Published:Updated:

``ஏ.டி.எம் எங்கே...?'' வட இந்தியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அலெர்ட்!

``ஏ.டி.எம் எங்கே...?'' வட இந்தியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அலெர்ட்!
``ஏ.டி.எம் எங்கே...?'' வட இந்தியா சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு அலெர்ட்!

``டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு நிறைவேறும். இந்தத் திட்டம் மின்னணு புரட்சி ஏற்படுத்தும். இதன் மூலம் 18 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்" என 2015 ம் ஆண்டு `டிஜிட்டல் இந்தியா' தொடக்க விழாவில் மேற்கண்டவாறு பேசினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், வட மாநிலங்களில் நிலவி வரும் ஏ.டி.எம் பரிவர்த்தனை அவலங்களை அதிர்ச்சிகர தகவல்களோடு எடுத்துரைக்கிறார் சமீபத்தில் வடமாநிலங்களுக்குச் சுற்றுலா சென்று வந்த ஐ.சி.எப் ஊழியர் இளங்கோவன். இதுகுறித்து அவரிடம் பேசியபோது...

``நான் ரயில்வேதுறையில் பணிபுரியும் டெக்னீஷியன். என்கூட வேலை செய்யுற சக தொழிலாளர்கள், அவங்க குடும்பங்கள்னு வருஷத்துக்கு ஒருமுறை எல்லாரும் சேர்ந்து டூர் போவோம். இந்த வருஷம் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் டூர் போனோம். செலவையெல்லாம் நாங்க வேலைபார்க்குற ஐ.சி.எப் (integral coach factory) ஏத்துக்கிட்டாங்க. சென்னையில இருந்து ஆக்ரா ரயில்லயே போயிட்டோம். இரவு தங்குவதற்காக `குலு' பகுதிக்குப் போயிட்டோம். நாங்க கிளம்பறதுக்கு முன்னாடியே அங்க இருக்குற ஹோட்டல்ல 14 ரூம் ஆன்லைன் மூலமா பிளாக் பண்ணிட்டோம். ரூம் பிளாக் பண்ணதால எந்தப் பணமும் அப்போ நாங்க கட்டலை. நாங்க  ஹோட்டலுக்குப் போனதும் பணம் கட்டுறதுக்காக கார்டு எடுத்தோம். உடனே அவங்க, `கார்டு வாங்குறதில்லை. கேஷ் மட்டும்தான் வாங்குவோம். இல்லைனா ரூம் கிடையாது'னு சொல்லிட்டங்க. பிறகு பணம் கொடுத்ததுக்கு அப்புறம்தான் ரூம் சாவியைக் கையில கொடுத்தாங்க.

மறுநாள் மணாலிக்குப் போனோம். அங்கேயும் நாங்க போன கடைகள்ல பணம்தான் வாங்குனாங்க. எந்தக் கடைகள்லையும் கார்டு பேமன்ட் இல்லை. மணாலி முடிச்சுட்டு நேரா அமிர்தசரஸ் போனோம். இரண்டு நாள் தங்குவதாக திட்டம். மணாலியில நடந்ததுதான் இங்கேயும் நடந்தது. இதுவரைக்கும் நாங்க ஹோட்டல்ல தங்குனது ,சாப்பிட்டதுக்கெல்லாம் எங்க டூர் ஒருங்கிணைப்பாளர்தான் பணம் கொடுத்துட்டு வந்தாரு. அவர் எவ்வளவு செலவு பண்ணாரோ அதை ஊருக்கு வந்து கொடுக்குறதா பேசி வெச்சிருந்தோம். அதெல்லாம் டூர் சம்பந்தப்பட்டது. எங்க பெர்சனல் ஷாப்பிங்குக்காக அமிர்தரஸ் `கிளாக் பஜார்' பகுதிக்குப் போனோம். அப்போ ஒருகடையில, `பொண்ணுங்கலாம் அதிகம் நகை போடாதீங்க, கையில காசு அதிகம் வெச்சுக்காதீங்க. கொஞ்சம் மோசமான ஏரியா இது'னு சிலபேர் எச்சரிச்சாங்க. அந்தக் கடையிலயே எல்லாப் பொருள்களையும் வாங்கிட்டு கவுன்டர்கிட்ட போனா அவங்களும் சொல்லிவச்ச மாதிரி கார்டை ஒத்துக்கலை. அப்புறம் ஏ.டி.எம் தேடி அலைஞ்சா, நாலு தெருவுக்கு ஏ.டி.எம்மை காணோம். கொஞ்ச தூரம் தள்ளி வந்ததும் ஒரு ஏ.டி.எம் தென்பட்டுச்சு. அதிலேயும் பணம் இல்லை. ரூமுக்கு வந்து பணத்தை எடுத்துட்டு போய் கொடுத்ததுக்குப் பிறகுதான் பொருளைக் கொடுத்தாங்க.

அடுத்த நாள் டெல்லிக்குப் போனோம். `கரோல் பார்க்' ஏரியாவுக்கு நண்பர்கள் ஷாப்பிங் பண்ண போனாங்க. அங்க கடையோட முகப்புலேயே `கார்டு வாங்க மாட்டோம்'னு எழுதியிருக்காங்க. தலைநகரம் டெல்லியோட முக்கியமான மார்க்கெட் அது! அங்கேயும் இப்படித்தான் பண்றாங்க. மே 1ல் இருந்து 14 தேதி வரை பல இடங்களுக்குப் போனோம். நான் பார்த்த வரைக்கும் நிறைய தமிழர்கள் அங்க டூர் வந்திருந்தாங்க. இன்னும் நிறையபேர் இங்க இருந்து வடமாநிலங்களுக்கு டூர் போயிட்டு இருக்காங்க. நாங்க ஓரளவுக்குக் கையில காசு இருந்ததால சமாளிச்சுக்கிட்டோம். மத்தவங்க என்ன பண்ணுவாங்க? இனிமே அந்தப் பக்கம் டூர் போறவங்க கையில பணத்தோட போனாதான் சமாளிக்க முடியும். நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதெல்லாம், `நார்த் இந்தியாவுல போற இடமெல்லாம் பணமாதான் வாங்குறாங்களே தவிர கார்டை ஒத்துக்கவே மாட்றாங்க. எந்த கடையிலேயும் ஜி.எஸ்.டி கிடையாது. சரியான பில் தர மாட்றாங்க. அதனால, இந்தமாதிரி வெளிமாநிலங்களுக்கு டூர் போறவங்க தகுந்த முன்னேற்பாடுகளோட போங்க!" எனப் பேச்சை முடித்தார் இளங்கோவன்.