Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் அகத்தியன்நா.கதிர்வேலன், படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''எனக்கும் விகடனுக்குமான உறவு ஒரு சலூனில் தொடங்கியது. எனது சகோதரியின் கணவர் ஒரு சலூன் வைத்திருந்தார். பள்ளிக்கூடம் போகும் நேரம் போக, மீதி நேரம் எல்லாம் அங்கேதான் இருப்பேன். அங்கே வருகிற மனிதர்கள், பெஞ்சில் உட்கார்ந்து ஆற அமர அவர்கள் பேசுகிற பேச்சுகளைக் கவனித்துக்கொண்டும், அங்கே கிடக்கும் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டும் இருப்பேன். ஏழெட்டு வயசு ஆகும்போதே தந்தியையும் விகடனையும் தனக்கு வாசித்துக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார் மாமா. கடுமையான கட்டுப் பாட்டின் அவசியத்தில் ஆரம்பித்தது என் படிப்பு வாசம். விகடனில் என்னை முதலில் கவர்ந்தவை கதைகள், கோபுலுவின் சித்திரங்கள். உஷா சுப்பிரமணியனின் 'ரயில் பயணங்களில்’ கதையை இன்னும் மறக்கவே முடியவில்லை. அதன் பாதிப்பில்தான் 'பொண்டாட்டி ராஜ்யம்’ படத்தைக்கூட பின்னாளில் எடுத்தேன்.

விகடன் என்னைக் கதாசிரியன் ஆக்கி யது. எனது அனுபவங்களைச் செம்மை யாக்கி என்னை வளரவைத்தது. நான் இயக்குநர் எம்.ஏ.காஜாவிடம் உதவியாளனாகக் கொஞ்ச காலம் இருந்தேன். அவர் விகடனைக் கொடுத்து அதில் இருக்கிற சம்பவங்களைத் தனியாக 40 பக்க நோட்டு கொடுத்து எழுதச் சொல்வார். நல்ல ஜோக்கு களைக் குறிக்கச் சொல்வார். அவருக்குக் குறிப்பு சேகரிக்கப் போய் எனது சிந்தனை விரிந்தது. அந்த நாட்களில் விகடன் வாங்கக் காசு இருக்காது. ஒரு வேளை டீக்கும் சாப் பாட்டுக்கும் வாடும்போது விகடனை வாங்க எங்கே போவது? நூலகங்களுக்கும் சினிமா கம்பெனிகளுக்கும் சென்றுதான் படிக்க முடிந்தது.

நானும் விகடனும்!

கதாசிரியர்களுக்கு விகடன் தருகிற மரியாதை மிகவும் உயர்ந்தது. தொடர் வெளியீட்டுக்கு அண்ணா சாலையில் பேனர் வைத்தது எல்லாம் நடந்திருக்கிறது. விகடனைப் போல் எழுத்தாளர்களை வேறு யாரும் கொண்டாடியது இல்லை என்று சொல்லலாம்!

விகடன் மீது தமிழக மக்கள் வைத்தி ருக்கும் மதிப்புக்கு உதாரணம், விகடன்  ஆசிரியரை அப்போதைய அரசு சிறை வைத்தபோது தமிழகமே திரண்டு எழுந்தது. பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப் போராடிய பாலன் சாரையும் அந்தக் கைதைப் பற்றியும் பின்னாட்களில் புனேயில் தினசரிச் சொற்பொழிவில் ஓஷோ குறிப்பிட்டுப் பேசினார். அவ்வளவு தூரம் சென்று சேர்ந்திருந்தது விகடன் வாசம்!  

விகடனின் சினிமா மார்க் முக்கியமானது. சினிமாவில் இருக்கிறவர்கள் தவிர வும் அனைவரும் விகடன் விமர்சனத்தை அவசியம் எதிர்பார்க்கிறார்கள். சென்சார் சான்றிதழைவிடவும் விகடன் அளிக்கும் நற்சான்று போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு முக்கியமானது. விகடனின் விமர்சனம் என்னைப் பொறுத்தவரை அநேகமாகச் சரியானது. தட்டிக்கொடுப் பதும் குட்டிவைப்பதும் அவர்களுக்குச் சரியாகக் கைவந்திருக்கிறது. 'விகடனின் மார்க் இன்னும் கூடியிருக்கலாம்’ என்று நினைத்தால், அதற்குத் தோதாக அடுத்த படத்தை எடுக்க வேண்டும். வேறு வழி இல்லை. விகடனின் '50 ப்ளஸ் மார்க்’ பட்டியலில் எனது படமும் இடம்பெற்றது எனக்குக் கிடைத்த பெருமை. தமிழகத்தில் இயக்குநர்களுக்கான தேசிய விருதை முதன்முறையாக நான் பெற்றதும், என்னைப் பாராட்டி உச்சி முகர்ந்து உயரத்தில் தூக்கிவைத்தது விகடன். எனது விரிவான பேட்டியும் வெளியானது. என்னை அலுவலகத்துக்கும் அழைத்து மரியாதை செய்தார் அப்போதைய இணை ஆசிரியர் மதன். விகடன் என் தலையில் வைத்த கீரிடத்தின் சுமை தாங்காமல் இன்னமும் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் இயக்கிய 'கோகுலத்தில் சீதை’ படம் வெளிவந்தபோது விகடனின் விமர்சனம் உயர்வாக இருந்தது. கிட்டத் தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு எனது 'கோகுலத்தில் சீதை’ படத்தைத் தழுவி ஒரு படம் வெளிவந்தது. அப்போது அந்தப் படத்தைப் பற்றி வந்த விமர்சனத்தில் 'இதுபோன்ற விஷயங்களைக் கையாள அகத்தியனால் மட்டுமே முடியும். அது 'கோகுலத்தில் சீதை’ படத்தில் தெரியும்!’ என்று எழுதி இருந்தார்கள். என் வாழ்க்கையில் என்னை இதைவிட யாரும் கௌரவப்படுத்தியது இல்லை. தேசிய விருதைவிட உயர்ந்த விருது அது!

'காதல்கோட்டை’ படம் வெளியான சமயம்,  அட்டையில் படத்தின் ஸ்டில்லை வெளியிட்டது விகடன். அப்போது தொலைந்துபோன என் சிநேகிதன் மகேந்திரன் எனக்குக் கடிதம் எழுதி, அதை விகடன் முகவரிக்கு அனுப்பி இருக்கிறான். அதையும் என்னிடம் ஒப்படைத்தார்கள். விகடனுக்கு நாம் செய்கிற ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் மதிக்கப்படும்... பதில் அளிக்கப்படும்!

விகடனில் இடம்பெறும் தொடர்கள் மிக முக்கியமானவை. அறிவுமதியின் 'மழைப் பேச்சு’ காமத்தை இவ்வளவு தரத்தோடு, சொல்ல முடியுமா என ஆச்சர்யப்படுத்தியது. பிரகாஷ் ராஜின் 'சொல்லாததும் உண்மை’ மனதை வெளியே எடுத்துவைத்து காட்சிப்படுத்திய தொடர். நாஞ்சில் நாடன், வண்ணதாசன், சுகா எழுதிய தொடர்கள் மிக உன்னத மானவை. வாழ்க்கையின் மதிப்பீட்டை, நமக்கு சொல்லித் தந்தவை. இப்போது நான் விகடன் எடுத்ததும் ராஜுமுருகனின் 'வட்டியும் முதலும்’தான் படிக்கத் தொடங்குகிறேன். படித்துவிட்டு அதை அதன் தீவிரத்தோடு ஜீரணித்துக்கொண்டு அடுத்த பக்கத்தைப் புரட்ட அரை மணி நேரமாவது ஆகிறது. வாழ்க் கையை இப்படி ரத்தமும் சதையுமாகக் காட்சிக்கு வைக்க முடியுமா? அப்படி முடிகிறபோது அது எவ்வளவு பெரிய கொடுப்பினை என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பிற நல்ல படைப்புகளைப் பார்க்கும்போது நான் உணர்வது, இதை நான் எழுதவில்லையே என்ற ஏக்கம். ராஜுமுருகனின் எழுத்தைப் படிக்கும்போது நான் அவ்விதமே உணர்கிறேன்.

நானும் விகடனும்!

'சொல்வனம்’ என்னை ரொம்பவும் பாதித்து இருக்கிறது. நிறையக் கவிதைகள் காட்சிப் படிமங்களாகி மனதை அள்ளு கின்றன. சாமானியர்கள் கவிதை எழுதுகிற அழகு பிரபல கவிஞர்களுக்கான சவால்! விகடனின் பெருமை அதன் நிருபர்கள். அவர்கள் கட்டுரைகளும் எழுதுவார்கள். திடீரெனக் கதைகளுக்கும் தாவுவார்கள். பாரதி தம்பி எழுதிய திருநங்கைபற்றிய கதை ஒன்றை இரவில் படித்துவிட்டுத் தூக்கம் இன்றித் தவித்தேன். மிகவும் தர்மசங்கடமான கதை அது. ஒரு சொல் மாறி விழுந்தால், அர்த்தம் அனர்த்தமாகிவிடும். உடனே விகடனுக்குத் தொலைபேசி, அவரைப் பாராட்டிய பிறகுதான் மனது அமைதியானது. சினிமாவோ, நகைச் சுவையோ, கூடங்குளம் அணு உலை பாதிப்புகளோ... விகடனின் பக்கங்களில் அதன் சுவாரஸ்யமும் தீவிரமும் குறை யாமல் இடம்பெறும். இலங்கைப் போரின் இறுதியும் அது தொடர்பாக விகடனில் இடம்பெற்ற ஒவ்வொரு வரியும் துயரமும் வேதனையும் தொனிக்கும் தமிழக மக்களின் மனக்கொதிப்பு!

விகடன் 1940-களிலேயே தமிழ் அகராதியை வெளியிட்டு இருக்கிறது. இப்போது பிரிட்டானிகாவை வெளியிட்டு இருக்கிறார்கள். அது தமிழர் ஒவ்வொரு வரின் வீட்டிலும் இருந்தால் நமக்குப் பெருமை. விகடன் சினிமாவுக்கு மட்டும் தான் மார்க் போடுகிறது. விகடனின் மாறாத தரத்துக்கும் தமிழர்களின் மேலான அக்கறைக்கும் ஈடுபாட்டுக்கும் உண்மைக் கும் சேர்த்து நான் விகடனுக்குப் போடுகிற மார்க்... 100/100.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு