நலம் தரும் வாழை

முக்கனிகளில் ஒன்றான வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடரும் பந்தம். உலகின் மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று வாழை. நமது செரிமான மண்டலத்தைக் காத்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த உணவு. வாழையின், பூ, காய், பழம், தண்டு, இலை, நார் என அனைத்துப் பகுதிகளுமே பயன்படக்கூடியவை. வாழைப்பழத்தில் என்னென்ன வகைகள், அவற்றின் பலன்கள் போன்றவற்றை விளக்குகிறார் சித்த மருத்துவர் ரமேஷ். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த வாழை ரெசிப்பிகளைச் செய்துகாட்டுகிறார் சமையல்கலை நிபுணர் புஷ்பலதா.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்...

பொதுவாக, எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளன. அதிக அளவில் மாவுச்சத்து உள்ளது. சுக்ரோஸ், ஃபிரக்டோஸ், குளுக்கோஸ் எனும் மூன்று வகையான இனிப்புகளையும் இயற்கையாகவே கொண்டுள்ளது வாழைப்பழம்.

வாழைப்பழத்தைத் யார் தவிர்க்க வேண்டும்?

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு நாளுக்குத் தேவையான கலோரி அளவைக் கணக்கிட்டு, அதனைச் சமன்செய்யும் விதத்தில் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை.

90 நிமிட உடற்பயிற்சியில் செலவாகும் ஆற்றலை இரண்டு பெரிய வாழைப்பழங்களின் மூலம் திரும்பப் பெற்றுவிட முடியும்.

*வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து ரத்தசோகையைப் போக்கும்.

*ஆப்பிளைவிட ஐந்து மடங்கு அதிக வைட்டமின் ஏ, நான்கு மடங்கு அதிகப் புரதச்சத்து, மூன்று மடங்கு அதிக பாஸ்பரஸ், இரண்டு மடங்கு அதிக மாவுச்சத்துக்களை கொண்டது வாழைப்பழம்.

*வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் இருக்காது.

*வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

வாழைப்பூ

*வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால், வயிற்றுக்கடுப்பு, அல்சர் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

*கொழுப்புச்சத்து இல்லை. நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

*வைட்டமின் பி நிறைந்திருப்பதால், கர்ப்பப்பைக்கு பலம் அளிக்கும். மாதவிலக்குக் காலங்களில் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடல் அசதி, வயிற்றுவலியைக் குறைக்கும்.

*பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ ஒரு சிறந்த உணவு.

*ரத்தசோகையைக் குணப்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

*உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப் பருப்பைச் சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால், உடல் வெப்பம் குறையும்.

வாழைத்தண்டு

*வாழைத்தண்டு குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறைப் போக்கும்.

*சிறுநீரகத்தில் உண்டாகும் கல் அடைப்புகளை நீக்கி, சிறுநீரகத்தைச் சீராகச் செயல்பட வைக்கும்.

*கல்லீரலைப் பலப்படுத்தும்; சருமத்தைப் பாதுகாக்கும்.

*உடலில் உள்ள தேவையற்ற ஊளைச் சதையையும் கொழுப்பையும் குறைக்கும்.

*உடல்பருமனைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும்.

*நரம்புச் சோர்வை நீக்கும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

*வறட்டு இருமல் நீங்கும் வரை, வாழைத்தண்டுச் சாற்றை குடிக்கலாம்.

வாழைக்காய்

*வாழைக்காயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

*மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டாலே, உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

*உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், அளவோடு வாழைக்காய் எடுத்துக்கொள்ளலாம்.

*மூட்டுவலி உள்ளவர்கள், வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழை இலை

*வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. வாழை இலையில் உணவை வைத்துச் சாப்பிட்டால், ஸ்டார்ச் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

*வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது, வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடலில் சேர்கின்றன.

*வாழை இலையில் பாலிபினால் இருப்பதால், நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது.

செவ்வாழை

*செவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன.

*செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.

*பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும்.

*தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும்.

*நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும்.

ரஸ்தாலி (ரசகதலி)

*அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.

*பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது.

*ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

*வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம்.

*வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

மொந்தன் வாழை

*மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும்.

*இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும்.

*மொந்தன் வாழைக்காயைச் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் நீங்கும்.

*தினம் ஒன்றோ, இரண்டோ உணவுக்குப் பின் சாப்பிட்டால், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

*சில வகை காமாலையைக் கட்டுப்படுத்தும்.

*இந்தப் பழத்துக்கு `பொந்தன் வாழை’ என இன்னொரு பெயரும் உண்டு.

நாட்டுவாழை

*நாட்டுவாழையின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோலிலும் சத்துக்கள் அதிகம்.

*மலச்சிக்கல், குடல்புண்ணைக் குணப்படுத்தும்.

*மக்னீசியம் அதிகமாக இருப்பதால், உடல்நலம் காக்கும்.

*கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.

*பெண்கள் நாட்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, உடலுக்கு சக்தி பெருகும்.

*மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

*அதிகம் இனிப்புச்சுவை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

மோரீஸ்

*உலக அளவில் அதிக அளவில் விளைவிக்கப்படும், ஏற்றுமதி செய்யப்படும் வாழை வகை இது.

*ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். குடல்புண் வராமல் தடுக்கும்.

*மோரீஸ் வாழைப்பழத்தில் உள்ள குளுக்கோஸ், உடலுக்குப் புத்துணர்வு அளிக்கிறது.

*அதிகமாக எடுத்துக்கொண்டால், சளியை உண்டாக்கக்கூடியது.

*அதிக இனிப்புத்தன்மை உடையதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

கதலி

*கதலியில், `நெய்க் கதலி’ என்றொரு வகையும் உள்ளது.

*நெய்க் கதலி மலைப்பகுதிகளில் அதிகம் விளையும். அதிக இனிப்புச்சுவை உடையது. மாவுச்சத்து அதிகம் என்பதால், குழந்தைகள் உடல் வளர்ச்சி பெற உதவும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தசோகை பிரச்னை உடையவர்கள் சாப்பிட்டுவந்தால், ரத்தம் பெருகும்.

*மலச்சிக்கலைத் தீர்க்கும். குடல்புண்ணைக் குணப்படுத்தும்.

*சித்தமருத்துவ மருந்துகளுக்கு அதிகம் பயன்படுகிறது.

*பெண்களின் உடல்நலம், மாதவிடாய் பிரச்னைகள், உடல் சூடு ஆகியவற்றைப் போக்கும்.

பேயன்

*கடினமான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். இதன் தோலிலும் சத்துக்கள் அதிகம்.

*அதிக உடல் வெப்பத்தை பேயன்பழம் சாப்பிடுவதன் மூலம் சமன்படுத்தலாம்.

*குழந்தைகளுக்கு ஏற்படும் கணையச்சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது.

*உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடையை அதிகரிக்கும்.

*மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

*மாவுச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது.

*குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலில் சளியைக் கோத்து நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.

மலை வாழை

*வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.

*நல்ல ருசியும் வாசனையும் கொண்ட பழம். இது, உடலின் வலிமையை அதிகரிக்கும்.

*சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது, மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்தசோகையை நீக்கும். ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் வலுப் பெறும்.

*மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

*இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் அழகு பெறும்.

பூவன் பழம்

*தினசரி உணவு உண்ட பின், பூவன் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.

*தசைகளை வலுவாக்கும்.

*தினமும் பூவன் வாழைப்பழம் உண்டுவர, உடல் சோர்வு, தளர்வு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.

*ஆஸ்துமா, நெஞ்சுச்சளி பிரச்னை, குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் பூவன் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

*இரண்டு நாட்களுக்கு, ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில், பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகள் நீங்கும்.

பச்சை வாழை

*குடல் புண்களை ஆற்றும்.

*குடல் புண் மற்றும் குடலில் பாதிக்கப்பட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து, புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்துக்கு உண்டு.

*உடலின் வெப்பத்தைக் குறைக்கும். குளிர்ச்சியான உடல் உடையவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நேந்திரம்

*குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கப் பயன்படும்.

*உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவது.

*இதயத்தைப் பலப்படுத்தும்.

*இரும்புச்சத்து நிறைவாக உள்ளதால், ரத்த உற்பத்திக்கு உதவும்.

*உடல் மெலிந்தவர்கள் நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை தினசரி சாப்பிட்டுவர, எடை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

நேந்திரம் பழம் மூளையின் செல்களுக்கு வலுவூட்டும் நினைவுத்திறனை மேம்படுத்தும்.

கற்பூர வாழை (நவரை)

*உடல் ஆரோக்கியத்துக்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது.

*தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.

*தலைபாரம், தலைவலி நீங்க உதவுகிறது. சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தரும்.

*வாத உடல்வாகு கொண்டவர்கள், இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழப் பாயசம்

தேவையானவை: வாழைப்பழத் துண்டுகள், பாசிப் பருப்பு - தலா 1 கப், பால் - 1/2 கப், தேங்காய் விழுது - 1/4 கப், வெல்லம் - 3/4 கப், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 2, நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப் பருப்பை குழைய வேகவைத்து, வெல்லம் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்க வேண்டும். பாசிப் பருப்புடன், வதக்கிய வாழைப் பழம், தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை லேசாகக் கிளறிவிடவும். பின், ஏலக்காய், வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: புரதம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும். மலச்சிக்கல் இருக்காது.

வாழை டேட்ஸ் அல்வா

தேவையானவை: வாழைப்பழத் துண்டு, பொடியாக நறுக்கிய பேரீச்சை - தலா 1 கப், வெல்லம், நெய் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு.

செய்முறை: பேரீச்சம் பழம் மற்றும் வாழைப்பழத் துண்டுகளை வாணலியில் போட்டு நன்றாகக் கிளறி எடுத்து, ஆறவைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்து இறுகும் வரை கிளற வேண்டும். இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவிப் பரிமாற வேண்டும்.

பலன்கள்: உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தம் விருத்தியாகும்.

வாழைப்பழ ஓட்ஸ் பான் கேக்

தேவையானவை: கனிந்த வாழைப்பழம் - 1, ஓட்ஸ் - 1 கப், வெல்லம் - 1/2 கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால், தயிர் - தலா 1/4 கப், வென்னிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழம், பால், தயிர், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். அதனுடன், ஓட்ஸ், வென்னிலா எசென்ஸ், வெண்ணெய், நெய் சேர்த்து நன்றாகக் கலக்கும் அளவு அரைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து, சூடான தோசைக் கல்லில் சிறிது சிறிதாக தடிமனாக வார்த்து, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழ ஓட்ஸ் பான் கேக் ரெடி.

பலன்கள்: மாவுச்சத்து அதிகம் இருப்பதால், சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. நன்கு பசி தாங்கும்.

வாழைப்பூ ராகி ரொட்டி

தேவையானவை: வேகவைத்த வாழைப்பூ, ராகி மாவு - தலா 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லி - 1/4 கப், சீரகம், இஞ்சித் துருவல் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ, ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் நீருடன் ஒன்றாகச் சேர்த்து, சப்பாத்தி மாவைவிட சற்றுக் குழைவாகப் பிசைய வேண்டும். ரொட்டிபோல தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைக்க, வாழைப்பூ ராகி ரொட்டி ரெடி.

பலன்கள்: உடலுக்குச் சக்தி அளிக்கும். ராகியுடன் வாழைப்பூ சேரும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைவாகக் கிடைக்கும். நன்கு பசி தாங்கும். செரிமானம் மேம்படும். வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

வாழைப்பூ கட்லெட்

தேவையானவை: வறுத்த அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம் - தலா 1/4 கப், வேகவைத்த வாழைப்பூ, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - தலா 1 கப், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன், கரம் மசாலா, மல்லித் தூள் - தலா 1/2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, வாழைப்பூவை ஒன்றன்பின் ஒன்றாக வதக்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, கெட்டியான பதத்துக்குக் கிளற வேண்டும். அரிசிமாவை உடன் சேர்த்து கிளறி உருண்டை பிடித்து, உலர்ந்த அரிசி மாவில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

பலன்கள்: பித்த நோய் குணமாகும். ரத்தம் விருத்தியாகும். உடலுக்கு வலு சேர்க்கும்.

வாழைப்பூ பிரிஞ்சி

தேவையானவை: சீரகச்சம்பா அரிசி, நறுக்கிய வாழைப்பூ - தலா 1 கப், வெங்காயம், தக்காளி - தலா 1, மிளகாய்த் தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய், பிரிஞ்சி இலை -தலா 1, கொத்தமல்லி, புதினா, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலையைப் பொரிக்க வேண்டும். வெங்காயம், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கிய பின், தயிர், வாழைப்பூ, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து மூன்று விசில் வந்ததும் கொத்தமல்லி தூவி, பரிமாறலாம்.

பலன்கள்: வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதை, தொடர்ந்து உண்டுவந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

வாழைப்பூ அவல் கிச்சடி

தேவையானவை: வேகவைத்த வாழைப்பூ - 1/2 கப், அவல் - 1 கப், நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம் - தலா 1/4 கப், பச்சை மிளகாய், காய்ந்த மிளாய் - தலா 2, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய், எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, வெங்காயம், பீன்ஸ் போட்டு நன்றாக வதக்க வேண்டும். கேரட், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, வேகவைத்த வாழைப்பூ, சுத்தம் செய்து கழுவிய அவல், உப்பு சேர்க்க வேண்டும். அவல் சூடானதும் கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து பரிமாறவும்.

பலன்கள்: செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்திருப்பதால், வளரும் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

வாழைக்காய் ஓட்ஸ் அடை

தேவையானவை: வாழைக்காய் - 1, ஓட்ஸ் - 1 கப், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம் - தலா 1 டீஸ்பூன், மிளகு - 1/4 டீஸ்பூன், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோல் நீக்கி வேகவைத்து மசித்துக்கொள்ள வேண்டும். ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, மசித்த வாழைக்காயுடன் சேர்த்துக் கலக்கவும். சீரகம், மிளகு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். வாழைக்காய், ஓட்ஸ் கலவையுடன் தண்ணீர் சேர்த்து குழைவாகப் பிசைந்து அடைகளாகத் தட்டி, இருபுறமும் சுட்டு எடுத்து, தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

பலன்கள்: ரத்தம் பெருகும். உடல் உறுதியாகும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ஓட்ஸில் உள்ள புரதம், நார்ச்சத்து உடலுக்குக் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் சிறிதளவு சாப்பிடலாம்.

வாழைக்காய் சுகியன்

தேவையானவை: வேகவைத்த வாழைக்காய் - 1, கோதுமை மாவு - 1/2 கப், அரிசி மாவு, தேங்காய்த் துருவல், வெல்லம் - தலா 1/4 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, தோல் நீக்கி மசித்த வாழைக்காய், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கிய பின், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கிளறி ஆறவிடவும். பின், சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் குணமடையும். எப்போதாவது அளவாகச் சாப்பிடலாம்.

வாழைக்காய்த் தோல் பொரியல்

தேவையானவை: நேந்திரம் வாழைத்தோல் - 4, கடுகு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், சிறிய வெங்காயம் - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பில்லை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காய்த் தோலில் உள்ள மேற்புறப் பச்சை நாரை உரித்து, தோல் பகுதியை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, வேகவைத்த வாழைக்காய்த் தோலின் சதை, தேங்காய்த் துருவல் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: ரத்த உற்பத்தியைப் பெருக்கும். உடல் உறுதியாகும். செரிமானம் மேம்படும். வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்தும்.

வாழைப்பழ இலை அப்பம்

தேவையானவை: நேந்திரம் வாழைப்பழம் - 1, பச்சரிசி - 1 கப், வெல்லம் - 3/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1/2 கப், வாழை இலை (சிறிதாக நறுக்கியது) - தேவையான எண்ணிக்கை, உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லம், உப்பு, வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். சூடான வாணலியில் நெய் ஊற்றி, அரைத்த அரிசிக் கலவையைப் போட்டு, நன்றாகக் கெட்டிப்பதம் வரும்வரை கிளற வேண்டும். உருண்டை பிடிக்க ஏதுவாக வந்த பின், சிறிது நேரம் ஆறவிட்டு, சிறு உருண்டைகளாகப் பிடித்து வாழை இலையில் நெய் தடவி, சிறிய அடையாக வைத்து இட்லிச் சட்டியில் வேகவைக்க வேண்டும்.

பலன்கள்: இரும்புச்சத்து, வாழை இலையில் உள்ள சத்துக்கள் கிடைக்கும்.

வாழைப்பழ சூசே

தேவையானவை: அதிகம் பழுக்காத வாழைப்பழம் - 1, வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை, பீனட் பட்டர் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: நிலக்கடலையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். வாழைப்பழத்தைப் பெரிய துண்டுகளாக வெட்டி, பீனட் பட்டரைப் பழத்துண்டுகள் முழுவதும் பரவுமாறு தடவி, அரைத்த நிலக்கடலையில் நன்றாகப் புரட்டி எடுக்க வேண்டும். இதை, மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

பலன்கள்: நார்ச்சத்துக்கள் கிடைக்கும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்.

வாழைப்பழ எள்ளு மிட்டாய்

தேவையானவை: வாழைப்பழத் துண்டு, வறுத்த வெள்ளை எள் - தலா 1 கப், வெல்லம் - 1 1/2 கப், சுக்குத் தூள், ஏலக்காய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து, அதில் வாழைப்பழம் சேர்த்து இளகும் வரை கிண்டவும். ஓரங்களில் நுரை நுரையாக இறுகி வரும்போது, எள், சுக்கு, ஏலக்காய் சேர்த்து ஒன்றாகக் கிளறி, நெய் தடவிய தட்டில் ஆறவைக்கவும். பிறகு, அவற்றை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும்.

பலன்கள்: சீரான மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். ரத்தம் விருத்தி அடையும். உடல் எடை அதிகரிக்கும்.

வாழைத்தண்டு கோதுமை அடை

தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு, கோதுமை மாவு - தலா 1 கப், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா 1/2 கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, புதினா இலை - 2 டீஸ்பூன், சீரகம், தயிர் - தலா 1 டீஸ்பூன், மிளகு - 1/4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, தயிர், உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின், அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசைய வேண்டும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, பொடித்த சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால், சிறிது நீர் சேர்த்துக் கரைக்கவும். கலவையைக் குழைவாகப் பிசைந்து, சூடான தோசைக்கல்லில் சிறு அடைகளாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுத்து புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும். நீரை வெளியேற்றும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.

வாழைத்தண்டு புதினா ஜூஸ்

தேவையானவை: நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப், புதினா இலை ஒரு கைப்பிடி, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு, உப்பு, நீர் - தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டு, புதினா, எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு, உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேவையான அளவு நீர் ஊற்றி, புதினா இலையுடன் சேர்த்துப் பருகினால், சுவையாகவும் உடலுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

பலன்கள்: சிறுநீரகக் கற்கள் கரையும். எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும். உடல்குளிர்ச்சியாகும்.

- ச.மோகனப்பிரியா

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வீ.சக்தி அருணகிரி, என்.ஜி.மணிகண்டன், ரா.ராம்குமார்.

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.