொள்ளும் திறனும்தான் அவங்களுக்கு முக்கியப் பிரச்னையாக இருக்கும். நிறைய கவனச்சிதறல் இருக்கும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்துக்கிட்டே இருப்பாங்க. மற்ற குழந்தைகள் மாதிரி தூக்கினாலோ, கொஞ்சினாலோ, ஏன் தொட்டாகூட இவங்களுக்கு அது எதுக்காகனு தெரியாது. எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாம, தான்பாட்டுக்கு இருப்பாங்க.

ஒரு இடத்துல உட்காரவெச்சு, நாம மட்டுமே பயிற்சி கொடுத்தா போதாது. அவங்களோட சமூகத் தொடர்புகள் அதிகரிக்கிறதுக்காகவும் வேலைசெய்யணும். சமூகத்தொடர்பு மட்டுமில்லாம, தனக்குள்ளவே அலாதியான ஒரு கனெக்‌ஷனை உண்டுபண்ணும் இசையையே, மருந்தா தேர்ந்தெடுத்தேன். இசை, சிறந்த மருந்துன்னு இந்த 15 வருஷத்துல புரியவெச்சிருக்கேன்.

என் குடும்பத்துல எல்லாருமே இசைக்கலைஞர்கள்தான். கர்னாடக இசையைக் கத்துக்கொடுத்துட்டு இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளுக்குக் கத்துக்கொடுக்குற ஆர்வத்துல சிறப்புக் குழந்தைகள் படிக்கிற பள்ளிக்குப் போயிருந்தேன். அங்கே டிஸ்லெக்ஸியா, டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம்னு நரம்பு மண்டலக் குறைபாடு உடைய பல குழந்தைகள் இருந்தாங்க. முதல் ரெண்டு நாள், அந்த வகுப்புல நான் மட்டும்தான் பாடிட்டு இருப்பேன். குழந்தைகள் எதையும் கவனிக்காம அவங்க உலகத்துல ஏதோ யோசிச்சிட்டும், விளையாடிட்டும் இருப்பாங்க. எனக்கு நம்பிக்கை குறைஞ்சுபோச்சு.

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால, அஞ்சு நாள் விடுமுறை எடுத்துக்கிட்டு திரும்பி வந்தேன். வகுப்புக்குள்ள நுழைஞ்சதும், அஞ்சு நாளைக்கு முன்னாடி நான் பாடின அதே பாட்டை ஒரு குழந்தை அதே ராகத்துல பாடுவதைக் கேட்டேன். இந்த 15 வருஷ இசை மருத்துவத்துக்கும், முதல் நெருப்புப் பொறியா இருந்தது, அந்தக் குழந்தை பாடிய பாட்டு. ஆட்டிசக் குழந்தைகளுக்கான `நாத உபாசனம்தான்’ வாழ்க்கைனு அப்பவே முடிவுபண்ணிட்டேன் ” என்றார்.

சங்கராபரணம், சாருகேசி, கல்யாணி போன்ற ராகங்களில், ஒரே மாதிரியான வார்த்தைகளில் பஜன்கள் பாடும்போது, இவர்களின் நடவடிக்கை ஒழுங்குபடுவதாகக் கூறும் லஷ்மியிடம் 3 வயது முதல் 45 வயது வரையிலான ஆட்டிசப் பாதிப்புடையவர்கள் சங்கீதப் பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சி பெறும் அனைவரும் வெவ்வேறு வயதில், வெவ்வேறு வகையிலான குறைபாட்டுடன் இருந்தாலும், இசை அவர்களை ஓர் இடத்தில் நிறுத்துகிறது. கவனத்தைக் குவிப்பது, தனக்கான வேலைகளை முடிந்தவரையில் தானே செய்துகொள்ளவைப்பது போன்ற முன்னேற்றங்கள், இசை சிகிச்சையால் சாத்தியப்படுவதை நிரூபித்திருக்கிறார் லஷ்மி மோகன். 

சமூகரீதியிலும், அரசுத் தரப்பிலும் ஆட்டிசப் பாதிப்புடையோருக்கு எந்தவிதமான உதவிகள் தரப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், `ஆட்டிசக் குறைபாட்டை இந்தச் சமூகம் மனநோயாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் இசை சிகிச்சையைக் கட்டாயமாக்குவதுடன், ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோருக்கும், பாதுகாவலர்களுக்குமான கவுன்சலிங் நிச்சயமாக அளிக்கப்பட வேண்டும்' என்னும் கோரிக்கையையும் முன்வைத்தார்.

ஆட்டிச விழிப்பு உணர்வு தினத்தில், கடந்த 8 வருடமாக நடத்தப்பட்ட ஆட்டிசக் குழந்தைகளின் கச்சேரியைப்போலவே, இந்த வருடமும் நடத்தியதில் நெகிழ்கிறார் லஷ்மி. `இவர்களின் இசைப் பயணம்’, ‘சிங்கம், பேனா, டோரா’ உள்பட ஆட்டிசக் குழந்தைகளோடு வாய்த்த நடைமுறை அனுபவங்களுடன் 30 புத்தகங்களும், ஆட்டிச பாதிப்புடையோரின் ஆழந்த உறக்கத்துக்கான இசைக்கோவையையும் வெளியிட்டிருக்கும் லஷ்மிக்கு, ஆட்டிசத்துக்கான தனி இசைப்பள்ளி அமைப்பதுதான் கனவு.

நனவாகட்டும் அன்புக் கனவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு