Published:Updated:

மக்கள் இல்லாத தீவுக்கு, வர விரும்பும் டூரிஸ்ட்... இது சீன ஸ்பெஷல்!

மக்கள் இல்லாத தீவுக்கு, வர விரும்பும் டூரிஸ்ட்... இது சீன ஸ்பெஷல்!
மக்கள் இல்லாத தீவுக்கு, வர விரும்பும் டூரிஸ்ட்... இது சீன ஸ்பெஷல்!

து 1990-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற ஒரு தீவின் அழிவைத் தொடர்ந்து இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொண்ட கதை இது. சீனாவின் ஷாங்காய் நகருக்குக் கிழக்கில் உள்ள ஷேங்சான் தீவு அது. ஷேங்சான் தீவுப் பகுதிக்கு உட்பட்ட தீவுகளில் ஒன்று ஷேங்சி தீவு. அப்பகுதிவாசிகளின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் மட்டும்தான். அத்தீவுப் பகுதிகளில் சுமார் 2,.000 மீனவர்கள் வசித்து வந்திருக்கின்றனர். இந்த இடத்தில் ஒரு துறைமுகமே செயல்பட்டு வந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு சுதந்திரமாகச் சுற்றிய மனிதர்கள் உணவுக்காகவும், கல்விக்காகவும் வெளியேறினர். சரியான வியாபாரம் இல்லாததும் ஒரு காரணம். அருகில் உள்ள பகுதிகளுக்குக் குடியேறிவிட்டனர். இதனால் காலப்போக்கில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிவிட்டது இந்தத் தீவு. மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதி பேய் நகரம் என அழைக்கப்பட்டு வருகிறது. அப்படி அழைப்பதால் மனிதர்கள் யாரும் அத்தீவுக்குள் நுழைய அச்சப்படுகிறார்கள்.

மனிதச் செயல்பாடுகள் முற்றிலும் அற்றுப்போனதால் இயற்கை தனது மாயாஜாலத்தைக் காட்ட ஆரம்பித்தது. அத்தீவில் இருக்கும் கட்டடங்கள் முழுவதும் பசுமை படர்ந்து கண்கொள்ளாக் காட்சியளிக்கிறது. தீவின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட பசுமைக் கட்டடங்கள் மலைச்சரிவுகளில் வரிசையாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. மக்கள் முழுவதுமாக வெளியேறிய பின்னர் இங்கு யாரும் ஒரு நாள் இரவு கூட முழுமையாகத் தங்கியது இல்லை. இனி யாரும் அத்தீவில் குடியேற முடியாது. ஆனால், சில சுற்றுலாப் பயணிகள் மட்டும் வந்தவண்ணம் இருக்கின்றனர். இனி வரும் காலத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்றப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், பேய் நகரம் என்று அழைக்கப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் அத்தீவுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை.

பச்சை பசேலென கொடிகள் செ.மீ இடைவெளி கூட இல்லாமல் சினிமா செட் போலக் காட்சியளிக்கிறது. அத்தீவிற்குச் சென்று வரும் சுற்றுலாப் பயணிகள் 'அது பேய் நகரம் இல்லை, சோலைவனம்' எனப் போற்றுகின்றனர். பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் இது சொர்க்கம்தான் என்ற எண்ணத்தை நிச்சயம் ஏற்படுத்தும். கட்டடங்களின் சுவர்கள், துளைகள் என அனைத்துப் பகுதிகளிலும்கூட செடிகள் முளைத்திருக்கின்றன. இயற்கையை விரும்பி ரசிக்கும் புகைப்படக்காரர்களுக்கு நிச்சயமாக இது வரப்பிரசாதம்தான். ஹாலிவுட் திரைப்படங்களில் கிராஃபிக்ஸ் செய்தாலும் இப்படியோர் அழகை நிச்சயமாக வர வைக்க முடியாது. அதுதான் இயற்கையின் அற்புதம்... மனிதர்கள் இல்லாத இடத்தில்தான் இயற்கை வளரும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தத் தீவு இருக்கிறது. 

இத்தீவில் பெரும்பாலான வீடுகளுக்குச் செல்லும் பாதைகளும், படிக்கட்டுகளும் பெரும்பாலும் கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கற்களையும் உடைத்து புற்களும், செடிகளும் முளைத்திருக்கின்றன. இத்தீவில் முன்பு குடியிருந்த மக்கள் பயன்படுத்திய பல பொருள்கள் பாழடைந்து காட்சியளிக்கின்றன. பச்சை நிற போர்வை போற்றியதுபோல அழகாக இருந்தாலும், மக்கள் இல்லாமல் அனாதையாகக் காட்சியளிக்கிறது. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியைக் காண வராமல் மக்கள் அஞ்சி நடுங்குவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை மக்கள் மீண்டும் வந்தால் இத்தீவு அதன் அழகை இழக்கும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இயற்கை விரும்பிகள் ஒருமுறையாவது இத்தீவைச் சென்று காண வேண்டும். இந்தத் தீவை மீட்டெடுத்து சீனா சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு