Published:Updated:

திடீரென அதிகரித்த CFC வெளியீடு.. மீண்டும் அழிவின் பாதைக்கு செல்கிறதா ஓசோன் படலம்?

திடீரென அதிகரித்த CFC வெளியீடு.. மீண்டும் அழிவின் பாதைக்கு செல்கிறதா ஓசோன் படலம்?
திடீரென அதிகரித்த CFC வெளியீடு.. மீண்டும் அழிவின் பாதைக்கு செல்கிறதா ஓசோன் படலம்?

ஓசோன் என்ற பெயரைக் கேட்டால் ’என்னப்பா ஆச்சு அதுக்கு’ என்று அக்கறையோடு விசாரிப்பவர்கள் இங்கே அதிகம். ஓசோன் என்பதைப் பற்றியும் அது சிதைவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பல வருடங்களாகவே கேள்விப்பட்டதன் விளைவு அது. அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓசோனை பற்றி வெளியான  ஒரு செய்தி பலருக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.

காலம் காலமாக ஒசோனைப் பற்றி மோசமான தகவல்களே வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் இந்த வருடத் தொடக்கத்தில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. ஓசோனின் துளை கடந்த சில வருடங்களில் படிப்படியாகச் சுருங்கியிருப்பதாகக் கடந்த ஜனவரி மாதத்தில் அறிவித்தார்கள். செய்தி வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

சுருங்கிய ஓசோன் துளை - பல வருட முயற்சிக்குக் கிடைத்த பலன்

உலகில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் தேவைப்படுகிறதோ அதைப் போலவே ஓசோன் உருவாகவும் ஆக்ஸிஜன் தேவை. வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் புற ஊதாக்கதிர் மூலமாகவும், மின்னல் போன்றவற்றாலும் உருவாகிறது. ஆனால் இது எளிதாகச் சிதைவடையும் தன்மை கொண்டது என்பதுதான் இதிலிருக்கும் சிக்கல். பூமியைச் சுற்றி சூழ்ந்திருக்கும் இந்த ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை பூமிக்குள் வராமல் தடுக்கிறது. ஆனால் 1980-களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்தப் படலத்தில் துளை விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தென் துருவத்தில் அன்டார்டிகாவிற்கு மேலே இந்தத் துளை ஏற்பட்டிருந்தது. அதன் பாதிப்புகளை உணரத் தொடங்கிய உலக நாடுகள் 1987-ல் மாண்ட்ரியல் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தன. ஓசோன் துளை சிதைவிற்கு முக்கிய காரணமாக இருந்த குளோரோ ஃப்ளோரோ கார்பன் பயன்பாட்டை அந்த ஒப்பந்தம் முழுமையாகத் தடை செய்தது. அதை யாரும் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ கூடாதென தடை விதிக்கப்பட்டது. அதன் விளைவாக 1988-ம் ஆண்டிற்குப் பிறகு ஓசோன் துளையின் அளவு குறைந்திருப்பதை இந்த வருடத் தொடக்கத்தில் கண்டறிந்தார்கள். இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் என்றாலும் அதற்கு சில கால அவகாசம் ஆகும் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியது.

மர்மமாக அதிகரித்த  CFC -11 அளவு

இப்படிப் பல வருட முயற்சியின் விளைவாக குளோரோ ஃப்ளோரோ கார்பனின் வெளியீடு கிட்டத்தட்ட முற்றிலுமாக குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அது மீண்டும் வளிமண்டலத்தில் தென்படத் தொடங்கியிருப்பதாக கடந்த புதன் கிழமையன்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். குளோரோ ஃப்ளோரோ கார்பனின் ஒரு வகையான CFC11 எனப்படும் இந்த ரசாயனத்தின் அளவு திடீரென  அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த ரசாயனத்தை  யாரோ திருட்டுத்தனமாக மீண்டும் உருவாக்கவோ அல்லது பயன்படுத்தவோ தொடங்கியிருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் சந்தேகப்படுகிறார்கள். இந்த CFC11-யானது நுரையை உருவாக்கவும், குளிர்ப்பதன பொருள்களிலும் பயன்படுத்தப்படுவது. இது ஐம்பது வருடங்கள் வரைக்கும் வளிமண்டலத்தில் சிதைவடையாமல் இருக்கும் தன்மை கொண்டது. ஆனால்  இயற்கையால் ஒவ்வொரு வருடமும் இரண்டு சதவிகித ரசாயனங்களை மட்டுமே அப்புறப்படுத்த முடிகிறது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு இது திடீரென எப்படி, எங்கிருந்து வெளியாகியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் இருந்துதான் இது வெளியாகியிருக்கலாம் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் கண்காணிப்பு கருவிகளின் அளவீடுகளை ஆராய்ந்ததன் மூலமாகச் சீனா, மங்கோலியா மற்றும் கொரிய தீபகற்பப்பகுதிகளில் இருந்து இது உமிழப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கித்தாலும் கூட அவர்களால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. "நான்  கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த அளவீடுகளைக் கண்காணித்து வருகிறேன். இத்தனை வருடங்களில் இது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது" என்கிறார் ஸ்டீபன் மான்ட்ஸ்கா ( Stephen Montzka). இவர் அமெரிக்க அரசுக்குச் சொந்தமான தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர் நீண்ட காலமாக ஓசோன் படலம் தொடர்பான ஆய்வில் இருப்பவர். ஓசோன் படலத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடைந்து விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் இந்த புதிய தகவல் அனைவரையும் கவலைக்குள்ளாகியிருக்கிறது.