Published:Updated:

``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்!” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது? - ஆய்வு முடிவு தரும் ஷாக்

``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்!” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது? - ஆய்வு முடிவு தரும் ஷாக்
``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்!” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது? - ஆய்வு முடிவு தரும் ஷாக்

இப்படி இருக்கையில், குடித்ததற்குப்பின் நாம் வேறொரு ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன? வேறென்ன `பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 Disclaimer

``மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு!”

``இந்தக் கட்டுரை எந்த வகையிலும் குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் ஆராய்ச்சியாளர்களின் சொந்தக் கருத்துகளே.!”

பொதுவாகக் குடித்ததற்குப்பின் நம்முடைய நடத்தை முற்றிலும் மாறிவிடுவதாக நாம் நினைக்கிறோம். காலையில் சாந்த சொரூபமாய் இருந்துவிட்டு சாயங்காலம் ஆறு மணிக்குமேல் ``ஏய்ய் கோய்ந்தசாமி...கதவத் தொற..!” என்று அலப்பறையைக் கொடுக்கும் வடிவேலுவின் கதாபாத்திரம் நமக்கு நன்றாக ஞாபகம் இருக்கும்.., நிஜத்தில் பயந்தாங்கொள்ளியாக இருப்பவன் குடித்ததும் தைரியம் வந்ததாக நினைப்பதையும், ஆஜானுபாகுவாக உள்ள சிலர் ஆல்கஹால் உள்ளே போனதும் ஏங்கி ஏங்கி அழுவதையும் பார்த்திருப்போம். ஆனால், உண்மையில் அது அப்படியல்ல என்கிறது ஓர் ஆய்வு.

கடவுள் பாதி..மிருகம் பாதி:
சட்டபூர்வமான மது அருந்தும் வயதை நீங்கள் அடைந்தவர் என்றால் இந்தச் செய்தி உங்களுக்கானதுதான். மது அருந்தியவுடன் உங்களுக்குள் தோன்றும் அந்த வேற்று மனிதன் உங்களுடன் கொஞ்சமும் தொடர்பு இல்லாதவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படியல்ல. நீங்கள் நம்பும் உங்களுடைய உண்மையான பெர்சனாலிட்டிக்கும் `போதை’ பெர்சனாலிட்டிக்கும் இடைவெளி வெகுதூரமல்ல என்கிறது ஆய்வு. அதாவது போதையில் உள்ளபோது வெளிப்படும் குணங்கள் மற்றும் நிதானமாக இருக்கும் போது வெளிப்படும் குணங்கள் ஆகிய இரண்டும் சேர்ந்ததே உங்களுடைய உண்மையான நடத்தையாகும். மற்றவர்களுக்குத் தெரியாத உங்களது குணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக இந்த `மது’ இருக்கிறது என்று சொல்லலா,.

2017 ம் ஆண்டு ``கிளினிகல் சைக்காலஜிகல் சயின்ஸில்” (Clinical Psychological Science) வெளியிடப்பட்ட ஆய்வானது ஒருவருடைய “போதை” பெர்சனாலிட்டிக்கும், நிதானமான பெர்சனாலிட்டிக்கும் பெரிய அளவில் எந்த வேற்றுமையும் இல்லை என்று கூறுகிறது. அதாவது எத்தனை போத்தல்கள் உள்ளே சென்றாலும் உங்கள் குணம் மாறப்போவதில்லை.  (அப்புறம் எப்படி இவ்வளவு அலப்பறைகள் நடக்குதுன்னு கேக்குறீங்களா.?). 

கொலம்பியாவிலுள்ள மிசெளரி பல்கலைக்கழகம் (University of Missouri) மற்றும் பர்டியூ பல்கலைக்கழகம் இணைந்து `குடிகாரர்களின் குணாதிசயங்கள்’ பற்றிய ஆய்வினை மேற்கொண்டன. ஒருவர் நிதானமாக இருக்கும்போது உள்ள குணத்திற்கும், குடித்ததற்குப்பின் உள்ள குணத்திற்கும் பெரிய அளவில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என்பதை அவர்களின் நண்பர்களோடு பழகும் விதத்தை வைத்து கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆய்விற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, கலந்துகொள்ளக்கூடிய 156 பங்கேற்பாளர்களின், நிதானமாக உள்ளபோது காணப்படும் குணங்கள் மற்றும் குடித்ததற்குப்பின் காணப்படும் குணங்கள் சம்பந்தப்பட்ட ஒரு முழுமையான சர்வே ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்டது. 

ஆய்வு தொடங்கியவுடன் அதில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் குடிக்கவைத்தனர். பின்பு அவர்களை அவர்களது நண்பர்களுடன் ஆய்வகத்தில் சில விளையாட்டுகளில் ஈடுபட வைத்து நடத்தை மாறுபாடுகளைக் கவனித்தனர். ஆராய்ச்சியாளர்கள் அவர்களை மதிப்பீடு செய்யும் அதே நேரத்தில், போதையில் இருந்த பங்கேற்பாளர்களைக் கொண்டே அவர்களின் குணங்கள் வேறுபடுவதை மதிப்பீடு செய்யச்சொல்லி சொல்லப்பட்டது. இறுதியில் பெறப்பட்ட இரண்டு முடிவுகளும், ஒன்றுடன் ஒன்று பொருந்தாத வகையில் கிடைத்தது. 
ஆராய்ச்சியாளர்களால், குடிகாரர்களின் குணங்களில் வெளிப்படையாக, உண்மையைப் பேசும் தன்மை (extroversion) புதிதாக வந்திருப்பதைத் தவிர வேறு எந்தப் பெரிய மாற்றத்தையும் காணமுடியவில்லை. 

இது பற்றி அந்த ஆய்வுக்குழுவில் இருந்த மிசெளரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ ஆராய்ச்சியாளர் `ரச்செல் வினோக்ராட்’ (Rachel Winograd) கூறுகையில், ``மது அருந்திய நிலையில் தங்களின் குணத்தில் மாறுபாடு இருப்பதாக அவர்களே நினைக்கும் வேளையில், ஆராய்ச்சியில் அதற்கு முற்றிலும் முரணான முடிவுகள் கிடைத்தது ஆச்சர்யமாக உள்ளது”, என்றார். 

இங்கு, ``Five Factor Model of Personality” (குணங்களின் ஐந்து காரணி மாதிரி) என்பதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக ஒரு மனிதரின் மனோ நிலையினை அறிவதற்கு மனோதத்துவ நிபுணர்கள் கையாளுகின்ற ஒரு முறையே ``Five Factor Model of Personality” ஆகும். அந்த ஐந்து காரணிகளை ஆங்கிலத்தில் `OCEAN’ என்று சுருக்கமாகக் குறிப்பிடுகின்றனர். அவை 

 O - Openness to experience (திறந்த மனப்பான்மையுடைய)
 C - Conscientiousness (நேர்மையான)
 E - Extraversion (வெளிப்படையாகப் பேசக்கூடிய)
 A - Agreeableness (ஏற்றுக்கொள்ளும் படியான)
 N - Neuroticism (உணர்ச்சிவசப்படக்கூடிய) 

மேற்சொன்ன இந்த ஐந்து காரணிகளிலும் வேறுபாடு இருப்பதாகப் பங்கேற்பாளர்கள் உணருகின்றனர். ஆனால் ஆராய்ச்சி முடிவுகளோ இந்த ஐந்தில் ‘extraversion’ தன்மை மட்டும்தான் ஒருவர் நிதானமாக இருக்கும்போதும் குடித்ததற்கு பின்னும் மாறுபடுவதாகச் சொல்கிறது.

இப்படி இருக்கையில், குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன? வேறென்ன `பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ரெண்டு ரவுண்டு டக்கீலா உள்ளே போனதும் தைரியம் வந்துவிட்டதாகவும், வைன் உள்ளே போனதும் எமோஷனல் ஆகிவிடுவதாகவும் நாமே நினைத்துக்கொள்வதால்தான் அவ்வாறு தோன்றுகிறது. அதாவது, இது எல்லாம் வெறும் மனப்பிராந்தியாம்!!

அடுத்த கட்டுரைக்கு