Published:Updated:

சனி தோஷம் போக்கும் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் மோட்ச தீர்த்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சனி தோஷம் போக்கும் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் மோட்ச தீர்த்தம்!
சனி தோஷம் போக்கும் தேவர்மலை ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் மோட்ச தீர்த்தம்!

கரூர் மாவட்டம் பாளையத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலிருக்கிறது தேவர்மலை. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரின் கோபம் தணிந்த இடம்... தேவர்மலை. இங்கே, `ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள்’ என்ற பெயரில் காட்சிதருகிறார் பெருமாள்.

ரூர் மாவட்டம் பாளையத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலிருக்கிறது தேவர்மலை. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரின் கோபம் தணிந்த இடம்... தேவர்மலை. இங்கே, `ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள்’ என்ற பெயரில் காட்சிதருகிறார் பெருமாள்.

பாளையத்திலிருந்து பிரிந்துசெல்லும் சாலையில்தான் பயணிக்க வேண்டும்... செம்மண் புழுதி படிந்த சாலை. வறட்சியான பகுதி என்பதால், அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மரங்களைப் பார்க்க முடிந்தது. ஒருவழியாகக் கோயிலை அடைந்தோம். 

பெரிய கதவுகளுடன், கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயிலைக் கடந்து சென்றால், இருபுறமும் பெரிய திண்ணை அமைந்திருக்கிறது. கோயிலில் மொத்தம் மூன்று ஸ்தூபிகள். ஒன்று வெளிப்புறத்திலும், மற்ற இரண்டும் உள்ளேயும் இருக்கின்றன. நுழைவாயிலுக்கு வலப்புறத்தில் ஒரு மண்டபம் இருக்கிறது. செம்புத் தகட்டால் வேயப்பட்ட உயர்ந்த கொடிமரத்தைக் கடந்து சென்றால், மூலவர் சந்நிதியில் ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சந்நிதியில்  கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

கோயிலின் வரலாறு குறித்து அர்ச்சகர் பாலாஜியிடம் கேட்டோம்.

``இரண்யனை சம்ஹாரம் செய்த பின்னரும் சினம் தணியாமல் சீறி அலைந்த ஸ்ரீநரசிம்மரை, தேவர்கள் இங்கே ஆசுவாசப்படுத்தி அமரவைத்து, ‘மோட்ச தீர்த்தம்’ ஏற்படுத்தி, திருமஞ்சனம் செய்து சினம் தணித்தார்கள்.

மோட்ச தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால், சனி பகவான் தொடர்பான தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுவதற்குப் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளுவார்கள். இப்போதோ மோட்ச தீர்த்தத்தில் தண்ணீர்வரத்து அவ்வளவாக இல்லை. பக்தர்கள் அதிகம் வராததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோயிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, ‘மோட்ச தீர்த்த’த்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம். பழநி, சமயபுரம் போன்ற திருத்தலங்களுக்கு இந்த வழியாக யாத்திரை செல்பவர்கள், இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டு, அபிஷேகத்துக்கென தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.

பழைய கோயில் முற்றிலும் சிதிலமடைந்து போய்விட்டது. சில வருடங்களுக்கு முன்னர்தான் பலரிடம் நிதி திரட்டி, கோயிலைப் புனரமைத்தோம். அப்போது, இரண்டு செப்புக் கலயங்கள் கிடைத்தன. அவற்றில் சோழர்காலத் தங்க நாணயங்கள் இருந்தன. அவற்றை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டோம். தெப்பக்குளத்தைப் புனரமைத்தபோது, ஒரு தொழிலாளி பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்றும்போதுதான் அது பள்ளம் அல்ல, சுரங்கப்பாதை என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. இதுவரைக்கும் இங்கே ஆய்வு எதுவும் நடக்கவில்லை. இப்போது, இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிறது. கோயிலுக்கு, திருமணமாகாதவர்கள், கிரக தோஷம் உள்ளவர்கள், புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் எனப் பல பேர் வந்து கதிர் நரசிங்கப் பெருமாளைத் தரிசித்துச் செல்கிறார்கள்’’ என்றார்.

ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலைச் சுற்றிலும், சுண்ணாம்புப் பாறைக் கற்கள் காணக்கிடைக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்தக் கற்களை உரசி, நாமம் போட்டுக்கொள்கிறார்கள். 

சினம் தணிந்த சாந்த ஸ்வரூபியாக அருளும் ஶ்ரீகதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டால் மனதில் கோபம் என்பதே ஏற்படாது என்பது ஐதீகம். நாமும் நம்முடைய கோபத்தையெல்லாம் அங்கேயே விட்டுவிட்ட பரவசத்துடன் கோயிலிலிருந்து கிளம்பினோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு