Published:Updated:

கம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா?

கம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா?
கம்ப்யூட்டர் ரெஃப்ரெஷ் தெரியும்... மனிதனுக்கான ரெஃப்ரெஷ் பட்டன் எது தெரியுமா?

அதீத ஒளியினால் விழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் அந்தச் சமயத்தில் இமைகள் அடிக்கடி சிமிட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டு காரணங்களே கண்சிமிட்டலுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

மனிதன் ஜீவித்திருப்பதற்குத் தேவை சுவாசம். நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், சுவாசிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டே சுவாசிப்பதில்லை. அது, நம்மையும் மீறி நாமறியாமலே மூளை நிகழ்த்தும் ஒரு நிகழ்வு. அதைப்போலத்தான் கண்சிமிட்டலும். நாம் எந்த அளவுக்கு சுவாசிக்கிறோமோ, அந்த அளவுக்கு கண்சிமிட்டுகிறோம். கண்சிமிட்டாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அது ஏன்? இமைகள் அவ்வாறு சிமிட்டிக்கொண்டே இருப்பது எப்படி?

சராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் 12 முறையேனும் கண்களைச் சிமிட்டுகிறான். அதன்மூலம், அன்றைய நாளின் 10 சதவிகித விஷயங்கள் நமது பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. உதாரணமாக, நாம் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில், நாம் இமைகளைச் சிமிட்டும்போது கண்பார்வையில் விழாத காட்சிகளைப் பற்றி ஏன் நமது சிந்தனை செல்வதில்லை.  நமது மூளையில், சிமிட்டும்போது ஏற்படும் இருட்டு உணரப்படுவதே இல்லை. ஏன்?

கண்சிமிட்டுவதன்மூலம் நமது விழியோரங்களில் இருக்கும் சுரப்பிகளில் சில திரவங்களைச் சுரந்து கண்களின் ஈரப்பதம் வற்றிப்போகாமல் பாதுகாக்கிறது. தூசிகள் பரவினால், இமைகள் உடனடியாக மூடி, அந்தத் தூசிகள் கண்களைத் தாக்காமல் பாதுகாக்கிறது. இமைகள் கூர்மையான ஓரங்களில் இருந்தே முதலில் மூடத்தொடங்கும். அங்குதான் விழிகளுக்கான திரவத்தைச் சுமக்கும் சுரப்பிகள் உள்ளன. உற்றுக் கவனித்தால், இமைகளை மூடும்போது ஓரங்களில் மெல்லியதொரு அழுத்தத்தை நம்மால் உணரமுடியும். அந்த அழுத்தம்தான், திரவம் சுரப்பதற்குத் துணைபுரிகின்றன. ஒவ்வொரு சிமிட்டலும் விநாடியில் 10ல் ஒரு மடங்கு நேரம் மட்டுமே நீடிக்கும்.

அந்த வேகம், மரத்தில் சிக்கும் பட்டங்களைப் போல தூசிகளை இமைகளின் ஓரங்களில் சிக்கவைத்துவிடுகின்றன.  அதேபோல, அதீத ஒளியினால் விழிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும், அந்தச் சமயத்தில் இமைகள் அடிக்கடி சிமிட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும், கண்சிமிட்டலுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

செயல்பாடுகள் தடைப்பட வேண்டும். அப்படி எதுவும் நிகழ்வதாக யாரும் உணர்வதில்லை. அது மட்டுமின்றி, இமைகளைச் சிமிட்டும் அந்தச் சமயங்களில் குருடாகிவிடுவதை ஏன் நாம் உணர்வதில்லை. ``இது என்ன பிரமாதம், நாம் சிமிட்டுவதோ நொடிக்கும் குறைவான நேரம். அதனால்தான், அதை நாம் உணர்வதில்லை" என்று நீங்கள் கூறுகிறீர்களா? ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதையும் தாண்டிய ஆழமான காரணமும் உண்டு.

நம்மை முட்டாளாக்குவதில் நமது மூளைக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியவில்லை. இதைப் பல விஷயங்களில் கவனிக்கலாம். முன்பின் பார்த்திராத ஒருவரையோ, ஓர் இடத்தையோ எங்கோ பார்த்திருப்பதாகக் கூறி நம்மை ஏமாற்றிக் குழம்பச் செய்வதிலிருந்து நடந்தது கனவா நிஜமா என்ற குழப்பங்களை ஏற்படுத்து வரையிலும் பல்வேறு வகையில் நம்மோடு கண்ணாமூச்சி ஆடுவது அதன் வாடிக்கையான விளையாட்டுகள். அதேபோல, கண் சிமிட்டலிலும் நமக்குத் தெரியாமலே சில வேடிக்கைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.

கண்சிமிட்டும்போது நாம் ஏன் அதை உணர்வதில்லை என்பதைக் கண்டறிய 10 நபர்களைக்கொண்டு ஆய்வொன்று நடத்தப்பட்டது. அதில், 10 பேருக்கும் மிஸ்டர் பீன் நிகழ்ச்சியைப் பார்க்கவைத்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்களது மூளையின் செயல்பாடுகள் காந்த அதிர்வலைகளின்மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது. அதன்மூலம், மூளையின் மேல்பகுதியை மூடியிருக்கும் கார்டெக்ஸின் (Cortex) செயல்பாடுகளை டிகிரி டிகிரியாகக் கணக்கெடுத்தார்கள். நிகழ்ச்சியின் மீதான அவர்களது கவனம் குறையும் மற்றும் தடைப்படும் சமயங்களில், அவர்களையும் அறியாமல் கண்களைச் சிமிட்டினார்கள்.

அவர்கள் சிமிட்டும் சமயங்களில் மூளையின் செயல்பாடு திடீரென்று தடைப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆக, அவர்கள் சிமிட்டும்போது நடந்தவையோ இமைகளை மூடியதால் உண்டான இருட்டையோ அவர்களால் உணரமுடியவில்லை. புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு முற்றுப்புள்ளிக்கும் இடையே நாம் கண்சிமிட்டுவோம். அதற்குக் காரணம், நமது மூளையால் நீண்டநேரம் ஒரே பகுதியைக் கவனித்துக்கொண்டிருக்க முடியாது. ஆகையால், கவனம் தடைப்படும்போது அது தன்னைத்தானே புத்துணர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்வாறு செய்துகொள்கிறது.
அதாவது, கணினியை ரீஃப்ரெஷ் ( Refresh) செய்வோமல்லவா! அதைப் போல. இமைகள் கடினமான செயல்களில் இருக்கும் நமக்கு அவ்வப்போது சிறிது இடைவேளையைத் தருகிறது. நீண்ட நேரம் ஒரு செயலின்மீது கவனம் செலுத்தியிருந்து சோர்வடையும்போது, நாம் வழக்கத்தைவிட அதிகமாகக் கண்களை சிமிட்டுவதும் அதற்காகத்தான். மூளை தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ள அந்தச் சிமிட்டல்கள் அதற்குத் தேவையாக இருக்கிறது.

ஆக, கண்சிமிட்டும்போது மூளை தனது செயல்பாடுகளை அனைத்துவிட்டுத் தொடங்குகிறது. அதனால்தான் அந்த இருட்டும் அந்தச் சமயத்தில் நம் கண்ணில் இருந்து மறையும் நிகழ்வுகளும் மூளையை எட்டுவதில்லை. இமைக்கும் முன்பு மூளையில் என்ன பதிவானதோ, அதே நிகழ்வில் இமை திறக்கும்போது தொடங்குவதால்தான்,  நடைபெறும் வித்தியாசங்களை நம்மால் உணர முடிவதில்லை. 

இந்தக் கட்டுரை படித்து முடிப்பதற்குள் நீங்கள் எத்தனை முறை கண் சிமிட்டினீர்கள் என எண்ணிப் பார்த்தீர்களா ?

அடுத்த கட்டுரைக்கு