Published:Updated:

என் ஊர்!

எனக்கு காமராஜர் பால் வார்த்தார்!

##~##

வெஸ்லி ஹை ஸ்கூல், ராமசாமி கார்டன் தெரு வீடு. இரண்டும்தான் என் கோயில்கள்!'' - தன் பள்ளியைச் சுற்றிப் பார்த்தபடி பெரு மூச்சுடன் ராயப்பேட்டை நினைவுகளைப் பகிர்ந்துகொள் கிறார், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன்.  

 ''அப்பா வாசுதேவன் பெங்களூருக்காரர். அம்மா பத்மாவதிக்குத் திருவண்ணாமலை. எங்களை வெஸ்லி ஸ்கூலில் சேர்க்கவே ராயப்பேட்டைக்கு இடம்பெயர்ந்து வந்தனர். அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இங்குப் புத்தகப் பையும் ஹாக்கி ஸ்டிக்கும் இல்லாத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. அப்பா விளையாட்டு வீரர் என்பதால், அவர் என்னை இந்தப் பள்ளியில் சேர்க்க விரும்பினார். பள்ளி 4 மணிக்கே முடிந்தாலும் இரவு 7 மணிக்குத்தான் வீட்டுக்குக் கிளம்புவோம். அப்போதுகூட 'விளையாடியது போதும் கிளம்புங்க’ என்று வாட்ச்மேன் விரட்டினால்தான் நகர்வோம். வீடு எதிரிலேயே இருந்தாலும் மதிய உணவை கொண்டுவந்து விட வேண்டும். பயங்கர ஸ்ட்ரிக்ட் என்பதையும் மீறி பள்ளிக்கும் எங்களுக்கும் அப்படி ஓர் அந்நியோன்யமான உறவு இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

இந்தப் பள்ளி என்.சி.சி-யில்  இருந்து தேர்வாகி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டது மறக்க முடியாத தருணம். ஒரே ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புடன் ஓட்டை அம்பாசிடர் காரில் வந்து, மாணவர்களுக்குப் பால் தரும் திட்டத்தை அன்றைய முதல்வர் காமராஜர் தொடங்கிவைத்ததும் கனவு போல் நினைவில் உள்ளது. ஸ்போர்ட்ஸில் சிறந்த மாணவன் என்பதால் அலுமினியக் குவளையில்  எனக்குப் பால் கொடுத்துதான் அந்தத்திட்டத் தைக் காமராஜர் தொடங்கிவைத்தார்.

என் ஊர்!

இப்போதும் 'முன்னாள் மாணவர் சங்க’த்தை அமைத்து எங்களால் முடிந்த உதவிகளைப் பள்ளிக்குச் செய்து வருகிறோம்.

அப்போது தியாகராய நகர் செல்ல 13, பிராட்வே செல்ல 21 என இரண்டு பேருந்துகள் மட்டுமே. நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் எந்த ஹாக்கி போட்டியையும் மிஸ் பண்ண மாட்டோம். மணிக்கூண்டு அருகே வந்து நிற்கும் 21-ஐ துரத்தியபடி 50, 60 பேர் கூட்டமாக ஓடத் தொடங்கினால் சென்ட்ரல் எதிரே பேருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும். நாங்கள் இடதுபுறம் விலகி ஓடினால் மூர் மார்க்கெட். அதன் பின்னால் இருப்பது நேரு ஸ்டேடியம். இது ஸ்டேடியம் செல்ல நாங்கள் வகுத்த ஓடு பாதை.

மணிக்கூண்டில் தொடங்கி கண்ணகி சிலையில் முடியும் மராத்தான் போட்டிகள் நினைவுக்குவருகின்றன. மணிக்கூண்டில் இருந்து கடற்கரைச் சாலையை நோக்கிப் பார்த்தால் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால், இன்று ஆக்கிரமிப்புகளால் கோணல்மாணலாகக் காட்சி தருகிறது. இன்றைய உட்லண்ட்ஸ் தியேட்டர் அன்று கிடையாது. அப்போது அது வெறும் ஹோட்டல் மட்டுமே. இந்த ஹோட்டலை ஒட்டி உள்ள முட்டுச் சந்துதான் ராமசாமி கார்டன் தெரு. அப்போது இங்கு எங்கள் வீட்டையும் சேர்த்து மொத்தம் இருந்த 12 வீடுகளில் 85 பேர் மட்டுமே இருந்தனர். இன்று அதே 12 வீடுகள் 12 அபார்ட்மென்ட்களாக உயர்ந்து நிற்கின்றன. அதில் குடியிருப்போர் 1,500 பேர். இந்தச் சந்தில்தான் இரவு 9-ல் இருந்து 10 மணி வரை தினமும் கூட்டமாக ஓடிப் பயிற்சி பெறுவோம். இந்த சந்தில் ஹாக்கி விளையாடுவோம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

என் ஊர்!

'நீங்களும் பெசன்ட் நகருக்கு இடம் பெயர்ந்துவிட்டீர்கள். நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. வீட்டின் அருகே எக்ஸ்பிரஸ் அவென்யூ வேறு. பேசாமல் வீட்டை விற்றுவிடுங்கள்’ எனப் பலர் வரிசையில் வந்து நிற்கின்றனர். மறுத்து வருகிறேன். நான் ராயப்பேட்டைக்காரன் என்று இன்றும் பெருமையாகச் சொல்ல மிச்சமிருப்பது என் வீடும், வெஸ்லி பள்ளியும்தான்!''

- ம.கா.செந்தில்குமார் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்