Published:Updated:

"ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு!" - மலையாள கிளாசிக் பகுதி 10

"ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு!" - மலையாள கிளாசிக் பகுதி 10
News
"ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு!" - மலையாள கிளாசிக் பகுதி 10

ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு! - மலையாள கிளாசிக் பகுதி 10

Ee. Ma. Yau  படம் வெளிவந்து பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் கொண்டாட்டமாக  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையோ, அங்கமாலி டைரீசையோ உட்கொள்ளும்போது இவற்றின் இயக்குநரை ஆமென் படத்திலேயே அறிந்திருக்க முடியும். ஆமென் ஐ ஓகே என்று சிறு வியப்புடன் கடந்தார்கள். அங்கமாலி படத்தை இப்போதும் விரோதமாய் கருதுவோர் உண்டு. இந்த பட ரிலீஸுக்குப் பிறகு யாராலும் வாய் திறக்க முடியவில்லை. ஒரு இயக்குநர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிற நெருக்கடிகளைப் பற்றி பேசுவதற்குச் சொல்லவில்லை, அவர் முன்னமே ஆமென் படம் செய்யும்போதே தனது உத்திகளை எடுத்து உபயோகிக்கத் துவங்கியிருந்தார் என்கிறேன்.

கேரள நிலப்பரப்புக்கு என்றே சில பிரேம்கள் உண்டு. அது இளங்கோவின் காளிதாசனின் காவிய மரபைக் கொண்டது. வர்ணங்களும்கூட அப்படித்தான். அதற்கு இலக்கியத்திலும் பிற கலைகளிலும் சினிமாவிலும் ஒரு நிதானமே உண்டு. நான் அடித்துக் கவுத்துகிற வேறு ஒரு மாதிரியை ஆமென் படத்தில்தான் பார்த்தேன். எல்லாவற்றையும் தலை கீழாக்கியிருந்தார்கள். நம்பகத்தன்மைக்கும் பங்கம் செய்யவில்லை. உறுதியாக அது ஒரு வெற்றிப்படம். வசூலைவிட முக்கியமாய் ஒரு படைப்பாளிக்கு திருப்தியைக் கொடுத்திருக்கும். முதல் வெற்றி அதுதானே? படத்தின் கூறுமுறை மிகவும் செருக்குடன் இருந்தது. முறைப்படி sarcasm என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதைப்பற்றி தெரியாத பலரும் அதை மேதாவித்தனமாய் பெனாத்துவதால் தவிர்க்கிறேன். மேலும், படத்தில் விநோதங்கள் நிரம்பியிருந்தன. உரையாடல்கள் நம்மைக் கிள்ளவும், குத்தவும், சிலநேரம் தூக்கிப்போட்டு மிதிக்கவும் செய்தன. கோழிப் பீ ரொம்ப நாறுகிறதே என்கிற கேள்விக்கு, அதன் சாப்பாட்டில் ஸ்பிரே அடித்து வாசமாக மலம் வர வைக்க அவகாசமில்லை என்று வருகிறது பதில்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பஹத் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் சாலமன். அந்தப் பாத்திரம் படத்தின் ஹீரோ என்று சொல்லிவிட முடியாது. கதையில் முக்கியமானவன், அவ்வளவுதான். ஒரு ஊரில் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பந்தமும் பிரிவினைகளும் இருக்கின்றன. அரவணைத்துக்கொள்வது போலவே அடித்துகொண்டும் இருக்கிறார்கள். ஆயின், பெரும் பாடல் பெற்ற வரலாறுள்ள அந்த ஊரின் சர்ச் அனைத்தையுமே ஆள்கிறது. அல்லது தலைமை ஃபாதர் தனிக்காட்டு ராஜாவாய் ஆண்டு கொண்டிருக்கிறார்.  அவரது இனத்தில் படுகிற காண்ட்ராக்டரின் மகள் சோசன்னாவை சாலமன் காதலிப்பது ஃபாதருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பேண்ட்காரர்கள் அவனுக்கு உதவியாய் இருக்கிறார்கள். அந்த பேண்ட் குழுவை சர்ச்தான் வைத்து போஷித்துக் கொண்டிருக்கிறது. அது வேண்டுமா, வேண்டாமா என்பதை ஓட்டெடுத்துத் தீர்மானிப்பது என்பதை அறிவித்து அவர்களை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார் ஃபாதர்.

சாலமன் கிளாரினெட் வாசிப்பவன். பேரு கேட்ட கிளாரினெட் கலைஞன் எஸ்தப்பனின் மகன். அந்தக் குழுவே அதிகாரத்துக்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஃபாதர் அந்த மாதிரி ஆட்களை விரும்ப முடியாது. குழுவின் தலைவர் லூயிஸ் பாப்பனின் செல்லப் பிள்ளையாய் இருந்தாலும், சாலமனுக்கு சரியான முறையில் கிளாரினெட் வாசிக்க வருவதில்லை. அவனுக்குள் அவனது தகப்பனைப் பற்றி வருகிற ஒரு காட்சி அவனை நடுங்க வைத்துத் தள்ளி நிறுத்துகிறது. இதே குழுவிலிருந்து வெளியேறிப் போன வேறு ஒரு ஆர்ப்பாட்டமான குழு, வருடா வருடம் கோப்பையைத் தட்டிக் கொண்டிருப்பதால்தான் இந்தக் குழுவைக் கலைத்து விடலாம் என்கிற பேச்சு வந்தது. ஆனால், வின்சென்ட் வட்டோலி என்கிற இரண்டாம் கட்ட ஃபாதர் வருகிறான். என்னதான் டிப்டாப்பாக இருப்பதற்குக் கண்டிக்கப்பட்டாலும், ஃபாதருக்கு அடங்கியே இருக்க வேண்டியிருந்தாலும், வின்சென்ட் ஒரே உரைவீச்சில் பேண்ட் குழுவினரை கழட்டிவிடக் கூடாது என்ற பக்கம் பேசி மக்கள் ஆதரவைப் பெற்று, ஃபாதரின் மூக்கையுடைக்கிறான்.

சோசன்னா ஒரு வீராங்கனை. படித்து ஃபாதராகி ஊரான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா, என்னைக் கட்டி எனக்குப் பிறக்கப்போகிற பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா என்று கேட்டு, தனது பால்ய சிநேகிதனை தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டிருப்பவள். அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைத் திருமண நிச்சயம் செய்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் வின்சென்ட் துணையுடன் காதலர் இருவரும் ஊரைவிட்டு செல்லத் துணிய, அந்த காரியம் ஈடேறவில்லை. பிடிபடுகிறார்கள். பிடிபட்ட சாலமனை உரித்தெடுக்கிறார்கள். அந்தநேரத்தில் பலருக்குமாக நடக்கிற வாக்குவாதத்தில் லூயிஸ் பாப்பன் சாலமன் வெறும் சர்ச்சின் எடுப்பு மட்டுமல்ல, அவன் கிளாரினெட் கலைஞன் என்கிறார். எல்லோரும் நாலாபுறமும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். பேச்சு முறுகி சாலமனை முன்னிறுத்தி அடுத்த வருடத்துக் கோப்பையை நாங்கள் வாங்குவோம் என்று சவால் விடுகிறார் லூயிஸ்.

அப்படி இவன் அதை வாங்கினால் அதைத் தருவோம், இதைத் தருவோம், ஏன், காண்ட்ராக்டரின் மகளையே கட்டித் தருவோம் என்று பதில் சவால் வந்து, காண்ட்ராக்டரும் அதெல்லாம் நடக்காது என்கிற துணிச்சலில் அதற்குச் சம்மதிக்கிறார். 

எவ்வளவோ இடையூறுகள்.

எவ்வளவோ சம்பவங்கள்.

சாலமனுக்குள்ளே இருந்த ஒரு அற்புதக் கலைஞனைப் பார்த்தவர் லூயிஸ். பேரு கேட்ட எஸ்தப்பனின் மகனை அவர் நம்புகிறார். அவனுக்குள் இருக்கிற அந்த ஆவேசத்தைக் கொண்டுவர சகலரும் துடிக்கிறார்கள். சோசன்னாவும்தான். அவன் வெற்றி பெற்றானா, இல்லையா என்பது கதை. வெற்றி பெறுகிறான். சோசன்னாவைக் கட்டுகிறான். இதெல்லாம் எப்படி என்பது மிக அழகான காட்சிகளால் உறுமுகிறது படம்.

சர்ச்சை இடித்துக் கட்டுவது என்று ஃபாதர் திட்டமிட்ட காரியம் நடக்கவில்லை.

சாலமன் ஒரு கலைஞன்தான் என்று அறியப்படும்போது, பலருக்கும் மனமாற்றம் வந்திருக்கிறது.

படம் துவங்கும்போது தனது அற்புதத்தைக் காட்டிய புண்ணியாளன்தான், வின்சென்ட் வடிவில் வந்து போனான் என்றும் கதை கூறுகிறது.

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். முதல் காட்சியே ஒரு வீட்டின் வாசலில் கிப்ட் பாக்ஸை வைப்பதுதான். அதில் மலத்தை வைத்துப் பொதிந்தவன், அந்த வீட்டுக்குள்ளேயே வந்து யார் வைத்திருப்பார்கள் என்று கேட்டு அதை ஊர் சண்டையாய் மாற்றுகிறான். அப்படி நகர்ந்து போகிற கதையில் பலரும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய எல்லா செய்கைகளும் எதிர்பாராததாய் இருக்கின்றன. சாலமனுக்கு எதிராக வாசிக்க வரும் அந்த கள்ளுகுடியனுக்கு அப்படி ஒரு ஆளுமையைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருக்கிற அத்தனை மாந்தர்களும் சேருகிற அந்தத் திருவிழா, அந்தப் போட்டி மேடை, அதன் துவக்கம் முடிவு எல்லாம் அப்படியொரு பெப். நம்மைக் கிளர்ச்சியடைய வைக்கிற அந்தத் தொகுப்பு அநேகமாய் இதுபோல வந்த எந்தப் படங்களிலும் முழுமையாய்  சாத்தியப்பட்டிருக்காது. பார்க்கிறவர்களைப் பதற வைத்து வெற்றியடைகிறார்கள்.

இதன் திரைக்கதை அத்தனை கச்சிதம் அல்ல.

வேண்டியது வேண்டாதது எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக அள்ளி வந்திருக்கிறார்கள்.

மனம்போல் பேசி, மனதாரச் சிரித்து நம்மைக் கொள்ளையிடக் கூடிய உரையாடல்கள். அதில் எந்த சிக்கனமும் இல்லை. ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இல்லை. அடித்து விடுகிறார்கள். ஒன்றுக்கு திடுக்கிட்டு முடிவதற்குள் அடுத்தது வந்து விடுகிறது. எழுத்தாளர் பி எஸ் ரபீக். 

அநேகமாய் இப்படத்தின் வளவு நெளிவுகளுக்கு முக்கியமான காரணம், நாம் நேரிடுகிற காட்சிகள். கதை சொல்லி நகரும் முறை. படத்தின் ஆத்மாவை அறியாமல் இப்படி ஒரு ஒளிப்பதிவு சாத்தியமில்லை. சிட்டிகைப் போடுவதற்குள் தாவும் காட்சிகளைத் தொகுத்தும்கூட கேரளத்தின் மண் பல நேரத்திலும் தனது ஒயிலைக் காட்டுகிறது. அபிநந்தன் ராமானுஜம் சாலிகிராமம் நபர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு இது மிக முக்கியமான படமாக இருக்க வேண்டும்.

படத்தில் பாடல்கள் அதிகம்.

உண்மையில் படத்தின் பல நெருக்கடியான காட்சிகளை மிக எளிமையாய் பாடல்களின் மூலமே நகர்த்தியிருக்கிறார்கள்.

கிளாரினெட் சீறுகிறது. சிதறுகிறது. அழுது கண்ணீர் விடுகிறது. நெஞ்சை அப்படியே அறுத்துத் தள்ளுகிறது. இறுதியில் மூச்சுவிட அவகாசமின்றி முழங்கி கோப்பையை வாங்கிக்கொள்கிறது. லூயிஸ் பாப்பன் தனது சிஷ்யன் அடுத்த தலைமுறைக்கு கலையைக் கொண்டு செல்கிறான் என்கிற திருப்தியுடன் இறக்கும்போது, நான் சலங்கை ஒலியை நினைத்துக்கொண்டேன். கலைகளுக்கு ஒருபோதும் முடிவில்லை என்பதுபோல படத்தில் அந்த இசை நீண்டு வந்தது. ஒரே ஒரு குறை, சத்தமில்லாத காட்சிகள் இன்னமுமே வந்திருக்க வேண்டும். இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை.

கலாபவன் மணி திலகனைப்போல நடித்த முறை கொஞ்சம் சறுக்கல்தான். அதை அவரே உணர்ந்திருப்பார். ஃபாதராக வந்த ஜாய் மேத்யுவும் போதவில்லை என்று பட்டது. மற்றபடி, படம் முழுக்க நிறைந்திருந்தவர்கள் வெளுத்து வாங்கினார்கள். செம்பனுக்கு அம்மாவாக வந்த அந்த கள்ளுக்கடை பெண்மணி துவங்கி, சாலமனின் சகோதரியாய் வந்தவர் வரை வரிசையாய் சொல்வதற்கு இப்போது அவகாசமில்லை. நாலு வரியில் முடித்துக் கொள்வதல்ல அவர்கள் செய்தது. இந்திரஜித் செம்மை. அவரது தோழியாய் வந்த அந்த பிரான்ஸ் பெண்ணின் புன்னகை மனநிறைவு. சுவாதி ரெட்டியைப் பற்றி தனியாய் தான் ஒரு கட்டுரை எழுத வேண்டும். தனது எதிரிகளிடம் பல முறை சிரித்துக் காட்டுகிறார். ஒருமுறை சாலமனை கை கால் ஒடிக்க வந்த கூலித் தடியனிடம் கொஞ்சலாய் கோழிக் குழம்பை ஊத்தட்டுமா சேட்டா? என்று கேட்டு, அவன் வழியும்போது அவன் தலையில் அதை ஊற்றிவிட்டு அதே கடாயால் அவனை அடித்து பிளாட் பண்ணும் கேரக்டர். அந்தக் கண்கள் அவருக்கு செயல்படுகின்றன. சாலமனிடம் சரசம் செய்யும்போது அதைக் காட்டிலும் உக்கிரம்.

சாலமன் கனவில் நடக்கிறவன் மாதிரி.

அவன் ஒரு இடத்தில் இருப்பதே தெரியாது.

அதை அவர் கொண்டு வந்திருந்தார்.

அந்த மீசை, அவர் உடையை உடுத்தியிருக்கிற விதம், பாங்கு போட்டது போன்ற பார்வை எல்லாமே சரி. சாலமன் என்கிற அவனுக்குள் அவன் எழுந்தவாறிருக்கிற காட்சியில் வீறுகொள்கிற அந்த முகம் மறக்க முடியாது. பஹத்தைப் பற்றி பாராட்டிக் கொண்டிருப்பது வீண் வேலையென்றுதான் எனக்கு எண்ணம்.

Lijo  jose pellisseri இயக்குநர்.

அவருடைய பல பேட்டிகளையும் பார்த்ததில், அவர் எதையும் சீரியஸாக்க முயலவில்லை என்று தெரிகிறது. மோவாயை சொறிந்து அண்ணாந்து கொள்வதில்லை. இதைப் பற்றி யோசித்தேன், இப்படி செய்தேன் என்று கடந்துபோவது ரொம்பவே உறுத்துகிறது. கொஞ்சம் கெத்தாக காட்டிக்கொள்வதில் இவருக்கு என்ன பிரச்னையோ? இருக்கட்டும். மனிதரின் வாழ்வில் தினசரி சந்திக்கிற காரியங்கள் அப்படி ஓன்றும் பிரம்ம சூத்திரமில்லைதான். ஆனால், ஒரு படைப்பாளி அதைப் பார்க்கிற கோணம்தான் அனுபவிக்கிறவனுக்கு வந்து சேர்கிற கலை. முற்றிலும் புதிய ஓன்றுகூட, இருந்தது போலவே பவித்ரமாகவோ, புனிதமாகவோ தொடருமெனில், அதில் என்ன இருக்க முடியும். புதுமைப் பித்தனை மொழி பெயர்க்க முடியாது என்பதை நான் ஒரு பெருமையாய் நினைத்துக்கொள்வது போல லிஜோவின் படங்களை வேறு ஒரு மொழியில் எடுத்துவிட முடியாது என்பதை அவரின் தனித்துவமாய் பார்க்கிறேன்.

வரும் வாரத்திலாவது Ee. Ma. Yau பார்த்துவிட வேண்டும்.