Published:Updated:

வாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்?

நிஜ பாம்பை வைத்துப் பூஜை! நடந்தது என்ன?

வாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்?
வாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்?

டலூரில் தன் பெற்றோரின் ஆயுளைக் கூட்ட, நாக பூஜை செய்த மகன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடலூரிள்ள கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்துவருகிறார். தன் தந்தைக்கு எண்பது வயது முடிந்ததையொட்டி சதாபிஷேக விழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தார். உற்றார், உறவினர்களை எல்லாம் பூஜைக்கு அழைத்த கையோடு, நாகபூஜை நடத்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்று கருதி நாகபூஜை நடத்தவும் முடிவுசெய்தார். அதிலென்ன தவறிருக்கிறது நாகபூஜை என்பது பொதுவாக அனைவரும் செய்வதுதானே? அவர் நாகத்தின் சிலையையோ, நாகத்தின் உருவத்தையோ வைத்து பூஜை செய்யவில்லை... உண்மையான நாகத்தை வைத்தே பூஜை செய்திருக்கிறார். அந்த பூஜை தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பரவ ஆரம்பித்தது.

சுந்தரேசனின் பெற்றோர் மாலையும் கழுத்துமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே பூஜை நடத்தப்படுகிறது. புரோகிதருக்கு எதிரே பாம்பாட்டியின் துணையோடு ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. அடிக்கடி புரோகிதர் இருக்கும் திசையைப் பார்த்து தரையில் கொத்துகிறது. பாம்பாட்டி அதன் கவனத்தைத் திருப்புகிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிறது பாம்பு, மீண்டும் பாம்பாட்டி இருக்கும் திசையில் தரையில் கொத்துகிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோக் காட்சி. பூஜைக்கு வந்த உற்றார், உறவினர்கள் இதை முழுவதுமாக வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் பரவவிட்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் முதலில் வைரலான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் வைரலாகிப் போனது. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக புரோகிதர் சுந்தரேசனைக் கைது செய்திருக்கிறார்கள்.

`அனுமதியில்லாமல் காட்டு விலங்குகளை எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது’ என்று வனத்துறைச் சட்டம் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் புரோகிதர் சுந்தரேசன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

முதலில் சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை அவசியம்தானா? சிவாச்சாரியார்களிடம் கேட்டோம்...

``சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை நடத்துவதென்பது எந்தச் சம்பிரதாயத்திலும் இல்லை. `கோபூஜை’, `கஜ பூஜை’ செய்வதுதான் வழக்கம்.

மகாலஷ்மியின் வடிவமாக இருப்பதால், கோபூஜை அவசியம் நடத்தப்பட வேண்டும். கோயிலில் நடத்தினால், கஜபூஜையும் செய்யலாம். நாகதோஷம் உள்ளவர்கள்தாம் நாகபூஜை செய்ய வேண்டும். அதிலும் நிஜ நாகத்தை வைத்து பூஜை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட உருவங்களை வைத்துதான் செய்ய வேண்டும். அதுவுமே இல்லாத பட்சத்தில் அரிசி மாவில் சர்ப்ப உருவத்தைப் பிடித்து பூஜை செய்யலாம். உருவங்கள் என்றால் உண்டியலில் போட்டுவிட வேண்டும். மாவில் செய்தது என்றால், புனிதத் தீர்த்தங்களில் கரைத்துவிடவேண்டும். சர்ப்ப தோஷத்துக்குப் புகழ்பெற்ற காலஹஸ்தியிலேயே நாகத்தை வைத்து பூஜை செய்யப்படுவதில்லை. சங்கரன்கோவிலும் நாகதோஷ தீர்த்தத் தலம்தான். இங்கேயும் அந்த வழக்கமில்லை.

கடலூரில் நடந்த சம்பவம் விளம்பரத்துக்காக, அவருக்குப் புகழ் கிடைக்க வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அதை வீடியோ எடுத்துப் பரப்பியிருக்கிறார்கள். அது அவர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது’’ என்கிறார் சிவராஜ பட்டர்.

``இதற்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை. சதாபிஷேகத்துக்கும் சர்ப்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றுதான்’’ என்கிறார் கணேச சிவாச்சார்யார்.

கடலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்

"யானை, பாம்பு போன்ற வன விலங்குகளை இப்படித் துன்புறுத்துவது சட்டப்படிக் குற்றம். வனத்திலிருந்து விலங்குகளை அழைத்துவருவதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும். அதுவும் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். எத்தனை நாள்கள், எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை முறையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட வன அலுவலரிடமும் அனுமதி பெறவேண்டும். பாம்பு ஏற்பாடு செய்துகொடுத்த புரோக்கரைத்தான் இப்போது தேடி வருகிறோம். அவரைக் கைது செய்து விசாரித்தால்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்’’ என்கிறார் ராஜேந்திரன்.