Published:Updated:

மைசூரு அரசின் முதல் துரோகம்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 6

மைசூரு அரசின் முதல் துரோகம்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 6
மைசூரு அரசின் முதல் துரோகம்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 6

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

சோழவள நாட்டைச் சொர்க்கபூமியாக மாற்றிய காவிரி, அந்தக் காலத்திலேயே நீரால் சுருங்கிப்போன நிகழ்வும் உண்டு; அதன் காரணமாகத் தமிழகம் பஞ்சத்தில் பரிதவித்த கதையும் உண்டு. காவிரியில், ஒருகாலத்தில் நீர் சுருங்கியதால் பஞ்சம் ஏற்பட்டதாகவும், அதற்காகக் கோயில் சொத்தைச் சூறையாடியதாகவும் ராஜராஜ சோழனின் 24-ம் ஆட்சியாண்டின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

காவிரியில் அன்று ஏற்பட்ட பஞ்சம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது; பல்வேறு துயரங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. இது, மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது என்று முதல் அத்தியாயத்திலேயே படித்தோம். அதேபோல காவிரி நீரை மையமாக வைத்து மைசூரு - மதுரை மன்னர்களிடையே பல யுத்தங்கள் நடந்ததற்கும், ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு சிதிலமடைந்த குளங்களையும், நீர்நிலைகளையும் சீரமைக்கத் தொடங்கினார் அப்போதைய மைசூரு திவான் பூர்ணையா. 

முதல்கட்டமாக மைசூருவில் 1807-ம் ஆண்டு தொடங்கிய இந்தச் சீரமைப்புப் பணிகள், அதன்பிறகு காவிரிக் கரையோரப் பகுதிகளில் நடைபெற்றன. இதனால், தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் குறைந்து போய்விடும் என்று கருதிய சோழநாட்டு விவசாயிகள், தங்கள் ஆதங்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஆட்சியர், மைசூருக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்து வருவதற்காக ஓர் அதிகாரியை நியமித்தார். அங்கு சென்று அப்பணிகளைப் பார்வையிட்ட அந்த அதிகாரி, “யுத்தத்தால் சிதைந்த குளங்களும், குட்டைகளும்தான் மறுசீரமைக்கப்படுகின்றனவே தவிர, வெறெந்த ஆக்கிரமிப்போ, தடையோ ஏற்படுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.

‘மைசூரு பெருந்திட்டம்’! 

கால மாற்றத்தினால் 1831-ம் ஆண்டு மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த மைசூரு சாம்ராஜ்யம், பிரிட்டிஷாரின் கைக்குச் சென்றது. மைசூரின் வளர்ச்சிக்காக, ‘மைசூரு பெருந்திட்டம்’ என்ற பெயரில் சில சிறப்புத் திட்டங்களைக் கர்னல் ஆர்.ஜே.சான்கி என்பவர் உருவாக்கினார். குறிப்பாக, மைசூரில் வருடந்தோறும் கிடைக்கும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கினார். அப்படி, அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. “அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்பட்சத்தில் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடைய நெல் சாகுபடியும் பாதிக்கப்படும்” என்றும் சென்னை அரசுப் பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், எதையும் கவனத்தில்கொள்ளாத மைசூரு அரசாங்கம், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1877-ம் ஆண்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மைசூரைப் பஞ்சம் தாக்கியது. ஆம், அது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கண்ணீராகக்கூட இருக்கலாம்.

முதல் பேச்சுவார்த்தை!

பஞ்சத்தால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட, அந்தத் திட்டம் பாதியிலேயே நின்றுபோனது. பஞ்சத்துக்குப் பிறகு மைசூரு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. மைசூரு சமஸ்தானத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் பிரதிநிதி ஒருவரை நியமித்து, மைசூரை ஆங்கிலேய மன்னரிடம் ஒப்படைத்தனர். எனினும், காவிரிப் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், 1890-ம் ஆண்டு சென்னை ராஜதானி அரசு சார்பிலும், மைசூரு சமஸ்தான அரசு சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

ஹெச்.ஈ.ஸ்டோக்ஸ், ஜி.டி.வால்க் ஆகியோர் சென்னை ராஜதானி சார்பிலும், ஆலிவர் செயின்ட் ஜான், திவான் சேஷாத்ரி அய்யர், கர்னல் போவன் ஆகியோர் மைசூரு சமஸ்தானம் சார்பிலும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். “காவிரி நீரில் எங்களுக்கு இருக்கிற உரிமையின் அடிப்படையில்தான் எங்களுக்கான நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம்” என்ற வாதத்தை மைசூரு சமஸ்தானம் முன்வைத்தது. இதை நிராகரித்த சென்னை ராஜதானி அரசு, “தஞ்சாவூர் கழிமுகத்தில் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னதாகவே பண்டைய சோழ மன்னர்கள் காவிரியில் அமைத்திருந்த உன்னதமான நீர்ப்பாசனம் தொடங்கியே இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உரிமை பெற்று அனுபவித்து வந்தனர்” என்று பதிலளித்தது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பின்பு, அதே பிரச்னைக்காக மீண்டும் இரு அரசுகளும் 1891-ல் பேச்சுவார்த்தை நடத்தின. அதிலும் தோல்வி ஏற்பட, இறுதியாக 1892-இல் இரண்டு அரசுகளுக்கிடையேயும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1892-ம் ஆண்டு ஒப்பந்தம்!

‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம்-1892’ என்ற பெயரில் உருவான அந்த ஒப்பந்தத்தில், மைசூரு சமஸ்தானத்தின் முதன்மையான ஆறுகள் துங்கபத்ரா, துங்கா, பத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வட பினாகினி, சித்திராவதி, பாபக்னி, பாலாறு, பெண்ணாறு அல்லது தெற்குப் பினாகினி, காவிரி, ஏமாவதி, லட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாதி (பேலூர்ப் பாலம் வரை) A பிரிவிலும், துணையாறுகள் B பிரிவிலும், சிறு ஓடைகளும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் C பிரிவிலும் இடம்பெற்றன. 

மேலும், ‘சென்னை அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூரு அரசு A பிரிவில் உள்ள ஆறுகளில் அணைகள் கட்டக்கூடாது என்றும், B மற்றும் C பிரிவுகளில் உள்ள ஆறுகளிலும், ஓடைகளிலும் அந்த அரசு தனது விருப்பம்போல் செயல்படலாம் என்றும், A பிரிவில் உள்ள ஆறுகளில் புதிய நீர்த்தேக்கமோ, அணைகளோ கட்ட விரும்பினால் மைசூரு அரசு சென்னை அரசுக்கு அதுகுறித்த திட்ட விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்’ என்றும் அதில் சொல்லப்பட்டது. உலக நாடுகளில் பொருந்தி வரக்கூடியபடியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் மைசூரு அரசுக்கு அது சாதகமானதாக இல்லை என்றே சொல்லப்பட்டது.

மைசூரு அரசின் முதல் துரோகம்! 

1892-ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பின் இரு அரசுகளுக்கும் இடையே முதல் சிக்கல் எழுந்தது. அந்த ஒப்பந்தப்படி, சிவசமுத்திரம் நீர்மின் நிலையத்துக்காக 11 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்தைக் கட்ட மைசூரு அரசு, சென்னை அரசிடம் அனுமதி பெற்றது. ஆனால், 41 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்துக்கான அடித்தளத்தை அமைக்க அது திட்டமிட்டது. இந்தத் திட்டமே, தமிழகத்துக்கு மைசூரு அரசு செய்யும் முதல் துரோகமாகப் பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை அரசாங்கம் முறையீடு செய்தது. 

காவிரி பாயும்....

அடுத்த கட்டுரைக்கு