Published:Updated:

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து
பிரீமியம் ஸ்டோரி
கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

தினம் ஒரு கிளாஸ்!

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

தினம் ஒரு கிளாஸ்!

Published:Updated:
கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து
பிரீமியம் ஸ்டோரி
கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து
கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

ழங்கள், நம் ஆரோக்கியம் காக்க இயற்கை தந்த அற்புதக் கொடை. பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால், ‘இந்தப் பழம்தான் பிடிக்கும்; இது பிடிக்காது’ எனப் பெரியவர்கள்கூட குழந்தைகள்போல அடம்பிடிப்பது உண்டு. அவர்களுக்கான அருமையான தீர்வு... ஸ்மூத்தீஸ். காய்கறி, பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் போன்றவை சிதையாமல் அப்படியே கிடைக்க ஸ்மூத்தியாகச் சாப்பிடுவது நல்லது.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்கரை சேர்க்காமல் வெறும் பழங்கள், காய்கறிகளை மட்டும் வைத்து செய்யும்போது உடல் எடை குறையும். நச்சுக்களை வெளியேற்றும். சருமத்துக்குப் பொலிவு தரும். உடலுக்கு ஆற்றலைத் தந்து, நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஸ்மூத்திகளைச் செய்துகாட்டுகிறார் சமையல்கலை நிபுணர் சுதா செல்வகுமார். அதற்கான பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

தர்பூசணி ஸ்மூத்தி

தேவையானவை:
விதை நீக்கிய தர்பூசணிப் பழம் - 1 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், புதினா இலை - 4, நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தேவையெனில் வடிகட்ட வேண்டும். அதனுடன், எலுமிச்சைச் சாறு, விருப்பப்பட்டால், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். இதில், புதினா இலையை தூவிவிட்டுப் பரிமாறினால், மணமும் சுவையும் அதிகரிக்கும்.

பலன்கள்: தர்பூசணியிலும் எலுமிச்சையிலும் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ஜீரணத்தைச் சீர்ப்படுத்தும். உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும். களைப்பு, வயிற்றுப்போக்கு, பித்தம் நீங்கும்.

ஆப்பிள் ஸ்மூத்தி

தேவையானவை: ஆப்பிள் - 1, சப்ஜா விதை - 1 டீஸ்பூன் (நீரில் ஊறவைத்தது), வெல்லத் துருவல் - தேவையான அளவு, இஞ்சித் துருவல் - 1/2 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: நீரில் வெல்லத்தைப் போட்டுக் கரைத்து, பானகம்போலத் தயார் செய்ய வேண்டும். ஆப்பிளை தோல், விதை நீக்கிய பின் நறுக்கி மிக்ஸியில் போட்டு, வெல்ல பானகம், இஞ்சி சேர்த்து அடித்து, சப்ஜா விதை தூவிப் பருகலாம்.

பலன்கள்: ஆப்பிளில், நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். சப்ஜா விதை, செரிமானப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். நெஞ்செரிச்சலைப் போக்கும். மலச்சிக்கலைப் போக்குவதற்கு சிறந்த மருந்து. இஞ்சி, பசியைத் தூண்டும்; உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும்.

கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி

தேவையானவை: கிர்ணிப்பழம் சிறியது - 1, நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு - 5, வெல்லப்பாகு - தேவையான அளவு, காய்ந்த கிர்ணிப்பழ விதைகள் - 1 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்லப்பாகாக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் தோலை உரித்து, நறுக்கிய கிர்ணிப்பழத்தை உடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் வெல்லப்பாகு சேர்த்துக் கலந்து, கிர்ணி விதையைத் தூவிப் பருகலாம்.

பலன்கள்: கிர்ணிப்பழத்தில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். வைட்டமின் பி, சி ஓரளவு இருப்பதால், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், ரத்தசோகை, பித்தப்பைக்கல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.

தக்காளி ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த தக்காளி - 3, வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - 1 சிட்டிகை, கறுப்புத் திராட்சை - 6.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: தக்காளியுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்ட வேண்டும். இதில் வெள்ளை மிளகுத்தூள், நாட்டுச்சர்க்கரை போட்டுக் கரைத்து, இரண்டாக நறுக்கிய கறுப்புத் திராட்சைகளைத் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, பி, கே, ஃபோலேட், கால்சியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைக்கோபீன் சத்து இதயத்தை பலப்படுத்தும், புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி


தேவையானவை: மாதுளை முத்துகள் - 1 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் - 2  டேபிள்ஸ்பூன், தேன் - 1 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: மாதுளையுடன் சிறிதளவு நீர்விட்டு, ரோஜா இதழ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன் கலந்து, சிறிது ரோஜா இதழ்களைத் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: மாதுளையில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. பித்தம், குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும். பன்னீர் ரோஜா இதழ்கள் தாகம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மாதுளை விதைகள் ரத்தத்தைப் பெருக்கும். இதயத்துக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

மிக்ஸட் ஃப்ரூட் ஸ்மூத்தி

தேவையானவை: மாதுளை முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள் - தலா 1/2 கப், சப்ஜா விதை - 1/2 டீஸ்பூன், பனங்கற்கண்டு -  தேவையான அளவு, விதை நீக்கி, நறுக்கிய தர்பூசணி - 2 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: மாதுளை முத்துக்கள், ஆப்பிளை மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில், பனங்கற்கண்டைக் கரைத்து, அதில், ஊறிய சப்ஜா விதை, தர்பூசணி சேர்த்து, அதனுடன் வடிகட்டிய பழக்கரைசலைக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்:
மாதுளையில் உள்ள சத்துக்கள் குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். சப்ஜா விதை,  செரிமானப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

வாழை -சீதாப்பழ ஸ்மூத்தி

தேவையானவை:
பழுத்த வாழைப்பழம் - 2, விதை நீக்கிய சீதாப்பழம் - 1, பேரீச்சம்பழம் - 6, வெல்லத்துருவல் -  தேவையான அளவு, தேன் - 1 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பேரீச்சையைக் கொட்டை நீக்கி, நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதனுடன், சீதாப்பழத்தின் சதைப்பகுதி, நறுக்கிய வாழைப்பழம், வெல்லத் துருவலைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, தேன் கலந்து பருகலாம்.

பலன்கள்: வாழைப்பழத்திலும் சீதாப்பழத்திலும் மாவுச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்திசெய்து, ரத்தசோகையைப் போக்கும்.

அத்தி - கிர்ணி ஸ்மூத்தி

தேவையானவை: அத்திப்பழம் - 2, கிர்ணிப்பழம் - 1, குல்கந்து - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: அத்தி, கிர்ணிப் பழங்களை தோல் சீவி அரிந்து, குல்கந்து, இஞ்சித் துருவல் சேர்த்து மிக்ஸியில் அடிக்க வேண்டும். அதை வடிகட்டி, ரோஜா இதழ்கள் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: கிர்ணிப் பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பசியின்மை, களைப்பைப் போக்கும். வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். அத்திப்பழத்தில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கின்றன. இவை, ரத்த உற்பத்திக்கும் உடல் வளர்ச்சிக்கும் உதவும்.

செர்ரி - ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 6, செர்ரி - 10 (நறுக்கியது), தோல் சீவிய அன்னாசிப்பழத் துண்டுகள் - 2, தேன் - 2 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: அரிந்த ஸ்ட்ராபெர்ரியுடன், ஐந்து செர்ரி, அன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய பின், மீதம் உள்ள செர்ரியைத் தூவி தேனை மேலே ஊற்றி அருந்தலாம்.

பலன்கள்:
ஸ்ட்ராபெர்ரியில் பீட்டாகரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் நிறைந்துள்ளன. இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும். செர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடல் சோர்வை நீக்கி,  மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.

சாத்துக்குடி-புதினா ஸ்மூத்தி

தேவையானவை: சாத்துக்குடி - 4, புதினா இலை - 6, பனங்கற்கண்டு - தேவையான அளவு, உப்பு - 1 சிட்டிகை, இஞ்சிச் சாறு - 1  டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: சாத்துக்குடியை பிழிந்து, சாறு எடுக்க வேண்டும். இதனுடன், புதினா இலை, இஞ்சிச் சாறு, பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்துப் பருகலாம்.

பலன்கள்: சாத்துக்குடியில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. குறைவான கலோரி கொண்டதால் உடல் எடை கூடுவதைத் தடுப்பதுடன், உடலுக்குப் பலத்தைத் தருகிறது. பற்கள், ஈறுகளில் ரத்தக்கசிவு, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமருந்து. எலும்புகள் பலம் பெறும். மலச்சிக்கல் நீங்கும். செரிமானம் மேம்படும்.

திராட்சை ஸ்மூத்தி

தேவையானவை:
பன்னீர் திராட்சை - 1 கப், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, அன்னாசிச் சாறு - 1/2 கப், இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: திராட்சையை சிறிது நீர்விட்டு, மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன், அன்னாசிச் சாறு இஞ்சி விழுது, நாட்டுச்சர்க்கரை கலந்து, சிறிது அன்னாசிப்பழத் துண்டுகளை மிதக்கவிட்டுப் பருகலாம்.

பலன்கள்: வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலைப் போக்கும்.

அன்னாசி ஸ்மூத்தி

தேவையானவை: அன்னாசிப் பழம் - 1, தேன் - 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா பருப்பு - 10, ஆரஞ்சு ஜூஸ் - 1/4 கப்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: அன்னாசிப் பழத்தைத் தோல் சீவி, நறுக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன், ஆரஞ்சு ஜூஸ் கலந்து, பிஸ்தா பருப்பு தூவி, சில ஆரஞ்சுச் சுளைகளை மேலே வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பலன்கள்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து உள்ளன. செரிமானத்தைத் தூண்டி, மலச்சிக்கலைப்போக்கும். இதில் உள்ள கரோட்டின், ரத்தத்தைச் சுத்திகரிக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவையானவை:
ஆரஞ்சுப் பழம் - 2, சீதாப்பழம் (சதைப்பகுதி) - 1/4 கப், எலுமிச்சைச் சாறு - 1/2 டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: ஆரஞ்சுப் பழத்தை விதை நீக்கி, அத்துடன் சீதாப்பழம், எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர்விட்டு நாட்டுச்சர்க்கரை கலந்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

பலன்கள்:
ஆரஞ்சில் வைட்டமின் சி, நார்ச்சத்து, தயமின் உட்பட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பற்கள், ஈறுகள், எலும்புகள் பலமாகும். புற்றுநோயைத் தடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றுப்புண்களை ஆற்றும். சருமத்துக்குப் பொலிவைத் தரும்.

டிரை ஃப்ரூட்ஸ் ஸ்மூத்தி


தேவையானவை: உலர்ந்த திராட்சை - 1 கப், உலர்ந்த அத்திப்பழம் - 4, பேரீச்சம்பழம் - 5, பேரீச்சம்பழ சிரப் - 2 டேபிள்ஸ்பூன், வால்நட் - 2, உலர்ந்த பாதாம் - 2, ஏலக்காய் - 1.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: உலர்ந்த திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், வால்நட், பாதாம், அத்திப்பழத்தை நீரில் சில மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து, ஊறவைத்தவற்றை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். ஆறிய பின், அதை மிக்ஸியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, இதனுடன் பேரீச்சம் சிரப் கலந்து, உலர்ந்த திராட்சையை மேலே தூவிப் பருகலாம்.

பலன்கள்:
இதில், புரதச்சத்து, ஒமேகா 3, வைட்டமின்கள் ஏ, பி, தாமிரம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ரத்தசோகையைப் போக்கும். உடலுக்கு வலுவைத் தரும். எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், குழந்தைகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

பிரௌன் பியூட்டி பேரீச்சம்பழ ஸ்மூத்தி

தேவையானவை:
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 1 கப், வாழைப்பழம் - 1, பேரீச்சம்பழ சிரப் - 1 டேபிள்ஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு, உலர் கறுப்பு திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பேரீச்சம்பழம், திராட்சையை நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு, வாழைப்பழத்துடன் அவற்றைச் சேர்த்து, சிறிது நீர்விட்டு அரைக்க வேண்டும். அதனுடன் பேரீச்சை சிரப், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அடித்துப் பருகலாம்.

பலன்கள்:
பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. இந்த ஸ்மூத்தியில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 நிறைவாக உள்ளதால், ரத்தசோகையைப் போக்கும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும். செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பப்பாளி-தக்காளி ஸ்மூத்தி

தேவையானவை: தோல் மற்றும் விதை நீக்கிய பப்பாளித் துண்டுகள் - 2 கப், பழுத்த தக்காளி - 1, வெல்லப்பாகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பப்பாளித் துண்டுகளையும் தக்காளிப் பழத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இதில் கிர்ணி விதைகளைத் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: பப்பாளி குறைவான கலோரி கொண்டது. வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பார்வைத்திறன் மேம்பட, சருமத்தின் ஆரோக்கியத்துக்கு இந்த ஸ்மூத்தி உதவும். 100 கிராம் பப்பாளியில் மட்டும் ஒருநாளுக்கு தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. தக்காளியிலும் வைட்டமின் சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.  இதில், பயோட்டின் உள்ளதால், சருமம், முடி வளர்ச்சிக்கு உதவும்.

லெமன்-மின்ட் ஸ்மூத்தி

தேவையானவை: எலுமிச்சைப்பழம் - 2, புதினா இலை - 6, நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, துளசி இலை - 2, தண்ணீர் - தேவையான அளவு, உப்பு -  1 சிட்டிகை.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: எலுமிச்சையை சாறு பிழிந்து இதனுடன் புதினா, துளசி இலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன்  தேவையான நீர், உப்பு, நாட்டுச்சர்க்கரையைக் கலந்துகொள்ள வேண்டும். அலங்காரத்துக்கு அதன் மேல் நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளை வைக்கலாம்.

பலன்கள்:எலுமிச்சைப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளன. களைப்பு, வயிற்றுப்போக்கு, பித்தம் ஆகியவற்றைப் போக்கும். புதினா இலையில் வைட்டமின் பி சத்தும் இரும்புச்சத்தும் நிறைவாக உள்ளன. புதினா இலைச் சாறு கீல்வாத (கௌட்) வலிக்கும் அஜீரணத்துக்கும் மருந்தாகும்.

கொய்யா ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த கொய்யாப்பழம் - 2, மாதுளை முத்துக்கள் - 1/2 கப்,  பனங்கற்கண்டு பொடித்தது - 2 டேபிள்ஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை:  கொய்யாப்பழத்தை கழுவி, நறுக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் மாதுளை முத்துக்களைச் சேர்த்து, நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, வடிகட்ட வேண்டும். இதனுடன், பனங்கற்கண்டு சேர்த்து, சில மாதுளை முத்துகளை மேலே தூவிப் பருகலாம்.

பலன்கள்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்கு நல்ல பலன் தரும். மாதுளை விதைகளைச் சாப்பிட்டால், ரத்த விருத்தி ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

கிவி-குல்கந்து ஸ்மூத்தி

தேவையானவை: கிவிப்பழம் - 4, குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் நறுக்கியது - 1 டேபிள்ஸ்பூன், நீரில் ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: தோல் சீவிய கிவிப்பழத்தை குல்கந்து சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன் ஊறிய சப்ஜா விதைகளைப் போட்டு, அரிந்த வாழைப்பழம் சேர்த்துப் பருக வேண்டும்.

பலன்கள்: கிவிப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சருமம் பளபளப்பாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.

நெல்லி-புதினா ஸ்மூத்தி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4, தேன் - 1 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தலா 1 சிட்டிகை, புதினா - 5 இலைகள்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: நெல்லிக்காயை விதை நீக்கி, புதினா இலை சேர்த்து, சிறிது நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் உப்பு, தேன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மிளகுத்தூள் தூவிப் பருகலாம்.

பலன்கள்: நெல்லியில் வைட்டமின் சி, பி, பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. பல், ஈறு வியாதிகளுக்கு நல்ல மருந்து. எலும்பு, தாடை பலம் பெறும்.
மலச்சிக்கல், மூளைக் கோளாறு, இதயநோய், காசநோய், ஆஸ்துமா, மூலநோய் போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டு. புதினாவில் மென்தால்  நிறைந்துள்ளதால், சுவாசமண்டலப் பிரச்னைகளைச் சரிசெய்யும். இரும்புச்சத்து மிகுந்துள்ளதால், ரத்தசோகையைப் போக்கும்.

சப்போட்டா-கிவி ஸ்மூத்தி

தேவையானவை: சப்போட்டாபழம் - 4, கிவிப்பழம் - 1, நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, தோல் நீக்கி ஊறவைத்த பாதாம் பருப்பு - 4.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பழங்களை தோல் நீக்கி மிக்ஸியில் பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நாட்டுச்சர்க்கரையைக் கலந்து பரிமாறவும்.

பலன்கள்:
சப்போட்டாவில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், ஆகியவை உள்ளன. சிறிதளவு வைட்டமின் ஏ உள்ளது. ரத்தசோகையைப் போக்கி, ரத்தத்தை விருத்தியடையச் செய்கின்றன. புற்றுநோய் செல்களை அழிக்கும். கிவிப்பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை.

கறிவேப்பிலை - நெல்லிக்காய் ஸ்மூத்தி

தேவையானவை: கறிவேப்பிலை - 1 கப், நெல்லிக்காய், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், ஏலக்காய் தூள், ஜாதிக்காய் பொடி - தலா 1 சிட்டிகை, வெல்லம் - தேவையான அளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: கறிவேப்பிலை, நெல்லிக்காயை தேவையான அளவு நீர்விட்டு அரைத்து, வடிகட்ட வேண்டும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் பொடி, வெல்லத் துருவல் சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்துப் பருகலாம்.

பலன்கள்: கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ சத்து மிகுந்துள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும். பற்கள், ஈறு வியாதிகளுக்கு நல்ல மருந்து. மலச்சிக்கலைப் போக்கும். முடி வளர்ச்சிக்கு உதவும். கல்லீரல் சுருக்கம் உள்ளிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கும்.

சீசன் ஃப்ரூட் ஸ்மூத்தி

(இலந்தை)

தேவையானவை: கொட்டை நீக்கிய  இலந்தைப்பழம் (அல்லது நாவற்பழம் போன்ற ஏதாவது) - 1, பனங்கற்கண்டு - தேவையான அளவு, கொட்டை நீக்கிய தர்பூசணி - சில துண்டுகள்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: தர்பூசணியுடன் இலந்தைப்பழம், பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்க வேண்டும். 

பலன்கள்:
தர்பூசணி, ஜீரணத்தை சீர்படுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாகத்தைத் தணிக்கும். இலந்தைப் பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இவை எலும்புகளும் பற்களும் உறுதியடைய உதவும். இலந்தைக்குப் பித்தத்தைத் தணிக்கும் குணம் உண்டு. சீசன் சமயங்களில் இலந்தைக்குப் பதிலாக நாவற்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

துளசிதாரா ஸ்மூத்தி

தேவையானவை:
துளசி இலை - 1/4 கப், தேன் - 1 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு - 1/2 கப், மிளகுத்தூள் - 1 சிட்டிகை.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: துளசியை நீர்விட்டு அரைத்து, வடிகட்டவும். அத்துடன் ஆரஞ்சுச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து தேன் விட்டு, மேலே துளசி இலைகளால் அலங்கரித்துப் பரிமாறலாம். நறுமணத்துடன்கூடிய மிக ஆரோக்கியமான பானம் இது.

பலன்கள்: இதில், வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மாங்கனீஸ், மக்னீசியம் சத்துக்கள் உள்ளன.  ஜீரண சக்தியையும் புத்துணர்ச்சியையும் பெறலாம். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். சர்க்கரைநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

பலா - ஆரஞ்சு ஸ்மூத்தி

தேவையானவை:
பலாப்பழச் சுளைகள் - 3, கமலா ஆரஞ்சுச் சுளைகள் (உரித்தது) - 2, ஆப்பிள் பழம் - 2 துண்டுகள், கருப்பட்டிப் பாகு - தேவையான அளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பலாச் சுளைகளுடன் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் கருப்பட்டிப் பாகு கலக்க வேண்டும். மற்றொரு டம்ளரில் உரித்த ஒரு கமலா ஆரஞ்சு சுளையைப் போட்டு அதனுடன் பலாச் சாற்றை ஊற்ற வேண்டும். மேலே மீதமுள்ள கமலா ஆரஞ்சுச் சுளையைப் போட்டுப் பறிமாறலாம்.

பலன்கள்:
பலாப்பழத்தில், வைட்டமின் சி, பி6, பொட்டாசியம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சிறிது உள்ளது. கண் நோய் வராமல் தடுக்கும். ஜீரண உறுப்புகளைச் சீராக்கும். இந்த ஸ்மூத்தியை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

செம்பருத்தி ஸ்மூத்தி

தேவையானவை:
செம்பருத்திப்பூ இதழ் - 1 கப், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, செர்ரி - சிறிதளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: செம்பருத்தி இதழ்களை வெந்நீரில் ஒரு மணி நேரம் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் லேசாக சூடுபடுத்தி, வடிகட்டி ஆறவைக்க வேண்டும். இப்போது நீரில், செம்பருத்திச் சாறு இறங்கி நல்ல நிறம், நறுமணத்துடன் இருக்கும். இதனுடன் செர்ரி, ஏலக்காய் தூள் சேர்த்து, மிக்ஸியில் அடித்து நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்.

பலன்கள்:
செம்பருத்தியில் சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் உள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடும். இருமல் கட்டுப்படும். முடி உதிர்தலைத் தடுக்கிறது. செர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடல் சோர்வை நீக்கி,  மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.

பிளம்ஸ் - தக்காளி ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த பிளம்ஸ் - 6, தக்காளி - 1, வெல்லப்பாகு - தேவையான அளவு, உலர் கிர்ணி விதை - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1/2 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: உலர் கிர்ணி விதையை நெய்யில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பிளம்ஸை நறுக்கி, கொட்டை நீக்கிக்கொள்ளவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து, மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, கிர்ணி விதைப் பொடியைத் தூவிப் பருகலாம்.

பலன்கள்: பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டாகரோட்டின் உள்ளன.  பார்வைத் திறனை மேம்படுத்தும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும். இதயத்துக்கு நல்லது. உடல் புத்துணர்வு பெறும். தக்காளியில் வைட்டமின் ஏ, பி சிறிதளவும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. இவை ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். உடலுக்கு உறுதியளிக்கும்.

பேரிக்காய் ஸ்மூத்தி

தேவையானவை: பெரிய பேரிக்காய் -1, மிளகுத்தூள் - 1 சிட்டிகை, கருப்பட்டிப்பாகு - தேவையான அளவு.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: பேரிக்காயை தோல் சீவி சரிபாதியாக நறுக்கவும். அதில் பாதி பேரிக்காயை எடுத்து சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். மீதி பேரிக்காயை, நீர்விட்டு அரைத்து, வடிகட்டி அதில் பாகு சேர்த்து, மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி நறுக்கிய பேரிக்காயைப் போடவும். அதன் மேல் பேரிக்காய் ஸ்மூத்தியை ஊற்றிப் பரிமாறவும்.

பலன்கள்: பேரிக்காயில் வைட்டமின் சி, தாமிரம் நிறைவாகவும், வைட்டமின் ஏ, பி1, பி 2, சி, ஈ சிறிதளவும் உள்ளன.   காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். பேரிக்காய் இதயத்துக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். பேரிக்காயில் உள்ள போரான் (boron) என்ற சத்து, கால்சியம் கிரகிக்க உதவும்.

இலந்தை மிக்ஸ் ஸ்மூத்தி

தேவையானவை: பழுத்த கொட்டை நீக்கிய மலை இலந்தை - 10, நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, கொய்யாப்பழத் துண்டுகள் - 2, வெள்ளை மிளகுத்தூள் - 1 சிட்டிகை.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: இலந்தைப்பழத்தை நறுக்கிக்கொள்ளவும். அதனுடன் கொய்யாத் துண்டுகளைச் சேர்த்து அரைக்கவும். அதை வடிகட்டி, நாட்டுச்சர்க்கரை கலந்து, வெள்ளை மிளகுத்தூள் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. எலும்பு, பற்கள் உறுதியடையும். இலந்தைக்குப் பித்தத்தைத் தணிக்கும் குணம் உண்டு. மலச்சிக்கலை நீக்கும். இந்த ஸ்மூத்தியை இரவில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

த்ரீ இன் ஒன் ஸ்மூத்தி

தேவையானவை: ஆப்பிள், சிறிய கேரட் - தலா 1, தோல் சீவி நறுக்கிய பீட்ரூட் - பாதி, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, மிளகுத்தூள் - 1 சிட்டிகை, இஞ்சிச் சாறு - 1 டீஸ்பூன்.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டவும். அதனுடன் இஞ்சிச் சாறு, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவிப் பருகலாம்.

பலன்கள்:
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். இதில் உள்ள நீர்ச்சத்து, தாகத்தைத் தணிக்கும். இஞ்சி, பசியைத் தூண்டி உமிழ்நீரைப் பெருக்கும். வாயுவை நீக்கும்.

இளநீர் - திராட்சை ஸ்மூத்தி

தேவையானவை:
இளநீர் - 1 கப், இளநீர் வழுக்கை - 1/4 கப், நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு, ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன், பச்சை திராட்சை - 3.

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை, நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிக்‌ஸியில் ஒருசுற்று சுற்ற வேண்டும். இதனுடன், சப்ஜா விதை, நறுக்கிய பச்சை திராட்சைகளைத் தூவிப் பறிமாறலாம்.

பலன்கள்: இளநீரில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுச்சத்துக்கள்  உள்ளன. இவை வறண்ட சருமத்தைப் போக்கி, தோலைப் பளபளப்பாகும்.
சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும்.  நா வறட்சியைப் போக்கும்; உடல்சூட்டைத் தணிக்கும். திராட்சையில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. தாகத்தைத் தணிக்கும்; ரத்த விருத்திக்கு உதவும்.

ஜூஸைவிட ஸ்மூத்திஸ் ஏன் சிறந்தவை?

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

`ஸ்மூத்தி' வெயில் காலத்துக்கு மட்டுமே ஏற்றது.மழைக் காலத்தில் குடித்தால் சளித்தொல்லை ஏற்படும்’ என்பது தவறான கருத்து. வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களுக்கும் ஏற்றது.

குறிப்பாக, மழைக் காலத்தில், ஐஸ் சேர்க்காமல் அனைத்து வகையான ஸ்மூத்தீஸையும் குடிக்கலாம்.

பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட  ஸ்மூத்தியாகச் செய்து அருந்தும்போது, முழுப் பலனைப் பெறலாம்.

ஸ்மூத்தியில், இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள், உலர்ந்த பழங்கள், இயற்கை சுவையூட்டிகள் உள்ளதால்,  மல்ட்டி வைட்டமின் சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

கடைகளில் தயாரிக்கப்படும் ஸ்மூத்தியில் சர்க்கரை, பால் சேர்க்கப்படுகிறது. இது நல்லது அல்ல. வீட்டிலேயே பால் சேர்க்காமல், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கும்போது, ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலில் கொழுப்பு அதிகமாக உள்ளதால், வயதானவர்கள், உடல்பருமனானவர்கள் தவிர்க்க வேண்டிய ஒன்று. எனவே, பால் சேர்க்காத ஸ்மூத்தியே அனைவருக்கும் ஏற்றது.

- ஜி.லட்சுமணன், படங்கள்: பா.சரவணக்குமார்

கலர் கலர் ஸ்மூத்தீஸ்! - அன்லிமிடெட் ஊட்டச்சத்து

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism