Published:Updated:

அடிக்கடி வரும் அமெரிக்க அழைப்பு!

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்

##~##

மெரிக்கா, சிங்கப்பூர், மலேசியானு தினமும் நாலஞ்சு பேராவது, 'அய்யா, உங்க கலெக்ஷன் பொக்கிஷம். அதோட மதிப்பு அங்க உள்ளவங்களுக்குத் தெரியாது. அப்படியே என்கிட்ட கொடுத்துடுங்க. குறிப்பிட்ட வருஷத்துக்கு அப்புறம் கோடி கோடியா கொண்டாந்து கொட்டுறோம்’னுசொல்றாங்க. எனக்கு கோடிகள் முக்கியம் இல்லை. என் கலெக்ஷனை நிரந்தர கண்காட்சியா வைக்கிறேன்னு ஜெயலலிதா மேடம் சொல்லிஇருக்காங்கனு மறுத்துட்டு வர்றேன்!'' - பழைய நினைவுகளில் மூழ்கும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு  ஜனவரி 1-ம் தேதி வந்தால் 85 வயது.

 ''எதைக் கேட்டாலும் மறுக்காம வாங்கித் தரும் எங்க அப்பா ஞானசாகரம், ஒரு கேமராவையும் வாங்கித் தந்தார். அதுல நான் எடுத்த சில புகைப்படங்களை என்.எஸ்.கே-வின் 'மணமகள்’ பட கேமராமேன் சி.ஜே.மோகன் பாத்துட்டு, அசிஸ்டென்டா சேத்துக்கிட்டார். ரிலாக்ஸ் டைம்ல ஸடுடியோ, ஃபிலிம் சேம்பர்னு சினிமா சம்பந்தமான ஏரியாவுல கேமராவும் கையுமா சுத்துவேன். 'ஈரங்கி ராமாராவ்’ என்பவர்தான் அப்ப சேம்பர் பொது மேலாளர். சினிமாவைப்பற்றி  ஆழமாத் தெரிஞ்ச மாமனிதர். 'தம்பி, ஒரு வேலை இருக்கு செய்றீங்களா? சென்னையில உள்ள 12 ஸ்டுடியோவில் என்னென்ன ஷூட்டிங் நடக்குது, அந்தப் பட டைரக்டர், புரொடி யூசர், நடிகர்கள் யாருனு தெரிஞ்சுட்டு ஒவ்வொரு மாசமும் 26-ம் தேதி விவரம் தரணும்’னு சொன்னார். இதை 'ஜேனர்ல் ஆஃப் தி ஃபிலிம் சேம்பர்’ என்கிற அவங்களோட பத்திரிகையில வெளியிடுவாங்க.

அடிக்கடி வரும் அமெரிக்க அழைப்பு!

இந்தத் தகவல்கள் தர்ற வேலையை 1954-ம் வருஷம்ஜனவரி மாசம் தொடங்கினேன். இன்னைய தேதி வரைக்கும் அது தொய்வே இல்லாமப் போயிட்டு இருக்கு. அப்பவே 3,000 ரூபா மதிப்புள்ள 'ரோலி ஃப்ளெக்ஸ்’ கேமரா வாங்கி ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த போட்டோக்களுடன் இந்த விவரங்களைச் சேர்த்து கொடுக்க ஆரம்பிச்சேன். இதுக்காகவே ஃபிலிமோகிராஃபி ஃபார்மைத் புதுசா தயார் பண்ணினேன். 'தமிழ்ல பேசும் படங்கள் வரத் தொடங்கிய 1931-ம் வருஷத்துல இருந்து இந்தத் தகவலை சேகரிச்சா என்ன?’னு தோணுச்சு. 'அந்தப் பட ஸ்டில்ஸ் இருக்கு, தகவல் இருக் கு’னு யார் சொன்னாலும் சரி எவ்வ ளவு தூரமா இருந்தாலும் கிளம்பி டுவேன். வெளிநாடுகளில் இருந் தும் புகைப்படங்களை வரவழைச்சி ருக்கேன்.

இந்தப் புள்ளி விவரங்கள் பல சினிமா விழாக்களுக்கு காரணமா இருந்திருக்கு. சிவாஜி சாருக்கு போன் பண்ணி, 'நீங்க தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தினு இந்த 10 வருஷத்துல ஹீரோவா மட்டும் நடிச்சதைக் கணக்கு பண்ணினால் 'நவராத்திரி’ உங்களுக்கு 100-வது படம்’னு சொன்னேன். உடனடியாக விழா ஏற்பாடானது. அந்த விழாவில் அந்த 100 பட ஸ்டில்களை தேடிப் பிடித்து தனி ஆல்பமாக்கி அவருக்குப் பரிசா அளிச்சேன். இந்த மாதிரி பல விழாக்களைச் சொல்லலாம். 'வெண்ணிற ஆடை’ தொடங்கி 'திருமாங்கல்யம்’ வரை ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, சிவகுமார்னு பலருக்கும் 100-வது படங்களை நினைவுபடுத்தி புத்தகங்களைப் பரிசளித்திருக்கேன். சமீபத்தில்கூட சுஹாசினியிடம், 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தொடங்கி நீங்க சினிமாவுக்கு வந்து 25 வருஷமாச்சுன்னேன். 'விழா எடுக்கலாமே’னு சொல்லி அவங்க நடிச்ச எல்லா பட ஸ்டில்ஸையும் வாங்கிட்டுப் போனாங்க.

அடிக்கடி வரும் அமெரிக்க அழைப்பு!

குழந்தையா இருக்கும்போதே ஜெயலலிதா எனக்கு அறிமுகம். மேடம் போன முறை முதல்வரா இருந்தப்ப, 'என் கலெக்ஷன் அழியாமல் காக்க ஏதாவது செய் யுங்க’னு கடிதம் எழுதினேன். இதுவரை வந்த தமிழ்த் திரைப் படங்கள் பற்றிய விவரங்களைப் புகைப்படங்களுடன் தொகுக்க ஐந்தரை லட்சம் கொடுத்தாங்க. 'வேற என்ன செய்யணும்?’னு கேட்டாங்க. என்னிடம் உள்ள புகைப்படங்களை நிரந்தர கண் காட்சியா வெச்சா மத்தவங்களுக்கு பயன்படும்’னேன். 'உங்க பேர்லயே அந்தக் கண்காட்சியை எம்.ஜி.ஆர். ஃபிலிம் சிட்டியி லேயே வெச்சுடலாம்’னாங்க. அதுக்குள்ள அவங்க ஆட்சிக் காலம் முடிஞ்சிடுச்சு. மறுபடியும் இப்ப முதல்வரா வந்திருக்காங்க. கடிதம் எழுதியிருக்கேன். நல்லது நடக்கும்னு காத்திருக்கேன்'' என்ற வர், ''என்னிடம் இருந்து வாங்கிச் செல்லும் புகைப்படங்களைத் திரும்ப எனக்கு தருவதே பெரிய வெகுமதியாக நினைக்கிறேன்னு மறக்காம எழுதிக்குங்க. அப்படியாவது வெளியே போன படங்கள் திரும்புதானு பார்ப்போம்'' என்று சிரித்தபடி வழியனுப்புகிறார்.

-ம.கா.செந்தில்குமார் படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு