Published:Updated:

`1924 - காவிரி நதிநீர் ஒப்பந்தம்' சொல்வது என்ன? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 8

`1924 - காவிரி நதிநீர் ஒப்பந்தம்' சொல்வது என்ன? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 8
`1924 - காவிரி நதிநீர் ஒப்பந்தம்' சொல்வது என்ன? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 8

காவிரி கடந்து வந்த பாதை குறித்து தொடர் கட்டுரை...

ண்ணம்பாடி அணையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு தனது விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருந்தது. 1892- ம் ஆண்டு ஒப்பந்தம் இந்த இரண்டு பகுதிகளுக்கிடையே ஓடும் பல்வேறு ஆறுகள் சம்பந்தப்பட்டது என்றால், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் காவிரி ஆற்றுப்படுகையின் பாசன அபிவிருத்தியைப் பொறுத்து மட்டுமே தொடர்புடையதாகும். 1892, 1924 ஆகிய இரண்டு ஒப்பந்தங்களுமே காவிரியின் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் பாய்வதை உத்தரவாதப்படுத்துகின்றன.

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்தில், கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1. மைசூரு அரசு, 1.25 லட்சம் ஏக்கர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்துகொள்ள ஏதுவாக 124 அடி உயரமும், 44.827 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட கண்ணம்பாடி அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

2. சென்னை ராஜதானி அரசு, 93.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

3. அணை, விளைநிலம் தொடர்பான விவரங்களை இரு அரசுகளும் ஒவ்வோர் ஆண்டும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

4. சுமார் 45 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மைசூரு நிலப்பரப்பில் 1,10,000 ஏக்கர் அளவுக்கு விளைநிலங்களை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

5. மைசூரு சமஸ்தானத்தில் கட்டப்படவிருக்கும் அணைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சென்னை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மைசூரு அரசின் கட்டாயக் கடமை.

6. சென்னை அரசு புதிய அணைகளை (பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளில்) கட்டிக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை ஈடுசெய்யும் வகையில் மைசூரு அரசும் புதிய அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், புதிய அணைகளைக் கட்டிக்கொள்வதன் மூலம் உபரிநீரைப் பகிர்ந்துகொள்வதில் எவ்வித உரிமை மீறலும் இருக்கக் கூடாது.

7. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து 50 ஆண்டுகள் கழித்து (1974) மறு ஆய்வு செய்ய வேண்டும்.

8. ஒருவேளை, ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதில் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், தீர்ப்பாயம் மூலமாகவோ, இந்திய அரசின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளலாம்.

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்ரய்யாவின் எதிர்வினை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ``இரு சமமற்ற தரப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இது. ஒருபக்கம், ஏகாதிபத்திய சக்தி (சென்னை). மறுபக்கம், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர் (மைசூரு). இந்த இடத்தில் பலவீனமானவர் வீழ்வதைத் தவிர, வேறு வழியில்லை”.

குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை முக்கியமான அம்சம் அதன் கால எல்லை தொடர்பானது. 1924 ஒப்பந்தம் 50 ஆண்டுகள் முடிந்ததும், மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததே தவிர, 50 ஆண்டுகளோடு காலாவதியாகிவிடும் என்று சொல்லப்படவில்லை. அதாவது, ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிற அனுபவத்தைக் கொண்டு உபரிநீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உட்பிரிவு XI கூறுகிறது.  இதைத்தான் இன்றைய கர்நாடக அரசு, `ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிடும், செல்லாததாகிவிடும்’ என்ற வாதத்தை முன்வைத்துப் பேசுகிறது.

உட்பிரிவு XI-இல் உள்ளது என்ன?

The Mysore Government and the Madras Government further agree that the limitations and arrangments embodied in clauses (IV) to (VIII) supra shall, at the expiry of fifty years from the date of the excution of these presents, be open to reconsiderations in the light of the experience gained and of an examination of the possibilities of the further extension of irrigation within the terrotories of the respective Governments and to such modifications and additions as may be mutually agreed upon as the result of such reconsiderations.

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(13)-இன்படி 1924 ஒப்பந்தத்தில் கூறப்படும் விஷயங்கள் தவிர, வேற எந்த ஷரத்திலும் 1892- ம் ஆண்டு ஒப்பந்தச் செயல்பாட்டை மாற்றக் கூடாது என்றே கூறுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள காவிரி டெல்டாவினுடைய விவசாயப் பாதுகாப்பை 1892 விதி 3-ம், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(2)-ம் உறுதிபடுத்துகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் காவிரியை, மைசூரு எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறவில்லை. 

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு, மைசூரில் சிறிய மற்றும் பெரியதுமான பல நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சென்னை - மைசூரு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக 1911- ல் அடிக்கல் நாட்டப்பட்ட கண்ணம்பாடி அணை (கிருஷ்ணராஜ சாகர்), 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே செயல்வடிவம் பெறத் தொடங்கியது. ஏழாண்டு கால கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு 1931- ல் கிருஷ்ணராஜ சாகர் அணை திறக்கப்பட்டது. அதேபோல், ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டாண்டுகள் கழித்து தமிழகத்தில், தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 1934- ம் ஆண்டு அந்த அணை திறக்கப்பட்டது. பல நீர்ப்பாசனத் திட்டங்களால், மைசூரு அரசு தன்னுடைய விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொண்டது. 1900-ல் 1.1 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலம், 1930-களில் மூன்று லட்சம் ஏக்கராகவும், 1970-களில் 4.4 லட்சம் ஏக்கராகவும் விரிவுகண்டது.

- காவிரி பாயும்...

அடுத்த கட்டுரைக்கு