Published:Updated:

`பாதாள சாக்கடையில் விஷவாயுவைக் கண்டறியும் கருவி.!’ - எளியவர்களுக்கான அறிவியல் தேடும் இளைஞர்

`பாதாள சாக்கடையில் விஷவாயுவைக் கண்டறியும் கருவி.!’ - எளியவர்களுக்கான அறிவியல் தேடும் இளைஞர்
`பாதாள சாக்கடையில் விஷவாயுவைக் கண்டறியும் கருவி.!’ - எளியவர்களுக்கான அறிவியல் தேடும் இளைஞர்

பிழைப்பிற்காகச் சென்னை வந்து தஞ்சமடைந்த கென்னித்ராஜின் அப்பாவிற்கு ஆரம்பத்தில் கிடைத்த வேலை துப்புரவுத் தொழிலாளி. ஆறு மாதங்கள் அந்த வேலையைப் பார்த்தபோது தனது தந்தை பட்ட கஷ்டம்தான் இந்த கருவியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது என்கிறார் கென்னித்ராஜ். ஒவ்வொரு நாளும் பாதாள சாக்கடையில் இறங்கும் தொழிலாளர்களுக்கு இருக்கும் உயிர் ஆபத்தைத் தனது கருவி குறைக்கும் எனச் சொல்லும் கென்னித், இதற்கு அடுத்த கட்டமாக மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடுக்க ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.

"பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி" - இப்படியான செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். ஏன் அவர்கள் அந்த மரணக்குழிக்குள் இறங்குகிறார்கள், உயிரைப் பணயம் வைத்து ஏன் வேலைப் பார்க்கிறார்கள் என்ற கேள்விகள் அப்போது தோன்றி மறையலாம். இந்த வேலையைச் செய்யும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களைக்கூட அரசோ ஆள்பவர்களோ கொடுப்பதில்லை. அவர்களது வாழ்க்கை எப்போதும் சவாலான ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த மக்களுக்காகத் தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியுள்ளார் கென்னித்ராஜ். பாதாள சாக்கடைகளிலும் மலக்குழிகளிலும் இருக்கும் விஷவாயுவைக் கண்டறியும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கென்னித்ராஜ்.

திண்டிவனம் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்து சேர்ந்த குடும்பம் கென்னித்ராஜூடையது. பிழைப்புக்காகச் சென்னை வந்து தஞ்சமடைந்த கென்னித்ராஜின் அப்பாவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வேலை துப்புரவுத் தொழிலாளி. ஆறு மாதங்கள் அந்த வேலையைப் பார்த்தபோது தனது தந்தை பட்ட கஷ்டம்தான் இந்த கருவியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது என்கிறார் கென்னித்ராஜ். ஒவ்வொரு நாளும் பாதாள சாக்கடையில் இறங்கும் தொழிலாளர்களுக்கு இருக்கும் உயிர் ஆபத்தைத் தனது கருவி குறைக்கும் எனச் சொல்லும் கென்னித், இதற்கு அடுத்தகட்டமாக மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தைத் தடுக்க ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர் கென்னித்ராஜ். தமிழ் மீடியத்தில்தான் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்பு. பி.இ முடித்து ஒரு வருட இடைவெளியில் யூடியூப், இணையம் ஆகியவற்றின் மூலம் சுய முயற்சியில் ரோபோட்டிக்ஸை கற்றுள்ளார். லிபோ எனும் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கென்னித்ராஜ். அதன்மூலம் பல்வேறு பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுத்துள்ளார். அவர் பயிற்றுவித்த அணியானது அகில இந்திய அளவில் நடந்த ரோபோட்டிக்ஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே ரோபோட்டிக்ஸ் அறிவு சென்றடைகிறது என்பதால் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சாதாரண மக்களிடம் ரோபோட்டிக்ஸை கொண்டு சேர்ப்பதிலும் மக்களுக்கான கண்டுபிடிப்பை நிகழ்த்துவதிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளார். 

தன்னுடைய ஆராய்ச்சியின் விளைவாக இரண்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். ஏற்கெனவே கூறிய பாதாள சாக்கடைகளில் இருக்கும் விஷ வாயுவைக் கண்டறியும் கருவி மற்றும் வேண்டிய நபரை ட்ராக் செய்யும் ஜிபிஎஸ் கருவி. இந்த இரண்டு கருவிகளையும் மிகக் குறைவான விலைக்கு மக்களுக்குத் தர முடியும் என அடித்துச் சொல்கிறார் கென்னித்ராஜ். பாதாள சாக்கடையில் இருக்கும் ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் மோனாக்ஸைடு, மீத்தேன் போன்ற விஷ வாயுக்களின் அளவு உயிரை எடுக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தக் கருவி அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். அதன்மூலம் துப்புரவுத் தொழிலாளி தன்னை தற்காத்துக் கொள்ளலாம். இந்தக் கருவியை உருவாக்க மூன்று மாதங்கள் வரை எடுத்துக்கொண்டுள்ளார். மொத்த செலவு 14,000 ரூபாய். இதன் இறுதி வடிவத்தை வெறும் 700 ரூபாய்க்கே வடிவமைத்து விடலாம் என்கிறார் கென்னித்ராஜ். இவர் உருவாக்கியுள்ள ஜிபிஎஸ் கருவி இணைய உதவி இல்லாமலே செயல்படக்கூடியது என்பது அதன் சிறப்பம்சம். அனுமதிக்கப்பட்ட அதிர்வெண்களில் செயல்படக்கூடியது. இதற்கு சாதாரணமாக குறுந்தகவல் அனுப்பினால் போதும்; இந்த ஜிபிஎஸ்ஸை வைத்திருப்பவர் இருக்கும் இடம் கூகுள் மேப் லிங்காக குறுந்தகவலில் வந்துவிடுகிறது. 6 மாத காலத்தில் இந்த ஜிபிஎஸ்ஸை உருவாக்கிய கென்னித்ராஜ். இதற்காக 24,000 ரூபாய் வரை செலவானது என்றார். அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்து இந்தத் தயாரிப்பு செலவுகளையெல்லாம் ஈடுகட்டியுள்ளார். . இதன் இறுதி வடிவத்தை வெறும் 2300 ரூபாய்க்கே வடிவமைத்துவிடலாம் என்றும் சொல்கிறார். இதைப் பல்வேறு பாதுகாப்பு வசதிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது சந்தையில் இருக்கும் ஜிபிஎஸ் கருவிகளைக் காட்டிலும் இதன் விலை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதை இன்னும் மேம்படுத்தி கடலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்கும் விதமாக மாற்றி அமைக்கலாம் என்றும் சொல்கிறார் கென்னித்ராஜ். அவருடன் சிறிதுநேரம் பேசினாலே வார்த்தைகளெங்கும் தொழில்நுட்பமும் தமிழும்தான்.

``தமிழில் தொழில்நுட்பத்தை எல்லா மக்கள்கிட்டயும் எடுத்துட்டு போகணும் சார். முக்கியமா லோயர் மிடில்கிளாஸ் மக்கள்ட்ட ரோபோட்டிக்ஸ கொண்டு போகணும்" என்று தன் எண்ணப் பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் அவரது ஒவ்வொரு வார்த்தைகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. பேச்சோடு மட்டுமல்லாமல் தமிழில் தொழில்நுட்பத்துக்காக tamilcode.club எனும்  இணையதளத்தையும் நடத்தி வருகிறார். அதில் அறிவியல் அடிப்படை விஷயங்களையும் கோடிங் பற்றியும் தமிழில் எழுதி வருகிறார். தனது கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் எல்லாநிலை மக்களும் அதை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார் கென்னித்ராஜ். இந்தக் கருவிகளைக் கூட சந்தைப்படுத்தாமல் விருப்பமுள்ளவர்களுக்கு அவரே கற்றுக்கொடுக்கிறார். சந்தைப்படுத்தினால் அறிவியல் மக்களிடமிருந்து அந்நியமாகிவிடும் என்பது கென்னித்தின் வாதம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விளிம்புநிலையில் இருக்கும் மாணவர்களுக்கும் ரோபோட்டிக்ஸை கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். விஷ வாயுவைக் கண்டறியும் கருவியைக்கூட அரசு கையில் எடுத்து துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார். பெரிய இலக்க சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்கான அறிவியல் எனும் பாதையில் பயணிக்கும் கென்னித்ராஜுக்கு சரியான பொருளுதவியோ அல்லது ஆய்வக உதவியோ கிடைத்தால் இன்னும் ஜெயிப்பார்.

கென்னித்ராஜ்கள் ஜெயிப்பதுதான் சமூகத்துக்கும் நல்லது.

அடுத்த கட்டுரைக்கு