Election bannerElection banner
Published:Updated:

``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11

``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11
``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11

``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11

புதிய வாழ்க்கை, பழைய வாழ்க்கை அப்படியெல்லாம் இருக்கிறதா? நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கையல்லவா! அப்புறம், இந்த வாழ்க்கை என்பது என்ன, மரணத்துக்கு முன்னால் ஒரு தத்தளிப்பு. அல்லாமல் வேறு என்ன?

இது ஏதோ தத்துவம் கரைத்துக் குடித்த ஒரு மேதை உதிர்த்த சொற்கள் அல்ல. சொன்னவன் பெயர், ராகவன். டிரைவராகப் பணிபுரிந்தவன். இரண்டு பெண்களைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருக்கிறான். இறந்த பெண்களில் ஒருத்தி அவனுடைய மனைவி. இருபது வருடமாய் வெளியே போவதற்குச் சிரத்தையில்லாமல் இங்கேயே தனது வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கிறான். விடுதலை பெற்று வெளியேறி நன்றாக இருக்கலாமே? என்ற கேள்விக்கு, இங்கே ஒன்றும் பெரிய குறைகள் கிடையாது என்பது அவனுடைய பதில்.

இத்தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

நாம் ஒரு கும்பல் வாழ்க்கை வாழ்கிறோம். எல்லோரும் சுமுகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து போகவேண்டும். அதற்கான விதிகள் இருக்கின்றன. ஏறக்குறைய குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்த ஆப்பிள்களைப்போல, அடக்க ஒடுக்கமாய் இருக்கும்வரை நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நம்மால் சமூகமும் பத்திரப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த விதிகளை மீறுகிறவர்களை நம்மால் சகிக்க முடியாது. அவர்களை வளைக்க  சட்டமும் தண்டனைகளும் நம்மிடம் உள்ளன. ஆனால், அவர்களால் தான் சமூகம் நெகிழ்வடைந்து வளர்ச்சி பெறுகிறது என்கிற உண்மையைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் இந்தப் படத்தில் இல்லையென்றாலும், சமூகத்தை உள்வாங்க எண்ணமில்லாமல் முற்றிலும் வேறு சிந்தனைகள் உள்ளவனாய் இருக்கிறான், ராகவன்.

அவனைத் தேடிவந்து பேசி, அவனை விடுதலையடையச் செய்து வெளியே அழைத்துச் செல்கிறாள், அஞ்சலி.

அஞ்சலி அரக்கல் என்கிற அந்தப் பெண் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. சுதந்திர எண்ணம் உள்ளவள். ஆண்களின் உலகமான பத்திரிகைத்துறையில் தன்னை வலிமையாகவே வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் பிழைப்புக்கு ஒரு வழியாக ராமமூர்த்தி என்கிறவருக்கு வாழ்க்கை வரலாறு எழுதிக்கொடுக்கிற ஒரு வாய்ப்பு வருகிறது. கோஸ்ட் ரைட்டிங்தான். ராமமூர்த்தி ஜெயில் சூப்பிரடன்ட்டாக இருந்து ஒய்வு பெறப்போகிறவர். அந்த நேரத்தில் அவரது புகழ்பாடும் படைப்பு வெளியாக வேண்டும். அவரைப் பார்க்க வந்த அந்த இடத்தில்தான், அவருக்கு எடுபிடி வேலைகள் செய்கிற ராகவனை அஞ்சலி பார்க்கிறாள். அவர் நகர்ந்துபோன இடைவெளியில் ராகவன் நான் எந்தக் கொலையும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டுப் போக அஞ்சலி திடுக்கிடுகிறாள்.

ஒரு குறுகுறுப்பு தொடருகிறது.

வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கான ஆவணங்களை ராமமூர்த்தி அடுக்கி வைத்திருக்கிறார். அஞ்சலிக்கு முன்பணமும் கொடுக்கிறார். இந்தப் புத்தகம் எழுதுவதன் ஒரு பகுதியாக, அஞ்சலி ராகவனை ஜெயிலில் சென்று சந்திப்பதற்கான அனுமதி பெறுகிறாள். ராகவனின் பேச்சுகள் திகைப்பூட்டுகின்றன. அவன் எழுதி வைத்திருக்கிற நோட்டுப் புத்தகத்தை வாங்கி வருகிறாள். அவனது பேச்சைப் போலவே அவனது எழுத்தும் வியப்பை அதிகரிக்கச் செய்கிறது. மற்ற நண்பர்கள் ஊக்குவிக்க, அவள் ராகவனைப் பற்றி ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறாள். பலரால் பாராட்டப்படவே, அவள் தனது வாழ்க்கை புதிய வழியில் செல்வதை உணர்கிறாள்.

மும்பையில் இருந்து ஒரு கார்ப்பரேட் கம்பெனி தொடர்பு கொள்கிறது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ராகவனிடம் உங்களால் ஒரு புத்தகம் எழுத முடியும்  என்று சம்மதிக்க வைக்கும்போது விடுதலை வருகிறது. ஸ்டாராகிவிட்ட ராகவனை சகிக்கமுடியாமல் ராமமூர்த்தி பழிவாங்கியதுதான் அது. ஒரு மனிதன் சிறையில் இருந்து வெளியேறுவது நல்லதுதானே? அஞ்சலி ஒரு லாட்ஜில் ராகவனைத் தங்க வைக்கிறாள். இருந்துகொள்ள வசதிகளும், சாப்பாடும் கிடைத்துவிட்டது. இனி என்ன, ராகவன் எழுத வேண்டும்.

ராகவன் எழுதுவதில்லை என்பதுதான் கதை.

அவளும் எவ்வளவோ முறை சொல்லிப் பார்க்கிறாள். கொஞ்சி, கெஞ்சிப் பார்க்கிறாள். மெல்லக் கோபம் வருகிறது. சத்தமிட்டு சண்டைபோட்டு எழுதவைக்கப் பார்க்கிறாள். பாச்சா பலிக்கவில்லை. கம்பெனி விரட்டுகிறது. சிபாரிசு செய்த நபர் அவமானப்படுத்தி வெளியேறச் சொல்கிறார். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை. இதற்கிடையே வேறு கம்பெனி பெண் ஒருத்தி, ராகவனின் படைப்புக்காக வளையமிடவே... ராகவனை வேறு தனிமையான ஓர் இடத்துக்கு மாற்றி, எழுத வற்புறுத்துகிறாள்.

அஞ்சலியை எல்லா தரப்பும் நெருக்கடிக்குள்ளாக்கும்போது, அவளைக் கல்யாணம் செய்யப்போகிற சாக்கோ சொன்னபடி, என்ன நடந்தாலும் பரவாயில்லை, விட்டுத் தள்ளி விடலாம் என்கிற மனநிலைக்கு வருகிறாள். சாக்கோவிடம் அவனைப் பார்க்க வருவதாகக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ராகவனைக் கிளம்பிப் போகச் சொல்கிறாள். அவனது பணம் அவளிடம் இருந்தது, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடு என்கிறாள்.

அவன் புன்னகையுடன் தான் எழுதி முடித்துவிட்ட படைப்பை அவளிடம் கொடுக்கிறான்.

அவள் அதிர்ந்து அதைப் படித்துக் கொண்டிருக்க, அவன் தனது பொருள்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொள்கிறான்.

படிக்கப் படிக்க அவளது முகம் மாறுகிறது.

படித்து முடிக்கும்போது ராகவன் அவளுக்கு அருகில் நிற்கிறான்.

எங்கேபோவது என்கிற தவிப்பு இருந்ததில்லையா, ஜெயிலுக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டேன் என்கிறான்.

அவள் நடுக்கத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துப் பிடித்திருந்த இரும்புக் குழாயை அவளது தலைக்கு வீசுகிறான்.

அவளது கதை முடிகிறது.

அவன் எழுதிக்கொடுத்த படைப்பில் இந்தச் சாவு பற்றியும் இருந்திருக்க வேண்டும். 'முன்னறிவிப்பு' இதுதான்.

இப்போதுதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறோம். இந்தப் படத்தின் கதை இதுதானா, இல்லை. கிடையவே கிடையாது என்பது முக்கியம். சொன்ன விஷயங்களில் எல்லாம் சொல்லாத விஷயங்கள் இருந்தன. அல்லது அவை மறைபொருளாக இருந்தன. ராகவன் தனக்கு என்பதாய் ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டிருந்ததையும், அவன் நம்மைப் போன்றவர்களிடமிருந்து விலகி அந்நியப்பட்டிருந்ததையும் யாரும் அறியவில்லை. அஞ்சலி என்கிற மீடியா நபருக்கு தனது நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியமாய் இருந்தது. ஆனால், ராகவன் வேறு ஆள். அவனுக்குள் தவிப்புகள் இருந்தன.

அவனுக்கு எழுதுவது தொழில் அல்ல. சாட்டையைச் சொடுக்கி மாட்டை விரட்டுவதுபோல ஒருத்தனை எழுத வைத்துவிட முடியாது.

ஜெயிலுக்கு வெளியே தனக்குச் சென்றுசேர ஓர் இடமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த அவனிடம், நான் இருக்கிறேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தவள் அஞ்சலி. ராகவன் அவளது சொற்களில் படுத்துத் தூங்கினான். மனித கருணையை காதலை அவன் கனவு கண்டிருந்தால், அது குற்றமே கிடையாது. பிறகுதான் தனது வேறு ஒரு முகத்தை அவனுக்குக் காட்டுகிறாள் அவள். நடைமுறை எதார்த்தங்களில் மிகுந்த கண்டிப்புடன் பயணிக்கிற உலகம், அஞ்சலி மூலம் அவனை நெருக்குகிறது. பயப்பட முறுக்குகிறது. அவன் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்வல்ல என்றும், சுதந்திரத்துக்கு எதிராக வழி மறிப்பவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஒரு நியதியைக் கொண்டிருக்கிறான். ஆஸ்துமாவில் துடித்திருந்த மனைவிக்கு விடுதலை கொடுக்கவே அவளை அவன் கொன்றிருக்கிறான். அடுத்ததாய் அவன் வேலை செய்த இடத்தில் அஞ்சலியைப் போலவே அந்த மார்வாடிப் பெண் கனவுகளை விதைத்து அப்புறம் தன் காரியமே பொன் காரியம் என்று கழட்டி விட்டிருக்க வேண்டும். அவளை அதற்காகக் கொன்றிருக்கலாம். அஞ்சலியின் மரணத்தை வைத்துத்தான் நாம் இதை யூகித்துக்கொள்ள வேண்டும்.

ராகவன் அந்நியன். கொஞ்சம் மெர்சோவைப் போன்றவனும்கூட.

அவன் யாரையும் கொலை செய்யவில்லை என்பதே ஒருவிதமான மனநோய் என்றும் கொள்ளலாம்.

இந்தக் கதையை தேர்வுசெய்து அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதி, அதில் ராகவனாக மம்முட்டி நடித்ததெல்லாம் ஓர் அபூர்வ நிகழ்வு.

ராகவன் தன்னளவில் முழுமை கொண்டவன். அதை மம்முட்டி மிகவும் நயமாக ஊதித்தள்ளினார்.

``நாம் ஒரு சுவிட்சைப் போட்டால், இருட்டு இருக்கிற இடத்தில் வெளிச்சத்தை நிரப்ப ஒரு பல்பினால் முடியும். அதுபோல வெளிச்சம் உள்ள இடத்தில் ஒரு சுவிட்சைத் தட்டினால் இருட்டை உண்டாக்குகிற பல்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களா?"

``இந்த வெளிச்சம், சத்தியம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரேமாதிரி தான். இரண்டையும் இல்லாமல் செய்துவிட முடியாது. வேண்டுமெனில் தடுக்கவோ, மறைத்துப் பிடிக்கவோ செய்யலாம். என்றாலும், அது இல்லாமல் போவதில்லையே? நாம் பார்ப்பதில்லை என்பது மட்டும்தானே இருக்கிறது?"

அவனது கேள்விகள், முடிவுகள் என்பவையெல்லாம் தனித்துத் தனித்துத் தனித்தேயிருந்த அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அவனை யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது. இந்தக் கதைக்கு அற்புதமான திரைக்கதையை வசனங்களை எழுதியவர், உண்ணி.ஆர். 'லீலா'வைக் குறுநாவலாகவும், திரைக்கதையாகவும் எழுதியவர். பின்னர் 'ஒழிவு திவசத்தின்ட களி'யின் மூலக்கதை அவரது சிறுகதையே. படத்தின் ஆக்கத்துக்கு சில அடிப்படைகளையும் அவரே உருவாக்கினார். மிகவும் தனித்தன்மை கொண்ட புதிய கூறுமுறை. புதிய பார்வைக் கோணங்கள்கூட. மலையாள சினிமா வேறு பாதைக்குத் திரும்பியதைப் பேசி வருகிறோம், உண்ணியின் இருப்பு குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி பற்றிச் சொல்லி முடியாது. என்னவெனில், அவர் இதில் செய்தது பெரிய இந்திரஜாலம். எழுது என்று அழிச்சாட்டியமாய் அவருக்குப் பின்னால் நிற்கிற அஞ்சலியை உள்வாங்கியவாறு, ஒரு சொல்லும் சொல்லாமல் தனக்குள் திமிறுகிற அந்த உணர்சிகளைப் பார்க்க வேண்டும். அவரே சொன்னதுபோல, அந்த மௌனம் மௌனமில்லை, அது வீறிடுகிற ஓலம். நன்றாக நடித்தார் போன்ற முனை மழுங்கிய சொற்களில் அவரது காரியத்தைத் திணிக்காமல் நகர்கிறேன். ஒன்று சொல்ல வேண்டும், மம்முட்டி இன்னுமே நாமெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய கலைஞன். நடிப்பில் அவர் காட்டுகிற சென்ஸ் மற்ற பலருக்கும் இல்லாதது.

அஞ்சலியாக நடித்தவர், அபர்ணா கோபிநாத். இயக்குநரின் மனைவியும் படத்தின் எடிட்டருமான பீனா பால், அபர்ணாவை சிபாரிசு செய்திருக்கிறார். அது ஒரு கூர்மையான தேர்வு. குறுகலான பல இடங்களில்கூட மேலெழுந்தது அவரது நடிப்பு. சென்னையில் பிறந்தவர். நாடக அனுபவங்கள் உண்டு. படத்தில் இருந்த அத்தனை முகங்களும் படத்தின் முழுமைக்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருந்தன.

இசை கதையின் திருப்பங்களில் நாடியைத் தட்டுகிறது.

கதை, ஒளிப்பதிவு, இயக்கம் வேணு.

வேணு தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராய் பணியாற்றியவர். 'குணா' பற்றிச் சொன்னாலே புரிந்துகொள்ளலாம். வேறு ஒரு தினுசில் சொல்ல வேண்டுமெனில், 'மின்சாரக் கனவு'. மலையாளத்தில் மிகப்பெரிய ரசனையுள்ள இயக்குநர்களோடு பணிபுரிந்தவர். நடிகர், நடிகையரோடும்தான். இருந்தாலும் அவர் இந்தமாதிரி ஒரு படத்தைத் தருவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாதென்று கருதுகிறேன். முற்றிலும் ஆழத்தில், நம்மைச் சூழும் இளம் கருமையில் பூடகமும் நுட்பமும் கொண்ட ஒரு சித்திரம் தெளிந்து வந்ததைப் பிரமிக்கிறேன். எதிர்கால சினிமாக்கள் இதுவழி வருமென்பது ஒரு நம்பிக்கை.

படத்தின் துவக்கத்தில் வந்துபோகிற காட்சியொன்று நினைவுக்கு வருகிறது. மம்முட்டி இருக்கிற ஜெயில் அறையில் அவரது தலைக்குமேல் கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படங்களும் இருக்கும். அவர் அதை அவ்வப்போது பார்த்துக் கொள்வார். அவரது கண்களில் நிறைந்து வழிவது அன்பன்றி வேறென்ன?!. படம் முடியும்போது அந்த இரண்டு புகைப்படங்களுடன் அஞ்சலியின் புகைப்படமும் இருக்கிறது.

ராகவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு