Election bannerElection banner
Published:Updated:

ஓருடல்... ஈருயிர்!

சிந்திக்க வைக்கும் வாழ்க்கை சிலந்தி

##~##

''காதல், நட்பு, நாட்டுப் பற்றுன்னு பல்வேறு கதைக் களங்களை வெச்சு நிறைய குறும்படங்கள் எடுக்கிறாங்க. அதில் இருந்து விடுபட்டு வித்தியாசமா ஒரு குறும்படம் எடுக்க நினைச்சேன். மேற்கு வங்கா ளத்தில் ஒரு பெண் இரண்டு தலை, நான்கு கைகள், மூன்று கால்களுடன் வசிப்பதாகக்  கேள்விப்பட்டேன். அவருடைய இல்லை... இல்லை... அவங்க மனநிலை, வாழ்வியல் முறை, எதிர்கொள்ளும் சிரமங்களை மையப்படுத்தி  'வாழ்க்கை சிலந்தி’னு  ஒரு குறும்படம் இயக்கினேன்!'' திருப்தியானக் குரலில் ஆரம்பிக்கிறார் இயக்குநர் ராஜேந்திர பாலா!

 கோடம்பாக்கத்தில் சாதிக்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான் ராஜேந்திர பாலா. சொந்த ஊர் கோவை. ''ரொம்ப ஏழ்மையான குடும்பம். ப்ளஸ் டூ படிக்குற வரை வீட்ல கரன்ட் கூட கிடையாது. அதுக்கு மேல படிக்கவும் வசதி இல்லை. கிடைச்ச வேலையைப் பார்த்தேன்.

சின்ன வயசுல இருந்தே சினிமா மேல ஈடுபாடு.  ஒரு படத்தைப் பார்த்தா, வீட்டுக்கு வந்து அந்தப் படத்தோட கதையை மாத்தி அமைச்சு நானே ஒரு புதுக்கதை உருவாக்குவேன். இப்படியே என் சினிமா ஆசை வளர்ந்துச்சு. சுமார் 10 வருஷமா கோடம்பாக்கத்துல வாய்ப்புக்காக அலைஞ்சிட்டு இருக்கேன். நிறைய கதை சொல்லிட்டேன். சரியான வாய்ப்பு அமையலை.

ஓருடல்... ஈருயிர்!

இதுக்கு நடுவுல சில குறும்படங்களை இயக்கினேன். வழக்கமான குறும்படங் களுக்கு மத்தியில புதுசா ஏதாவது செய்யணும்னு தோணிட்டே இருந்தப்பதான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கங்கா முண்டால், ஜமுனா முண்டால் பத்தி கேள்விப்பட்டேன். ரெண்டு தலை, நாலு கை, மூணு கால்.... ரெண்டு உயிர்! ஒரு உடம்பாக இருந்தாலும் அவங்க ரெண்டு பேர். அவங்க முகவரியைத் தேடிப் பிடிச்சு தனி ஆளா மேற்கு வங்காளம் போனேன். கொல்கத்தா தமிழ் சங்கத்தைச் சேர்ந்த ராமைய்யாவின் உதவியுடன் அந்தப் பெண்களைச் சந்தித்தேன்.  

அவங்களை இந்த உலகம் ஒரு அதிசய காட்சிப் பொருளாக... சில சமயம் அரு வருக்கத்தக்கக் காட்சிப் பொருளாக ஏளனமாகப் பார்க்குது. அவங்க வசிக்குற பகுதியில அவங்களைப் பார்த்தா, மக்கள்ஒதுங்கிப் போறாங்க. கேலி பேசுறாங்க. அவங்க வாழ்க்கையையே ஒரு சினிமா ஆக்கலாம்னு விஷயத்தைச் சொன்னேன். ஜமுனா சரின்னுட்டாங்க. ஆனா, கங்கா மறுத்தாங்க. கிட்டத்தட்ட கங்கா என்னை விரட் டாத குறைதான். ரெண்டு, மூணு நாளா அங் கேயே தங்கி, தினமும் அவங்க வீட்டுக்குப் போனேன்.

ஏற்கெனவே பட்ட அவமானங்கள், இந்த சமூகம் காட்சிப் பொருளாகவே  அவங்களைப் பார்த்துக் கேலி, கிண்டல் பண்ணிய கசப்பான அனுபவங்களால் ரொம்பவே காயப்பட்டு இருந்தாங்க. எங்கே நானும் அப்படி அவங்களை நோகடிச்சுருவேனோன்னு அவங்களுக்குப் பயம். ஒரு நாள் கண்ணீர் வழிய அவங்களோட கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துக்கிட்டாங்க. என் நோக்கத்தை நானும் புரியவெச்சேன். அப்புறம் ரெண்டு பேருமே சந்தோஷமா என்னோட ஒத்துழைக்க ஒப்புக்கிட்டாங்க.

கிட்டத்தட்ட 10 நாள் நான் சொன்னபடி எல்லாம்  ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. அவர் களுடைய இயல்பான வாழ்வியல் முறைகளையும்,  உணர்வுகளையும், தினமும் எதிர்கொள்ளும் சிரமங்களையும் படத்துல காட்டி இருக்கேன். கடைசியா அவங்களுக்குச் சம்பளம்னு 30 ஆயிரம் கொடுத்தேன். ஒரு ஏழை இயக்குநரா நான் கொடுத்த பணத்தை அவங்க கண்கலங்கி ஏத்துக்கிட்டாங்க.

அவங்க சம்பந்தப்பட்டக் காட்சிகளை எடுத் துட்டு ஊருக்கு வந்துட்டேன். பாதிப் படத்தை முடிச்சாச்சு. குறும்படம்னு சொன்னாலும் கிட்டத்தட்ட ஒரு சினிமா படம் பார்த்த ஃபீலிங் இருக்கும். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்கிட்ட கதையைச் சொன்னேன். அவர் நெகிழ்ந்துபோய் இந்தக் கதையை ஒரு புத்தகமாகக் கொண்டுவர உதவி செய்யறதா சொன்னார். இன்னும்

ஓருடல்... ஈருயிர்!

75 ஆயிரம் தேவை. ஃபைனான்ஸ் கேட்டு இருக்கேன். கிடைச்சுடும். படத்தை முடிச்சிடுவேன்!'' நம்பிக்கை மிளிர்கிறது ராஜேந்திர பாலாவின் ஒவ்வொரு வார்த்தைகளிலும்!

ம.சபரி, படம்: வி.ராஜேஷ்  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு