Published:Updated:

பாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்!

ரகசியம் சொல்லும் கோவை ஸ்நேக் முருகன்

##~##

டித்து நொறுக்கிவிட்டு சிறிது ஓய்வு எடுக்கிறது மழை. கோவை - அவிநாசி சாலை பாலத்தில் நகர்ந்து கொண்டு இருந்த டூவீலர்கள் சடார் என பிரேக்கிட்டு வழுக்கிச் சரிகின்றன. ஏழெட்டு அடி நல்ல பாம்பு ஒன்று குட்டிகளோடு குறுக்கும் நெடுக்குமாக சாலையில் அலைபாய்ந்துகொண்டு இருந்தது. 'ஸ்நேக்’ முருகனுக்குப் பறக்கிறது மொபைல் அழைப்பு. சில நிமிடங்களில் ஆஜராகும் முருகன், பாம்புகளை லாகவமாகப் பிடித்து காடு நோக்கிச் செல்கிறார்.

 கோவையில் பள்ளிக்கூடம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் என்று எங்கே பாம்பைக் கண்டாலும் போன் பறப்பது முருகனுக்குத்தான். ''சின்ன வயசுல இருந்தே பாம்பு, பல்லி, உடும்பு, பூரான்னு நல்ல சக வாசம்ங்ணா நமக்கு. பாம்புகளை வசியம் பண்ண மூலிகை வேர் ஒண்ணு இருக்கு. அந்த வேரை வெச்சுத்தான் இம்புட்டும் பண்றேன். நமக்கு 55 வயசாகுதுங்க. சுமார் 40 ஆயிரம் பாம்புகளைப் பிடிச்சிருக்கேனுங்க.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒருமுறை வால்பாறை டீ எஸ்டேட்டுல கூப்பிட்டாங்க. அங்க ராஜநாகம் ஒண்ணு வந்து போயிட்டு இருந்திருக்கு. அதனால தோட்ட வேலைக்கு யாரும் வரலை. ஸ்பாட்டுக்குப் போய் கவனிச்சேன். புதர்ல இருந்து வெளியே வந்துச்சு அது. சும்மா ஒரு ஆளோட உயரத்துக்கும் அதிகமா எழுந்து நின்னுச்சுப் பாருங்க... அப்படியே ஆடிப்போயிட்டேன்.

பாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்!

இப்ப வரைக்கும் அப்படி ஒரு ராஜ நாகத்தை நான் பார்த்ததே இல்லை. அதைச் சாதாரணமா மடக்க முடியாது. ராஜநாகத்தோட விஷம் ஒரு யானையையே சில நிமிஷங்கள்ல கொன்னுப்போட்டுடும். மறுநாள் ஒரு மூலிகை தழையை மென்னுத் தின்னுட்டு, உடம்பு பூராவும் இலை தழை யைச் சுத்திக்கிட்டு புதர்ல ஒளிஞ்சுக்கிட் டேன். எதிர்பார்த்த மாதிரியே வந்து நின்னுச்சு. கபால்னு பாய்ஞ்சு அமுக்கி, கழுத்தைப் பிடிச்சிட்டேனுங்க. அந்தப் பிடி மட்டும் கிடைச்சிட்டாப் போதும்... அன கோண்டாவைக் கூட அடக்கிப்போடு வேன்! ச்சும்மா சொல்லக் கூடாது. நெகுநெகுன்னு 22  அடி நீளம். கையோட ராஜநாகத்துக்குப் பிடிச்ச இரையான சாரைப் பாம்பைக் கொண்டுபோயிருந்தேன். நல்ல பசியில இருந்தவன், அப்படியே முழுசா சாப்பிட்டு நம்மகிட்ட ஒட்டிக் கிட்டான். இப்போ அவன் கேரளாவுல ஒரு  பாம்பு பண்ணையில இருக்கான்.

நம்ம ஊரைச் சுத்தி காடுக கெடக்கு றதால இங்க பாம்புகளுக்குப் பஞ்சமில்லீங்க. இந்தியாவுல இருக்குற 244 பாம்பு வகையில, மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாம்பு வகைங்க இருக்கு. மழைக் காலம் வந்துடுச்சுன்னா இண்டு இடுக்குல இருக்குறதுங்க எல்லாம் குஞ்சுகளோட வெளியே வந்து திண்டாடிப்புடும்.

போன வாரம் கரிக்கடைமேட்டுல ஒரு கண் ணாடி விரியனை அமுக்கினேன். பாவம், 39 குட்டிங்களோட மழைத் தண்ணியில திணறிக்கிட்டு இருந்தா அவ. பத்திரமாக் கொண்டுப்போய் மதுக்கரை காட்டுக்குள்ள விட்டேனுங்க. பாம்புங்கள்லயே விரியனுங்கதான் புத்திசாலிங்க. தன்னைச் சுத்தி 50 மீட்டர் சுற்றளவுல எறும்பு ஊர்ற அதிர்வைகூட உணர்ந்துடுங்க. அதோட பிளவுபட்ட நாக்கு மூலம் எதிரியை அடையா ளம் பிடிச்சு ஆளுக்குத் தக்கபடி விஷத்தைச் செலுத்தித் தாக்கும். விஷம் வீணாப்போகக் கூடாதில்லைங்க!

சமீபத்துல கோவை கலெக்டர் பங்களாவுல கூப்பிட்டாங்க. நாகப்பாம்பு ஒண்ணு சருகு வலைக்குள்ள முட்டைகளை அடைகாத்துட்டு இருந்துச்சு. துணைக்கு கருநாகம் ஒண்ணு. முட்டைகளோட ரெண்டு பாம்பையும் பிடிச்சு காட்டுலவிட்டேன். நிறைய பேர் பாம்பைப் பார்த்தா அடிச்சிக் கொன்னுடுறாங்க. அது பாவமுங்க. எந்தப் பாம்பும் வேணும்னே நம்மளைத் தீண்டாது. நாம ஏதாச்சும் செய்யப்போக... பயத்துலதான் அதுங்க நம்மை தீண்டி டுது...'' என்றவரிடம் நைசாக மூலிகை வேர் ரகசியம் கேட்டோம்.

''அது ஒண்ணுமில்லீங்க. நாமளாத் தேடிப்போய்க் காட்டுக்குள்ள அதைப் பறிக்க முடியாது. மரம் உச்சியில பாறை இடுக்குல கிருஷ்ண பருந்துங்க கூடு கட்டி இருக்கும். அதோடமுட்டை களையும் குஞ்சுகளையும் பாம்பு தின்னுடக் கூடாதுனு பருந்து இந்த மூலிகை வேரைப் பறிச்சிட்டு வந்து கூட்டுல போட்டு இருக்கும். அதை தேடிப் பிடிச்சு கொண்டுவரணுங்க. அது பேரு 'நீலகண்டன்’ வேருங்க!'' - வெள்ளந்தியாக ரகசியத்தைப் போட்டு உடைத்தார் 'ஸ்நேக்’ முருகன்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: ஆர்.வெங்கடேஸ்வரன்