Published:Updated:

காதல், பெண் குழந்தை, வைரல் போட்டோஸ்... தோனி - அஜித் இடையிலான ஒற்றுமைகள்!

தார்மிக் லீ

நடிகர் அஜித் - கிரிக்கெட் வீரர் தோனி... இருவருக்குமான ஒற்றுமைகள்.

காதல், பெண் குழந்தை, வைரல் போட்டோஸ்... தோனி - அஜித் இடையிலான ஒற்றுமைகள்!
காதல், பெண் குழந்தை, வைரல் போட்டோஸ்... தோனி - அஜித் இடையிலான ஒற்றுமைகள்!

அஜித் - தோனி... இருவருக்குமான ஒற்றுமை `தல' என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து தொடங்குகிறது. இந்த இருவரின் பெயரிலும் கை வைப்பது, கரண்ட் கம்பத்தில் கை வைப்பதற்குச் சமம். இருவருக்குமே தமிழ்நாடு பூர்வீகம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த இருவரையும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐ.பி.எல் கல்லாவோடு கலைகட்டிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்த இருவரில் யார் தல என்ற வாக்குவாதத்திற்கு போவதற்கு பதில், இருவருக்குமான ஒற்றுமைகளைப் பற்றிப் பார்ப்போம்! 

`உங்களுக்கு கார் பிடிக்குமா, பைக் பிடிக்குமா?' என்ற கேள்வியை இரண்டு 'தல'யிடமும் கேட்டால், இருவருமே `ரெண்டும்' என்ற பதிலை கோரஸாக சொல்வார்கள். தல எனும் டைட்டிலுக்குப் பிறகு இருவருக்குமிடையே உள்ள நெருக்கமான பிணைப்பு, பைக் மற்றும் கார். இருவருமே பைக் காதலர்கள். சினிமா, ஷாலினி என்ற இரு காதலுக்கு முன் அஜித்தின் முதல் காதல் பைக்தான்!. அது அவரை பல பந்தயங்களில் கலந்துகொள்ள வைத்தது. இன்னும் சொல்லப்போனால் பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்வதற்காகவே சினிமாவுக்குள் வந்தவர்தான், அஜித்.  

நம்ம கேப்டன் தோனியும் அப்படித்தான். ஜார்கண்டில் அதிகமாக வரி கட்டக்கூடியவர். அவர் வாங்கிய முதல் பைக்கில் இருந்து லேட்டஸ்ட் பைக் வரை, மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பைக்குகள் அவரது கேரேஜில் குடிகொண்டிருக்கின்றன. இதில், கவாஸகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என மொத்தம் 22 'சூப்பர் பைக்'குகள் அடக்கம். அதேபோல், ஃபெராரி 590 GTO, ஆடி Q7, ஹம்மர் H2, அவுட்லாண்டர், லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற GMC சியரா என்னும் முரட்டுத்தனமான எஸ்யூவி, ஆடி Q5 எனக் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள் அதே கேரேஜில் முறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்கும். 

அடுத்ததாக, இருவரையும் இணைக்கும் இன்னொரு விஷயம் `ஹெலிகாப்டர்'. ஒரு தல பந்தை பவுண்டரிக்கு விரட்ட, ஹெலிகாப்டரின் ரெக்கைகள் சுழறுவதைப்போல் சுழற்றி பந்துக்கு பனிஷ்மென்ட் கொடுப்பார். இன்னொரு தலயிடம் ஹெலிகாப்டரை ஓட்டும் திறன் மட்டுமல்ல, ஓட்டுநர் உரிமையே உள்ளது. தோனி ஐ.பி.எல் போட்டிகளில் ஹெலிகாப்டர் ஷாட்களால் சிக்ஸர்களைப் பறக்கவிட்டால், அஜித் எம்.ஐ.டி-யில் ஹெலிகாப்டர்களை இயக்கக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆக, `பொம்மை ஹெலிகாப்டரை ஓட்ட எதுக்கு இந்த சீன்?' எனக் கலாய்த்து மீம்ஸ் போட்டனர். ஆனால், அஜித் கற்றுக்கொடுத்த அந்தக் குட்டி ஹெலிகாப்டர்தான் பெரிய ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பேஸ் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இப்படிப் பொதுவான விஷயங்கள் இருவருக்கும் பொருந்திப்போகும். கொஞ்சம் யூ-டர்ன் அடித்து பொது நிகழ்வுகளில் இவர்களின் ஆக்டிவிட்டிகளைப் புரட்டினாலும், இருவரின் வாழ்க்கையிலும் ஒரேமாதிரியான பல விஷயங்களைப் பார்க்கலாம். அஜித் பிரஸ் மீட், பேட்டிகள் என எதிலும் தலைகாட்ட மாட்டார். தோனியும் அப்படியே...  பேட்டிகளிலும் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. காரணம், 2007 உலகக்கோப்பை போட்டிகளின்போது அவர் வீட்டின் முன்பு நடந்த சில சோகச் சம்பவங்கள். 

அதேபோல்தான் அஜித்தும் சில படங்கள் தோல்வியுற்ற பின், மீடியாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டார். பேட்டிகளில், இவரிடம் கேட்டும் கேள்விகளுக்கு ஓப்பனான பதில்கள் வரும். ஒருமுறை `உங்களுக்கு அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகும் ஆசை இருக்கா?' என்ற கேள்விக்கு, `ஓ யெஸ், கண்டிப்பா எனக்கு ஆசை இருக்கு. இந்தக் கனவை நான் கண்டா அது கொழுப்பு கிடையாது' என்று பதிலளித்தது பெரும் சர்ச்சை ஆனது. அந்த விமர்சனங்களுக்குப் பிறகு இவர் பேட்டி தருவதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.  

எந்தப் பிரபலங்களுக்கும் இல்லாத ஒற்றுமை, இந்த இருவருக்கும் இருக்கிறது. தோனியையும், அஜித்தையும் நிறைய பொது இடங்களில் பார்க்கலாம் அல்லது வீட்டோடு நேரத்தை கழிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். தோனி அவருடைய நாய்க்குட்டியோடு எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டாலும் சரி, அஜித் அவரது மகளின் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் நிகழ்வு புகைப்படமாக வெளியானாலும் சரி... இருவரது புகைப்படங்களும் காட்டுத்தீ போலப் பரவி குறைந்தது ஒரு வாரமாவது வைரல் லிஸ்டில் இடம்பெறும்.  

பெர்சனல் வாழ்க்கையிலும் காதல் திருமணம், முதல் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்த இருவருக்கும் இரண்டு முரண்பாடுகளும் உண்டு. ஒன்று, தல அஜித்தின் ரசிகனாக இருப்பவர்கள், தோனியை 'தல' என்று கூப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல கிரிக்கெட் ரசிகர்கள், `தோனி மட்டும்தான் தல' என்று அஜித் ரசிகர்களுக்கு எதிராக இருப்பார்கள். இதற்கு, சமீபத்தில் 'தல' என்ற பெயருக்காக தோனி - அஜித் ரசிகர்களுக்கு இடையே நடந்த இணைய சண்டையே சாட்சி. 

ஆனால், இருவருக்கும் ரசிகனாக இருப்பவர்கள் இருவரையுமே 'தல' என்று ஆத்மார்த்தமாக அழைப்பார்கள். ஆகவே, கிரிக்கெட்டில் தோனி தல என்றால், சினிமாவில் அஜித் 'தல'!