Published:Updated:

"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்!" #HBDMohanlal

மணி எம் கே மணி

இன்று தனது பிறந்தநளைக் கொண்டாடுகிறார், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார், மோகன்லால். அவரது திரைப்படங்கள், லாலின் நடிப்பு குறித்த சிறப்புக் கட்டுரை இது.

"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்!" #HBDMohanlal
"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்!" #HBDMohanlal

காற்றத்தே கிளிக்கூடு என்று ஒரு படம். பரதன் இயக்கியது. மோகன்லால் அந்தப் படத்தின் ஹீரோ அல்ல. படத்தில் கோபியின் மனைவி ஸ்ரீவித்யா. அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருக்கிற லால், மெதுவாய் நீங்கள் எனது அம்மாவைப் போலிருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். இறந்துபோன எனது அம்மாவின் குரல்கூட உங்களுடைய குரலைப்போல தானிருக்கும் என்பது போன்ற வசனங்கள். பரதனுக்கு அந்தக் காட்சி கிளிஷேவாகி விடக்கூடாது என்கிற தெளிவிருந்திருக்கலாம். ஆனால், லால் அதை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்கிற சவால் இருக்கிறது அல்லவா?  அப்போது லாலுக்கு இருபத்தி மூன்று வயது. வாழ்வைப் பற்றி என்ன பெரிதாக தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஒரு சிறிதும் நடிப்பை கொண்டு வந்துவிடாமல், அசலான அந்த வயதுப் பையனாகவே அந்த கனமான பத்தியை சொல்லி முடிக்கும்போது பலரும் அடேங்கப்பா என்று நினைத்திருப்பார்கள். நானும் நினைத்தேன்.

அவர் மீது பலரைப் போலவே எனக்கும் ஒரு பார்வை விழுந்தது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அவரது வயதைப் போலவே அவரும் வளர்ந்து கொண்டேயிருந்தார். வானபிரஸ்தம் படத்தில் ஒரு காட்சி உண்டு. ஒரு சிறிய வீட்டின் முற்றம். அங்கே கிடக்கிற ஒரு கயிற்றுக் கட்டிலில் இருந்து தூக்கம் விழித்து எழுந்து அமருகிற ஒரு குடிகாரனான கதகளிக்காரன் முகத்தைக் கொண்டு வருவார் பாருங்கள், முன்பு சொன்ன படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நடுவில் லாலின் எல்லா சாதனைகளும் இருக்கின்றன.

லாலுக்கு இன்று பிறந்த தினம். அவர் அந்த நிலத்தின் சூப்பர் ஸ்டார். ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அவரைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிட்டு அவர் மீது தர்மசங்கடமான கேள்விகளையும் எறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். கேரளம் இன்று புதிய முகம் தரித்திருக்கிறது. புதிய சினிமாக்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. புதிய தலைமுறையின் திரைக்கதைகளில் அவர் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய நடிப்பின் வெளி மிகப் பரந்தது. அவரால் எந்த முகத்துக்குள்ளேயும் புகுந்து நின்று நிலைக்க முடியும். பழைய வார்த்தை, சோபிக்க முடியும். ஒரு பெரிய கலை வாழ்க்கை வாழ்ந்துவிட்ட அந்தக் கலைஞனுக்கு மனம் நிறைந்த நெகிழ்வான வாழ்த்துக்களை மானசீகமாக சொல்லிக்கொள்கிறேன். நம் எல்லோருடைய சார்பிலும்.

சில படங்கள் இருக்கின்றன.

மக்களின் நினைவில் அவர் அந்த வழியேதான் தனது இருக்கைக்கு வந்தார்.

கொஞ்சம் பிக்கல் பிடுங்கல், கொஞ்சம்  இளமையும் உற்சாகமுமாய் ஒரு நகைச்சுவை தொனியில் அந்தப் படங்கள் இருந்தன. அதில் லால் அந்த மாதிரி ஒரு முகத்தை நிறுவி மக்களைக் குஷிப்படுத்தினார். இப்போது பார்த்தாலும் TP பாலகோபாலன் MA வும், வரவேல்பும் அற்புதமான படங்கள்.  அதில் லால் நல்ல திமிறல் கொண்ட பையனாகச் செய்கிற காரியங்கள் கொண்டாடப்பட்டன. அதைப்போன்ற படங்கள் தொடரவும் செய்தன. சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம் போன்ற படங்களில் அட்டகாசம் செய்தார் என்றே சொல்லவேண்டும். இப்படிப்பட்ட படங்களில் இருந்து மெதுவாக அவர் வேறு ஒரு கரையில் ஏறிக்கொண்டும் இருந்தார்.  ராஜாவின்ட மகன் என்கிற தாதா கேரக்டர். சுகமோ தேவி போன்ற ரொமான்ஸ் படம். தாளவட்டம் என்கிற தீவிரமான படம். பத்மமராஜனின் அதிரடியான நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். இவைகள் எதிலும் சம்மந்தப்படாத எம் டி எழுதி ஹரிஹரன் இயக்கிய பஞ்சாக்னி.

நான் அவரது படங்களை வருடம் வாரியாக அடுக்கி வைக்கிற காரியத்தை செய்ய மாட்டேன். ஆனால் அவரை செதுக்கி வழி அனுப்பின, அவருக்கு அடிப்படையாய் இருந்து விட்ட மரபை சொல்லியாக வேண்டும். ஒரு நடிகனுக்குள் திறமை என்பதே அவன் வளர்த்துக் கொள்கிற கற்பனைகள் தான். மலையாளத்தில் நல்ல எழுத்தாளர்களும் நல்ல இயக்குனர்களும் இருந்து, அவர்களுடன் தொழிற்படவே அவர் பல்வேறு கோணங்களில் உலாவத் தெரிகிற திராணியை அடைந்தார் எனலாம். மேலும் மலையாள சினிமாக்களின் பொற்காலமாக குறிப்பிடப்பதுமான அந்த சந்தர்ப்பத்தில்  மம்முட்டி ஒரு போட்டியாய் அமைந்ததும் கூட லாலுக்கு கிடைத்த லாபம் என்றே சொல்ல வேண்டும்.

நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். அதில் ஊரே தூங்கும் போது தனது லாரியில் வந்து இறங்கி வீட்டில் இருந்த அம்மாவைத் தட்டியெழுப்பி ஓன்று விட்ட உறவினனுடன் உணவுண்டு அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றி விசாரிப்பது என்று தொடருகிற காட்சியில், பத்மராஜன் மிளிரவே செய்வார்.  ஆனால், உழைப்பில் திருப்தியடைந்த தன்னம்பிக்கையின் செருக்குடன் லால் அந்தப் படம் முழுக்க உலவுவதைப் பார்க்க வேண்டும். நிஜமாகவே வியப்பு. அது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாத நடைமுறை. அப்படித்தான் பரதனின் தாழ்வாரம் படமும்கூட. அதில் நான் மிகவும் விரும்பும் சலீம் கவுஸ், லாலின் பகுதி ஆளாக இருந்து, எதிரியாகவும் இருப்பார். உண்மையில் இருவருக்கும் நடுவே எழும்பும் பகைமை அதி உக்கிரம் கொண்டது. பொங்கி எரிய வேண்டிய நெருப்பை பலமாகப் பொதிந்து மறைப்பது போன்ற ஒரு திரைக்கதை. சலீம் தனது செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வெளி இருக்கும். ஆயின் லால் அமைதியாகவே இருக்க வேண்டும் என்பது சூழல். அந்த மகத்தான நடிகன் சலீமுக்கு முன்னால், குமுறலில் இருக்கிற லாலை மக்கள் அறிந்தார்கள் என்பதை மட்டுமே சொன்னால் போதும். அவர் மல சிக்கலின் முக சுருக்கத்தைக் காட்டாமலே ஜனங்களைக் கொதிப்பூட்டினார். சலீமைக் கொன்று முடித்து லால் செல்லுகிற அந்த பிரேமில் நமக்குள் நிறைகிற அந்த திருப்தியை வர்ணிக்க முடியாது.

சதயம் என்கிற மிக தீவிரமான படம் ஓன்று உண்டு. எம் டி தான் எழுதினார் இதற்கும். எப்படி தனியாவர்த்தனம் என்கிற படம் மறுபடி ஒருமுறை பார்க்க முடியாதோ, இந்தப் படமும் அப்படித்தான். தூக்கு தண்டனைக் கைதியாக லால். தூக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற ஆர்டர் அவரிடம் கொடுக்கப்பட்டதும் லால் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் எம் டி திகைத்ததை பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி சுகா எப்போதும் சிலாகித்ததுண்டு. அவர் என்ன செய்கிறார் என்பதை இப்போதும் என்னால் கூற முடியவில்லை. கண்களில் நீர் நிரம்ப ஒவ்வொரு முறையும் உறைந்திருக்கிறேன். இனிமேயும் யாராவது பார்க்கலாம், அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய முடிந்தால் அதைப் பற்றி எழுதலாம்.

வந்த புதிதில் ஒரு வரிசையில் லாலின் முகம் வளைய வந்திருந்தது போல வேறு ஒரு வரிசை துவங்கிற்று. அது மலையாளத்துக்கு கிட்டின பொக்கிஷமான லோகிதா தாசும் சிபி மலையில் மற்றும் வேறு பல இயக்குனர்களும் இயங்கினவை. அடேங்கப்பா. வரிசையாய் வந்தவாறு இருந்த அந்த படங்களுக்கு மக்கள் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். கிரீடம், தசரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தனம், பரதம், செங்கோல் என்று படங்கள். இவைகளில் எல்லாமே வாழ்க்கை இயங்கியது.  கொப்பளிக்கிற உணர்ச்சிகளைக் கையாண்டார்கள். மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் வாழ்வு நடத்துகிற போரில் அவர்கள் மனிதர்களாக தன்னை நிதானிப்பதைப் பல கோணங்களில் சொல்லப்பட்டதற்கு லால் போன்ற நடிகர்கள் இருந்தது ஒரு காரணம்.

பிரியதர்சனின் படங்கள் கூட பேசப்பட்டவைதாம்.

முழுமை கொள்ளமுடியாத அவரது படங்களில் லால் இருக்கவே ஆயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். லால் இல்லையெனில் பிரியதர்சன் என்னதான் செய்திருப்பாரோ என்று எனக்கு மலைப்பு வந்திருக்கிறது.

ஓன்று சொல்ல வேண்டும்.

புலி முருகன் அல்ல லால். மலையாளத்தின் வீழ்ச்சிப் படங்கள்தான் இன்டஸ்டரியின் சந்தை மதிப்பைக் கூட்டுகிறது என்கிற விநோதக் குழப்பத்தில் எந்த சூப்பர் ஸ்டார்களும் தப்பிக்க ஆகாது. அது மட்டும் அல்ல, அதில் பங்கு பெறவேண்டும் என்பது ஒரு விதமான ரூல். அவைகளில் பங்கு பெறுவதால் லால் லாலாகி இல்லாமற் போவதில்லை. தனது மகனைப் பார்க்க அலைபாய்கிற குஞ்சிக்குட்டன் என்கிற கதகளிக்காரன் தனது தலைக்கு மேலே பந்து உருளும் சப்தம் கேட்டு கலங்குகிற காட்சி ஓன்று நினைவில் இருந்து விட்டால் போதும், நூறு புலி முருகன்களை சகித்துக் கொள்ளலாம். ஏனெனில். ஒரு முறை திருடி விட்டவனை அவன் ஜென்மம் தீர்கிற வரைக்கும் திருடன் என்று சொல்லி பழகிக் களிக்கிற சமூகம் ஒரு முறையாவது கலைஞைனாய் இருந்து விட்டவனை, கலைஞனாகவே   உட்கொள்ள முடியாதா.

கலைப் படங்களில் மட்டுமே தாத்பர்யம் வைத்திருந்த அரவிந்தனின் படத்தில் லால் நடித்திருக்கிறார்.

அதில் இருந்த, அவர் கை கொள்ள வேண்டிய கச்சிதம் அவருக்குத் தெரியும்.

அதற்கு நேர்மாறான படங்களில், உதாரணமாக தேவாசுரம் போன்ற படங்களில் கொதித்து எழும்பினார்.

செங்கோல் என்கிற படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். வாழ்வின் கொடுங்கைகள் ஒரு மனிதனின் கழுத்தை நெறிப்பதை ஒரு விதமான அப்பட்டமான காட்சிகளுடன் தாக்கிய படம்.  கிரீடம் படத்தின் இரண்டாம் பகுதி. ஜெயிலில் இருந்து வெளிவந்து மீன் விற்று ஒதுங்கி வாழ்கிறவனை வம்புக்கு இழுத்து ஒரு சந்தியில் நிறுத்துகிறார்கள். படத்தில் லால் அப்போது ஒரு முடிவெடுத்து தனது நண்பனிடம் பேசுகிற காட்சி ஒன்றிருக்கிறது. சமூகம் தனக்கு ஒரு கிரீடத்தை வைத்து அதில் ஒரு இறகையும் வைத்து விட்டது பற்றி சொல்லுவார். எரிகிற முகமென்றால் என்னவென்று தெரியாதவர்கள் அதைப் பார்க்க வேண்டும். அதே படத்தில் வேறு ஒரு காட்சியிருக்கிறது. ஆளுமையுடன் இருந்த ஒரு மனிதர் தனது மகளை ஒரு அறைக்குள் விபச்சாரம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு அறையில் காத்திருக்கிறார்.

அப்பனாக திலகன். அவரது மகனாக லால். அப்பன் செய்த காரியத்தை மகன் பார்க்க நேர்ந்ததும் அவர் கதவை அடைத்துக் கொண்டு தூக்கில் தொங்கி விடுகிறார். வெறுத்து வெறுத்து வெறுத்துத் தீர்ந்த பின்னர் தனது அப்பனை சூறையாடியது என்னவென்று ஒரு கட்டத்தில் ஞானம்போல அறிகிறான் மகன். அந்த மகனாக லால் ஒரு கட்டத்தில் காட்சி ஒன்றிருக்கிறது, மேலும் வளர்த்திக் கொண்டு செல்ல விரும்பவில்லை, வார்த்தைகளை வீணாக்காமல் நான் மோகன்லால் ஒரு மகா நடிகன் என்றே அனுபவம் கொள்கிறேன்.

காலம் இன்னும் இருக்கிறது.

நூறாண்டுகள் அவர் வாழ வேண்டும்.

இந்திய சினிமா தனது பழைய பிறவியை வீசி எறிந்து முடித்து இப்போது தான் கண் விழித்த மழலையாய் முழித்துக் கொண்டிருக்கிறது.

அது கை கால் வைத்து வளரும்.

இந்த முட்டாள்தனத்தின், கட்டுபெட்டிகளின் அபத்த காலம் விரைவிலேயே ஒழிந்து, புதிய பாதையைத் தொட்டுவிடும் என்றால் லால் நடிப்பதற்கான புதிய வெளிகளே இனிமேல் தான் துவங்கப் போகிறதென்று நம்புகிறேன். இந்தக் கட்டுரையிலேயே கூட நான் எங்கேனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் அது லால் உண்டாக்குகிற மேஜிக்தான் என்பதை சொல்லிவிட வேண்டும்.