Published:Updated:

"பேருந்தில் நசுங்கி பின்மாலையில் புத்தகம் தொடும் குழந்தைகளை அறிவீர்களா?!" - ஆட்சியாளர்களுக்கு ஒரு கடிதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"பேருந்தில் நசுங்கி பின்மாலையில் புத்தகம் தொடும் குழந்தைகளை அறிவீர்களா?!" - ஆட்சியாளர்களுக்கு ஒரு கடிதம்
"பேருந்தில் நசுங்கி பின்மாலையில் புத்தகம் தொடும் குழந்தைகளை அறிவீர்களா?!" - ஆட்சியாளர்களுக்கு ஒரு கடிதம்

"பேருந்தில் நசுங்கி பின்மாலையில் புத்தகம் தொடும் குழந்தைகளை அறிவீர்களா?!" - ஆட்சியாளர்களுக்கு ஒரு கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்புள்ள ஆட்சியாளர்களுக்கு,

வணக்கம்...! வெற்றிகரமாக உங்களுக்குக் கீழ் செயல்படும் துறைகள் ஒன்றிணைந்து மிகச்சிறந்த நுழைவுத்தேர்வினை நடத்தி சாதனை புரிந்துள்ளன. நீட் தேர்வை நடத்தி முடிக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எம் பிள்ளைகள் சிறிதளவு மட்டுமே மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அவை தவிர, நாங்கள் ஓரிரு பெற்றோர்களை மட்டுமே இழந்துள்ளோம். அவ்வளவுதான் பிரச்னை. மற்றபடி உங்கள் தேர்வு முறையும் கல்வி முறையும் மிகச்சிறந்த முறையில் எம் பிள்ளைகளை நல்ல மனிதர்களாகவும், மாணவர்களாகவும் உருவாக்குகின்றன.

ஆட்சியாளர்கள் என்று நான் பொதுவாக அனைவரையும் சேர்த்துதான் குறிப்பிட்டுள்ளேன். கடந்த சில வருடங்களாகப் பேச்சுவார்த்தையில் மட்டுமே இருந்த ஒரு திட்டம், திடீரென்று `தேர்வு இப்படித்தான் நடக்கும்' என்று அறிவித்து, இரண்டே நாள்களில் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டு, `உங்கள் மாநிலம் விழித்துக்கொள்ளவில்லை; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல' என்று கூறி ஓர் ஏழை மாணவியின் உயிரைக் கருணை இல்லாமல் கருக்கிய ஒரு திட்டம் குறித்து ஒருசில கேள்விகள் உங்களிடம் நான் கேட்க வேண்டும்.

சமூக வலைதளப் பக்கங்களில் அச்சமூட்டும்விதமாக வரும் பல்வேறு கருத்துகளையும் கடந்து, ``நீ இந்த ஆட்சிக்கு ஆதரவு அளிப்பவள், நீ இந்தச் சித்தாந்தம் உடையவள், நீ இந்தப் பாடத்திட்டத்தில் படித்தவள்” என்று உமிழப்பட்ட அத்தனை சொற்களையும் கடந்து, இந்தத் தேர்வுமுறை அப்படி என்னதான் செய்கிறது? இது மாணவர்களுக்கு எத்தகைய பயனை உண்டாக்குகிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால் இந்தக் கேள்விகளை உங்கள் முன்பு வைக்கிறேன்.

நம் தேர்வு முறை உண்மையாகவே நம் பிள்ளைகளின் அறிவுத்திறனை மதிப்பிடுகின்றனவா? ``மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு `ப்ளூ பிரின்ட்டை' கையில் திணித்து, இந்தப் பாடத்தில் பத்து மதிப்பெண் வினா மட்டும் படி, அட்சரம் பிசகாமல் எழுது என்று மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்" என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். சரிதான். ஆனால் நுழைவுத்தேர்விற்காகக் கூட்டம் கூட்டமாகப் பயிற்சி மையத்திற்குப் படையெடுத்துச் செல்லும் எத்தனை பிள்ளைகள் தங்களுடைய பாடங்களை ஆழ்ந்து கற்றுக்கொள்கிறார்கள்?

ஒரு பக்கம் ப்ளூ பிரின்ட்டின்படி எம் பிள்ளைகள் தேர்விற்குத் தயாராகிறார்கள் என்றால், இன்னொருபுறம் பக்கம் பக்கமாகப் படித்து குறிப்பெடுத்து, கொள்குறி வினாக்களுக்காக மாணவர்கள் தயாராகிறார்கள். ஆக, இரண்டு முறைகளிலும் மாணவர்கள் கறிக்கோழிகள் ஆக்கப்படுகிறார்கள்தானே. இரண்டு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்தானே. அதை விட்டுவிட்டு ஒரு பாடத்திட்டத்தைக் குறை சொல்வதால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன?

``வெறும் இரண்டு ஆண்டுகள் படி, கேள்வித்தாளின் நுட்பத்தை நீ அறிந்துகொள்ள வேண்டும். வேகமாக மூன்று மணி நேரத்திற்குள் நீ அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நீ மிகச்சிறந்த அறிவாளி. வா! உன்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்! வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் இரண்டு ஆண்டுகள் மென்று விழுங்கிவிட்டு, கல்லூரியில் அவர்கள் சோபிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் மனசாட்சியிடம் ஒரே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். இத்தகைய அழுத்தம் ஒரு மிகச்சிறந்த மாணவனை, நல்ல குடிமகனை, ஒரு நல்ல மனிதனை உருவாக்குமா?

உங்கள் கல்விக்கொள்கைகளை நன்றாக உற்று நோக்குங்கள். மாணவர்களின் சமூகப் பொருளாதார பின்னணி எப்படி எல்லாம் மாணவர்களை உருவாக்குகிறது என்று யோசித்துப் பாருங்கள். ஒரு குழந்தை ஆறாம் வகுப்பிலிருந்து குறிப்பிட்ட விளையாட்டிற்குப் பயிற்சி பெறும். இன்னொரு குழந்தை ஒன்பதாம் வகுப்பிலிருந்து நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும். இன்னொரு குழந்தைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மிகச்சிறந்த நுழைவுத்தேர்வு பயிற்சி அளிக்கப்படும். வேறொரு குழந்தை நகரப் பேருந்தில் நசுங்கி மாலை ஆறு மணிக்குமேல் புத்தகம் தொடும். இன்னொரு குழந்தை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பால் கறந்து ஊருக்குள் விற்றுவிட்டு பள்ளிக்குச் செல்லும். 

அன்புமிகுந்த ஆட்சியாளர்களே, நீங்கள் இந்தக் குழந்தைகள் அனைவரையும் ஒரே தராசில் எடை போடுகிறீர்கள். உங்களுக்கு அது ஏன் புரியவில்லை?

இங்கு பாடத்திட்டத்தைவிட, பயிற்சிக்கூடங்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற கசப்பான உண்மையை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்? இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்தும்தானே? அனைத்துப் பாடத்திட்டத்தையும் தேயத்தேயச் சொல்லிக் கொடுக்கும் அனைவரும் அறிந்த உண்மைதானே? பிறகு ஏன் உங்களால் ஒரு சீர்மையான பாடத்திட்டத்தையோ, மாணவர்களுக்கு உகந்த கல்விமுறையையோ கொண்டுவரமுடியவில்லை? ஏன் இன்று பணம் கொழிக்கும் ஒரு வணிகமாகக் கல்வி மாறியது? ஒவ்வொரு முறை நுழைவுத்தேர்வு முடியும்போதும், நாளிதழ்களில் முதல் பக்கத்தில் பலவித கவர்ச்சிகரமான அறிவிப்புகளோடும், வெற்றி பெற்ற மாணவர்களின் சிறிய அளவு புகைப்படங்களோடும் ஒவ்வொரு நுழைவுத்தேர்வுக் கூடமும் ஏன் வெற்றியைக் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்கின்றன?

பள்ளிப்பாடங்கள் அளிக்க வேண்டிய முழுமையான அறிவை நம் கல்விக்கூடங்கள் போதிக்கின்றனவா? ஒவ்வொரு பாடத்திற்கு முன்பும் அதைப் படிப்பதற்கான நோக்கம் முழுமையாக குழந்தைகளைச் சென்றடைகிறதா? உளவியல் ரீதியாக ஒரு குழந்தை பாதுகாப்பாக உணர்கிறதா? குழந்தைகள் விளையாட, அவர்கள் நினைக்கும் நேரத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்க, எதிர் கேள்வி எழுப்ப, தனக்கு இந்தப் பாடம் புரியவில்லை என்று ஆசிரியரிடம் சொல்ல, இங்கு எத்தனை குழந்தைகளுக்கு உரிமை கிடைக்கிறது? இவை அனைத்தையும் கடந்துதானே ஒரு கல்விக்கொள்கை உருவாக வேண்டும்? வெறும் வினா-விடை மட்டுமே கல்வி என்று நீங்கள் எங்கள் குழந்தைகளை வஞ்சிப்பது நியாயமா? ஒரு நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான, தரமான கல்வியையும் வாய்ப்புகளையும் வழங்காத ஓர் அரசு, ஆட்சி செய்து என்ன பயன்?

என் பிள்ளை ஏழை. அதனால் அவளுக்குக் கிடைக்கும் கல்வி முறை தரம் தாழ்ந்தது. நீங்கள் இப்படி எல்லாம் அவளைத் தாழ்த்தினாலும், அவள் அவளுடைய கனவுகளுக்கு உண்மையாகத்தானே நடந்து கொண்டாள்? அவளை நீங்கள் எப்படி தாழ்த்திச் சொல்லலாம்? வாய்ப்புகள் மறுக்கப்படும் குழந்தைக்கு இத்தகையப் போராட்டம் என்றால், வாய்ப்புகள் கிடைக்கும் குழந்தைக்கோ வேறுவிதமான போராட்டம். இரண்டு ஆண்டுகள் கூண்டிற்குள் வாழ்க்கை. தரவரிசைப் பட்டியல், பாடத்திட்ட தேர்வு என்று தெரிவித்து, அந்தப் பிள்ளைக்குள் இருக்கும் ஜீவனையும் உறிந்துவிட்டுதான் கல்லூரிக்குள் அனுப்புகிறீர்கள்.

முழுமையான உழைப்பை அளித்த பிள்ளையை மட்டம் தட்டுகிறீர்கள். வாய்ப்பு கிடைக்கும் பிள்ளையின் சுதந்திரத்தைப் பறிப்பீர்கள். ஆக, இரண்டு தரப்புக் குழந்தைகளுக்குமே நீங்கள் நியாயம் செய்யவில்லை. அப்படித்தானே? போட்டிகள் மிகுந்த உலகம் இது. மாணவர்கள் சூழ்நிலைகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று சிலர் சொல்லலாம். கடினமான சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரிந்த பிள்ளைகள்தாம் நல்ல மருத்துவர் ஆகலாம் என்று சொல்லலாம். ஆனால், நம் பிள்ளைகள் தொடக்கத்திலிருந்தே அப்படிப்பட்ட கல்வி முறைக்குப் பழக்கப்படுத்தப்பட்டவர்களே. அவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி அவர்களைப் பாதிக்கவே இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

நம்மைவிட பின்லாந்து மிகச்சிறிய நாடு. அவர்களுடைய கல்விமுறை குறித்து உங்களுக்குத் தெரியுமா? 

பின்லாந்து நாட்டில்...
 ஏழு வயதில்தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள்.
 பதின்பருவம்வரை அவர்களுக்கு வீட்டுப்பாடம் கிடையாது.
 ஒவ்வொரு நாற்பத்தைந்து நிமிட பள்ளிப்பாடத்திற்கு நடுவில் கால் மணி நேரம் விளையாடலாம். ஓய்வாக இருக்கலாம்.
 குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்கவிட்டு, பிறகே அவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
 பெரிய அளவிலான தேர்வுகள் கிடையாது.
 பதினாறு வயது நிறைவடையும்போது, கடைசியாக ஒரு தேர்வு மட்டும் நடத்தப்படும்.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்த்தால் அந்தக் குழந்தைகள் எப்படிப் படித்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள், சரிதானே. நம் பிள்ளைகளைப் போல அவர்களுக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகப் புத்தகங்களோடு மட்டும் அவர்கள் இல்லையே? அவர்களின் அறிவு எப்படி இருக்கும்? 

உலக அளவில் மொழி, கணிதம், அறிவியல் ஆகிய அனைத்தையும் கிரகித்துக்கொள்ளும் திறனில் தலைசிறந்த இடத்தில் இருக்கிறார்கள் பின்லாந்து குழந்தைகள். வெறும் ஐம்பத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட அந்த நாட்டின் கல்வி முறையைப் பார்த்தீர்களா? ஆம், இன்னொரு விஷயம். அந்த நாட்டில் கல்வி முழுக்கமுழுக்க அரசினால் ஏற்று நடத்தப்படுகிறது. அந்தக் குழந்தைகளுக்குக் கிடைப்பது வணிக முறைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி. கறிக்கோழிகளாகப் பிள்ளைகளை மாற்றாத கல்வி. ஆனால், இங்கே எம் பிள்ளைகளுக்குக் கல்வி என்ற பெயரில் எதனைத் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அளிக்கும் புத்தகம்  தவிர்த்துச் சொந்தமாக எழுதினால் முழு மதிப்பெண் அளிப்பது இல்லை. விரிவான வாசிப்பினைத் தூண்டுவதும் இல்லை. இங்குள்ள பிள்ளைகள் படிக்கும் பள்ளியைப் பொறுத்துதான், அவள் பள்ளிக்காலத்தில் எழுத வாய்ப்பிருக்கும் தேசியத் திறனறித் தேர்வுகளுக்கும், இன்னபிற தேர்வுகளுக்கும் அவளால் பயிற்சி பெறமுடியும். ஒரு குழந்தை ஆறாம் வகுப்பிலிருந்தே இத்தகைய தேர்வுகளைச் சந்திக்கிறது. இன்னொரு குழந்தை பள்ளிக்காலம் நிறைவடையும்வரை, சொந்த கிராமத்தைவிட்டே வெளியில் வரவில்லை. இவர்கள் இருவரையும் ஒரே தராசில் நிற்கவைத்துச் சோதிப்பது நியாயமா?

நுழைவுத்தேர்வுக் கட்டணம் எவ்வளவு நான் தரவேண்டும்? 1500 ரூபாய். நான் ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியின் மகள். என்னால் அவ்வளவு கட்டணம் அளிக்க முடியுமா? நீங்கள் சொல்லும் நகரங்களுக்குப் பறந்துவந்து தேர்வு எழுத முடியுமா? மக்களின் வலிகளை, பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்துகொள்ளமுடியாத நீங்கள் ஏன் இப்படி ஒரு கல்விக்கொள்கையை, தேர்வு முறையைப் பின்பற்றுகிறீர்கள்? உங்கள் கல்வி முறை நல்ல மனிதர்களை உருவாக்குமா, இல்லை மதிப்பெண் இயந்திரங்களை உருவாக்குமா?

நுழைவுத்தேர்வு மூலம் சென்றால் ஒரு கல்வி, லட்சங்கள் செலவழித்தால் இன்னொரு கல்வி, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தால் மற்றொரு கல்வி. கல்வி என்ன விமானப் பயணச்சீட்டா? ஒவ்வொரு விலைக்கும் ஒவ்வொரு ரகம் என்று பிரித்து அளிப்பதற்கு? சரி இதெல்லாம் போகட்டும், விடுங்கள். நீங்கள் மீண்டும் அடுத்த ஆண்டிலிருந்து தேர்வு தொடங்குங்கள். பிள்ளைகளை உறிஞ்சி எடுத்து நல்ல மருத்துவர்களைத் தயார் செய்கிறேன் என்ற பெயரில் இன்னும் சில உயிர்களைப் பறித்துக் கொள்ளுங்கள். அவர்களின் கனவுகளை நசுக்கி அவற்றின்மீது அமிலம் ஊற்றி ஆனந்தம் கொள்ளுங்கள். கல்விக்கொள்கைகளில் உங்களது தகாத அரசியலைத் திணியுங்கள். பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக எம் பிள்ளைகளைப் பிரித்துத் துன்புறுத்துங்கள்.

இறுதியாக, எந்த அறத்தை நினைவில் கொள்ளாமல் நீங்கள் பிறழ்ந்து நடந்தீர்களோ, அதே அறத்தினால் நீங்கள் வஞ்சிக்கப்படுவீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு