பிரீமியம் ஸ்டோரி

பெண்ணுக்கு அழகே கூந்தல்தான். அதிலும் மணப்பெண்ணின் கூந்தல் பளபளப்பாக, மினுமினுப் பாக இருந்தால்தான், அது மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டும். இதற்கென பிரத்யேக டிப்ஸ் வழங்குகிறார், `சென்னை கேர் அண்ட் கியூர் அரோமா’ கிளினிக் நிறுவனர் கீதா அசோக்.
கூந்தல் பளபளப்பாக இருக்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், யாரும் மெனக்கெடுவதில்லை. பொதுவாக தலைமுடி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே ஷைனிங் என்பது சாத்தியம். திரு மணம் ஆவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தலைமுடிக்கு ஸ்பெஷல் கேர் எடுத்துக்கொள்ள வேண்டும். வெறுமனே க்ரீமை தடவி முடியை பளபளப்பாக்க முடியாது. தலைமுடி ஆரோக்கியத்துக்கு லைஃப் ஸ்டைல், உணவு, முடி பாதுகாப்பு போன்றவை தேவை.

பொலிவான கேசம் சாத்தியமே!

தலைமுடி ஆரோக்கியம்

மண்டை ஓட்டின் மேல் உள்ள தோலை `ஸ்கால்ப்’ எனச் சொல்வார்கள். தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஸ்கால்ப் சிறப்பாக இருக்க வேண்டும். முடி கொட்டுவது, பொடுகு, இளம்வயதிலேயே நரைப்பது என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், முதலில் ஸ்கால்ப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

சில சமயங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைமுடி நன்றாக வளராமல் போகலாம். பொதுவாக துத்தநாகம், கால்சியம், புரோட்டீன் ஆகிய சத்துக்கள் உடலில் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இரும்புச்சத்து குறைபாட்டை தவிர்ப்பது அவசியம்.  ஒருநாள் விட்டு ஒரு நாள் நன்றாக தலை குளித்து வந்தால் பிசுபிசுப்பு இல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்

ஸ்கால்ப் ட்ரீட்மென்ட்

50 மில்லி பாதாம் எண்ணெய், 50 மில்லி விளக்கெண்ணெய், 50 மில்லி ஆலிவ் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இரவு உறங்கச் செல்லும்முன் பஞ்சில் எண்ணெயை தொட்டு ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் மைல்டு ஷாம்பு போட்டுக் குளிப்பது நல்லது.

பொடுகு பிரச்னை இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் குளித்து முடித்ததும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். ஒழுங்காக எண்ணெய் தேய்க்காததால் பொடுகு வருகிறது என்பது உண்மைதான். ஆனால்  பொடுகு வந்துவிட்டால், அதை சரிசெய்யாமல் எண்ணெய் தேய்க்கக் கூடாது. பொடுகு வந்த நிலையில் எண்ணெய் தேய்த்தபடி வெளியிடங்களுக்கு சென்றால், தூசிகள் முடியில் ஒட்டிக்கொண்டு மேலும் பொடுகு பிரச்னையை அதிகரிக்கச் செய்துவிடும். ஆகவே, தலைமுடி ஆரோக்கியமாக வளர்ந்த பிறகு ஷைனிங் ஆவதற்கு தேவையான விஷயங்களை செய்யலாம்.

ஷைனிங் டிப்ஸ்

திருமணம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைமுடி ஷைனிங் ஆவதற்கான வேலையைத் தொடங்க வேண்டும். வாரம் ஒருமுறை `ஷைனிங்’குக்காக இயற்கை ட்ரீட்மென்ட்டை வீட்டிலேயே செய்யலாம். இரண்டு மாதத்தில் எட்டு சிட்டிங் ட்ரீட்மென்ட்  செய்யும்போது இரண்டு மாதம் கழித்து தலைமுடி மிகவும் `ஷைனிங்’ ஆக காணப்படும்.

1. அவகேடோ பழத்தை வாங்கி நான்கு நாட்கள் காய வைக்கவும். தோல் பிரவுன் நிறமாகி கனிந்ததும், பழத்தை வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அவகேடோ சாற்றுடன், 10 மில்லி  விளக்கெண்ணெய், 10 மில்லி தேன், மூன்று டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை மூன்று மணி நேரம் ஊறவைத்து தலையில் அப்ளை செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளித்துவிடலாம்.

2. தண்ணீர் சேர்க்காத கெட்டித் தேங்காய்ப் பாலுடன் 20 சொட்டு லாவண்டர் ஆயில், கால் டீஸ்பூன் கிளிசரின் கலந்து முடியில் தடவவும். பின்னர் முடியை அலுமினியம் ஃபாயில் அல்லது ஷவர் கேப்பால் மூடி வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம்.

3. க்ரீன் டீ டிகாக் ஷன் எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு, நாட்டுச் சர்க்கரை ஐந்து ஸ்பூன், இரண்டு கனிந்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்துக் கரைசலை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் இந்தக் கரைசலை எடுத்து தலையில் தேய்த்து அலுமினியம் ஃபாயிலால் (2 முதல் 3 மணி நேரம்) மூடிவிடவும்.

4. செம்பருத்தி  இலையை பால் விட்டு அரைத்து அதனுடன் வெந்தய பவுடர், இரண்டு டீஸ்பூன் தேன், இரண்டு டீஸ்பூன் கிளிசரின் கலந்து தலைக்கு பேக் போடவும். அலுமினியம்  ஃபாயிலால் தலைமுடியை மூடி வைத்து இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கவும்.

முடிக்கான ஷைனிங் ட்ரீட்மென்ட் எடுக்கும்போது  தலைமுடியில் வெயில் அதிகம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அழுக்குகள் அதிகம் சேர்த்தாலோ, சூரிய வெப்பம் அதிகமாக பட்டாலோ தலைமுடியில் இருக்கும் ஃப்ரீ ராடிக்கிள்ஸ் பாதிக்கப்படும். இதனால் முடி கொட்டுவதோடு, முடியின் நிறம் மாறலாம். தலை முடியைப் பொறுத்தவரை கருமையாக இல்லையெனில் ஷைனிங் தெரியாது. எனவே, தலைமுடியின் நிறம் டல்லடித்தால் சிறு  ட்ரீட்மென்ட் மூலம் பிக்மென்டேஷன் பிரச்னையை சரிசெய்யலாம்.

பொலிவான கேசம் சாத்தியமே!

பிக்மென்டேஷன் சரிசெய்ய...

மருந்தகங்களில் ஈவ்னிங் ப்ரிம் ரோஸ் ஆயில் கிடைக்கும். கேப்சூல் வடிவத்தில் இது இருக்கும்.  இரண்டு  கரண்டி தேங்காய்ப் பால் எடுத்து அதனுடன் மூன்று கேப்சூல் ப்ரிம் ரோஸ் ஆயில் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை முடியில் தடவி, நான்கு மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீரைப் பயன்படுத்தி அலச வேண்டும். வாரம் இரண்டு முறை இந்த ட்ரீட்மென்ட் செய்தால், பிரவுன்நிற தலைமுடி கருமை நிறமாகும்.

வெண்ணெயுடன் நாட்டுச் சர்க்கரை, விளக்கெண்ணெய், முலாம்பழம் கலந்து தலைமுடியில் தேய்த்துக் குளித்தால் முடி கருமையாவதுடன் நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.

உணவில் கவனம்

1.  தலைமுடிக்கு தண்ணீர் உரம். தேவையான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் தலைமுடி ஒழுங்காக வளராது. 20 கிலோ எடை உள்ளவர் தினம் 1 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். அதன்படி, 60 கிலோ எடை உள்ளவர் 3 லிட்டர் தண்ணீரும், 80 கிலோ எடை உள்ளவர் 4 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியம்.

2. விட்டமின் ஏ, சி முதலான நுண்ணூட்டச் சத்துக்கள், தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

3. ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, சாத்துக்குடி, கொய்யாப்பழம், தர்பூசணி, முலாம் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

4. வால்நட், பாதாம் மற்றும் உலர்ந்த பழங்களை தினமும் எடுத்துக்கொள்ளவும். உலர் திராட்சையை இரவே  தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் தண்ணீரைக் குடிப்பதோடு திராட்சையையும் சாப்பிடலாம்.

தூக்கமே துணை


தூக்கம்  குறைந்தால் உடலில் மெட்டபாலிஸம் பாதிக்கப்படும். அதன் எதிர்வினைதான் முடிஉதிர்தல். மெலட்டோனின், செரட்டோனின் போன்ற  ஹார்மோன்கள் இரவில்தான் நன்றாக சுரக்கும். எனவே, இரவுத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாமல் இரவில் நேரத்துக்கு தூங்கி காலை எழுவது நல்லது.

- பு.விவேக் ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு