Published:Updated:

``என்னைப் போல 98 வயசு தாண்டி வாழணுமா... நான் சொல்றபடி சாப்பிடுங்க!" - கரூர் ரெங்கசாமி

98 வயது... நோ சுகர்... நோ பி.பி..! அதிசயிக்கவைக்கும் கரூர் `மிஸ்டர் ஏஜ்டு மேன்’ ரெங்கசாமி!

``என்னைப் போல 98 வயசு தாண்டி வாழணுமா... நான் சொல்றபடி சாப்பிடுங்க!" - கரூர் ரெங்கசாமி
``என்னைப் போல 98 வயசு தாண்டி வாழணுமா... நான் சொல்றபடி சாப்பிடுங்க!" - கரூர் ரெங்கசாமி

ன்று, 40 வயது ஆனாலே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயப் பிரச்னை எல்லாம் வந்துவிடுகிறது. காரணம், வாழ்க்கைமுறை... உடலுக்கு எது உவப்பாக இருக்கும் என்று பார்க்காமல், நாவுக்கு எது ருசியாக இருக்கும் என்று பார்த்து, துரித உணவுகளைச் சாப்பிடுவது... துரித உணவுகள் துரிதமாக நோய்களை உடம்பில் அப்பிவிடுகின்றன. இப்படியான சூழலில், ஆங்காங்கே சிலர் நம்பிக்கையூட்டும் மனிதர்களாக நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வழிகாட்டுகிறார்கள். அப்படியான ஒரு மனிதர்தான் ரெங்கசாமி. 

98 வயதிலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பார்வைக் குறைவு போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் ரெங்கசாமி. அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர். மாடு மேய்ப்பது, வயலில் தண்ணீர் பாய்ச்சுவது, தென்னை ஓலையில் விளக்குமாறு தயாரித்து விற்பது என்று மனிதர் எப்போதும் உற்சாகமாக வலம் வருகிறார். ``ஓய்வறியா உழைப்பும் பழைய சோறும், கேழ்வரகு, கம்பு, தினையில் செய்யப்படும் உணவுகளும்தான் எனது ஆரோக்கியத்துக்குக் காரணம்" என்றுகூறி, நமக்கும் எனர்ஜி ஏற்றுகிறார். ஒரு மகனும் ஒரு மகளும் இறந்துவிட்டார்கள். பேரன்கள், கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் எனச் சுற்றம் சூழ மகிழ்ச்சியாக இருக்கிறார் ரெங்கசாமி. 

மாடுகளை அவிழ்த்து, தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த ரெங்கசாமியிடம் பேசினேன். அவரின் உறவினர் பலர் வந்திருந்தனர். 30 வயதிலேயே நம்மவர்கள் இனிப்புகளைத் தவிர்க்கும் காலத்தில், இந்த வயதிலும் தன் உறவினர்கள் வாங்கி வந்த இனிப்புகளை ஒரு பிடி பிடிக்கிறார் ரெங்கசாமி. சிறிதும் தடுமாற்றம் இல்லாமல் சாப்பிடுகிறார். கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கிறார். இரண்டு பற்கள் மட்டும் உதிர்ந்திருக்கின்றன. வார்த்தைகளில் சிறிதும் தடுமாற்றம் இல்லை. 

 ``நான் 1908-ம் வருடம் பொறந்தேன் தம்பி... ஆனா அதுக்கு எந்த ரெக்கார்டும் இல்லை. ஆதார் கார்டுல 1920-ல பெறந்ததா போட்டுக் கொடுத்திருக்காக. எங்க மாவட்டத்துல கலெக்டரா இருந்த கோவிந்தராஜன் ஐயா, `மாவட்டத்திலேயே மூத்த மனிதர்'ன்னு பாராட்டி சால்வையெல்லாம் போத்தினார். வீட்டுல பெரிய வசதி இல்லை... ஆனா, காடு கரை, ஆடு மாடு, கோழின்னு வீடே நிறைஞ்சுகிடக்கும். நான் அதிகம் படிக்கலை... எங்கப்பா பார்த்த விவசாயத்தையும் ஆடு மாடுகளையும் பாத்துக்கிட்டேன். சின்ன வயதிலிருந்தே ஆட்டுப்பால் குடிச்சு வளர்ந்த ஆளு நான். பழைய சாதம் ரொம்பப் பிடிக்கும். காலையில அதைத்தான் சாப்பிடுவேன். கம்பு, கேழ்வரகுன்னு நான் சாப்பிட்ட உணவுகள்தான், என் உடலை இன்னமும் வலுவா வச்சுருக்கு. நல்லா வேலை செய்வேன். எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் மனசுக்குள்ளே வச்சு, புழுங்கிக்கிட்டு இருக்க மாட்டேன். 'பூ..'ன்னு ஊதி, கொல்லைப்பக்கம் தள்ளிட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போயிருவேன். இதெல்லாம் சேர்ந்துதான் என்னை ஆரோக்கியமா வச்சுருக்கு. 

5 வருஷங்களுக்கு முன்புவரைக்கும் நானே வரப்பு வெட்டுவேன்; நாத்து பறிப்பேன்; கிணறு வெட்டுவேன். இப்போ கஷ்டமான வேலைகளைக் கொஞ்சம் குறைச்சுகிட்டேன். ஆனா மாடு மேய்க்கிறது, தென்னை ஓலையில விளக்குமாறு தயாரித்து விற்கிறது, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுன்னு இந்தக் கட்டைக்கு அன்னாடம் வேலை கொடுத்துக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, என்மகள் லட்சுமி என்னை வேலை செய்ய வேண்டாம்ன்னு தடுக்கிறா. ஓடுற காட்டாத்தை அணைகட்டி தடுக்கிற மாதிரிதான் என்னை வேலை பார்க்க விடாம தடுக்கிறதும். மூச்சு நிக்கிற வரைக்கும் இந்தத் திரேகத்துக்கு வேலை கொடுத்துக்கிட்டே இருக்கணும் தம்பி. அப்படி ஓடி ஓடி உழைச்சதாலதான் இந்த உடம்பு வைரம் பாய்ஞ்ச கட்டையா மாறிக்கிடக்கு. பெரிய வியாதின்னு எதுவும் இந்த வயசு வரைக்கும் வந்ததில்லை. காய்ச்சல், தலைவலின்னுகூட சுருண்டு படுத்ததில்லை. 

எனக்கு கந்தசாமி , ராமலிங்கமுன்னு ரெண்டு பசங்க. பார்வதி, லட்சுமின்னு ரெண்டு பொண்ணுங்க. என் பொண்டாட்டி பவளாயி 25 வருஷத்துக்கு முன்னாடி போய்ச் சேந்துட்டா. என் மூத்த மகனும் மகளும், சாமிககிட்டப் போய்ச் சேந்துட்டாக. இப்போ நான்,  இளைய மகள் லட்சுமி வீட்டுலதான் வசிக்கிறேன்.  பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்னு 12 புள்ளைக இருக்குதுக. நான்கு தலைமுறை ஆட்களை பார்த்துட்டேன். பேரன், பேத்திகள் என்கிட்ட கதைகள் கேட்க வருவாங்க. அவங்களுக்கு உடல் உழைப்பைப் பற்றிய கதைகளையும், நல்ல உணவுப் பத்தின கதைகளையும் சொல்லுவேன். 'என்னைப் போல நீண்ட நாள்  நீங்களும் வாழணும்ன்னா, நான் சொல்றபடி சாப்பிடுங்க; சொல்ற சாப்பாட்டை சாப்புடுங்க'ன்னு சொல்வேன். 

'உங்க  ஆரோக்கியத்தோட ரகசியம் என்ன?'ன்னு கேட்டு  பலபேர் வருவாங்க. 'நல்ல உணவு, நல்ல உழைப்பு, நல்ல மனசு, நல்ல சூழ்நிலை, நல்ல உறக்கம்.. .இதெல்லாம்தான் என் ஆரோக்கியத்தோட ரகசியம்'ன்னு அவங்ககிட்ட சொல்லி, அனுப்புவேன். ‘உழைக்க அலுப்புப்பட்டா, நோய்களுக்கு வெத்தலை பாக்கு வைக்கிறோம்'ன்னு அர்த்தம்..." - தீர்க்கமாகப் பேசுகிறார் ரெங்கசாமி. 

 "அப்பா இப்பவும் அசைவம் சாப்பிடுவார். செரிமானம் ஆயிடும். ஆனா, அதிகமா தர மாட்டோம். மத்தபடி ஸ்வீட், காரம்ன்னு வெளுத்து வாங்குவார். இட்லி, தோசையும் விரும்பிச் சாப்பிடுவார். வஞ்சனை இல்லாத மனசு  அவருக்கு. கல்லைத் தின்னாலும் செரிச்சுடும். நாங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காம வயல் வேலைக்குப் போவார். கம்பு மட்டும் ஊன்றி, வேகமா நடப்பார். ஆனா, நடை தளர்ந்துடலை..."  பூரிப்பாகச் சொல்கிறார்கள் ரெங்கசாமியின் மகன் ராமலிங்கமும், மகள் லட்சுமியும்.