Published:Updated:

நேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை!

நேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை!

##~##

தேவர் ஜெயந்தி நடந்துகொண்டு இருந்தபோதே மதுரையில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை நடத்தி முடித்து இருக்கிறார்கள் ஃபார்வர்டு பிளாக் கட்சிக்காரர்கள்!

 நேதாஜியோடு இந்திய தேசிய ராணுவத்தில் ஆயுதம் ஏந்தியவர் உ.வெ.சுவாமி தேசிகன். நேதாஜியின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத்திடம் உதவியாளராக இருந்தவர் நரிக்குடி குருசாமிப் பிள்ளை. தேவரின் இறுதி நாட்களில் அவரைத் தொட்டுத் தூக்கி சேவகம் செய்ததைப் பெரும் பாக்கியமாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருப்பவர். குருசாமி பிள்ளைக்கு தனது சொத்துக்கள் சிலவற்றை எழுதிவைத் தார் தேவர். இன்றும் வறுமையில் வாழும் குருசாமிப் பிள்ளை, தேவரின் மறைவுக்குப் பிறகு அந்தச் சொத்துக் களை தேவர் அறக்கட்டளைக்கே எழுதிவைத்து விட்டார். ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தூணாக நின்ற உசிலம்பட்டி மூக்கையாத் தேவரின் நெருங்கிய நண்பர் பாறைப்பட்டி மாயாண்டித் தேவர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை பாறைப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர். இவரைப் போலவே ராஜபாளையம் நகராட்சி கவுன்சிலராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருபவர் பெரியவர் பொன்னையா தேவர். இவர்கள் நால்வருமே ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். இவர்களைத் தேவர் ஜெயந்தி அன்று மதுரைக்கு அழைத்துவந்து விருது வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் ஃபார்வர்டு பிளாக் கட்சி யினர்.

நேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை!

உ.வெ.சுவாமி தேசிகனுக்கு 'நேதாஜி விருது’, குருசாமிப் பிள்ளைக்குத் 'தேவர் விருது’, மாயாண்டித் தேவருக்கு 'மூக்கையாத் தேவர் விருது’, தேவர் வீரகாவியம் எழுதிய ஏ.ஆர்.பெருமாள் பெயரில் பொன்னையா தேவருக்கு விருது. இவைதான் அந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட விருதுகள்! விருதுகளைப் பெற்றவர்களை விட அவர்கள் பேசியதைக் கேட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். ''நான் பர்மாவில் பிறந்தவன். 'இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக நிதி கொடுக்க முடிந்தவர்கள் நிதி கொடுங்கள்;

உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) சேருங்கள்’ என்று நேதாஜி விடுத்த அழைப்பை ஏற்று, 17 வயதில் ஐ.என்.ஏ-யில் சேர்ந்தேன். 1954-ல் தேவர் பர்மாவுக்கு வந்தபோது, அவரைச் சந்தித்தேன். நேதாஜியின் வழித் தோன்றலாக தேவரை ஏற்றுக்கொண்டதால், இந்தியா வந்த பிறகு ஃபார்வர்டு பிளாக்கில் சேர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் ஆகியும், நேதாஜி நினைத்தது மாதிரியான சுதந்திர அரசாங்கம் இன்னும் அமையவில்லை. அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை'' என்று தனது கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார்    உ.வெ.சுவாமி தேசிகன்.

நேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை!

''இப்படியரு நிகழ்ச்சியை இந்த நேரத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?'' அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் (மகேஸ்வரன் பிரிவு) கட்சியின் மாநிலச் செயலாளர் மகேஸ் வரனிடம் கேட்டோம். ''ஃபார்வர்டு பிளாக் கட்சியில் நிறைய தியாகிகள் இருக்கிறார்கள். அதில் பல பேர் தேவரைப் போல பிரம்மச்சாரி கள். இந்த தேசத்துக்காகத் தங்களது வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கௌரவிக்க வேண்டும் என்பது கட்சியின் மத்திய கமிட்டியில் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவு. அதன்படிதான் முதல் கட்டமாக இந்த நான்கு பேரைக் கௌரவித்து இருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற தியாகிகள் சுமார் 40 பேருக்கும் மேல் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் நடமாட முடியாத நிலையில் இருப்பதால் இங்கே அழைக்க முடியவில்லை. அடுத்த தேவர் ஜெயந்திக்கு தமுக்கத்தில் பெரிய அளவில் விழா எடுப்போம். அப்போது தமிழகத்தில் உள்ள மூத்த தியாகிகள் அனைவரையும் மதுரைக்கு அழைத்துவந்து அசோக் கோஷ் தலைமையில் கௌரவப்படுத்துவோம்'' என்றார்.

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு