Published:Updated:

இந்திய அறிவியலின் ‘நெருப்புடா!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய அறிவியலின் ‘நெருப்புடா!’
இந்திய அறிவியலின் ‘நெருப்புடா!’

நவம்பர் 7 சர். சி.வி.ராமன் பிறந்த தினம்

பிரீமியம் ஸ்டோரி
இந்திய அறிவியலின் ‘நெருப்புடா!’

வம்பர் ஏழாம் நாள், இந்திய அறிவியலின் பிறந்தநாள் என்றே சொல்லலாம். பாரத ரத்னா, நோபல் விஞ்ஞானி, சி.வி.ராமன் பிறந்த தினம்.

திருச்சியில் உள்ள திருவானைக்காவல் என்ற இடத்தில், 1888-ம் ஆண்டு பிறந்தார். விசாகப்பட்டினத்தில் கல்வி. பிரிட்டன் அரசின் கணக்காயர் சேவை (BFS) நுழைவுத் தேர்வில் முதல் இடம். அதற்கு முன் இயற்பியல் பட்டப்படிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். அறிவியல் மீது வெறி. முதுகலை அறிவியலில் இயற்பியல் துறை படிப்பிலும் முதல் இடம். கொல்கத்தாவில் பிரிட்டிஷ் அரசின் உயர் பதவியான மாகாண கணக்காயர் வேலை கிடைத்தது.
‘இந்திய அறிவியல் கழகம்’ உருவாக்கிய அறிவியல் ஆய்வகத்தில் வேலை நேரம் போக, மற்ற சமயங்களில் அறிவியல் ஆர்வத்துக்கு வடிகால் தேடினார் ராமன். 1917-ம் ஆண்டு இந்திய அறிவியலுக்காக தனது உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர அறிவியலாளர் ஆனார்.

‘ஒளி திரவங்கள், வாயுக்கள் மீது ஏற்படுத்தும் சிதைவு, வேதிப் பொருளுக்கு தக்க மாறும்’ என்கிற முக்கிய கண்டுபிடிப்பை 1928 பிப்ரவரி 28-ல் வெளியிட்டார். இந்த பொன்னான நாளையே, இந்திய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். அந்தக் கண்டுபிடிப்புக்கு ‘ராமன் விளைவு’ எனப் பெயரிட்டவர், ஜெர்மன் அறிவியல் அறிஞர், பீட்டர் பிரிங்ஷெய்ம் (Peter Pringsheim). ராமனுக்கு ஜெர்மன் உட்பட 7 மொழிகளில் எழுதப் படிக்கத் தெரியும். தனது ஆய்வு கட்டுரைகளை நேரடியாக ஜெர்மன், ஆங்கில மொழி உட்பட பலவற்றில் படைத்திருந்தார்.

1930-ம் ஆண்டு சி.வி. ராமனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நம்மை ஆண்ட  ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை. காரணம், மற்ற விஞ்ஞானிகள் போல இல்லாமல் ராமன் முழுதும் இந்திய கல்வியும், இந்தியர் உருவாக்கிய ஆய்வுக்கூடத்திலும் ஆய்வுகள் செய்தவர். ராமனுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு (இலக்கியம்) பெற்றிருந்தார். ஆனால், அதை அவர் நேரில் பெறவில்லை.
நோபல் பரிசை சுவீடன் தேசத்து தலைநகர் ஸ்டாக்ஹோமில் அந்த நாட்டின் இளவரசர்தான் வழங்குவார். ஆங்கிலேய அரசு, நேரில் போக வேண்டாம் என ராமனுக்கு தடை விதித்தது. ஆனால், சர்வதேச நிர்பந்தங்கள் காரணமாக பணிந்தது. ‘நோபல் பரிசை பெறும்போது, அங்கே  எந்த உரையும் நிகழ்த்தக் கூடாது’ என்று எச்சரித்து அனுப்பியது.

டிசம்பர் 10, 1930. நம் இந்திய அறிவியல் உலகையே உலுக்கிய நாள். சுவீடன் இளவரசரிடம் பரிசை பெற்ற ராமன், ஒரு நிமிடம் பேச அனுமதி கேட்டார். வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய கர்ஜனை அது. ‘இந்தப் பரிசை நான் இந்திய சிறைகளில் வாடும் லட்சோப லட்சம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்' என்றார்.

இந்திய அறிவியலின் சரித்திரமும் இந்திய விடுதலைப் போரின் சரித்திரமும் வேறுவேறு அல்ல என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்? விஞ்ஞானி ராமனை நினைவுகொள்வோம்; இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

  - ஆயிஷா இரா.நடராசன்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு