Published:Updated:

ஒரே ஊசியில் சொர்க்கம்... கோவையில் அதிகரிக்கும் போதை பயங்கரம்!

ஒரே ஊசியில் சொர்க்கம்... கோவையில் அதிகரிக்கும் போதை பயங்கரம்!
News
ஒரே ஊசியில் சொர்க்கம்... கோவையில் அதிகரிக்கும் போதை பயங்கரம்!

போதைக்கு அடிமையான இளைர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி, மிகக்குறைவுதான் என்றாலும், நாளாவட்டத்தில் இது அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதை அதிகரிக்காமல் உஷார்படுத்தவே இந்தக் கட்டுரை....

தமிழகத்தில் கோவை ஏரியா இளைஞர்கள் படிப்பில் கில்லாடிகள். பொறியியல் படிப்பில் சாதனை படைத்து வருகிறவர்கள். தமிழகத்தின் முன்னணி கல்லூரிகள் அங்குதான் இருக்கின்றன. உயர் கல்வித்துறையில் பலவித சாதனைகளைப் படைத்துவரும் கோவைக்கு இது சோதனை நேரம்! சுய ஒழுக்கத்துக்கு இலக்கணமாகத் திகழும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் போதை ஊசி பழக்கம் உள்ள சிலர் தற்போது ஊடுருவி இருக்கிறார்கள். இவர்களால் போதைக்கு அடிமையான இளைஞர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி, மிகக்குறைவுதான் என்றாலும், நாளாவட்டத்தில் இது அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதை அதிகரிக்காமல் உஷார்படுத்தவே இந்தக் கட்டுரை....

 கோவை கலவரம்...

கோவையில் இப்போது பெற்றோர்கள் பதறும் ஒரு விவகாரம்... தங்களின் மகன் போதை ஊசிக்கு அடிமை ஆகிவிடக்கூடாதே? என்பது. அதேபோல், பெண் பிள்ளைகளை வேலைக்கு அல்லது படிக்க அனுப்பும் பெற்றோர். அவர்கள் போதை ஆசாமிகளிடம் ஏமாந்துவிடக் கூடாதே? என்று வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். கோவை ஏரியாவில் தற்போது டிரண்டில் இருப்பது என்னவென்றால்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவனா?..போதை ஊசி ஆசாமி! என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் பரம சாதுவாய் நடமாடுவார்கள். ஆனால், ஒருவித மிதப்பில்...பறந்தபடி இருப்பார்கள். போதை வாசனை அறவே இருக்காது. இந்தமாதிரியான போதை ஊசி ஆசாமிகளின் புதுவித அப்ரோச். தேர்வில் வெற்றி, பிறந்தநாள்...இப்படி விதவிதமான காரணங்களைச் சொல்லி டே பார்ட்டிக்குப் பணிக்குப் போகும் டீன் ஏஜ் பெண்கள், கல்லூரியில் படிப்பவர்கள் ...என்று ரக வாரியாக பிரித்து ஸ்கெட்ச் போட்டு அழைக்கிறார்கள். இவர்களின்  உண்மையான சுயரூபம் தெரியாமல், சில பெண்கள் அவர்களுடன் போகிறார்கள். கோவையில சில அபார்ட்மென்ட்கள், பிரபல ஒட்டல் அறைகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான பண்ணை வீடுகள்..இவைதான் போதை ஊசி ஆசாமிகளின் ஜாகை.

முதலில் வெல்கம் டிரிங்ஸ்..தருகிறார்கள்.

அடுத்து..

கூல்டிரிங்ஸ் பாட்டில் வரும். அதில், இலேசான போதை தரும் மருந்து கலந்திருக்கும். ஆனால், நல்ல நினைவு இருக்கும். அதை குடித்தவுடன் மெள்ளத் தடுமாறுவார்கள்.

இனிதான்... டிஸ்கோதே..பாடலின் ஆடியோவை அதிகப்படுத்துவார்கள். பெண்கள் நிலைதடுமாறும்போது, அந்தப் பெண்களுடன் டான்ஸ் ஆடியபடி..

போதை ஊசியைக் கையில் குத்திவிடுவார்கள்.

அது என்னவென்று உஷாராவதற்குள்...அறைக்குள் தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

இப்படித்தான், இங்குள்ள ஒரு பிரபலத்தின் மகள் போதை ஊசி கும்பலிடம் சிக்கியிருக்கிறார். ஆனால், நடந்தது ஏதும் நினைவில் இல்லை. மூன்று மாதங்கள் ஆனபிறகு, அவர் கர்ப்பமான விஷயம் தெரியவந்திருக்கிறது. குடும்பபே துடித்துப்போய்விட்டது.

போதை ஊசி ஆசாமிகள் சந்திப்பு...

``ஆமாம்! போதை ஊசி மருந்து பாட்டிலை 1000 ரூபாய்க்கு வாங்குகிறோம். அதை `டிரிப்ஸ்' ஏற்றப்பயன்படுத்தும் குளுக்கோஸுல் ஏற்றுவோம். பிறகு, போதை மருந்தாகப் பயன்படுத்துகிறோம். ஏரோபிளேனில் பறப்பது போல இருக்கிறது. ஒரு மணி நேரம் போதை இருக்கும். `கப..கப'வென பசி எடுக்கும். வயிறு முட்டச் சாப்பிடுவோம். உடலில் உள்ள வலி எதுவுமே தெரியாது. ``என்று வித்தியாசமாகச் சிரித்தனர். அவர்களிடம், யார் இதை தருகிறார்கள்? என்று விசாரித்தோம்! மழுப்பலாகப் பேசிவிட்டு நழுவினர்.
எதிர்பார்ப்புகள் வெற்றிகரமாக நிறைவேறாமல் போகும்போது, போதை மருந்துகளை இளைஞர்கள் நாடிப்போகிறார்கள். மிக முக்கியமான பதவிகளுக்கு நடக்கும் கடினமான தேர்வுகளில் ஃபெயிலியர்கள் எங்கே அதிகமாக இருக்கிறதோ?...அங்கேதான் இந்த மாதிரி போதை பழக்கம் நுழைகிறது. இந்திய அளவில் பஞ்சாப்பில்தான் அதிகம் போதைக்கு அடிமை ஆனவர்கள் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம். நம் மாநிலத்தில் அந்த அளவுக்கு இல்லை. ஆனாலும், இப்போது ஊருடுவியிருக்கும் புது டைப் போதை பழக்கம் பரவுகிற வேகத்தைப் பார்த்தால்.. சற்று பயமாகத்தான் இருக்கிறது. மது குடித்தால் வாசனை வரும். அருகில் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், மாத்திரை அல்லது ஊசி வடிவில் இருக்கும் போதை மருந்துகளால்...அந்தமாதிரி பிரச்னை இல்லை. வாசனையே தெரியாது. சிலர் வகுப்பறையில் இந்த போதை ஊசியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தால், அவர்களால் மட்டும்தான் உணரமுடியும். மற்றவர்களுக்குத் தெரியாது.

போதை ஊசி ஆசாமிகளின் டார்க்கெட்

கோவையில் பிக்பாக்கெட் ஆசாமிகள், சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்கள், தினசரி உடல் உழைப்பில் ஈடுபட்டு களைத்துப்போகும் தொழிலாளர்கள் சிலர்.. இவர்கள்தாம் டார்க்கெட். கிடுகிடுவென போதை ஊசி அடிமைகள் பெருகிவருகிறார்கள். கோவை ஏரியாவில் தனியா வீடு எடுத்துத் தங்கிப்படிக்கும் மாணவர்களில் படிப்பு ஏறாமல் அதிக வருடம் டேரா போட்டிருக்கும் பசங்களைத்தான் இந்த போதை ஊசி கும்பல் தேர்தெடுக்கிறது. ரூம் மேட் போல முதலில் சேருகிறார்கள். அந்த மாணவரின் சுகதுக்கங்களில் பங்கெடுப்பது போல நடித்து நாளாவட்டத்தில் தங்களது ஏஜென்டாக மாற்றிவிடுகிறார்கள். இப்படி ஆள் பிடித்து ஒவ்வொரு ஏரியாவிலும் வைத்திருக்கிறார்கள். இவர்களை விட்டு, பிரபல மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை வலியப் போய் லவ் பண்ணச் சொல்லுகிறார்கள். அவர்கள் ஓ.கே. சொன்னதும், அவர்கள் மூலம் மயக்க ஊசி எங்கே இருக்கிறது? என்கிற தகவலைத் தெரிந்துகொள்கிறார்கள். பாவம்..அந்தப் பெண் ஊழியர்கள். போதை ஊசி கும்பலிடம் மாட்டித்தவிக்கிறார்கள். கோவையில் அடிக்கடி இளைஞர்கள் காணாமல் போவதும், மர்மான முறையில் இறந்துபோவதுமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் பின்னணியில் போதை ஊசி கும்பல்தான் செயல்படுகிறது. சமீபத்தில்,  போதை ஊசி இளைஞர்கள் கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். ஓரிருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வேறு முத்திரை குத்தப்பட்டுவிட்டு மறைக்கப்பட்டுவிட்டது.

மருத்துவமனையில் ஏன் திருடுகிறார்கள்?

கோவை மாநகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் திருட்டுச்சம்பவங்கள் நடந்துள்ளன. பணத்தையோ, பொருள்களையோ திருட வரவில்லை. ஆபரேஷன் நேரத்தில் நோயாளிகளுக்குத் தரப்படும் மயக்க மருந்து குப்பியைக் குறிவைத்து திருடுகிறார்கள். இதை மருத்துவச் சட்டப்படி, மனிதர்களுக்கு வலி நிவாரணி. ஆனால், அந்த மருந்து குப்பிகளை போதை ஊசி கும்பல் திருடிச் செல்கிறது. நாலு அல்லது ஐந்து ரூபாய்தான் அந்த ஊசி மருந்தின் விலை. அதனால், திருடுபோனால் கூட, பிரபல மருத்துவமனைகள் கண்டுகொள்வதில்லை. போதை ஆசாமிகளை மருத்துமனை ஊழியர்கள் யாராவது தடுத்தால், எதிர்தாக்குதல் நடத்துகிறார்கள். பொள்ளாச்சியிலிருந்து ஒரு வயதான பெண்மணி கோவைக்கு வருகிறாராம். அவர் முன்பு மருத்துவமனைகளில் வேலை பார்த்தவராம். அந்த நட்பில் தற்போது மயக்க ஊசி திருடுவதில் இறங்கிவிட்டாராம். பொள்ளாச்சி ஏரியாவில் அந்தப் பெண்மணியின் நடவடிக்கையைக் கண்டுபிடித்த மருத்துமனைகள், உள்ளே விடுவதில்லையாம். அதனால், கோவை பக்கம் தலைகாட்டிவருகிறாராம். அவரது உடலில் மயக்க ஊசி மருந்துகளை மறைத்து விற்பனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

பெங்களூரு டூ கோவை.. பார்சலில் மருந்து

* பெங்களூரில் போதை ஊசி அடிமைகள் அதிகம் பெருகிவிட்டார்களாம். அவர்களில் சிலர் கோவைக்கு வந்து போவதால், இங்கும் அந்த போதை ஊசி நடமாட்டம் வந்துவிட்டதாம். டிராவல்ஸ் பஸ்களில் உயிர்காக்கும் மருந்துகள்...ஜாக்கிரதை என்கிற வார்த்தைகளுடன் மயக்க ஊசி மருந்து பார்ச்சல்கள் அனுப்பிவருகிறார்களாம். பெங்களூரிலிருந்து முக்கியப் பிரமுகர் ஒருவர் மயக்க மருந்து குப்பிகளை மாதம் ஒருமுறை கோவைக்கு வந்து இங்குள்ள போதை கும்பலுக்குச் சப்ளை செய்து வந்திருக்கிறார். பத்து அல்லது பதினைந்து குப்பிகளை அவர் கொண்டுவருவராம். அதை விலைகொடுத்து வாங்குவதில் போட்டி போடுவார்களாம். ஆனால், பெங்களூரு ஆசாமி அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லையாம். இப்போதெல்லாம் வருவதில்லை. போதை பழக்கத்துக்கு ஆளான மற்றவர்கள். வேறு வழியில்லாமல் மருத்துவமனைகளில் புகுந்து திருடியிருக்கிறார்கள். ஆனால், இதே பாணியில் கோவையில் வெவ்வேறு ஏரியாவில் பலரும் போதை ஊசி பழக்கத்துக்கு ஆளாகித் திரிகிறார்களாம்.

கோவை கமிஷனர் சந்திப்பு...

ஜூ.வி. நிருபர் டீம் களத்தில் இறங்கியது. நமக்குக் கிடைத்த தகவல்களை ஜூ.வி. நிருபர் டீம் கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் நேரில் தெரிவித்தோம். எல்லாவற்றையும் குறிப்பு எடுத்துக்கொண்ட அவர், `` போதை ஊசி அடிமைகள் நடமாட்டம் தெரிந்த டாக்டர்கள், நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கொண்ட டீம்...இவர்களை முதலில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பிறகு பேசலாம் " என்றார்.

சந்திப்புகளும், திட்டங்களும் ரகசியமாக ரெடியாகின. வலை விரிக்கப்பட்டது. இந்த நேரத்தில், போதை ஊசி இளைஞர் ஒருவர் பிரபல மருத்துவமனையில் திருட முயன்று மாட்டிக்கொண்டார்.

28 மருத்துவமனைகளில் நாங்கள்தாம் திருடினோம்!

``அசோக்குமார்(வயது 21) செல்வபுரத்தைச் சேர்ந்தவர். அவரின் நண்பர் ரோஹித்(வயது 20)..இருவரும் மருத்துவமனை ஒன்றில் புகுந்து மயக்க ஊசி மருந்தை திருடியபோது பிடிபட்டனர். இருவரில் அசோக்குமார், போதை பழக்கத்துக்கு ஏற்கெனவே அடிமையானவர். பெங்களூரில் உள்ள பிரபல மருத்துமனையில் போதை மீட்பு சிகிச்சை எடுத்திருக்கிறார். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வேறு ஏரியாவில் மூன்று பேர்களை(அப்துல் ரோகன், மகேந்திரன், அஜய்) பிடித்தோம். சாய்பாபா காலனியில் உள்ள மருத்துவமனையில் மயக்க மருந்து திருடப் போயிருக்கிறார் அஜய். அந்த மருந்து கிடைக்கவில்லை. ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவியைத் திருடிச் சென்றிருக்கிறார். இன்னொரு மருத்துவமனையில் லேப்டாப், கடிகாரம்...ஆகியவற்றை திருடியதாகச் சொல்கிறார்கள். கோவையில் சமீபத்தில் 28 மருத்துவமனைகளில் இந்தக் கும்பல் திருடியிருக்கிறது. பெங்களூரு வரை நெட்வொர்க் போகிறது. போதை கடத்தல் பேர்வழிகள் யார் யார்? என்று விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்ததும், மற்ற விவரங்களைச் சொல்கிறோம் " என்றார் கோவை மத்திய ஏரியா போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜன்.

ஒரே அணியில் போராடவேண்டும் - கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா.

``இளைய சமுதாயத்தினரில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும், இளைஞர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிற விவகாரம்.  அதனால், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஒருமாதகாலத்தில், நாங்கள் ரகசியமாக விரித்து வைத்திருந்த வலையில் விழுந்த 5 பேரைக் கைது செய்திருக்கோம். வேறு யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை விசாரிததுக்கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் மத்தியில் போதை தடுப்பு விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.  மருத்துவமனைகளில் ஏதாவது திருட்டுச் சம்பவம் நடந்துவிட்டால், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தரவேண்டும். சிசிடிவி அமைத்து மருத்துவமனை வளாகத்தைக் கண்காணிப்பில் கொண்டுவரவேண்டும். இந்த போதை மருந்தை ஒழிக்க பொதுமக்கள், டாக்டர்கள், மாணவர்கள், கல்லூரிகள், காவல்துறை, பத்திரிகைகள்..என அனைத்துத் தரப்பினரும் ஒரே அணியில் நின்று போராடவேண்டிய தருணம் இது! " என்றார்.

டாக்டர் வினேத்ராஜ்குமார், இந்தியன் மெடிக்கல் அஸோஷியேஷன் கோவை கிளையின் தலைவர்

``மயக்க மருந்து குப்பியின் விலை ரூ.4 அல்லது ரூ. 5. ஆனால், வெளியே கிடைக்காது. முறைப்படியான லைசென்ஸ் வாங்கி ஆபரேஷன் தியேட்டர் வளாகத்தில் மயக்கவியல் டாக்டர்களின் பராமரிப்பில்தான் இருக்கும். அல்லது, மருத்துவமனை உரிமையாளர்கள் வசம் இருக்கும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக எங்கள் ஏரியாவில் உள்ள சில மருத்துவமனைகளில் மயக்க மருந்து குப்பிகளைக் குறிவைத்து திருட்டு முயற்சி சம்பவம் நடந்ததாகப் புகார்கள் வந்தன. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மூன்று மருத்துமனைகளில் திருட்டு முயற்சி நடந்தது. இதை பயன்படுத்துகிற போதை ஆசாமிகளுக்கு முதலில் லேசான மயக்க நிலை ஏற்படும். அதை தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, அடிமை ஆகிவிடுகிறார்கள். அண்மையில், கோவையின் பிஸியான ஏரியாவில் உள்ள ஒரு மருத்துமனையில் மீண்டும் ஒரு சம்பவம். உஷாராக இருந்தால், அந்த இளைஞரைப் பிடித்து போலீஸுல் ஒப்படைத்தனர். அவர் பின்னால் செயல்படும் போதை மருந்து கடத்தல் புள்ளிகளின் நெட்வொர்க் பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அதே இளைஞர்..அதே மருத்துவனையில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ உடல் பாதிப்பு என்று சொல்லி அட்மிட் ஆகியிருக்கிறார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி மயக்க மருந்து குப்பி எங்கேயிருகிறது என்பதை நோட்டம் விட்டிருக்கிறார். டிஸ்சார்ஜ் ஆகி போனபிறகு, திட்டமிட்டு திருட வந்திருக்கிறார். இனிவரும் காலங்களில் நவீனப் பாதுகாப்பு அம்சங்களுடன் அந்த ஊசி மருந்து குப்பியை வைத்திருக்கும்படி சொல்லியிருக்கிறோம். எங்காவது திருட்டுச் சம்பவம் நடந்தால், உடனே தாமதிக்காமல் எங்களுக்கும் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கும்படி அட்வைஸ் செய்திருக்கிறோம்.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. உங்கள் மகனோ?..மகளோ?..போதை ஊசி பழக்கம் இருப்பதற்கான அறிகுறி தென்பட்டால்...உடனே உங்கள் பிள்ளைகளுக்கு கவுன்சலிங் கொடுங்கள். அது என்ன வகை போதை மருந்து? என்பதை கண்டுபிடியுங்கள். பிறகு, அவர்கள் பழக்கம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நெட்வொர்க்கை முடிந்த அளவுக்குக் கண்டுபிடித்து போலீஸுடம் சொல்லுங்கள். தகவல்களை உடனடியாக எங்கள் சங்கத்திற்கும் தெரியப்படுத்துங்கள் " என்றார் டாக்டர் வினோத் ராஜ்குமார்.

பெரு மூளையைத்தான் முதலில் பாதிக்கும் - டாக்டர் ராஜேஷ்பாபு, நியூரோ சர்ஜன், கோவை

``மது பழக்கம் இருந்தால், மனிதனின் சிறு மூளையைத்தான் முதலில் பாதிக்கும். ஆனால், இந்த போதை ஊசி மருந்தின் வீரியம் முதலில் பெரு மூளையைப் பாதிக்கிறது. அதனால், மனிதனின் செயல்தன்மை பாதிக்கப்படும். கவனிக்கும் திறனும், நினைவு ஆற்றலும் படிப்படியாகக் குறையும். ஆனால், ஆரம்பத்திலேயே இந்தப் பழக்கத்தைக் கண்டறிந்தால், பெரு மூளை பாதிப்பதை சரிசெய்யலாம். கவுன்சலிங், போதை மீட்பு மையம் மூலமாக போதைக்கு அடிமைகளான இளைஞர்களை நிச்சயமாகத் திருத்தலாம். பெண் குழந்தைகளுக்கு 'குட் டச்' : 'பேடு டச்'... என்று பாலியல் தொந்தரவுகளிலிருந்து தப்பிப்பது பற்றி சொல்லிக்கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு போதை மருந்து அபாயம் பற்றியும் பெற்றோர்கள் முன்கூட்டியே சொல்லித்தர வேண்டும். எது போதை மருந்து? அதன் பின்விளைவுகள் என்னா?.. பக்க விளைவுகள் என்னா? என்பது பற்றி சிறுவயதிலிருந்தே சொல்லித்தர வேண்டும். இதற்கான விழிப்பு உணர்வு பயிற்சியைத் தர எங்கள் சங்கம் தயாராக இருக்கிறது. " என்றார் டாக்டர் ராஜேஷ்பாபு