Published:Updated:

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரி என்றாலே கடற்கரை, காந்தி சிலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் மாத்ரி மந்திர் இவை மட்டும்தான் சுற்றுலாத்தளங்கள் என அனைவரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆரோவில் மாத்ரி மந்திர் தவிர்த்து, மேற்கண்ட அனைத்து இடங்களும் 100 முதல் 200 மீட்டருக்குள்ளேயே முடிந்துவிடுவதால், `பாண்டிச்சேரி இவ்ளோதானா... பார்க்க வேறு இடங்கள் இல்லையா?' என ஆர்வமிகுதியில் கேட்பர், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் மகிழ்விக்கும்விதமாக இருக்கும் இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஊசுடு ஏரி:

புதுச்சேரியிலிருந்து 10 கிலோமீட்டரில் வழுதாவூர் சாலையில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஏரி. புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியான இது, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான அரிய வகைப் பறவைகள் இங்கு படையெடுக்கும். அதில் குறிப்பிட்ட சில பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவே இங்கு வருகைபுரிவது சிறப்பு.

ஏரியின் நீர், குளு குளுக் காற்று என அனைத்தும் மனதைக் கொள்ளை கொள்ளசெய்யும் அம்சங்கள். சறுக்குமரம், ஊஞ்சல் எனக் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களும் உண்டு. ஏரியின் கரைகளில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து, ரம்மியமான சூழலையும் கலர் கலரான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். இங்கும் படகு சவாரி உண்டு என்பதால், ஏரியை முழுவதுமாக வலம் வரலாம்.

புதுச்சேரி-திருக்கனூர் செல்லும் பேருந்துகளில் 30 நிமிடப் பயணம்.

சுண்ணாம்பாறு படகு இல்லம் – பாரடைஸ் பீச் :

புதுச்சேரி-கடலூர் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் அமைந்திருக்கும் சிறு தீவைப் போன்ற இடம்தான் `பாரடைஸ் பீச். 10 நிமிடப் படகுசவாரியில் அந்தத் தீவின் அழகை ரசிக்கலாம். ஃபேமிலியோடு உருட்டி விளையாடும் அளவிலான மெகா சைஸ் பலூன், குழந்தைகள் ஏறி விளையாடும் `மிக்கிமவுஸ் பெட்’ போன்றவை இருப்பதால், குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கேரன்டி. சுற்றுலாத் துறையின் ஹோட்டல் அங்கேயே இருப்பதால், நோ சாப்பாட்டு டென்ஷன். மாலை 6 மணிக்குமேல் பாரடைஸ் பீச்சில் அனுமதி கிடையாது. இங்கு மற்றொரு சிறப்பம்சம், மிதக்கும் படகு வீடு. மூன்று ஏசி அறைகளைக்கொண்ட இந்தப் படகு வீடு, பகல் முழுவதும் பாரடைஸ் பீச்சைச் சுற்றி வந்து இரவில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதனுள்ளேயே உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்தும் உண்டு. அதிகாலையில் சூரிய உதயத்தை சுண்ணாம்பாற்றில் மிதந்துகொண்டே காணலாம்.

பஸ் ரூட்: புதுச்சேரி-கடலூர் செல்லும் பேருந்துகளில் 15 நிமிடப் பயணம்

தாவரவியல் பூங்கா:

இந்தியாவின் சிறந்த தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு அரியவகை மரங்களையும் தாவரங்களையும்கொண்டிருக்கும் இந்தப் பூங்கா, 1826-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. பூங்காவினுள் நுழைந்ததும், அமைதியும் ரம்மியமும்  நிரம்பியிருப்பதை உணர முடியும். மீன் கண்காட்சியகம், இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடும் நீரூற்று, பாறைகளுடன்கூடிய ஜப்பான் தோட்டம், அல்லி குளம் போன்றவை அவசியம் கண்டு ரசிக்கவேண்டியவை.

இதனுடன் குழந்தைகளைக் கவரும் மற்றொரு சிறப்பம்சம், இதற்குள் இயக்கப்படும் ரயில்தான். அதில் அமர்ந்துகொண்டு ஒட்டுமொத்தப் பூங்காவையும் சுற்றி வந்து ரசிக்கலாம். பல்லாயிரம் வருடப் பழைமையான கல்மரங்கள், பூங்காவின் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான `லைஃப் ஆஃப் பை' (Life of Pie) படத்தின் பெரும்பாலான பகுதி இங்குதான் எடுக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் செல்பவர்கள், பாரிஜாதம் மற்றும் செண்பகமரங்களில் பூக்கும் பூக்களின் நறுமணத்தை உணரலாம். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் இங்கு வேளாண் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவுக்கு ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம்.

பஸ் ரூட்: 10 நிமிட நடைப்பயணம் அல்லது 7 ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.

பாரதியார் இல்லம்:

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் மகாகவியும் பெண்ணுரிமைப் போராளியுமான பாரதியார், பிரிட்டிஷார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தஞ்சமடைந்தார். 1908 முதல் 1918 வரை இங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த பத்து ஆண்டுகளில்தாம் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற, காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்தார். பிரெஞ்சு கட்டடக்கலையுடன் அமைந்துள்ள அவர் தங்கியிருந்த வீட்டை, அருங்காட்சியமாகவும் நூலகமாகவும் பராமரித்துவருகிறது புதுச்சேரி அரசு. பாரதி தன் கைப்பட எழுதிய கவிதைகள், கட்டுரைகள், மனைவி செல்லம்மாவுக்கு எழுதிய கடிதங்கள், அவரின் அரியப் புகைப்படங்கள் என, பல பொக்கிஷங்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு, பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடத்திலும், கடற்கரைச் சாலையிலிருந்து 5 நிமிடத்திலும் சென்றடையலாம்.

அரிக்கன்மேடு:

உலகத் தொல்பொருள் வரலாற்றில் தவிர்க்கவே முடியாதது அரிக்கன்மேடு. இந்தப் பகுதி புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் காக்காயந்தோப்பில் அமைந்துள்ளது. ``ஹராப்பா நாகரிகத்தோடு தொடர்புடைய இந்தப் பகுதி, சுமார் 2,500 வருடத்துக்கு முன்னர் மிகப்பெரிய கப்பல் துறைமுகமாக விளங்கியது'' என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது அரிக்கன்மேடு. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 21 ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தியிருக்கிறது தொல்லியல் துறை. இங்கு செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கல் சுவர்கள், ஈமத்தாழிகள், உறைகிணறுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வாணிபத்தலமாக விளங்கியது இந்தப் பகுதி.

ரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் உருவம் பொதித்த தங்க நாணயம், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோமானியர்களின் தொழில் தொடர்புகொண்ட புதைப்பொருள்கள் கிடைக்கும் ஒரே இடம் அரிக்கன்மேடுதான் என்பதால், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதல் சாய்ஸாக இருக்கிறது இந்த இடம். அகழ்வாராய்ச்சியின் மூலம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி அருங்காட்சியகம்:

அருங்காட்சியகம் செயல்படும் கட்டடமே சிறப்பு வாய்ந்த ஒன்றுதான். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் பாரதி பூங்காவின் எதிரே உள்ளது. சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரியில் 1673-ம் ஆண்டு கால் பதித்தனர். அதன் பிறகு 1983-ம் ஆண்டு அருங்காட்சியகமாக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 2000 வருடத்தின் பழைமையான பொருள்களும், புராதனக் காலத்துச் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, முற்கால பல்லவ கருங்கல் சிற்பங்களான மகிஷாசுரமர்த்தினி, சுப்பிரமணியர் மற்றும் சங்ககால புத்தர் சிலை, தட்சிணாமூர்த்தி, சூரியத்தேவர் போன்றவை இங்கு இடம்பெற்றிருக்கின்றன. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ரோமானியப் பானை ஓடுகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், சங்கு மற்றும் தந்தத்தால் ஆன மணிகள், கிரேக்கச் சின்னம் அமைந்த படிக்கல், சுடுமண் காதணிகள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `புஸ் புஸ்’ என்ற தள்ளுவண்டி, கோச்வண்டி, பல்லக்கு, மாட்டுவண்டி, கற்காலத்தைச் சேர்ந்த கோடரி, கிருஷ்ணய்யர் கைப்பட பனை ஓலையில் எழுதிய அருணகிரி புராணம், இருக்கையுடன்கூடிய முதுமக்கள் தாழி என வரலாற்றுப் பொக்கிஷங்கள் இங்கு குவிந்துகிடக்கின்றன.

பாரதிதாசன் இல்லம் :

`புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று பாடியவரும், மகாகவி பாரதியிடம் அளவுகடந்த அன்புகொண்டவருமான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், 1945-1964 வரை பெருமாள் கோயில் வீதியில் எண்:95 கொண்ட இல்லத்தில் வாழ்ந்தார். தமிழின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட பாவேந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும்விதமாக அவர் கைப்பட எழுதிய பிரதிகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இந்த இல்லம் திறந்திருக்காது.

சண்டே மார்க்கெட் :

புதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று, சண்டே மார்க்கெட். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்தச் சந்தை, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே இயங்கும். 1974-ம் ஆண்டு எண்ணிக்கையில் 40 கடைகளுடன் தொடங்கிய இந்தச் சந்தை, தற்போது 1,500 கடைகளாக விருத்தியடைந்து பிரபலமாக இயங்கிவருகிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், சென்னை, திருச்சி, திண்டிவனம், பெங்களூரு என அனைத்துப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் சண்டே மார்க்கெட்டில் கடைகள் வைக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சண்டே மார்க்கெட் களைக்கட்டும்.

பெண்களுக்கான நவநாகரிக உடை வகைகள், அழகுசாதனப் பொருள்கள் இங்கு மிக மிகக் குறைவான விலையில் கிடைப்பதால், காலை முதல் மாலை வரை பெண்களின் கூட்டம் இங்கு அலைமோதும். 500 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போனும், 50 ரூபாய்க்கு ஐ-போனுக்கான சார்ஜரும் இங்கு கிடைக்கும். அனைத்து நாட்டின் தபால்தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இங்கு கொட்டிக் கிடக்கும் என்பதால், அவற்றைச் சேகரிப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். 200 முதல் 500 வருடப் பழைமையான பொருள்கள்கூட இங்கே சர்வ சாதாரணமாகக் குறைந்த விலையில் கிடைப்பதால், வெளிநாட்டவரும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்த வீதியில் நடந்துகொண்டிருப்பார்கள்.

"எதை எடுத்தாலும் 10 ரூபாய்” என்ற குரல் கேட்கும் இடத்தில் நுழைந்தால், வெறும் 100 ரூபாயில் உங்கள் வீட்டு கிச்சனில் பாதியை நிறைத்துவிடலாம். புராதனப் பொருள்கள், அந்தக் காலத்து கேமராக்கள், 200 வருடப் பழைமையான பைனாக்குலர் போன்றவை சர்வ சாதாரணமாக விலைபேசி வாங்கலாம். மிகவும் பழைமையான புத்தகங்கள், அச்சிடுவதையே நிறுத்தப்பட்ட புத்தகங்கள், மருத்துவ, பொறியியல் புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கலாம். லூயி பிலிப், பீட்டர் இங்கிலாந்து, ஆரோ போன்ற பிராண்டட் சட்டைகளைக்கூட 200-300 ரூபாயில் இங்கு வாங்கலாம். குழந்தைகள், பெரியவர்களுக்கான ஆடைகள், செருப்புகள், பழைய எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் என அனைத்தையும் இங்கே வாங்கலாம்.

அறிவியல் கோளரங்கம்:

விமானதள சாலையில் குளூனி பள்ளி அருகில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது டிஜிட்டல் கோளரங்கம் மற்றும் அறிவியல் பூங்கா. புதுச்சேரி கடல்நீரில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் அவற்றின் தன்மைகளையும் இங்கு கண்டு உணரலாம். கடற்சூழல், கடல் பல்லுயிரியாக்கம், கடல் வளங்கள், கடல் வளத்தில் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் சுற்றுலா என 300 சதுரமீட்டர் பரப்பளவில் இந்தக் காட்சியரங்கம் பிரிக்கப்பட்டிருக்கிறது.

கடலில் 2000 அடிக்குக் கீழே வெளிச்சமா அல்லது இருட்டா? சுறா மீன்கள் டைனோசர்களுக்கு முன்பிருந்தே இருக்கிறதா? நிலம்-கடல் இந்த இரண்டில் எதில் உயிரினங்கள் அதிகம்? கடல்நீரில் வசிக்கும் மீனால், நல்ல நீரில் ஏன் வசிக்க முடிவதில்லை? பவளங்களுக்கு உயிர் இருக்கிறதா? இப்படி பல கேள்விகள், ஆராய்ந்து விடை காண்பதற்காகவே இங்கே காத்திருக்கின்றன. பந்தைச் சுழற்றுவது, தனி ஊசலை ஆடவிடுவது போன்ற பல்வேறு விளையாட்டுகளின் மூலம் அறிவியலின் தத்துவத்தை இங்கே எளிதாக உணரலாம் என்பதால், குழந்தைகளின் குதூகலத்துக்கு இங்கே 100 சதவிகிதம் உத்தரவாதம்.

ஆரண்யா வனம்:

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூத்துறை கிராமத்தில் அமைந்துள்ளது ஆரண்யா வனம். 100 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான மரங்களுடன் அடர்ந்து விளங்கும் இந்தக் காடு, சரவணன் என்கிற தனி மனிதனால் உருவாக்கப்பட்டது. 30 வருடத்துக்கு முன் வெறும் செம்மண் மேடாக இருந்த இந்த இடத்தில், தற்போது சந்தனம், தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கு என சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் அழிந்துவரும் அரிய மரங்களைத் தேடித் தேடிச் சேகரித்து இங்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அடர்த்தியான வனம் என்பதால் முள்ளம்பன்றி, நரி, எறும்புத்தின்னி, முயல் என 50 வகைக்கும் மேலான விலங்கினங்களை தரிசிக்கும் வாய்ப்புள்ளது. இதுதவிர சுமார் 300-க்கும் அதிகமாக பறவையினங்கள் இந்தக் காடுகளின் மரங்களை வசிப்பிடமாகக்கொண்டிருக்கின்றன அவற்றின் ரீங்காரத்தை ரசிக்கலாம். தாவரவியல் அறிஞர்கள், பறவைகள் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இங்கு ஆண்டு முழுவதும் அணிவகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு