Published:Updated:

காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

##~##

புகைப்படம் எடுப்பது பலருக்கு பொழுதுபோக்கு. ஆனால், புகைப்படக் கலையின் மூலம் கானுயிர்கள் மீதான விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார் கோவையைச் சேர்ந்த அருந்தவச்செல்வன்.

 ''நான் அடிப்படையில விவசாயிங்க. எங்க வயக்காடு எல்லாம் சத்தியமங்கலம் பக்கம் இருக்கு. எனக்கு 10 வயசு இருக்கும்போது ஊர்ல இருக்கிறவங்க காட்டு வேட்டைக்குப் போவாங்க. நானும் கூட போவேன். அப்போவே  காட்டுல பார்த்த விலங்குகளை போட்டோ எடுக்க ஆசை. அப்புறம் 10-வது படிக்கும்போது அடம்பிடிச்சு ஒரு பழைய கேமரா வாங்கினேன். அப்ப ஆரம்பிச்சது படம் எடுக்கும் பழக்கம்.

சத்தியமங்கலம், தாளவாடி, கோவை, முதுமலை காடுனு ஆரம்பிச்சு கர்நாடகா - ரங்கன்திட்டு, பந்திப் பூர் புலிகள் சரணாலயம், புஷ்பகிரி காடுகள், குஜராத் கிர் காடுகள், ஆந்திரா - கிருஷ்ணா காடுகள், ராஜஸ்தான் தார் பாலைவனம்னு இந்தியா முழுக்க சுத்திச் சுத்தி படம் எடுத்திருக்கேன்!

காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

என்னைப் பொறுத்தவரை காடுகளிடம் மனுஷன் கத் துக்க வேண்டியது நிறைய இருக்கு. அங்கே இருக்குற சின்ன புல்லில் இருந்து பெரிய மரம் வரைக்கும், குட்டி மண் புழுவில் இருந்து பெரிய யானை    வரைக்கும் ஒவ்வொண்ணும் இயற்கையை - இந்த உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்துற வேலையை சத்தம் இல்லாம செஞ்சுட்டு இருக்கு.  உதாரணத்துக்கு, மரம் மழையைக் கொடுக்குது. புல் அந்த மழைத் தண்ணியை பூமியில தக்கவைக்குது. மண் புழு மண்ணை உரமாக்கி, பசுமை சேர்க்குது. யானை செய்ற நன்மைகளை கணக்கிட முடியாது. காட்டுல இருக்குற எல்லா உயிரினங்களும்

காடுகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!

வாழறதுக்கான ஆதார உயிரினம் யானை. முட்புதர் அடர்ந்த கானகத்துல யானைபுகுந்தா தான், மற்ற உயிரினங்களுக்கு வழித்தடம் கிடைச்சு உள்ளே போகுங்க.

'யானையைத் தொடரும் வண்ணத்துப்பூச்சிகள்’னு சும்மாவா சொல்லி இருக் காங்க. யானையின் சாணத்துல இருக்குற தாவரத் தாது உப்புகள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால அதோட சாணத்துல நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் மொய்ச்சிக்கிட்டு இருக்கும். அந்த வண்ணத் துப்பூச்சிகள்தான் மகரந்த சேர்க்கைக்கு ஆதாரம். விதைப் பரவலில் யானையின் பங்கு அதிகம். அது சாப்பிடுகிற தாவர உணவுல 40 சதவிகிதம் மட்டும்தான் செரிமானம் ஆகும். மீதம் உள்ள சக்கை 36 மணி நேரத்துல கொஞ் சம் கொஞ்சமா வெளியேறிடும். ஒரு மணி நேரத்துக்கு யானை ஒரு கிலோமீட்டர் வீதம் நடந்துகிட்டே சாணம் போடும். அது நடக்குற பாதை முழுக்க பல்வேறு தாவர இனங்களை விதைப் பரவல் மூலம் உற்பத்தி செய்யக் காரணமா இருக்கு யானை!

மனுஷன் அறியாமையாலும் பேராசையாலும் காடுகளை அழிக்கிறான். இப்ப நான் சொன்ன விஷயங்களை என் புகைப்படங்கள் மூலம் உலகத்துக்கு எடுத்துச் சொல்றேன். அடிக்கடி புகைப்பட கண்காட்சி நடத்தி, என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு காடுகள் பற்றியும் விலங்கினங்கள் பற்றியும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திட்டு வர்றேன்!'' - என்கிறார் இந்த கானகத் தோழர்.

ம.சபரி, படம்: வி.ராஜேஷ்

அடுத்த கட்டுரைக்கு