Published:Updated:

`சாலை விபத்துகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம்!’ - தவிர்ப்பது எப்படி?

சிங்கப்பூர்ல சாலை விதிகள் கடுமையானவை. அங்கே எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன தெரியுமா?

`சாலை விபத்துகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம்!’ - தவிர்ப்பது எப்படி?
`சாலை விபத்துகளில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம்!’ - தவிர்ப்பது எப்படி?

`நோய்வாய்ப்பட்டோ, இயற்கையாகவோ... ஏன் சண்டையிட்டோகூட ஒருவர் உயிர் துறக்கலாம். ஆனால், சாலை விபத்தில் இறப்பது என்பது கிட்டத்தட்ட கொலைக்குச் சமம்...’’ - சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சமூக ஆர்வலர் மனம் குமுறிச் சொன்ன வாசகம் இது. எதிர்பாராமல் நிகழ்வதுதான் விபத்து. அதே நேரத்தில், ஒரு குற்றமும் இழைக்காத அப்பாவிகளும் விபத்துகளுக்குப் பலியாவதுதான் சோகம். `தறிகெட்டு ஓடிய லாரி பிளாட்பாரத்தில் ஏறி ஒருவர் பலி’, `டீக்கடைக்குள் பேருந்து புகுந்தது’, `நின்றுகொண்டிருந்த வேன் மீது, லாரி மோதி இருவர் மரணம்...’ இப்படித் தொடர்கிற செய்திகளில் பெரும்பாலும் பலியானவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள்.

பயணம் சுகமானது... உண்மை. இப்போதெல்லாம் அதே பயணம் பயப்படவைத்திருக்கிறது. ஒவ்வொருநாளும் அரங்கேறும் விபத்துகள் பதறவைக்கின்றன. தொடர்நிகழ்வாகவே ஆகிப்போய்விட்டன சாலை விபத்துகள். இவற்றுக்கு `இவையெல்லாம்தான் காரணம்’, `இவர்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், விபத்துகளைத் தடுக்க முடியும்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சட்ட ஆலோசகர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியிடம் விபத்துகள் குறித்துப் பேசினோம்....

``இந்தியாவுல, 2016-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகள்ல ஒன்றரை லட்சம் பேர் இறந்திருக்காங்க. சுமார் ஐந்து லட்சம் பேர் காயம் அடைஞ்சிருக்காங்க. ஒரு நாளைக்கு 1,317 விபத்துகள் நடக்குது. அந்த விபத்துகள்ல நூத்துக்கும் மேற்பட்டவங்க உயிரிழக்கிறாங்க. இதுல அதிகம் விபத்து நடக்குறது உத்தரப்பிரதேசத்துலதான். இரண்டாவது இடத்துல தமிழ்நாடு இருக்கு. தமிழ்நாட்டுல வருஷத்துக்கு 17,200 பேர் இறக்கிறாங்க. மக்கள் தொகையும் விலைவாசியும் உயர்ந்துக்கிட்டே போற மாதிரி விபத்துகளோட எண்ணிக்கையும் அதிகமாகிக்கிட்டே போகுது. இதைத் தடுக்கறதுக்கு அரசும், விதிகளைக் கடைப்பிடிச்சு விபத்துகளைத் தடுக்க பொதுமக்களும் முன்வரணும்.

தமிழ்நாட்டுல சாலை விபத்துகள் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் அதிகம் நடக்குது. கண்ணு மண்ணு தெரியாத வேகமும்,

முன்னால போற வாகனத்தை முந்திக்கிட்டுப் போக நினைக்கிறதும்தான் இதுக்கு முக்கியக் காரணம். கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் புகுந்துடுறாங்க. டூவீலர் ஓட்டுறவங்க பிளாட்பாரத்தைக்கூட விட்டுவைக்க மாட்டேங்கிறாங்க. அவசரமாகப் போகணும்கிறதுதான் எல்லாருடைய நோக்கமாக இருக்குதே தவிர, பாதுகாப்பாக போய்ச் சேரணும்னு யாரும் நினைக்க மாட்டேங்கிறாங்க.  

சிங்கப்பூர்ல சாலை விதிகள் கடுமையானவை. அங்கே விதிகளை மீறுகிறவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலமா வீட்டுக்கே அபராதம் செலுத்தவேண்டிய தொகைக்கான ரசீது போயிடும். அங்கே சி.சி.டி.வி கேமராக்களை உயரமான இடத்துலவெச்சு, வாகன ஓட்டிகளை கண்காணிக்கிறாங்க. ஆனா, நம்மூர்லயோ சி.சி.டி.வி கேமரா இருக்குறதைப் பார்த்தா உடைச்சுடுறாங்க.. சி.சி.டி.வி கேமராக்களை அரசு முறையாகப் பராமரிக்கணும்; விதிகளை மீறுறவங்களுக்கு தண்டனை தரணும். சாலை விதிகளை மீறுகிறவர்களுக்கு சிங்கப்பூர் மாதிரி, வீட்டுக்கே ஃபைன் கட்டண ரசீது போகணும். தப்பு செஞ்சவர் சமூகத்துல எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், தண்டிக்கத் தயங்கக் கூடாது.

போக்குவரத்துக் காவலர்களும் மாறணும். பொதுமக்களை பயமுறுத்துற மாதிரி நடந்துக்கிறதைத் தவிர்க்கணும். இந்த வருஷம் ப்ளஸ் டூவுல 1,024 மார்க் வாங்கியிருக்கிற தினேஷ், அவனோட அப்பா குடிப்பழக்கத்தை கைவிடணும்கிறதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டான். குடி அவ்வளவு மோசமானதாக இருக்கு. குடிச்சிட்டு, வண்டி ஓட்டுறவங்களுக்கு கடுமையான தண்டனைகளைக் கொடுக்கணும்..

தொழில்நுட்பரீதியாகவும் நாம முன்னேற வேண்டியிருக்கு. ஆன்லைன் மூலமாகவே எல்லாத்தையும் நடைமுறைப்படுத்தணும். வெளிநாட்டுலல்லாம் லைசென்ஸ் வாங்குறதுகூட ஆன்லைன்லதான். அப்படிச் செய்யும்போது ஊழல் தடுக்கப்படும். திறமையான, பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கிடைக்கும். விபத்தையும் தடுக்கலாம். கால் இன்ச் ரோடு, அரை இன்ச் ரோடு... போடுறதையெல்லாம் தவிர்க்கணும். சாலையை உறுதியாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத மாதிரியும் அமைக்கணும். இதையெல்லாம் அரசு செய்யலைன்னா, அதைக் கேள்வி கேட்க பொதுமக்கள் முன்வரணும். கேள்வி கேட்க ஆரம்பிச்சாலே, விடிவு தன்னால வந்துடும்.  விபத்துகளையும் தவிர்க்க முடியும்” என்கிறார் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி.

இதுபற்றி மனநல மருத்துவர் அசோகன் கூறுகையில் ``சமூகத்துல பெரிய ஆளாகக் காட்டிக்கணும்ங்கிற ஆசை, யூத் மத்தியில இருக்கு. அதனாலயே, பைக்குல வேகமாப் போறாங்க. அதை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாக்கள்ல வெளியிடுறாங்க. இதைப் பார்க்கிற மத்த இளைஞர்களும் அதை முயற்சி செஞ்சு பார்த்து, ஆபத்தைத் தேடிக்கிறாங்க. மத்தவங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துறாங்க. இன்றைய தலைமுறை, ‘வேகம், விவேகம் இல்லை’ங்கிறதைப் புரிஞ்சிக்கணும்.  

இளைஞர்களுக்கு சுயக்கட்டுப்பாடும் சமூகக் கட்டுப்பாடும் அவசியம். வெளியே போறப்போ, வீட்டுல இருக்குற லைட்ஸை அணைக்க மாட்டாங்க. அம்மாவோ, யாரோ அதைப் பார்த்துப்பாங்கங்கிற அலட்சியம் காரணம். இதுக்குக் காரணம் சுயக்கட்டுப்பாடு இல்லாததுதான். இதுதான் பைக்குல ஏறி, ரோட்டுல போறப்பவும் நடக்குது. சுயக்கட்டுப்பாடு இல்லாததால, சமூகக் கட்டுப்பாடும் இல்லாமப் போயிடுது. இதுதான் விபத்துல போய் முடியுது.

ரோட்டுல மற்ற வாகனங்களை முந்திக்கிட்டுப் போறதையும், சிக்னல்ல விதிகளை மீறுறதையும் தவிர்க்கணும். பாட்டுக் கேட்டுகிட்டோ, படம் பார்த்துக்கிட்டோ வண்டி ஓட்டுறது தவறானது. அதேபோல மொபைலில் கூகுள் மேப்பைப் பார்த்துக்கிட்டே கார் ஓட்டக் கூடாது.

நெடுந்தூரப் பயணத்துல டிரைவர்கள் வயிறுமுட்டச் சாப்பிடக் கூடாது. தூக்கம் தர்ற உணவுகளையும் சாப்பிடக் கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில வாகனங்களை நிறுத்தி, கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிட்டு, மறுபடியும் பயணத்தைத் தொடரலாம். `ராத்திரி கிளம்பினா ட்ராஃபிக் இருக்காது’னு நினைச்சுக்கிட்டு தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வண்டி ஓட்டக் கூடாது. மனிதனுக்குச் சராசரியாக எட்டு மணி நேர உறக்கம் தேவை. அது நடக்காதப்போ, உடலும் மனமும் கட்டுப்பாட்டுல இருக்காது” என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.  

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் பயணங்களைத் திட்டமிட்டு, சாலை விதிகளைக் கடைப்பிடித்து, சீரான வேகத்தில் காரைச் செலுத்தினால் மட்டுமே பயணம் இனிக்கும். பின்பற்றுவோமா?