Published:Updated:

ஒரு நாளைக்கு 3 பேரை பலிவாங்கும் வெயில்... ஆந்திரா முதலிடம்... தமிழகம்?! #VikatanInfographics

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு நாளைக்கு 3 பேரை பலிவாங்கும் வெயில்... ஆந்திரா முதலிடம்... தமிழகம்?! #VikatanInfographics
ஒரு நாளைக்கு 3 பேரை பலிவாங்கும் வெயில்... ஆந்திரா முதலிடம்... தமிழகம்?! #VikatanInfographics

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோடை வெயில் 100 டிகிரிகளை கடந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதன் காரணமாக கடந்த 1 ம் தேதி ஒரே நாளில் மட்டும் தெலங்கானா மாநிலத்தில் 12 பேரும், ஆந்திராவில் 7 பேரும் என்று இரு மாநிலங்களில் வெயிலுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வ்வொரு வருடமும் கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே அக்னி நட்சத்திரம் பற்றிய பயம் நம்மை வாட்டி எடுக்கும். கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் மே 4 ம் தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம், வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும். இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்பே தமிழகம் முழுவதும் வெயிலின் கொடுமை ஆரம்பித்தது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி அனல் காற்றை வீசியது. இரவு நேரத்தில் கூட பல்வேறு பகுதிகளில் வெப்பம் குறையாமலே இருந்தது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கோடை வெயில் 100 டிகிரிகளை கடந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதன் காரணமாக கடந்த 1 ம் தேதி ஒரே நாளில் மட்டும் தெலங்கானா மாநிலத்தில் 12 பேரும், ஆந்திராவில் 7 பேரும் என்று இரு மாநிலங்களில் வெயிலுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கடந்த ஆண்டை விட 3 முதல் 4 டிகிரி வரை அதிக வெயில் பதிவாகி வருகிறது. வெயிலின் காரணமாக முதியோர், குழந்தைகள் எனப் பலரும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.  

மார்ச் முதல் மே 7-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் 188 பேர் வெயிலால் பாதிப்படைந்தனர். கடந்த ஆண்டு 313 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவு வெயில் பதிவாக்கியுள்ள ஹைதராபாத்தில், தற்போது 90-க்கும் மேற்பட்டோரைச் சின்னமை நோய் பாதித்துள்ளது. எனவே, மதிய நேரத்தில் பொதுமக்கள் குறிப்பாக, முதியோர் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் இது போன்ற செய்திகள் இந்தியா முழுவதும் பதிவாகி வருகின்றன. 

சில வருடங்களுக்கு முன்புவரை அக்னி நட்சத்திரம் 21 நாள்கள் மட்டும் நம்மை வாட்டி எடுத்தது. ஆனால் தற்போது காடுகள், மரங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பும், முடிந்த பிறகு ஒரு 15 நாள்களுக்கும் கோடை வெயிலின் கொடுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியா முழுவதும் வெயிலின் காரணமாகக் கடந்த 2010 லிருந்து 2015 வரை 7686 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன்படி பார்த்தால் ஒரு நாளைக்குச் சராசரியாக 3 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஆந்திரப்பிரதேசத்தில் மட்டும் 1825 பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் இங்கு வெயிலினால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.ஆந்திராவில் பல்வேறு காரணங்களால் இறப்பவர்களில் 5 ல் ஒருவர் வெயிலினால் இறக்கின்றனர்.
வெயிலினால் இறப்பவர்களின் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் வெயிலினால் ஏற்படும் இறப்புகள் அதிகமில்லை என்றாலும் 5 ஆண்டுகளில் 19 பேர் இறந்துள்ளனர். 

இந்தியா முழுவதும் கடந்த 2010 ம் ஆண்டில் 1274 பேர் இறந்தனர். ஆனால், 2011 ம் ஆண்டு இந்த எண்ணிக்கையில் 481 குறைந்து 793 பேர் இறந்தனர். ஆனால் படிப்படியாக அதிகரித்து 2012-ம் ஆண்டு 1247 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக 2015-ம் ஆண்டு 1908 பேர் இறந்தனர். இது 2014 உடன் ஒப்பிடும்போது 50% அதிகமாகும். அதேபோல் 2012, 2013, 2014 ஆகிய வருடங்களில் தொடர்ந்து 1200 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த இறப்பு எண்ணிக்கையில், அதிகளவு இறப்பது ஆண்கள்தாம். 2010 லிருந்து 2015 வரை உள்ள காலத்தில் 81% ஆண்களும், 19% பெண்களும் இறந்துள்ளனர். 

தமிழகத்தில், பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளதால், வியர்க்குரு, அம்மை, சின்னம்மை, சருமப் பிரச்னை போன்ற வெயில்கால நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, வெளியே செல்பவர்கள் குடை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதிகம் எண்ணெய்யுள்ள உணவு வகைகளைத் தவிர்த்து, இளநீர், மோர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியான மற்றும் நார்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவும். வெளியே செல்லும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற விழிப்புஉணர்வு செய்திகள் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. 

தமிழகத்தில் இந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 35-38 டிகிரி செல்சியஸுக்குள்ளாகவே இருந்துவந்தது. ஒவ்வொரு வருடமும் சுட்டெரிக்கும் கத்தரி வெயில் இந்த வருடம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிஸ்டர் கூல் என்றுதான் சொல்ல வேண்டும். தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வெயிலின் தாக்கத்தைக் குறைத்தது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு