Published:Updated:

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை

ரிகாற்சோழனால் கல்லணை கட்டப்பட்டு, காவிரியில் கரை அமைக்கப்பட்ட பிறகு வளம் கொழிக்கும் பூமியாய் மாறியது தமிழகம். இதனால், ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று விவசாய சாகுபடி, பார் போற்றுமளவுக்குப் பஞ்சமின்றிச் சிறந்து விளங்கியது. 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

கல்லணை கட்டப்பட்டபோதே அங்கு உழவுத் தொழில் நடைபெற்று வந்ததை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ராவ் என்பவர், “காவிரியின் தொன்மையைப் பார்த்தால், காவிரிப் பாசனப் பகுதியின் வேளாண்மை வரலாற்றுக்கு முந்தையது” என்று குறிப்பிடுகிறார். மேலும், அவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித வாழ்வும், வேளாண்மையும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகளையும் தருகிறார். 

காவிரியும்... பட்டினப்பாலையும்!

காவிரியைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்த ஆண்டிலும் அது பொய்க்கவில்லை என்பதைப் பல இலக்கியங்கள் மூலம் நாம் உணர முடிகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழின் இலக்கிய வரலாற்றில் காவிரியைப்போல வேறெந்த நதியும் பேசப்பட்டதில்லை. திரைப்படப் பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் காவிரி பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. காவிரியின் செல்வவளம் பற்றி, “வெள்ளியாகிய விண்மீன் வட திசையிலிருந்து தென் திசைக்குச் சென்றாலும், வானம்பாடிப் பறவை மழைநீரை அருந்தப் பெறாமல் வருந்தும்நிலை தோன்றினாலும் மலைத் தலைய கடற்காவிரி புனலாகப் பொன்னாகக் கொழிக்கச் செய்யும்” என்கிறது பட்டினப்பாலை நூல். மேலும், “முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் நெல் மணிகளைத் தின்னவரும் கோழிகளை விரட்ட, அங்குள்ள பெண்கள் தங்கள் காதுகளில் இருக்கும் பொன் நகைகளைக் கழற்றி வீசுவார்கள்” என்கிறது பட்டினப்பாலை. கோழிகளை விரட்டுவதற்கு தங்க நகைகளைக் கழற்றி வீசும் அளவுக்கு மக்களிடம் காவிரிப் பாசனத்தின் மூலம் கிடைத்த செல்வவளம் கொழித்திருந்ததாக இதன்மூலம் தெரிய வருகிறது. 

காவிரியும்... சிலப்பதிகாரமும்!

அதேபோல், “துன்பமான காலங்களிலும் நாட்டைக் காக்கும் காவிரி” என்று சிலப்பதிகாரமும், “தடையின்றி வரும் காவிரி” என்று மணிமேகலையும் காவிரியின் வளம் பற்றி எடுத்தியம்புகின்றன. கோவலனும், மாதவியும் யாழிசைத்துக் காவிரியையும் கடலையும் நோக்கிப் பாடும் பாடல்கள் இந்திய இலக்கியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே சிலப்பதிகாரத்தில், கோவலனும், கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும்போது அவர்களுக்கு நேரப்போகிற துன்பத்தை உற்றறிந்த வையை என்னும் பொய்யாக்குலக்கொடி, “அவர்களுடைய துன்பத்தைக் காணமாட்டேன்” என்று மலர்களால் தன் கண்களை மூடிக்கொண்டு ஓடியதாக இளங்கோவடிகள் வர்ணித்துள்ளார். 

மேலும், திருஞானசம்பந்தரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காவிரியைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். மகாகவி பாரதியாரோ, “கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்” என்று பாடுகிறார். இப்படிச் செய்யுள்கள், கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும், நாவல்களிலும்கூடக் காவிரி நதியைப் பற்றிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! 

ஒருகாலத்தில் பூம்புகாரை வந்தடையும் காவிரிக்கரையில், ஆண்டுதோறும் வெள்ளம் வருகிறபோது, அங்குள்ள ஆடவரும், பெண்டிரும் ஆடிப்பாடி மகிழ்வார்களாம். இதைக் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் புதுப்புனல் ஆட்டம் குறித்து பாரதி, “அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடில் போந்ததும் இந்நாடே” என்று பாடுகிறார். 

இப்படி ஒருமுறை பூம்புகார் காவிரிக்கரையில் நடந்த புதுப்புனல் விளையாட்டில் பங்கேற்பதற்காக ஆட்டனத்தி என்ற சேர நாட்டு இளவரசன் வருகிறான். அவனுடைய ஆடற்கலையில் வசப்பட்ட சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தி, அவனுடன் போட்டிபோட்டுக்கொண்டு காவிரிக்கரையில் ஆடி மகிழ்கிறாள். காவிரித் தண்ணீரில் விளையாடியபோது, ஆற்றின் ஆழம் தெரியாமல் இறங்கிய ஆட்டனத்தியை, தண்ணீர் வந்த வேகத்தில் ஆழத்துக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆட்டனத்தி திடீரென்று மாயமானதால், அவரைக் காணாமல் இளவரசி ஆதிமந்தி அழுது புலம்பியதாக இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. அந்தளவுக்கு, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியதும், அதன்மூலம் காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் செல்வச் செழிப்புடன் இருந்ததும் இலக்கியங்கள் சொல்லும் விஷயம் என்பது நமக்குப் புலனாகிறது.   

‘ஆட்டம்போட்டது போதும்!’  

இப்படி இலக்கியங்களில் புகழப்பட்டிருக்கும் காவிரி, அன்று எப்படியிருந்தது என்று மூத்த விவசாயி ஒருவரிடம் பேசினோம். “தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் எங்கள் மண்ணின் வளம் கொழிக்க அன்றே கரிகாற்சோழன் காவிரிக்காகக் கல்லணையைக் கட்டிச் சென்றான்... நீர்ப்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டிச் சென்றான். அதனால்தான் காவிரி பாய்ந்து சென்ற பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று காட்சியளித்தன. அந்தப் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் அந்தக் கால இலக்கியங்களும் காவிரி ஓடிய பகுதிகளைப் புகழ்ந்து தள்ளின. அதற்குக் காரணம், இயற்கை எழிலையும், பசுமையையும் கொண்டிருந்தது எங்கள் மண். சில்லென்று வீசும் காற்றுடன் ஆற்றங்கரையோர பள்ளிக்கூடம்... அழகான வீட்டைச் சுற்றி அமைந்த பசுமையான வயல்வெளி... ஆனந்தமாய்க் குதித்து மகிழும் ஆற்றுக் குளியல்... ‘ஆட்டம்போட்டது போதும்’  என்று சத்தமிடும் பெருசுகள்... அயிரை மீன் குழம்புடனும், அனைத்து வகையான காய்கறிகளுடனும்  தலைவாழை இலை சாப்பாடு என அனைத்தும் எங்கள் பகுதிகளில் விடுமுறை நாளின்போது களைகட்டும். 

“அஃது அனைத்தும் இன்றில்லை!”

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிறக்கும்போதெல்லாம்... ‘மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் போகிறார்கள்’  எனும் செய்தி கேட்டதுமே... அக்கம்பக்கத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரு கூட்டமாகத் தண்ணீர் வரும் திசையைப் பார்த்து ஆற்றங்கரையில் கூடி நிற்கும் அழகே ஒரு தனி அழகு. அந்த நீரைக் கண்ட கணப்பொழுதில், அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எத்தனையோ கனவுகள், எத்தனையோ எதிர்பார்ப்புகள் அரங்கேறும். தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றைக் கடந்து மாட்டை ஓட்டிச் சென்று வயலில் உழ ஆரம்பித்து விடுவார்கள். பெரியவர்கள் விவசாய வேலையில் தீவிரமாய் இறங்கிவிட, இளம்பருவத்தினரோ தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள்; துறுதுறுவென தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடுவார்கள். வேலையாள்களுக்கு டீயும், பன்னும் வாங்கிக்கொண்டு செல்லும் தாத்தாக்களுடன் வயல்வெளிக்குப் பயணிக்கும் பேரக்குழந்தைகளும், ‘எனக்கும் அதையும் இதையும் வாங்கித் தா’ என்று அடம்பிடிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் விளையும் நெற்பயிர்களும் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், பருவப் பெண்ணைப்போல் வெட்கமிட்டுத் தலைகவிழ்ந்து நிற்கும். அறுவடைக்குப் பிறகு அனைத்து வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கும். ஆனால், அஃது அனைத்தும் இன்றில்லை. இதுபோல் வாழ்ந்த அனுபவங்கள்கூட இனி மூன்றாம் தலைமுறையினருக்குத் தெரியும்படி இருக்காது” என்றார் சற்றே வேதனையுடன்.

காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு