Published:Updated:

என் ஊர்!

அவசரத்துக்கு குதிரை வண்டி... சாவகாசத்துக்கு மாட்டு வண்டி!

##~##

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் பத்மநாபன், தன் சொந்த ஊர் நாகர்கோவில்பற்றி  வரலாற்றுப் பின்னணிகளோடு இங்கே மனம் திறக்கிறார்...

 ''பிரசித்திபெற்ற நாகராஜா கோயில் இங்கே இருப்பதால், இதுக்கு நாகர்கோவில்னு பேரு வந்துச்சு. இன்னைக்கு நாகர்கோவிலோட ஒரு பகுதியா ஒட்டி நிக்குற கோட்டாறுதான் ஒரு காலத்தில் நாகர்கோவிலை விடப் பெரிய டவுனா இருந்திருக்கு. நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு சந்தைதான், தென் மாவட்டங்களிலேயே மிகப்பெரிய வியாபார ஸ்தலமா இருந்தது. அரபு நாட்டில் இருந்துவரும் வணிகர்கள் இங்குதான் குதிரை வியாபாரம் செஞ்சிருக்காங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்னோட பள்ளிப் படிப்பை செயின்ட் ஃபிரான் சிஸ் பள்ளியில் படிச்சேன். கன்னியாகுமரி மாவட்டம் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்ததால இங்க இருக்கிறவங்களுக்கு அப்போ மலையாளமும் அத்துப்படி. எட்டாம் கிளாஸ்ல வேப்பமூடு பகுதியில் உள்ள எஸ்.எல்.பி. ஸ்கூலுக்குப் போயிட்டேன். பள்ளிக் காலங்களிலேயே ஆய்வுக் கட்டுரைகள் எழுத ஆரம்பிச்சிட்டேன். பள்ளி விடுமுறை நாட்களில் புத்தேரியில் இருந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையைப் பார்க்கப் போயிடுவேன். அவரோடு எனக்கு இருந்த நெருக்கம்தான் சிறுவனாக இருந்த என்னையும் வரலாறுகளை ஆய்வு செய்யத் தூண்டியது.

என் ஊர்!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தமிழில் வலுவிழந்து போய், மலையாளத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளை எடுத்துக் கொண்டு 'தமிழும் மலையாளமும்’னு ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அது அப்போது மதுரையில் இருந்து வெளிவந்த 'தமிழ்நாடு’ங்கிற தினசரியில் பிரசுரமாச்சு. உடனே, அதை கவிமணியிடம் கொண்டு போய்க் காட்டினேன். 'உனக்கு ஆய்வு செய்யும் வேகம் இருக்கிறது. நீ வளர்ந்ததும் குமரி மாவட்டக் கோயில் களை ஆய்வுசெய்து புத்தகமாப் போட ணும்’னு ஊக்கப்படுத்தினார். நான் எழுதிய அந்தக் கட்டுரையைப் பெரியார் தன்னுடைய 'விடுதலை’

என் ஊர்!

பத்திரிகையில் 'ஆரியன் தமிழுக்குச் செய்த கொடுமை’னு தலைப்பிட்டு, அதை அப்படியே வெளி யிட்டு இருந்தார். அதுதான் என்னைத் தொல்பொருள், வரலாறு, பண்பாட்டுச் சின்னங்கள்னு ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டுப்போச்சு.

பள்ளிக்கூடம்  விட்டதும் நேரா நூலகத் துக்குப் போயிடுவேன். அப்ப நாகர் கோவிலில் கோட்டார் மற்றும் வடசேரி யில் இரண்டு சிறந்த நூலகங்கள் இருந்தன. அதில் வடசேரி நூலகம் மட்டும் இன்னிக் கும் இருக்குது. இப்ப மாதிரி முன்ன நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி எல்லாம் கிடையாது. 40, 50 வருஷத்துல நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத அளவு ஜன நெருக்கடியும் வாகனப் பெருக்கமும் நாகர்கோவிலில் வந்துருச்சு.

நாகர்கோவிலோட அடையாளமா இன்னிக்கு கம்பீரமா நிக்கிற 'மணிமேடை’ பக்கத்தில்தான் அப்ப குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது. இப்போ எஸ்.பி. ஆபீஸ் இருக்குற இடத்தில் அப்போ காளை வண்டிங்க நிக்கும். அவசரமாப் போகணும்னா குதிரை வண்டி, சாவகாசமாப் போகணும்னா மாட்டு வண்டினு மக்கள் பயன்படுத்திட்டு இருந்தாங்க. இப்போ நாகர்கோவிலில் மாடுகளைப் பாக்குறதே அரிதாகிப் போச்சு.

நாகர்கோவில்னு சொன்னதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நாகராஜா கோவில்தான். இங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரொம்ப விசேஷமா இருக்கும். முன்பு இந்தப் பகுதி வேநாடு மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் தலைநகரா 'களக் காடு’தான் இருந்திருக்கு. களக்காட்டில் மகாராஜாவா இருந்த 'பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மா’ கடுமை யான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாராம். அதைக் குணமாக்குற ஓடவள்ளிங்கிற ஒரு பச்சிலை நாகராஜா கோவிலில் இருந்திருக்கு. அதைப் பறிக்கிறதுக்காக மன்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்ததால, இப்போதும் அதை விசேஷமாக் கொண்டாடுறாங்க.

இந்த மாதிரி என் ஊரோட வரலாற்றுச் சம்பவங்களைக் கேட்டுப் படிச்சு வளர்ந்ததுதான் இப்பவும் நான் ஆய்வுகளைத் தேடி அலையுற ஆர்வத்துக்கான அடிப்படைக் காரணம்!''

என் ஊர்!

- என்.சுவாமிநாதன் படங்கள்: ரா.ராம்குமார்