Published:Updated:

அமோலி ஆவணப்படத்துக்குக் கமல்ஹாசன் ஏன் குரல் கொடுக்கிறார்? #Amoli

குணவதி

சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கும் குழந்தைகள், உண்மையாகவே பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?

அமோலி ஆவணப்படத்துக்குக் கமல்ஹாசன் ஏன் குரல் கொடுக்கிறார்? #Amoli
அமோலி ஆவணப்படத்துக்குக் கமல்ஹாசன் ஏன் குரல் கொடுக்கிறார்? #Amoli

``குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
ஏனென்றால், அமோலியைப் போலவே எல்லாக் குழந்தைகளுமே விலைமதிப்பில்லாதவர்கள்தான்
...”
    

நடிகர் கமல்ஹாசன் குரலில் உச்சரிக்கப்படும் இந்த வாக்கியத்துடன் முடிகிறது அமோலி ஆவணப்படம். சிலிகுரி தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களில் உள்ள ஒரு குடும்பத்தின் குழந்தை அமோலி. ஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கடத்தப்பட்ட அமோலியின் இழப்பை, தவித்து விவரிக்கிறது அந்தக் குடும்பம். ஒரு அமோலியில் தொடங்கி பல அமோலிகளின் இழப்பை, வலியைக் காட்சிப்படுத்துகிறது ஆவணப்படம். குழந்தை ஹாசினிக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையைப்போல், கவனத்துக்கு வந்த சில சம்பவங்களுக்கு அதிர்ச்சியடைந்துவிட்டு கடந்துபோவது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான் என்பதை சத்தமாகச் சொல்கிறாள் அமோலி. பெருவணிகமாக, பெரும் அரசியல், பண பலத்துடன் நடக்கும் பெண் குழந்தை கடத்தல் குறித்த இந்த ஆவணம், `நம் வீட்டில் குழந்தைகள் விளையாடுகிறார்கள். இது எங்கோ, எவருக்கோ நடக்கிறது’ என்னும் மனநிலையின் மீது விழும் அடி. பொறுப்புகளை தோளில் தாங்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் நம் சமூகத்துக்கான எச்சரிக்கை.

பகலில் முக்கியப் புள்ளிகளாக வலம்வந்து, இருளில் தன் கோரமுகத்தைக் காட்டும் பலரின் பாலியல் தேவைகளுக்காகவும், வக்கிரமான பாலியல் சோதனைகளுக்காகவும், பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை பேசுகிறது அமோலி ஆவணப்படம். மும்பையைச் சேர்ந்த டிஜிட்டல் மீடியா நிறுவனமான Culture Machine தயாரிக்க, ஜாஸ்மின் கௌர் ராய் மற்றும் அவினாஷ் ராய் இருவரும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். தமிழில் கமல்ஹாசன், ஆங்கிலத்தில் வித்யா பாலன், பெங்காலியில் ஜிஷு செங்குப்தா, கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ராஜ்குமார் ராவ், தெலுங்கில் நடிகர் நானி ஆகியோர், இந்த ஆவணப்படம் முழுவதையும் நமக்கு விளக்கும் குரலாகப் பயணிக்கிறார்கள்.

ஒரே சமயத்தில் நான்கு பேர் நின்றால் மூச்சுமுட்டும் ஓர் அறையிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை போலீஸார் மீட்க வரும் காட்சிகளுடன் தொடங்குகிறது ஆவணப்படம். `76 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமி’, `13 வயதில் தரகனிடம் எனது சித்தியால் விற்கப்பட்டேன்’, `கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், தாயே விற்றுவிட்ட மகள் நான்’ -  காய்கறிகளைப் போல தாங்கள் விற்கப்பட்ட கதைகளை ஒவ்வொருவரும் மிரட்சியுடன் விவரிக்கிறார்கள். 

``ஒவ்வொரு வருடமும் 36 லட்சம் பெண் குழந்தைகள் இப்படி விற்கப்படுகிறார்கள். இக்குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிப்பதற்கான சிறு ஆதாரங்களோ, தடயங்களோ மிச்சமின்றி தொலைக்கப்பட்டு விடுகிறார்கள். எதை எதையோ பேசும் சமூகத்தின் கண்களுக்கு இவையெதுவும் தெரிய வருவதில்லை. இந்த ஆவணப்படம் சிறு முயற்சிதான். வேர்வரைக்கும் சென்று அழித்து, குழந்தைகளை மீட்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நீதித்துறைக்கும், மொத்த சமூகத்துக்கும் இருக்கிறது” என்கிறார் அமோலி படத்தின் க்ரியேட்டிவ் தலைமையான அகங்ஷா செடா. 

விலை பேச ஆரம்பிப்பது, மருட்சி, உள் முரண்பாடு, விடுதலை என இந்தக் கோரமான வணிகத்தை, பாதிக்கப்பட்டவர்களின், பாதிக்கப்பட்ட குடும்பங்களின், கடத்தலுக்கு எதிரான Anti trafficking செயற்பாட்டாளர்களின் வாக்குமூலத்துடன், நான்கு பகுதிகளாக விரிகிறது இந்த ஆவணப்படம். பாலியல் வக்கிரங்களை நிகழ்த்தும் இப்படியான நெட்வொர்க்கிலிருந்து தப்பிய பெண்களை குடும்பங்களும் நிராகரித்துவிடும் நிலையில், பாலியல் கடத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பிடங்களில் சேர்க்கப்படுகிறார்கள். மகாராஷ்டிராவின் அத்தகைய காப்பிடத்தில் இருக்கும் 15 வயதுச் சிறுமி மல்டி, இப்படிச் சொல்கிறார், ``நிறைய கனவுகள் இருந்துச்சு. எல்லாமே உடைஞ்சு போயிடுச்சு. ஒரு உயரமான இடத்துக்குப் போகணும். அங்க என்னால முடிஞ்ச நல்லதை நான் செய்யணும். என்ன மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு ஏதாவது செய்யணும். எங்ககிட்ட பொய் சொல்லி, இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவங்கள கொல்லணும்னு தோணுது. அவங்களுக்குத் தண்டனை கொடுக்கணும்...” 

நமக்கு பக்கத்தில் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கும் குழந்தைகள், உண்மையாகவே பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா? இந்தக் கேள்வியை  மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வோம்...

``குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
குழந்தைப் பருவம் பொக்கிஷம் போன்றது
ஏனென்றால், அமோலியைப் போலவே எல்லாக் குழந்தைகளுமே விலைமதிப்பில்லாதவர்கள்தான்
...”