Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

டைரி எழுதும் பழக்கம் உண்டு சின்னப் பாண்டிக்கு; ஆனால் அன்றாடம் அன்று. எப்போதெல்லாம் வலிக்கிறதோ அப்போதெல்லாம்.

 அன்று வலித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு கவலை மேகம் மனசில் மையமிட்டது; கண்ணின் ஓரம் சிறுசாரல் தூறியது. எழுதென்று சொன்னது பொறி ஐந்திலும் பற்றிய பொறியன்று.

எழுதினான்.

''விவசாயக் குடும்பத்தில் பட்டதாரியாகத் துடிக்கும் எல்லா இளைஞனுக்கும் ஏறக்குறைய என் நிலைதான்; என் வலிதான்.

மலையிலிருந்து விறகு சுமந்து இறங்கும் ஒரு கர்ப்பிணியைப் போல இரு பாரங்களோடு பயணிக்கிறேன் நான்.

முதுகில் குடும்பம் என்னும் நிகழ்காலம்;

நெஞ்சில் லட்சியம் என்னும் எதிர்காலம்.

குறுவிவசாயக் குடும்பத்தில் பிறந்த எல்லா இந்திய இளைஞனுக்கும் உறவுகளும் கட்டமைப்புகளும் சற்றொப்ப ஒன்றுதான். எனது கட்டமைப்பு இன்னும் கொஞ்சம் சிக்கலானது என்று சொல்லலாம்.

செத்துச் செத்துப் பிழைக்கும் ஒரு தகப்பன்; செத்தும் சாகாத ஒரு பெரியப்பன். குடும்பத்தை ஏற்றுக்கொள்வதற்காக வாழ்க் கையைப் புறம் தள்ளிய ஒரு தாய்.

குடும்பத்தின் படித்த சுரண்டல்காரனாய் ஓர் அண்ணன்; நாற்று நடப்போகிறவள் 'ஷூ’ அணிந்துகொள்ள ஆசைப்படுவதைப் போல, கிராமத்துக்குள் நகர வாழ்க்கை வாழ ஆசைப்படும் அண்ணி.

கிராமத்தோடும் சேர முடியாமல் - நகரத்தோடும் வாழ முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் ஏதுமறியாக் குழந்தைகள்.

மூன்றாம் உலகப் போர்

உள்ளங்கை மாதிரி நிலம்; அதில் சரிபாதி அரிவாள்வெட்டு.

உழக்கு மாதிரி ஒரு வீடு; இன்று உழக் குக்குள் ஒரு சுவர்.

பிரதானச் சாலையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பிரிந்து நிற்கும் ஒரு கிராமம்.

சாராயத்திலும் தொலைக்காட்சியிலும் இலவசத்திலும் கிறங்கிக்கிடக்கும் கிராமத்து மக்கள்.

எல்லாமறிந்தும் ஏதொன்றும் செய்யஇயலாமலும் ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை யிலும் நான்.

என்னை மட்டும் இப்படிச் சபித்துவிட்டாயே கடவுளே என்று விசனப்படும் இளைஞன் விவரமில்லாதவன். கடவுள் சமத்துவக்காரர்; குறு, சிறு விவசாயிகளைஎல்லாம் அவர் வறுமை என்னும் ஒரே அச்சில்தான் வார்த்திருக்கிறார்.

அதனால் மனமே துன்புறாதே; துயரச் சமுத்திரத்தில் நீயும் ஒரு துளி.

ரு விவசாயிக்கு நிலம் என்பது நிலம் மட்டுமல்ல; அடையாளம்; பிடிமானம். ஒரு மனிதனை ஓர் ஊரில் இருத்திவைக்கும் வேர்.

அதனால்தான் கடன் கட்டி நிலம் மீட்பது என் தந்தையின் தீராத கனவாய் நீள்கிறது. ஆனால் அந்தக் கனவின் நிறைவேற்றம் அவர் கையில் மட்டுமா இருக்கிறது?

ஏழைகளைச் சுரண்டும் வர்த்தக நிறுவ னங்களின் கையிலிருக்கிறது. வல்லரசுகளிடம் ஏமாந்துபோகும் இந்தியாவின் கையிலிருக்கிறது. பூமியை ஏமாற்றும் வானத்தின் கையிலிருக்கிறது. ஆங்கிலக் கட்டுரையில் அமெரிக்கப் பெண்ணொருத்தி எமிலி சொன்னதுபோல் ஐ.நா. சபையின் கையில்கூட இருக்கிறது.

என் தந்தை பாவம்!

தேசத்துக்குள் போய்விடுகிறேன் என் தந்தையை நினைத்தால்;

தந்தைக்குள் போய்விடுகிறேன் என் தேசத்தை நினைத்தால்.

60 கோடி இந்திய விவசாயிகள் என்ற நீளச் சங்கிலியில் என் தந்தையும் ஒரு கண்ணி. இந்த ஒரு கண்ணிக்கு மட்டும் தங்க முலாம் பூசுவது சாத்தியமா?

சமூக அடுக்குகள் சரிகின்றன.

எங்கள் நிலங்களைச் சூழ்ந்திருந்த பல விவசாயிகள் தங்கள் பூமியை விற்றுவிட்டுப் போய்விட்டார்கள். 'கார்ப்பொரேட்’ நிறுவனங்கள் என்னும் நிலங்கொத்திப் பறவைகள் இன்னும் எத்தனை நாளைக்குக் கொத்தாமல் விட்டுவைக்கும் எங்கள் குறுந்தோட்டத்தை?

விழி பிதுங்குகிறது விவசாயம்.

வேறெந்த வேலைக்கும் தான் லாயக்கு இல்லை என்று முடிவெடுத்தவன் மட்டுமே விடாமல் பிடித்து வைத்திருக்கிறான் விவசாயத்தை.

கடன் வாங்கிக்கூட விவசாயம் பார்க்கலாம் இன்றைக்கு. ஆனால் எங்கு போய்த் தேடுவது வேலைக்கு ஆட்களை?

இன்று களையெடுக்கும் மூதாட்டிதான் கடைசித் தலைமுறை; இன்று கலப்பை பிடிப்பவன்தான் கடைசி மனிதன். விவசாயத்தை விட்டு வெளியேறுகிறான் படித்தவன். அவனுக்கு விவசாயம் என்பது அழுக்கு அல்லது இழுக்கு அல்லது இழப்பு.

மூன்றாம் உலகப் போர்

ஊர்கூடிப் பாடுகிற கூட்டுப் பாட்டு அல்லவோ விவசாயம்? ஊருக்குத்தான் ஜாதிபேதம் உண்டு; நிலத்துக்கில்லை. சகல ஜாதிக்காரர்களும் ஒரே நேரத்தில் உழுது நட்டுக் கும்மியடிப்பார்கள். ஊர் நிலத்தில் வெளியூர் ஆட்கள் வேலை செய்யக் கூடாது என்பது எழுதப்படாத விதி. வெளியூர்க்காரர்களுக்கு அனுமதியில்லை; இன்று உள்ளூர் ஆட்களோ கிடைப்பதில்லை.

பாத்தி கட்ட ஆள் தேடி அரசமரத்தடி மந்தையில் அலைகிறார் என் தந்தை. முன்பெல்லாம் விவசாய வேலை வாய்ப்புக்கு அங்கே ஒரு கூட்டம் கூடி நிற்கும். இப்போது வீடுகளை நிராகரித்த குழந்தைகளும், வீடுகளால் நிராகரிக்கப்பட்ட முதியவர்களும் தவிர மந்தையில் யாரும்இல்லை. ஓராசிரியர் பள்ளி மாதிரி ஓரேர் உழவனாய் நிலம் கிழிக்கிறார் என் தந்தை. இதில் கரும்பு விளையும் - கஜானா வழியும் - கடன் கழியும் - பத்திரம் மீளும் - பரம்பரை வாழும் என்றெல்லாம் வேறு கனவு காண்கிறார்.

ழைத்த தலைமுறை உளுத்த தலைமுறையாக்கப்பட்டுவிட்டது.

துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை உறிஞ்சிவிட்டது.

இலவசத்தில் வாழப் பழகியவர்கள் மதுரசத்தில் மூழ்கிப்போனார்கள்.

உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக் கும், கைவிடப்பட்ட முதியவர்களுக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நோயாளிகளுக்கும்தானே இலவசம் பொருந்தும்!

உற்பத்தி பெருக்காத இலவசம் உற்பாதம்தானே விளைக்கும்?

துக்கடை வாசல்களில் தவணை முறையில் செத்துக்கொண்டிருக்கிறார்கள் பல விவசாயத் தொழிலாளிகள்.

மது என்பது உலகக் கலாசாரம்தான்; ஒழிக்க முடியாதுதான்; மனித சமுதாயத்தின் பழம் பானம்தான்.

ஆனால் அருந்துபவனுக்கும் அருந்தப் படுவதற்குமான இடைவெளியில் இருக்கிறது மதுவின் நன்மை தீமை.

பெரும்பாலும் மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களை மது அருந்துகிறது.

மேல்தட்டு மக்களின் உபரிப் பணத்தில் கை வைக்கும் மது, அடித்தட்டு மக்களின் உணவுப் பணத்திலேயே கை வைக்கிறது.

இந்த டயரி எழுதப்படும் இந்த ஆண்டில் ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் 3,000 ரூபாய். ஆனால் அதே குடும்பம் மதுவுக்குச் செலவிடுவது 12,000 ரூபாய்.

தங்களுக்கெதிராய் இந்தியர்கள் கத்திஏந்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள். தங்கள் கேளிக்கை விடுதிகளில்கூட இந்தி யர்களை அனுமதித்தார்கள். புட்டிக்குள் அடக்கிவைத்திருந்தார்கள் தங்களுக்கு எதிரான பூதத்தை. ஜனநாயக இந்தியாவி லும் போராடுவதற்குக் காரணங்கள் இருக் கின்றன. ஆனால் பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே இருக்கிறது.

திண்ணென்ற உடல் - தெளிந்த மனம் - தொலைநோக்குச் சிந்தனை - தொடர்ந்த உழைப்பு இவைகளின் கூட்டுவினைதான் ஒரு வெற்றிச் சமுதாயம்.

அவ்வாறாயின் -

மூன்றாம் உலகப் போர்

திண்ணென்ற உடலுக்கு உணவெங்கே? புரதமும் ஊட்டமுமிக்க தமிழர்களின் புஞ்சைத் தானியங்கள் எங்கே?

பருவம் நீதி வழுவாதிருந்தால் ஆண்டுக்கு 100 நாள் மட்டுமே மழைவளம் காணும் தமிழ்நாட்டில், மானாவாரியாய் விளைந்த தமிழர்களின் ஆதி உணவு எங்கே?

தேனும் தினைமாவும் கொண்ட என் தாத்தன் காலொடிந்த கன்றைத் தோளில் தூக்கித் தொலைதூரம் நடந்தான்.

சாமையும் வரகரிசியும் கொண்ட என் தகப்பன் அவித்த நெல் மூட்டையைக் கையில் கசக்கி அரிசியாக்கினான்.

வீட்டில் தோசையும் வெளியில் பீட்ஸாவும் தின்னும் நான் கோட்டார்பட்டி மேட்டில் சைக்கிள் மிதிக்கவும் சக்தியற்றுப் போனேன்.

மொச்சையும், துவரையும், கொள்ளும், கல்லுப்பயறும் உண்டு ஊட்டம் பெற்ற ஒரு பரம்பரையில் 46 விழுக்காட்டுக் குழந்தைகள், சத்துணவின்மையால் வயதுக்கேற்ற வளர்ச்சியடையவில்லை என்று வெட்கப்படாத புள்ளிவிவரம் வருத்தத்தோடு சொல்கிறது.

உலகத்தின் 30 விழுக்காட்டுச் செல்வம் கொட்டிக்கிடக்கிற பூமியென்று படையெடுப்பாளர்களால் நம்பப்பட்ட நாடு, இன்று ரேஷன் கடையின் பொருட்களைப் போலவே அதன் வாசலில் எடை குறைந்து நிற்கிறது.

மாறும்;  

எதுவும் மாறும்.

மாறுதல் ஒன்றே ஜீவிதம்;

உயிர்ப்பின் அடையாளம்.

ஆனால் முன்னேற்றத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும் மாறுதல்.

குரங்கிலிருந்து மனிதன் குதித்தது மாறுதல்; கூட்டுப் புழுவிலிருந்து பட்டுப் பூச்சி பறப்பது மாறுதல்; கல் சிற்பமாவது மாறுதல். சிற்பம் உடைந்து கல்லாவதல்ல மாறுதல்.

நான் பார்த்த பழைய கிராமம் இன்று இல்லை.

மாறிப் போனது வாழ்க்கை முறையும்.

அன்று பெண்கள் காலை ஐந்து மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறினால் 'வயலுக்கு’ என்று அர்த்தம். இன்று பெண்கள் மாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் 'வாக்கிங்’ என்று அர்த்தம்.

அன்று எங்கள் கிராமத்துப் பெண்கள் யாரும் 'வாக்கிங்’ போனதில்லை.

காடுகளிலும் கழனிகளிலும் களங்களிலும் வீட்டில் உலக்கை குத்துவதிலும் ஈடுபட்ட பெண்கள் பலருக்கும் தொப்பைஇல்லை. தென்னை மரத்துக்கேது வயிறு? அப்படியிருப்பார்கள் அவர்கள்.

புதைக்கும்போது பார்த்திருக்கிறேன்; உயிரற்ற உடல்களில்கூட உப்பிய வயிறு பார்த்ததில்லை. அன்று எங்கள் பெண்களுக்குத் தொழிலே உடற்பயிற்சியாய் இருந்ததுபோய் - இன்று உடற்பயிற்சியே ஒரு தொழிலாகிவிட்டது.

விவசாயம் இனி எந்திரங்களின் கைகளில் சேரப்போகிறது; அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாறப்போகிறது.

என் அப்பனே கருத்தமாயி!

எந்திரம் வாங்க உன்னிடம் பணமில்லை. இன்னொரு கடன்பட்டு வாங்கினாலும் எந்திரப் பசிக்கு உன்னிடம் நிலமில்லை.

40 ஆண்டுகளில் தொழிற்சாலைத் தயாரிப்புகளின் விலை 40 மடங்கு கூடி இருக்கிறது. விளைபொருளின் விலை கூடவில்லையே அந்த விகிதத்தில்!

400 மூட்டை நெல் விற்றால் ஒரு டிராக்டர் வாங்கலாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று ஒரு டிராக்டர் வாங்க 1,200 மூட்டை நெல் விற்க வேண்டும்.

விலைவாசிக்கேற்ப வளர்ந்துள்ளானா விவசாயி?

டந்த 20 ஆண்டுகளில் விளைநிலம் சுருங்கி வருகிறது. விவசாயம் அருகி வருகிறது. உற்பத்தி குறைந்துவருகிறது.

இந்த நிலை இப்படியே நீடித்தால் சாப்பிடுவதற்கு உணவில்லாமற் போகும் அபாயம் கூப்பிடு தூரத்திலிருக்கிறது.

2050-ல் தங்கம் இருக்கும் ஒவ்வொரு கையிலும்; தக்காளி இருக்காது.

பெட்டி இருக்கும் பணம் சுமந்து;

ரொட்டி இருக்காது.

உணவு மாத்திரை விற்கும் சர்வதேசப் பெட்டிக்கடைகள் வீதிகள்தோறும் விளங்க லாம்.

விழித்துக்கொள்ள வேண்டாமா?

வழி நடத்துமா மூத்த தலைமுறை?

வழி நடக்குமா இளைய தலைமுறை?

காலத்தின் தேவையை எவர் உணர்வார்?

தேசத்தின் வெறுமையை யார் நிரப்புவார்?

நாசாவில் நாற்காலி தயாரித்துவிட்டுத்தான் இந்தியாவில் ஒருவர் விஞ்ஞானியாக விழைகிறார்.

மஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து மதுரைக்குப் படிக்கச் செல்லும் ஒரு பொறியியல் மாணவனின் அடுத்த இலக்கு 'மைக்ரோ சாஃப்ட்’தான்.

கிராமம் என்ற கலங்கிய குட்டையிலிருந்து ஆவியாகிப்போகிறவன் மீண்டும் மழையாய் வர விரும்புவது பிறந்த பூமிக்கல்ல; தூரதேசத்துக்குத்தான். குட்டை இருக்கிறது குட்டையாகவே; இன்னும் இன்னும் கலங்கலாகவே.

ஆந்திரத்திலும் பீகாரிலும் கர்நாடகத்திலும் மராட்டியத்திலும் மேற்கு வங்கத்தி லும் கருத்தமாயிகள் கருத்தமாயிகளாகவே, வேறு வேறு உடல்களோடு; பெயர்களோடு.

இரண்டு பணிகள் உள்ளன இந்தியாவுக்கு.

விவசாயத்தை மீட்டெடுத்தல் - அல்லது விவசாயத்திலிருந்து விவசாயிகளை

மீட்டெடுத்தல்.

எனக்குள் ஒரு நெருப்பு இருக்கிறது, எனக்கு மட்டும் கேட்கும் சப்தத்தில் அது உள்ளிருந்து எரிந்துகொண்டேயிருக்கிறது.

இளவயதில் யாருக்குத்தான் இல்லை அந்த நெருப்பு? பல பேருக்குப் பாதியிலேயே அணைந்துவிடுகிறது. பல பேர் அந்த நெருப்பிலேயே எரிந்துபோகிறார்கள்.

எனக்குள் இருக்கும் நெருப்பைக் காலம் அணைத்துவிடுமோ அல்லது அது என்னை எரித்துவிடுமோ எவர் கண்டார்? ஆயினும் நான் அதை அணையவிடேன். ஏனெனில் இது அணையும் நெருப்பும் அல்ல; எரிக்கும் நெருப்பும் அல்ல; இன்னொன்றை ஏற்றும் நெருப்பு.

நெருப்பே இரு

நீறாகாதிரு.''

இறங்கியது பாரம்.

எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்தான்; திருத்தினான். அப்போதைக்கு அவனால் திருத்த முடிந்தது எழுத்துப் பிழைகளை மட்டும்தான்.

ருத்தமாயிக்கு ரெண்டுநாளாத் தடுமன்; தண்ணியா ஒழுகுது மூக்குவழி.

கைப்பிள்ளைக்குச் சுடவச்ச பால் பதத் துல லேசாச் சுடுது உடம்பு.

பகல்ல ஒரு நாளும் அவரு அப்படிப் படுத்ததில்லை.

தல மாட்டுல கஞ்சியும் கடுங்காப்பியும் வச்சுட்டு, வெள்ளாட்டுக்கு அகத்திக்கீரை கட்டிவிட்டுட்டு, பசு மாட்டக் கையில புடிச்சுத் தோட்டத்துக்குக் களை எடுக்கப் போயிட்டா சிட்டம்மா.

அண்ணன் சுழியன் 'லொங்கு லொங்கு’னு இரும, அவரு இருமி முடிக்க - காக்கா கத்த - காக்கா கத்தி முடிக்க - இவரு இரும - இப்படி மாறி மாறி நடக்குது காக்கா மனுசன் கச்சேரி.

''காக்கா கத்துனா விருந்தாளுக வருவா கனு சொல்லுவாக. விருந்தாளுகள வாங்கன்னு சொல்ற பக்குவத்துலயா நாங்க இருக்கோம்? ஏ காக்கா! மரியாதி கெட்டுப்போயிரும்; பேசாமப் போயிரு.''

காக்கா போயிருச்சு. ஆனா அவரு நெனச்ச மாதிரியே வந்தாச்சு ஒரு ஆளு. விருந்தாளு இல்ல; வேற ஆளு.

- மூளும்