Published:Updated:

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 5

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 5
புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 5

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

காவிரி பற்றிப் பாடிய நூல்களும் ஏராளம்; அதன் கரையில் வாழ்ந்த புலவர்களும் ஏராளம். இப்படி இலக்கியங்களிலும், புராணங்களிலும் போற்றிப் புகழப்பட்ட காவிரி, கவேரர் என்ற மகரிஷிக்கு மகளாக இருந்ததாகவும், அதன் பின்னர் அகத்தியருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் புராணக்கதைகள் உண்டு.

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

கவேரரின் மகள்!

கவேரர் என்ற மகரிஷி, தனக்கொரு மகள் வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தார். அவர் முன் ஒரு பெண் குழந்தையோடு பிரம்மா தோன்றி, “முனிவர்களில் சிறந்தவனே! முன்பு நான் தவம் செய்தபோது விஷ்ணுமாயாவின் அருளால் எனக்கு மானச புத்திரியாக இவள் தோன்றினாள். இவளுக்குப் பெண்ணுருவம், நதியுருவம் என இரண்டு உருவங்கள் உண்டு. இவளை இப்போது உனக்கு அளிக்கிறேன்” எனக் கூறி, அந்தக் குழந்தையைக் கவேரர் மகரிஷியிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். மகள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த கவேரர், அவளுக்கு லோபாமுத்திரை எனப் பெயர் சூட்டினார். அவள் வளர்ந்து, மங்கைப் பருவம் அடைந்தாள். பெற்றோரின் அனுமதியுடன் சிவபெருமானை எண்ணிக் கடுந்தவம் செய்தாள். அவளின் தவத்தினால் காட்சி தந்த சிவபெருமானிடம், “நான் நதிவடிவம் எடுத்து பூமியை வளப்படுத்த வேண்டும்” என்று வரம் கேட்டாள்.

அகத்தியருடன் திருமணம்!

அதற்கு சிவபெருமானும், “பெண்ணே, நீ கங்கையினும் புனிதமாவாய், ‘காவிரி’ என்று அழைக்கப் பெறுவாய். நீ நதிரூபம் அடைந்து பூமியை வளப்படுத்தினாலும், உனது அம்சம் லோபாமுத்திரை என்ற பெயரிலேயே இருக்கும். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை மணம் செய்வாய்” என்று வரம் தந்தருளினார். அதன்படி, அகத்தியருக்கும் லோபாமுத்திரைக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்று, சிவபூஜை செய்தபடி, இனிதே இல்லறம் நடத்திவந்தனர். அவளின் நதிரூபத்தைத் தன்னுடைய கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார் அகத்தியர். பிறகு, பரமேஸ்வரரின் ஆணைப்படி, அவர்கள் தென்னகம் வந்தனர். இந்நாளில் குடகுமலை என்று சொல்லப்படும் இடம், அந்தக் காலத்தில் சையமலை எனப்பட்டது; இதனைப் பிரம்மகிரி என்றும் கூறுவர். அங்கு, சில காலம் தங்கியிருந்து சிவபூஜை செய்து மகிழ்ந்தனர் அகத்தியர் தம்பதி. சிவபெருமான் வரத்தின்படி, காவிரியாள் பூமியில் பெருக்கெடுத்து ஓடி, உலகை வளப்படுத்தும் காலம் கனிந்தது.

சோழநாட்டின் குலக்கொடி! 

ஒருநாள், நெல்லி மரத்தடியில் தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டுத் தவத்தில் ஆழ்ந்திருந்தார் அகத்தியர். இந்த நிலையில், விநாயகரிடம் சென்ற இந்திரன் முதலான தேவர்கள், காவிரியைப் பூமியில் பெருகியோடச் செய்யும்படி வேண்டினர். அவரும் காக்கை வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். ஆனால், காவிரியான லோபாமுத்திரையோ நெல்லி மரத்தடியைச் சுற்றிச்சுற்றி வந்து, தான் பாய வேண்டிய திசை புரியாது நின்றாள். கண்விழித்த அகத்தியர், காக்கை வடிவில் விநாயகர் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்ததை உணர்ந்து வருந்தினார். ஆனாலும், இறைவன் திருவுளப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என மனதைத் தேற்றிக்கொண்டவர், காவிரிக்கு வழிகாட்டியபடி நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து ஓடிய காவிரி, பல இடங்களை வளப்படுத்திய பின்பு கடலில் கலந்தாள். அன்றுமுதல், சோழநாட்டின் குலக்கொடியானாள் காவிரி.

காந்தமன் என்ற சோழ மன்னன் அகத்திய முனிவரிடம் கேட்டதற்கிணங்க காவிரி ஓடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து மணிமேகலை காப்பியத்தில், 

“செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் ‘காந்தமன்’ வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை
பொங்கு நீர்பரப்பப் பொருந்தித்தோன்ற...”
என்று பாடப்பெற்றுள்ளது. 

புஷ்கர விழா!

இப்படி வற்றாத ஜீவநதியாய் ஓடிய காவிரி, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதியன்று ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறாள் என்பது நம்பிக்கை. அன்று காவிரியை, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் சிறப்புற வணங்கி மகிழ்வர். அதேபோல், காவிரியில் புஷ்கர விழாவும் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது புஷ்கர விழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகா புஷ்கர விழாவாகும். புஷ்கரம் என்பது நதிகளுக்கே உரித்தான விழாவாகும். கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பிராணஹிதா உள்ளிட்ட 12 நதிகளிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி!

பஞ்சாங்கங்களில் புஷ்கர காலம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஆண்டுக்கும் தொடர்புடைய நதி என்பதை குரு (வியாழன், பிரகஸ்பதி) அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட கால அளவுவரை புஷ்கரம் நடைபெறும். புஷ்கர காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒருசேர இருந்து அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் (12 முதல் 24-ம் தேதி வரை) குரு பகவான் துலாம் ராசியைக் கடந்தபோது காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் மக்கள் நதிகளில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். கடந்த ஆண்டு நடைபெற்ற காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நீராடினார். 2017 செப்டம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் அவர் புனித நீராடினார். முதல்வரின் வருகைக்காக, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் மயிலாடுதுறை காவிரிக் கரையில் துலாக்கட்டத்தில் நீராடல் நடைபெறும். அந்தச் சமயத்தில் கங்கை நதி, காவிரியில் கலப்பதாகவும், கங்கையில் குளிப்பவர்கள் கரைத்த பாவத்தைக் காவிரியில் கலந்து போக்கிக்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கங்கையைவிடவும் புனிதமானது! 

ஒருமுறை கண்வ மகரிஷியிடம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் பெண் வடிவம் எடுத்துவந்து, “இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பாவமூட்டைகளைச் சுமந்துவந்து எங்களிடம் மூழ்கிக் கரைத்துப் போகின்றனர். அதனால், நாங்கள் கருமை அடைந்துவிட்டோம். எங்கள் பாவங்கள் போக வழி செய்ய வேண்டும் என்று முறையிட்டனவாம். அதற்குக் கண்வ முனிவர், “ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரியில் துலாக்கட்டத்தில் நீராடினால், பரிகாரம் கிடைக்கும்” என்றாராம். இதன்மூலம் கங்கையை விடவும் காவிரி ஆறு மிகவும் புனிதமானது என்பது புலப்படுகிறது. 

மேலும் காவிரி, கங்கையை விடவும் புனிதமானது என்பதை விளக்கும் வகையிலான கருத்து தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் உண்டு. அதனால், “கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுப் பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்” என்கிறார் அவர். காவிரியில் அம்பிகை மயிலாய் வந்து பூஜை செய்த நிகழ்வை பரஞ்ஜோதி முனிவர், 

“மதிநுதல் இமயச்செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும்
துலாப் பொன்னித் தானம்”
 என்று குறிப்பிடுகிறார்.

“கங்கையில் பல தினங்கள் நீராடிய புண்ணியம், மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரியில் நீராடுவதால் கிடைக்கும்” என்கிறது காவிரி மஹாத்மியம் என்னும் நூல். 

காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு