##~##

கோவையில் தலைவிரித்தாடிய சமூக விரோதச் செயல்களை அதிரடிக் கரம் கொண்டு முடக்கியவர். லட்சியங்களுடன் காவல் துறைக்குள் நுழையும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர், காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் கே.கே.முத்துசாமி. அதிரடி மனிதர், இன்று அமைதி விவசாயி. தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கொண்டையம் பாளையம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள் கிறார் கே.கே.முத்துசாமி

''காவல் துறையில் மிகவும் நேர்மையாக செயல்பட்டவன் என்று எனக்குப் பெயர். அந்த நேர்மையை எனக்குக் கற்றுத் தந்தது என் ஊர்தான். கொண்டையம்பாளையத்தில் பல வருடங்களுக்கு முன் ஒரு கொலை நடந்தது. எனக்கு நினைவு தெரிந்து அது ஒண்ணுதான் இங்கே நடந்த குற்றச் சம்பவம். எங்க ஊருக்கு போலீஸ்காரங்க வந்ததே கிடையாது. சாதிச் சண்டை, வரப்புச் சண்டை கிடையாது.

என் ஊர்!

இங்க பாதி ஊரை தோட்டங்கள்தான் போர்த்தி இருக்கும். அப்படி ஒரு விவசாயக் கிராமம். முன்னாடி தண்ணி வசதியெல்லாம் கிடையாது. வறண்ட பூமி. 1992-ல் நான் கோவையில் உதவி ஆணையராக இருந்த போது பல முயற்சிகள் எடுத்து, அத்தாணி ஆத்துல இருந்து இங்கே தண்ணி கொண்டுவந்தேன். இன்னைக்கு இங்க தண்ணீர் பஞ்சமே இல்லை. கரும்பும் மஞ்சளும் தான் இங்க முக்கியப் பயிர்கள்.

என் ஊர்!

நான் தொடக்கக் கல்வி முடிச்சதெல்லாம் எங்க ஊரில்தான். அப்புறம் அந்தியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிச் சேன். ஊர்ல இருந்து அந்தியூருக்கு எட்டு கி.மீ. மாட்டு வண்டியில்தான் பள்ளிக்கூடம் போவேன். அப்போ பள்ளிக்கூடத்துல மாட்டு வண்டி நிறுத்துறதுக்குன்னே தனி இடம் இருக்கும். இடைவேளை சமயத்துல  மாட்டுக்குத் தீனி போடுவோம்.

அந்தப் பள்ளியில் படிச்சவர்தான் ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி.ரங்கசாமி.அவரைப் பார்த்துதான் எனக்கு போலீஸ் ஆசை வந்துச்சு. எங்களுக்கு கணக்கு வாத்தியாரா வந்த பச்சியண்ணன் அரு மையா கணக்கு சொல்லிக் கொடுப்பார். ஆனா, தப்பு பண்ணினா ரத்தம் வர்ற அளவுக்கு காதைத் திருகுவார். அவருக்குப் பயந்தே நான் நல்லா படிச்சேன். துரை சாமிப் பிள்ளைனு ஒரு வாத்தியார். ஒவ் வொரு மாணவனையும் தன் பிள்ளையா நெனைச்சவர். அவ்வளவு அக்கறையா பாடம் எடுப்பார். சொந்த பிரச்னைகளைக் கூட தீர்த்துவைப்பார். சித்திரை மாசம் மாரியம்மன் கோயில் பண்டிகை எங்க ஊர்ல பிரசித்தம். கோயில்ல கம்பம் நட் டாச்சின்னா தினமும் கம்பாட்டம்தான். இன்னைக்கும் சிலம்புல எங்க ஊர் பொடுசுங்க கூட கில்லிங்க. திருவிழாவுல எங்க வீட்டுல வருஷம் தவறாம கிடா வெட்டுவோம். 1976-ல என் அம்மா அம்மணி அம்மாள் இறந்துட்டாங்க. அப்போலேர்ந்து பண்டிகைக்குக் கிடா வெட்டுறது இல்லை. இப்ப வரை நானும் அசைவம் சாப்பிடறது இல்லை.

அந்தியூர் குருநாதசாமி கோயில் குதிரைச் சந்தை ரொம் பவே பிரசித்தம். நாட்டுக் குதிரையில இருந்து அரேபிய குதிரை வரைக்கும் சும்மா திமிறிக்கிட்டு நிக்கும். போலீஸ் துறையில இருந்தெல்லாம் குதிரை வாங்க வருவாங்க. நவ தானியத்துக்கும் அந்தச் சந்தை பெயர் பெற்றது. பர்கூர் மலையில இருந்து கேழ்வரகு, கம்பு, சாமை, திணை, சோளம் எல்லாம் கொண்டுவந்து விப்பாங்க. அந்தியூர் வெத்தலைக் குன்னே தனி மவுசு. ஆனா, இப்ப வெத்தலை உற்பத்திகுறைஞ்சு போயிடுச்சு.

என் ஊர்!

பொதுவா என் ஊர் முன்ன இருந்ததைவிட இப்பசிறப்பா இருக்குன்னு சொல்லலாம். ஊர்ல எல்லாருக்கும் வேலை இருக்கு. கை நிறைய சம்பாதிக்குகிறாங்க. செல்போன்,  டி.வி., மோட்டார் சைக்கிள்லாம் சகஜமாயிடுச்சு. வீட்டுக்கு ஒரு பட்டதாரியாவது இருக்காங்க. என் ஓய்வுக் காலத்தை அந்த மண்ணுலதான் கழிக்கணும்னு விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்தப் பூமிதான் என் நிம்மதி!''

சந்திப்பு: கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு