Published:Updated:

அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!
அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

பீச் வெடிங்

பிரீமியம் ஸ்டோரி
அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

வாழ்க்கையின் மிக அற்புதத் தருணமான திருமண நிகழ்வை, பல ஆண்டுகள் கழித்தும் தங்கள் உறவினர்களுடன் நினைவுகூர்ந்து மகிழும் வகையில் ஆடம்பரமாக நடத்த நினைப்பவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அதிலும் அனைவரது ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கவும், விருந்தினர்களின் மனதை கொள்ளை கொள்வதற்கும் சமீபகாலத் தேர்வுதான் ‘பீச் வெடிங்’ எனும் கான்செப்ட். இதுகுறித்த தகவல்களைத் தருகிறார், சென்னை, ‘மேரேஜ் கலர்ஸ் டாட் காம் வெடிங் பிளானர்’ நிறுவனத்தின் நிர்வாகி பிரதியும்னா டி வெங்கட்.

``தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றியுள்ள ஈ.சி.ஆர், மகாபலிபுரம், தனியார் பீச் ஹவுஸ், ரிசார்ட்  போன்ற நகரத்துக்கு அப்பாற்பட்ட அமைதியான, ரம்மியமான கடற்கரை பகுதிகள்தான், ‘பீச் வெடிங்’ கான்செப்ட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ். முக்கியமான உறவினர்களை மட்டும் அங்கு அழைத்துச்சென்று குறைந்தபட்சமாக 2 நாளிலிருந்து அதிகபட்சமாக அவரவர் பட்ஜெட்டைப் பொறுத்து நிகழ்வுகள் பிளான் செய்து கொடுக்கிறோம். சங்கீத், நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள்,மெஹெந்தி ஃபங்ஷன் என ஏராளமான  திருமண நிகழ்வுகள் அங்கே நடைபெறும். இவை அனைத்தும் மறக்க முடியாத சந்தோஷ நினைவுகளாக மனதில் படியும். சென்னை மட்டும் இல்லாம, தேவைக்கும், விருப்பம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலும்கூட இந்த `பீச் வெடிங்’ ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறோம்.

அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

சுமார் 30-40 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மூர் திருமணங்களில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் பலரும், திருமணம் முடிந்ததும் ஒரு சில நாட்கள் திருமண வீட்டில் தங்கியிருந்து மகிழ்ச்சியாக பேசி, விளையாடி, சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். இதனால் உறவுகளின் நெருக்கம் அதிகமானது. ஆனால், தற்போதைய இயந்திரமயமான சூழலில், இதுபோன்ற நிகழ்வுகள் சாத்தியமற்றதாக மாறிக்கொண்டே வருகின்றன. திருமணத்துக்கு வருகை தரும் அனைத்து விருந்தினர்களையும் பரபரப்பான சூழலில் ஒரே சமயத்தில் கவனித்து, அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தி அனுப்புவது என்பதும் சிரமமான காரியம்.

இதற்கு மாற்றானதுதான் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்துச் சென்று பீச் வெடிங் முறையில் திருமணம் நடத்தும் ஏற்பாடு. இதில் இரண்டொரு நாட்களுக்கு உறவினர்கள் அங்கேயே தங்கவைப்பதுடன், அனைவரையும் தனிக்கவனம் செலுத்தி கவனித்து, திருப்திபடுத்தி, பேசி மகிழ்ந்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைக்கலாம். மணமக்கள், மணவீட்டார், விருந்தினர்கள் என  அனைவருக்குமே அது மறக்க முடியாத நிகழ்வாக அமையும். பட்ஜெட், மற்றும் வரவிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பீச் வெடிங்குக்கான இடத்தை மணவீட்டார் தேர்வு செய்து எங்களிடம் சொல்ல, நாங்கள் வேலைகளை ஆரம்பிப்போம்.

அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!
அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

பீச் வெடிங்கில், கடல் தெரியும்படியான மணல் பரப்பில் டென்ட் அமைத்து திருமணத்தை நடத்துவோம். மணமக்கள் வரும் மணல் பாதையின் இருபுறமும் பணிப் பெண்களையோ அல்லது மணமக்கள் உறவினர்களின் குழந்தைகளையோ கொண்டு பூ தூவி வரவேற்கும் சூழல் ரம்மியமாக இருக்கும்.

தவிர, கடலில், படகில் தனித் தனியாகவோ அல்லது இணைந்தோ மணமக்களை மணமேடைக்கு அழைத்துவருவோம். குறிப்பிட்ட உறவினர்களை மட்டும் பெரிய படகில் அழைத்துச் சென்று நடுக்கடலிலேயே என்கேஜ்மென்ட் நிகழ்வை முடித்த திருமணங்களும் உண்டு.
பீச் பகுதியில் திருமணத்தை நடத்தும்போது வெயில், மழை போன்ற இயற்கை காரணிகளையும் கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வோம். மேலும், சிறுவர்கள், பெரியவர்கள் என விருந்தினர்கள் அனைவருக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாகச் செய்துவிடுவோம்.

அலைபோல் அடுக்கடுக்காய் ஆனந்தம்!

இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை நடக்கும் பீச் வெடிங்கில், யோகா மாஸ்டரைக் கொண்டு மணமக்கள் முதல் விருந்தினர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி வகுப்புகளையும், ஸும்பா ஃபிட்னெஸ் மாஸ்டரைக் கொண்டு ஸும்பா பயிற்சிகளையும் வழங்குவோம். பீச் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகளை நடத்தி உறவினர்கள் அனைவரையும் ஆர்வத் துடன் பங்கேற்க வைப்போம். பீச் வெடிங்குக்கு வந்தோம்... சென்றோம் என்றில்லாமல், அனை வரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில், டாஸ்க்கில் கலந்துகொண்டு மகிழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.
கடல் அலைபோல மணமக்கள், உறவினர்கள் என அனைவரின் மனமும் சந்தோஷமாக துள்ளி விளையாடும் வகையில் நிகழ்ச்சிகளைத் நடத்துவோம். குறிப்பாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில், ரிசார்ட்டில் இருந்து பீச் வரை மணமக்களை அழைத்து வருவது, திருமண நிகழ்விடம் முழுக்க மலர் அலங்கார தோரணங்களை அமைப்பது, பல வண்ண மலர்களால் கோலமிடுவது என அந்த இடமே பரவசமாக இருக்கும்.

பொதுவாக, நெருங்கிய உறவினர்களுடன் பீச் வெடிங் முடித்து செல்லும் குடும்பங்கள், பிறகு, தங்கள் ஊரில் அனைத்து சொந்த பந்தங்கள், நணபர்களையும் அழைத்து ரிசப்ஷன் நடத்திக்கொள்வார்கள். திருமணம் மட்டுமின்றி, ரிசப்ஷன், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளையும் பீச் பகுதியில் நடத்தலாம்.’’

அவனும் அவளும்... அலையும் கடலும்... என ரம்மியமான ஒரு டும் டும் டும்!

- கு.ஆனந்தராஜ்
படங்கள் உதவி: வருண்சுரேஷ் போட்டோகிராஃபி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு